TNPSC Thervupettagam

மாநில அரசின் கடன் வரம்பு: மோதல் முடிவுக்கு வரட்டும்

February 21 , 2024 187 days 247 0
  • மாநில அரசுகள் கடன் வாங்குவதற்கான வரம்பு தொடர்பாக உச்ச நீதிமன்றப் பரிந்துரைப்படி மத்திய அரசும் கேரள அரசும் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாதது துரதிர்ஷ்டவசமானது.
  • இதனால், நிதி விவகாரங்களில் தன்னிச்சையாகச் செயல்படுவதாக மத்திய அரசுக்கு எதிராகக் கேரள அரசு தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.
  • கேரள மாநில அரசு ரூ.32,442 கோடி வரை நிகரக் கடன் பெறுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. ஆனால், அந்த உச்ச வரம்பைக் கடந்த ஆண்டு ரூ.15,390 கோடியாக மத்திய அரசு குறைத்தது. அதாவது, மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் கடன் வரம்பு 3.5% என இருந்தது 2%ஆகக் குறைக்கப்பட்டது.
  • இது மாநிலத்தையே அழிக்கும் செயல் என்று கேரள அரசு விமர்சிக்கிறது. ஆனால், கடன் வாங்கும் வரம்பைக் குறைக்கவில்லை என்றும் கேரள அரசின் தவறான நிதி நிர்வாகத்தால்தான் அம்மாநிலத்தின் நிதிநிலை மோசமாக உள்ளது என்றும் மத்திய அரசு கூறுகிறது.
  • இந்த விவகாரத்தில் கேரள அரசு உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டை நாடியது. நீதிமன்றத்தின் ஆலோசனைப்படி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. கேரளத்துக்கு உடனடியாக ரூ.26,000 கோடி தேவைப்படும் நிலையில், இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் மூலம் தீர்க்க மாநில அரசு ஆர்வம் காட்டுகிறது.
  • ஆனால், கேரள அரசின் அவசரம் கருதி ரூ.11,731 கோடி கடன் வாங்க மத்திய அரசு அனுமதிப்பதாகவும், அதற்கு முன்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என்று நிபந்தனை விதிப்பதாகவும் கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
  • எனவே, அடுத்த விசாரணைக்கு முன்பாக இரண்டு தரப்பும் ஆலோசனை நடத்திவிட்டு நீதிமன்றத்தை அணுகும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • இந்திய அரசமைப்புச் சட்டக்கூறு 293, மாநிலங்களுக்கு நிதி சுயாட்சியை வழங்குகிறது. ஒரு மாநிலத்தின் ஒருங்கிணைந்த நிதியிலிருந்து உத்தரவாதத்தின் பேரில் கடன் வாங்கவும் அனுமதிக்கிறது. கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் கடன் வாங்குவதில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருந்தன.
  • ஆனால், 2025-26ஆம் ஆண்டுக்குள் நிதிப் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5%க்கும் கீழாகக் குறைப்பதற்காக மத்திய அரசு 2022இல் சட்டத்திருத்தம் செய்தது. இது மாநிலத்தின் நிதி சுயாட்சிக்கு எதிரானது என்பது கேரளத்தின் வாதம்.
  • ஏற்கெனவே நிதிப் பகிர்வில் தென் மாநிலங்கள் புறக்கணிக்கப்படுவதாகத் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் குற்றம்சாட்டிவரும் நிலையில், மாநில அரசுகள் கடன் வாங்கும் விவகாரமும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. நிதிக் கூட்டாட்சி முறையில் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் கருத்து வேறுபாடு தொடர்வது நல்லதல்ல.
  • இது பாஜக அல்லாத மாநில அரசுகளுக்கு எதிரான நடவடிக்கை என்கிற விமர்சனங்களுக்கு வலுசேர்க்க மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது. ஒவ்வொரு மாநிலத்தின் நிதி தொடர்பான சட்டத்திலும் கடன் வாங்கும் அளவும் வரையறுக்கப்பட்டுள்ளது.
  • அதை மீறாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய கடமையும் பொறுப்பும் தமக்கு உண்டு என்பதை மாநில அரசுகளும் உணர வேண்டும். பேச்சுவார்த்தையின் மூலம் முரண்களைத் தீர்க்க இரு தரப்பும் முன்வர வேண்டும்.

நன்றி: தி இந்து (21 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories