- சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 16 மாநகராட்சிகள், 41 நகராட்சிகள், 25 பேரூராட்சிகளின் எல்லைகள் விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாகவும் புதிதாக 13 நகராட்சிகள், 25 பேரூராட்சிகள் உருவாக்கப்பட உள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், ஊராட்சிப் பகுதிகளை நகராட்சியோடு இணைப்பதால் தங்களுக்குக் கிடைத்துவரும் நலத்திட்ட உதவிகள் பாதிக்கப்படும் எனக் கிராமப்புற ஊராட்சிகளைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.
- இந்தியாவில் நகரமயமாக்கலில் முன்னிலை வகிக்கும் மாநிலம் தமிழ்நாடு. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் நகர்ப்புற மக்கள்தொகை 48.45%. தற்போது அது அதிகரித்திருக்கும் நிலையில், நகரமயமாக்கலின் ஒரு பகுதியாகத்தான் மாநகராட்சி, நகராட்சிகளின் எல்லைகள் விரிவுபடுத்தப்படுகின்றன.
- நகரப் பகுதிகளில் அமைக்கப்படும் பன்னாட்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் என அனைவருக்கும் ஏற்ற வகையில் நகர்ப்புறத்தையும் அதைச் சுற்றியுள்ள உள்ளாட்சிப் பகுதிகளையும் மேம்படுத்தவும் இதுபோன்ற விரிவாக்கமும் தரம் உயர்த்துதலும் தவிர்க்க முடியாதவை. ஆனால், அந்த நோக்கம் சரியான வகையில் நிறைவேற்றப்படுவது அவசியம்.
- நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் ஊரக உள்ளாட்சிகளை இணைப்பதால் நலத்திட்டங்கள் கிடைக்காது என்பது தொடர்பாகச் சட்டமன்றத்தில் அதிமுக உறுப்பினர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பியபோது, பதில் அளித்த தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, “தமிழகத்தில் 12 ஆயிரத்துக்கும் அதிகமான ஊராட்சிகள் உள்ளன.
- இதில் மாநகராட்சி, நகராட்சிகளுடன் இணைப்பது, பேரூராட்சிகளை உருவாக்குவது போன்றவை 371 ஊராட்சிகளில் மட்டுமே மேற்கொள்ளப்படும். இதில் ஆட்சேபம் இருந்தால் 120 நாள்களுக்குள் கருத்துத் தெரிவிக்கலாம்” என்று தெரிவித்தார்.
- 100 நாள் வேலைத் திட்டம் பறிபோகும் என்கிற கேள்விக்கு, விளைநிலங்கள் இல்லாத இடங்களை மட்டுமே நகராட்சியுடன் இணைப்பதாகவும் அவர் தெரிவித்தார். தவிர, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கலாம். இவ்விஷயத்தில் மக்களின் நம்பிக்கை குலைந்துவிடாத வகையில் நடவடிக்கைகள் அமைய வேண்டும்.
- தொழில் வளர்ச்சி, வீட்டு வசதி, குடிநீர் விநியோகம், கழிவு மேலாண்மை, சுற்றுச்சூழல் உள்ளிட்ட அனைத்தையும் உள்ளடக்கியதாகத்தான் நகரமயமாக்கல் கொள்கை அமைய வேண்டும். வளர்ச்சி என்கிற பெயரில் குறிப்பிட்ட சில பகுதிகளை மட்டும் மேம்படுத்திவிட்டு, மற்ற பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்புகூட இல்லாத வகையில் புறக்கணிப்பது நகரமயமாக்கலின் நோக்கத்துக்கே எதிரானதாக அமைந்துவிடும்.
- நகரமயமாக்கலில் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு முதன்மைக் கவனம் செலுத்த வேண்டும். திடக்கழிவு மேலாண்மைக்கும் திரவக் கழிவு மேலாண்மைக்கும் நம்மிடம் மேம்பட்ட திட்டமிடல்கள் இல்லாத நிலையில், அரசு அதிலும் கவனம் செலுத்த வேண்டும். மக்கள்தொகை நெருக்கத்துக்கு ஏற்ப அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். நகரை அழகுபடுத்தவும் பெருநிறுவன வளர்ச்சிக்காகவும் எளிய மக்களை அப்புறப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
- மத்திய அரசின் மானியங்களை உள்ளாட்சிகள் பெற வேண்டுமானால் ஆண்டுதோறும் மாநகராட்சிகளின் சொத்து வரியை ஆறு சதவீதம் உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு நிர்ப்பந்திக்கிறது. மாநகராட்சிகளின் எல்லை விரிவாக்கத்தால் சொத்து வரி உயரும் என்கிற அச்சமும் மக்களுக்கு இருக்கிறது.
- மாநகராட்சிகளில் தொடர் சொத்து வரி உயர்வை ரத்து செய்வதோடு ஆண்டுதோறும் சொத்து வரியை உயர்த்தும் நடவடிக்கையையும் அரசு கைவிட வேண்டும். ஊராட்சிப் பகுதிகள் நகராட்சியோடு இணைக்கப்படுவதால் இலவச வீடு கட்டும் திட்டத்தின் பலனைப் பெற முடியாமல் போய்விடும் என்றும் மக்கள் அச்சப்படுகிறார்கள். இதுபோன்ற அச்சங்களைத் தீர்ப்பதோடு அனைத்துத் தரப்பினரிடமும் ஆலோசனை பெற்று மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் அரசு செயல்பட வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (13 – 01 – 2025)