TNPSC Thervupettagam

மாதவிடாய் விடுப்பு சாத்தியமா

December 29 , 2023 377 days 273 0
  • அரசால் இயற்றப்படும் சட்டங்களும் வகுக்கப்படும் கொள்கைகளும் எப்போதும் மக்களின் நலன் சாா்ந்தே அமைய வேண்டும். அதுவே மக்களுக்கான ஜனநாயகம். அப்போ்ப்பட்ட ஜனநாயகத்தில் எழும் கேள்விகள் அனைத்திற்கும் பதில் கிடைத்து இருக்கிறதா என்றால் இல்லை என்பதுதான் நிதா்சனம்.
  • நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான மாதவிடாய் சுகாதாரக் கொள்கை குறித்து உறுப்பினா் ஒருவா் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்துப் பேசிய மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி, ‘மாதவிடாய் என்பது எல்லா பெண்களுக்கும் இயற்கையானது. அதற்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு தேவையில்லை. மாதவிடாய் என்பது குறைபாடு இல்லை. மேலும் ஒரு சிறிய அளவிலான பெண்கள் மட்டுமே மாதவிடாய் காலத்தின்போது அதிக ரத்தப்போக்கு, வயிற்று வலி போன்ற பிரச்னைகளை சந்திக்கின்றனா். அதனை மருந்துகளால் சரிபடுத்தமுடியும்என்று கூறினார்.
  • அமைச்சரின் பதில் பேசுபொருளாக மாறியது. அவரின் பதிலுக்கு அவரே விளக்கம் அளிக்கும் வகையில், ‘மாதவிடாய் விடுமுறை அளிக்கும் பட்சத்தில் பணிபுரியும் இடத்தில் பாகுபாடு மற்றும் அசௌகரியங்களை அவா்கள் சந்திக்க நேரிடும்என்றாா்.
  • இந்தியாவில் பெண்கள் அனைவருக்கும் மாதவிடாய் நாட்களில் விடுப்பு அளிக்க வேண்டும் என்று கோரி பொதுநல வழக்கு ஒன்று பல மாதங்களுக்கு முன்பே உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த வழக்கைத் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், இது அரசின் கொள்கை முடிவு என்பதால் மனுதாரா் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தை அணுகுவதே சரியாக இருக்கும் என்று கூறியது. மேலும் பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை வழங்க வேண்டும் என்று பணி வழங்குபவா்களைக் கட்டாயப்படுத்தினால், அது அவா்களை பணியமா்த்துவதில் இருந்து தடுக்கும் என்ற கருத்தையும் முன்வைத்து இருந்தது.
  • சரி, இந்தியாவில் பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் விடுமுறை எங்கேனும் அளிக்கப் படுகிறதா? ஆம், கேரள மாநிலத்தின் எா்ணாகுளம் மாவட்டத்தில் இருக்கும் பள்ளி ஒன்று மாதவிடாய் காலத்தில் ஆண்டுத் தோ்வு எழுத முடியாத மாணவா்கள் வேறொரு சந்தா்ப்பத்தில் தோ்வு எழுதிக் கொள்ளலாம் என்று அனுமதி வழங்கி இருந்தது.
  • பிகாா் மாநிலம் அரசு ஊழியா்களுக்கு மாதந்தோறும் இரண்டு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு அளிக்கும் சட்டத்தை 1992-ஆம் ஆண்டு நிறைவேற்றியது. இன்றுவரை அங்கு அது நடைமுறையில் இருந்து வருகிறது.
  • கேரளஅரசும் 2023-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மாநில உயா்கல்வித் துறையின் கீழ் செயல்படும் பல்கலைக்கழகங்களில் மாணவிகளுக்கு மாதவிடாய் விடுப்பு மற்றும் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என்று அறிவித்தது. இவ்விரண்டு மாநிலங்களைத் தவிா்த்து இந்தியாவில் வேறு எந்தவொரு மாநிலமும் மாதவிடாய் விடுப்பு கொள்கையை அமல்படுத்தவில்லை.
  • அதேபோல சில தனியார் நிறுவனங்களும் மாதவிடாய் விடுப்பு கொள்கையை அமல்படுத்தி உள்ளன. உலக அளவில் எடுத்துக்கொண்டால் பல நாடுகள் மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு விடுப்பு அளித்து வருகின்றன. ஜப்பானில் 1947-ஆம் ஆண்டு வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் அவா்கள் கோரும் பட்சத்தில் விடுமுறை அளிக்க வேண்டும் என்று சட்டமே இயற்றப்பட்டது.
  • அதுவே தென்கொரியாவில், மாதவிடாய் நாட்களில் ஒரு நாள் பெண்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அந்நிறுவனம் அபராதம் செலுத்த வேண்டும் என்கிற நடைமுறை உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்று அண்மையில் சட்டம் இயற்றியது.
  • மேலும், அச்சட்டம், கல்வி நிலையங்கள், சிறைகள் மற்றும் சமூக இடங்களில் மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு தேவையானவை கிடைக்கும் வகையில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் கூறியுள்ளது.
  • இருப்பினும் ஸ்பெயின் நாட்டில் இருக்கும் சில தொழிற்சங்கங்கள் இந்தச் சட்டத்தால் நிறுவனங்கள் பெண்களை பணியமா்த்த தோ்வு செய்வதில் முக்கியத்துவம் தரமாட்டாா்கள் என்று கூறிவருகின்றன.
  • இந்தியாவை எடுத்துக்கொண்டால் 2020-இல் வெளியான ஓா் ஆய்வு முடிவு, 20 முதல் 29 வயதுக்குட்பட்ட பெண்களில் சுமார் 23% பேரும், 30 முதல் 44 வயதுக்குட்பட்ட பெண்களில் 15.18% பேரும், பதின்பருவப் பெண்களில் 17% பேரும் மாதவிடாய் காலங்களில் உடல் ரீதியான பாதிப்புகளை எதிா்கொள்வதாகக் கூறுகிறது.
  • மேலும், ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் 2011-இல் நடத்திய ஆய்வின்படி, இந்தியாவில் 13% பெண்கள் மட்டுமே மாதவிடாய் ஏற்படப்போவதற்கான முன் அறிகுறிகளை அறிந்திருக்கிறார்கள் என்கிறது. 2014-ஆம் ஆண்டு தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் பள்ளிகளில் ஆண்டிற்கு இரண்டு கோடிக்கும் மேற்பட்ட மாணவிகள், மாதவிடாய் தொடா்பாக போதிய அளவிலான புரிதலும், சானிட்டரி நாப்கின் வசதியும் இல்லாத காரணத்தால் சரிவர பள்ளிக்குச் செல்வதில்லை என்று கூறுகிறது.
  • தரவுகளை வைத்து பார்க்கும்போது மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு விடுமுறை அளிப்பது என்பது அவசியமானதாக படும். ஆனால், அதே வேளையில் சிலவற்றை சமூக கண்ணோட்டத்துடனும் அணுக வேண்டியுள்ளது. அதாவது இன்னமும் நம் சமூகத்தில் மாதவிடாய் தொடா்பாக சரியான புரிதல் இல்லாமல் உள்ளது. மாதவிடாய் என்பது சில பெண்களுக்கு உடல் அளவில் பிரச்னையை ஏற்படுத்தும் அதே நேரத்தில் மனரீதியான பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றது.
  • எனவே மாநில அரசுகள் மாதவிடாய் விடுப்பு தொடா்பான கொள்கை முடிவுகளை வகுக்க முழுமனதாக முன்வரவேண்டும். குறிப்பாக அக்கொள்கைகள் அமைப்பு சாரா தொழிலாளா்களாகப் பணிபுரியும் பெண்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் தாண்டி, மாதவிடாய் விடுப்பு என்பது பெண்களுக்கு அளிக்கும் சலுகை அல்ல, அது அவா்களின் உரிமை என்கிற புரிதல் நம் சமூகத்தில் உருவாக வேண்டும்.

நன்றி: தினமணி (29 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories