- இந்தியாவில் உள்ள அனைத்து நிறுவனங்களும் மாதவிடாய் விடுப்பை அமல்படுத்துவது தொடர்பாக அரசு ஏதேனும் நடவடிக்கைகளை எடுத்திருக்கிறதா என மாநிலங்கள் அவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய பெண்கள் - குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அளித்துள்ள பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “பெண்களுக்குப் பணியிடங்களில் சம வாய்ப்பு மறுக்கப்பட்டுவரும் நிலையில் மாதவிடாய் விடுப்பு அந்தப் பாகுபாட்டை அதிகரிப்பதற்கான வழியாக அமையும்” என ஸ்மிருதி இரானி தெரிவித்தார். பெண்களுக்குப் பொருளாதார வாய்ப்புகள் அதிகரித்துவரும் இந்நாளில் தன் தனிப்பட்ட கருத்தாக இதை அவர் தெரிவித்தார். “மாதவிடாயும் மாதவிடாய்ச் சுழற்சியும் குறைபாடுகள் அல்ல. பெண்களின் வாழ்க்கையில் ஒரு பகுதி” என்பதை ஒரு பெண்ணாக இருந்து உணர்ந்து சொல்வதாக அவர் குறிப்பிட்டார்.
- அனைத்து மாநிலங்களும் மாதவிடாய் விடுப்புக் கொள்கையை உருவாக்க வேண்டும் என்கிற மனுவை உச்ச நீதிமன்றம் அண்மையில் தள்ளுபடி செய்ததோடு இது குறித்து மத்திய பெண்கள் - குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்தான் முடிவெடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியது. இப்படியொரு நிலையில் அமைச்சர் ஸ்மிருதி இரானியின் பேச்சு பல்வேறு தளங்களிலும் விவாதத்தை எழுப்பியது.
- அண்மையில் உருவாக்கப்பட்ட மாதவிடாய் சுகாதாரக் கொள்கை வரைவில் பெண்களுக்கு ஏதுவான பணிச்சூழல் அமைவது குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் அவர்கள் வீட்டிலிருந்தபடியே வேலை செய்யவும் விடுப்பு எடுக்கவும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு நேர்மாறாக ஸ்மிருதி இரானி பேசியுள்ளார் எனவும் பெண்ணியச் செயற்பாட்டாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
- பெண்களுக்குப் பணியிடங்களில் சம வாய்ப்பு மறுக்கப்படுவதும் பாகுபாடுகள் காட்டப்படுவதும் நடைபெறுகின்றன என்றால் அரசு அவற்றைச் சரிசெய்வதற்கான செயல்களில் ஈடுபட வேண்டுமே தவிர, அரசின் திட்டங்கள் பின்னடைவை ஏற்படுத்தும் என்று சொல்வது ஏற்புடையதல்ல. அனைத்துவிதத்திலும் சமமான இருவருக்கு இடையேதான் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். பெண்களை ஆண்களுக்கு நிகராக நிறுத்தி அனைத்தையும் பொறுத்துக்கொண்டு போராட வேண்டும் என்று அறிவுறுத்துவதைவிட, பெண்களின் உடலியல் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப பணிச்சூழலை அமைத்துதர வேண்டும் என்பதுதான் பெண்ணுரிமைப் போராளிகளின் கருத்தாக இருக்கிறது.
- திருமண வல்லுறவு கிரிமினல் குற்றமல்லஅலகாபாத் நீதிமன்றம்: வரதட்சிணை கொடுமை உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் காசியாபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் கணவன் மீது 2013இல் வழக்குத் தொடுத்தார். வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், கணவன் மீதான குற்றத்தை உறுதிசெய்தது. அதை எதிர்த்துக் கணவர் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட அங்கும் தண்டனை உறுதிசெய்யப்பட, அலகாபாத் உயர் நீதிமன்றத்தை அந்தக் கணவர் அணுகினார். வழக்கை விசாரித்த நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா, மற்ற பிரிவுகளில் கணவனின் குற்றத்தை கடந்த டிசம்பர் 6 அன்று உறுதிசெய்து தீர்ப்பளித்தார். ஆனால், பிரிவு 377இன் அடிப்படையில் சுமத்தப்பட்ட குற்றத்திலிருந்து கணவனை விடுவித்தார். திருமண உறவுக்குள் கணவன், 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய மனைவியை வல்லுறவுக்கு ஆளாக்குவது கிரிமினல் குற்றமல்ல என நீதிபதி தெரிவித்தார்.
- 2013இல் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 375இல் ஏற்படுத்தப்பட்ட சட்டத் திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பை நீதிபதி வழங்கினார். கணவன், சாத்தியமுள்ள அனைத்து வழிகளிலும் தன் மனைவியோடு உறவு வைத்துகொள்ள அனுமதிக்கிறது இந்தச் சட்டத் திருத்தம்.
- 15 முதல் 18 வயதுக்குட்பட்ட மனைவியை வல்லுறவுக்கு ஆளாக்குவது மட்டுமே கிரிமினல் குற்றம் என்று சொன்ன உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் தன் கருத்தில் அவர் சுட்டிக்காட்டினார். தவிர, உச்ச நீதிமன்றம் திருமண வல்லுறவை கிரிமினல் குற்றமாக அறிவிக்காத நிலையில் சம்பந்தப்பட்ட கணவனைப் பிரிவு 377இன் கீழ் தண்டிக்க முடியாது எனவும் நீதிபதி தெரிவித்தார். நீதிபதியின் இந்தத் தீர்ப்பு சமூகச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் விவாதத்தை எழுப்பியது.
நன்றி: இந்து தமிழ் திசை (17 – 12 – 2023)