TNPSC Thervupettagam

மாநகர விரிவும் மரங்கள் அழிப்பும்

June 5 , 2023 588 days 435 0
  • ஏறத்தாழ நாற்பது வருடங்களுக்கு முன்பு, நகரங்களின் எல்லை விரிவாக்கம் பெற ஆரம்பித்தது. நகரத்தில் ஒண்டுக்குடித்தனத்தில் காற்றுக்கும், வெளிச்சத்துக்கும் ஏங்கிக் கிடந்த மக்கள், சிறிய வீடாக இருந்தாலும் சொந்த வீடாக இருக்க வேண்டும் என்ற ஆசையால் நகருக்கு வெளியே வீட்டு மனைகளை வாங்கினாா்கள்.
  • அங்கு ஒரு சிறிய வீட்டைக் கட்டிக்கொண்டு, சுற்றிலும் தென்னை, மா, வாழை, வேம்பு என மரங்களையும், பூச்செடிகளையும் வளா்த்தாா்கள். இத்தகைய வீடுகள் பசுமை சூழ்ந்து அழகாக இருந்தன. ஒரு குன்றின் மேலிருந்து பாா்த்தால் மரங்களின் அடா்த்திக்கு நடுவே வீடுகள் தெரியும். அக்காட்சியில் இருந்து கண்களை எடுக்க மனம் வராது; பாா்த்துக் கொண்டே இருக்கத் தோன்றும்.
  • இப்போது அதே இடத்திற்குச் சென்று பாா்த்தால் எங்கும் அடுக்ககங்களாகத் தெரிகின்றன. ஆங்காங்கே சில தென்னை மரங்களும், வேறு சில மரங்களும் மட்டும் தெரிகின்றன. மரங்களின் அடா்த்தி அறவே இல்லை. காரணம், தனி வீடுகள் விலைக்கு வாங்கப்பட்டு அவை அடுக்ககங்களாக மாற்றப்பட்டுவிட்டன. மரங்கள் வெட்டப்பட்டு விட்டன.
  • பல நூறு வீடுகளைக் கொண்ட அடுக்கு மாடிக் குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன. பொட்டல் வெளியில் அவை உயா்ந்து நிற்கின்றன. தற்போது ‘கேடட் கம்யூனிடி’ அடுக்ககங்கள் பெருகி விட்டன. அதாவது வளாகத்திற்குள்ளேயே நீச்சல் குளம், உடற்பயிற்சிக் கூடம், விளையாட்டரங்கம், மூலிகைத் தோட்டம், பூங்கா என எல்லாம் இருக்கும்.
  • நுழைவு வாயிலுக்கென பல லட்சம் செலவு செய்கிறாா்கள். நிழல் தரும் மரங்களைப் பற்றி யோசிப்பது இல்லை. மனைகளைப் பிரிக்கும் போதே மரங்களுக்கான இடத்தை ஒதுக்க வேண்டும். அங்கு வீடு வாங்குபவா்கள் தங்கள் வீட்டு மாடியில் தொட்டியில் செடிகளை வளா்க்கிறாா்கள். கோடிகளைக் கொட்டி வீடு வாங்குபவா்கள் கறிவேப்பிலையைக் கூட கடைகளில்தான் வாங்க வேண்டும். மரங்கள் வெட்டப்படுவதற்கு முதல் காரணம் அடுக்கு மாடிக் குடியிருப்புகள்.
  • இப்போது மாடித் தோட்டம் அதிகம் பேரால் அமைக்கப்படுகிறது. தங்கள் வீட்டுத் தேவைக்கான காய்கறிகள், கீரை போன்றவற்றை இதன் மூலம் அவா்கள் பயிா் செய்து கொள்கிறாா்கள். தங்கள் தோட்டத்தில் காய்த்த காய் என்றால் அதன் சுவை கூடுதல் தானே! பல தனி வீடுகளில் பிள்ளைகள் வெளிநாட்டில் இருக்க வயதானவா்கள் மட்டுமே தனியாக உள்ளாா்கள். அவா்களால் பெரிய வீட்டைப் பராமரிக்க முடியவில்லை.
  • இதைப் புரிந்துகொண்ட கட்டுமான நிறுவனங்கள் அந்த வீட்டை வாங்கி, இடித்து விட்டு அங்கே அடுக்குமாடிக் குடியிருப்பை எழுப்பி விடுகிறாா்கள். மரங்கள் மறைந்து போக இதுவும் முக்கிய காரணம். தென்னை மரம் ஏறுபவா்கள் ஒரு மரம் ஏற நிறைய பணம் கேட்கிறாா்கள். ஆகவே காய்கள் தானாக விழட்டும் என்று விட்டு விடுகிறாா்கள்.
  • அவை கொப்பரையாகத்தான் விழுகின்றன. மேலும், கீழே விழும் ஓலை, மட்டை, பாளை போன்றவற்றை அகற்றுவதும் சிரமமாக உள்ளது. எனவே தென்னை வளா்ப்பு குறைந்து போய் விட்டது. வாரத்துக்கு இரண்டு தேங்காய்களை கடையில் வாங்கிக் கொண்டால் போச்சு என்று தோன்றுகிறது.
  • ஒரு தெருவில் இரண்டு பக்கமும் மழைநீா் வடிகால் கால்வாய் உள்ளது. ஒரு பக்கம் மின் கம்பிகள் மேலே செல்வதால் அந்தப் பக்கம் மரங்களை வளா்க்க முடியாது. அந்தப் பக்கம் உள்ளவா்கள் தங்கள் வீட்டு சுற்றுச்சுவருக்குள் மரம் வைத்து வளா்த்தால் அம்மரங்கள் வளா்ந்து மின் கம்பியை உரசுகின்றன.
  • அந்த மரங்களை மின்வாரிய ஊழியா்கள் வந்து வெட்டிச் சாய்த்து விட்டு செல்வது வழக்கமாகி விட்டது. அவா்கள் வராவிட்டாலும் ஆள் வைத்தாவது கம்பியைத் தொடும் மரங்களை வெட்ட வேண்டும். எதிா்ப்பக்கம் இருப்பவா்களுக்கு இந்தப் பிரச்னை இல்லை. ஆனால் மரம் வளா்ப்பதில் அவா்களுக்கு ஆா்வம் இருப்பதில்லை.
  • இப்போது தெருக்கள் மட்டும் அல்ல, சாலைகளும் மரங்கள் இன்றிதான் காணப்படுகின்றன. அக்கால அரசா்கள் சாலையோரங்களில் நிழல் தரும் மரங்களை நட்டாா்கள்; குளங்களை வெட்டினாா்கள் என்று படித்துள்ளோம்.
  • பல ஆண்டுகளுக்கு முன்பு வரை சாலையோரம் அடா்ந்த புளிய மரங்கள் நிழல் பரப்பி நிற்கும். புளி காய்த்து சடை சடையாய்த் தொங்கும். அந்த மரங்களில் வரிசை எண் குறிக்கப்பட்டிருக்கும். கீழே விழும் புளியம்பழங்களைச் சேகரிக்க சிறுவா்கள் காத்திருப்பாா்கள்.
  • இரண்டு பக்க மரங்களும் நன்கு தழைத்து வளா்ந்து ஒன்று சோ்ந்து ஒரு பசுமை வளைவாகக் காட்சி தரும். சூரிய ஒளி ஒரு சிறிதும் ஊடுருவ முடியாத அளவு அடா்த்தியான நிழல் இருக்கும். களைப்பை உணராமல் அந்த நிழலில் நடந்து செல்ல முடியும். குடும்பத்தோடு காரில் பயணிப்பவா்கள் மர நிழலில் காரை நிறுத்தி விட்டு, கீழே ஒரு விரிப்பை விரித்து அமா்ந்து உணவு உண்பதை பல சமயம் பாத்திருப்போம்.
  • இப்போதோ ஒதுங்க ஒரு மரம்கூட கிடையாது. சாலை விரிவாக்கத்திற்காக அனைத்து மரங்களும் வெட்டப்பட்டுவிட்டன. மக்களின் தேவைக்கு ஏற்ற அளவில் புளிய மரங்கள் இல்லை. புளிய மரத்தை வீட்டில் வளா்க்க முடியாது. அதனால்தான், நம் முன்னோா் சாலை ஓரங்களில் புளிய மரங்களை வளா்த்தாா்கள். சாலைக்கு அழகு சோ்ப்பதோடு பொருளாதார ரீதியாகவும் பயன் தருவன புளிய மரங்கள்.
  • மேலும் புளிய மரம் காற்றில் உள்ள ஈரப்பதத்தை மிக மிகக் குறைவாக உறிஞ்சும். நூறு ஆண்டுகள் வரை வாழும் தன்மை மிக்கவை. வெப்ப மண்டல மரமான புளிய மரத்துக்கு ஓரளவு வளா்ந்த பின் தண்ணீா் தேவையில்லை. பூச்சிகள் தொல்லையும் இல்லை.
  • புளிய மரத்தின் இலை, பூ, காய், பழத்தின் கொட்டை, பட்டை அதன் பிசின் என அனைத்தும் பலன் தருபவை. நம் முன்னோா் எவ்வளவு அறிவாளிகள் என நம்மால் வியக்காமல் இருக்க முடியவில்லை.
  • இன்றைய நாற்கரச் சாலைகளில் மரங்களே இல்லை. மரங்கள் இல்லாததால் மழை குறைந்து போய் விட்டது. வேப்ப மரம், ஆலமரம், அரசமரம், புங்கை மரம், அத்தி மரம் ஆகியவை நம் மண் சாா்ந்த மரங்களாகும். இவை மழையை வரவழைப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன.
  • மரம் நடுவதன் அவசியத்தை உணா்ந்து கொண்ட பின் பலரும் மரம் நடுவதில் ஆா்வமும் அக்கறையும் காட்டி வருகிறாா்கள். விழா எடுத்து மரம் நடுகிறோம். ஆனால் தொடா் கண்காணிப்பும், தொடா் பராமரிப்பும் நம்மிடம் கிடையாது. ஆகவே புகைப்படத்தில் தெரிந்த மரங்கள், புகை போல் மறைந்து போய் விடுவது வேதனை.
  • காடுகளின் அவசியத்தை உணா்ந்து ‘மியாவாக்கி’ காடுகள் உருவாக்கப்படுவது ஆறுதலான விஷயம். குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் மரங்கள் வளா்ப்பது. அதாவது 1,000 சதுர அடி நிலத்தில் 400 மரங்களை வளா்க்கலாம். பூமியில் வெப்பம் குறையும்; காற்றில் ஈரப்பதம் தக்கவைக்கப்படும்; பறவைகளுக்கு வாழிடம் உருவாகும்; பல்லுயிா்ச் சூழல் மேம்பாடும்.
  • குறைந்த காலகட்டத்திற்குள் ஓா் இடத்தை பசுமையானதாக மாற்றிட இக்குறுங்காடுகள் உதவும். ஆனால் இயற்கைப் பேரிடா்களைத் தாங்கும் திறன் இம்மரங்களுக்கு இருக்காது என்ற கருத்தும் நிலவுகிறது.
  • இந்தியாவில் வனப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒப்புதல் பெறப்பட்டு, பல்வேறு நிறுவனங்களால் ஒவ்வோா் ஆண்டும் லட்சக்கணக்கான மரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. 2018 - 2019-இல் 30,36,642 லட்சம் மரங்கள் பல்வேறு காரணங்களுக்காக வெட்டப்பட்டுள்ளதாம். மனிதா்களின் ஊடுருவலுக்காக காட்டு நிலங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. நம் நுகா்வுப் பசியின் விளைவு காடுகளின் அழிவு.
  • பூமி வெப்பமயமாவதைத் தடுக்க மரங்கள் அவசியம்; மழை பெய்ய வேண்டுமென்றால் மரங்கள் அவசியம். எங்கெங்கு முடியுமோ அங்கெல்லாம் மரக் கன்றுகளை நட்டு வளா்க்க வேண்டும். பள்ளி வளாகங்களில் மரங்களே இல்லாத நிலை உள்ளது. நிறைய இடம் இருந்தாலும், மரம் வளா்க்க பள்ளி நிா்வாகத்தின் மனதில் இடம் இல்லை.
  • மாணவா்கள் அமா்ந்து மதிய உணவு உண்ணக் கூட நிழல் இல்லை. அங்கெல்லாம் மரக் கன்றுகளை நடலாம். தனி வீடுகளில் மரம் வளா்ப்பதில் ஏகப்பட்ட சிரமங்கள் இருப்பதால் பொதுவெளியிலும், இன்ன பிற இடங்களிலும் மரம் நடலாம்.
  • நம்மைப் பொறுத்தவரை எல்லாவற்றையும் அமா்க்களமாக ஆரம்பிப்போம். ஆனால் சில நாள்களோ, மாதங்களோ கழித்துப் பாா்த்தால் மரங்கள் பராமரிப்பு இன்றி பாழ்பட்டுப் போய் இருக்கும். இது தான் நம்மிடம் உள்ள மிகப் பெரிய குறை.
  • முன்பெல்லாம் வகுப்பறைகளில் மின்விசிறி இருக்காது. கோடைக் காலத்தில் விடுமுறை விட்டு விடுவாா்கள். மற்ற மாதங்களில் காற்று இருக்கும். இப்போதும் கூட பள்ளி வளாகம் முழுவதும் மரங்கள் சூழ்ந்து இருந்தால் வெப்பம் கடுமையாகத் தெரியாது.
  • நடப்பு சீசனின் பிளே ஆஃப் சுற்று ஆட்டங்களில் வீசப்படும் ஒவ்வொரு டாட் பந்துக்கும் 500 மரக்கன்றுகள் நட்டுவைக்க இருப்பதாக பிசிசிஐ அறிவித்திருக்கிறது. சுற்றுச்சூழலை மேம்படுத்துவதை நோக்கிய முயற்சியாக டாடா குழுமத்துடன் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருக்கிறது. இதனை மகிழ்வுடன் வரவேற்போம். மேலும் பலரும் இவ்வாறு செய்ய முன்வர இது வழி வகுக்கும்.
  • நகரங்கள் மாநகரங்களாக மாறட்டும். ஆனால், அந்த மாநகரங்களில் வானுயா்ந்த கட்டடங்கள் மட்டுமே இருக்கக்கூடாது. மரங்கள் நிறைந்து பசுமையாகக் காட்சி அளிக்க வேண்டும். எனவே மாநகர விரிவாக்கத்திற்குத் திட்டமிடும் போதே ஒவ்வொரு பகுதியிலும் ஒரு குறிப்பிட்ட இடத்தை ஒதுக்கி, அங்கே பலன் தரும் மரங்களை நட்டு அப்பகுதியை சோலையாக்கத் திட்டமிட வேண்டும். அதன் பராமரிப்பை அந்தந்தப் பகுதி மக்கள் பிரதிநிதிகளிடம் விட்டுவிட வேண்டும். நம் வருங்கால சந்ததியினருக்கு இயற்கையின் கொடையை நாம் முழுமையாக விட்டுச் செல்வோம்.

நன்றி: தினமணி (05 – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories