- தமிழ்நாட்டுக்கெனப் புதிய கல்விக் கொள்கையை வகுக்க அமைக்கப்பட்ட நீதியரசர் முருகேசன் தலைமையிலான குழு, தனது பரிந்துரைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்துள்ளது. இந்தப் பரிந்துரைகள் கல்வியாளர்கள் மத்தியில் கவனம் பெற்றிருக்கின்றன.
- மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ள அதிகாரங்களைப் பொறுத்தவரை கல்வி பொதுப் பட்டியலில் உள்ளது. 2020 இல் மத்திய அரசு வகுத்த புதிய தேசியக் கல்விக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை.
- 2021 இல் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, மாநிலத்துக்கெனத் தனித்துவமான கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் கல்வியாளர்கள் உள்படப் பல்துறை வல்லுநர்கள் அடங்கிய குழு 2022இல் அமைக்கப்பட்டது.
- பல கட்டப் பணிகளுக்குப் பின்னர் இக்குழுவின் பரிந்துரைகள் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும் என்கிற பரிந்துரை தொடங்கி, பள்ளிகளில் 5 3 2 2 என்ற நிலைகள் பின்பற்றுதல்; ஆரம்பக் கல்வி முதல் பல்கலைக்கழகக் கல்வி வரை தமிழே பயிற்று மொழி; தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக 5 வயது நிரம்பிய குழந்தையை ஒன்றாம் வகுப்பில் சேர்க்கலாம்; பயிற்று (கோச்சிங்) வகுப்புகளைத் தடை செய்வது; பள்ளிகளில், கல்லூரிகளில் சேர எந்த நுழைவுத் தேர்வும் கூடாது; 11,12ஆம் வகுப்பு மதிப்பெண்களை வைத்தே உயர்கல்விச் சேர்க்கை என்பன உள்பட முக்கியமான அம்சங்கள் பரிந்துரையில் இடம்பெற்றுள்ளன.
- பள்ளிக் கல்வியிலும் உயர் கல்வியிலும் தனியார் ஆதிக்கம் அதிகரித்துவரும் நிலையில் அதிக முதலீடுகளை இத்துறையில் அரசு செய்ய வேண்டும் என்று இக்குழு பரிந்துரை செய்திருக்கிறது. மாநில அரசின் நிதிநிலை அறிக்கையில் ஒவ்வோர் ஆண்டும் பள்ளிக் கல்விக்குத்தான் அதிக நிதி ஒதுக்கப்படுகிறது.
- ஒப்பீட்டளவில் உயர் கல்விக்கு ஒதுக்கப்படும் நிதி குறைவுதான். ஏற்கெனவே நிதி நெருக்கடியில் அரசு உள்ள நிலையில் இத்துறைகளில் அதிக முதலீடுகளை அரசு எவ்வாறு செய்யும்; மாநிலக் கல்விக் கொள்கையைப் பின்பற்றும்போது மத்திய அரசின் பங்களிப்புடன்கூடிய கல்வி சார்ந்த திட்டங்களில் நிதி ஆதாரங்களைப் பெறுவதில் சிக்கல் வருமா என்கிற கேள்விகளும் எழுகின்றன.
- மாணவர்கள் கற்றலில் பின்தங்கும் பிரச்சினை சவாலாக மாறிவரும் சூழலில் அதுபற்றிப் பரிந்துரைகள் இல்லாததும், வணிகமயமாகிவிட்ட கல்வியிலிருந்து ஏழை, நடுத்தர வர்க்கத்தினரைக் காப்பதற்கான அம்சங்கள் இல்லாததும் ஏமாற்றம் அளிக்கின்றன.
- கல்வி பொதுப் பட்டியலில் இருப்பதால், ஒரு மாநிலம் தனக்கென கல்விக் கொள்கையை வகுத்து, அதன்படி செயல்பட முனைவதைத் தவறு என்று சொல்ல முடியாது. அதே வேளையில், தமிழ்நாட்டில் மாநில அரசின் கல்விக் கொள்கை என்கிற முன்முயற்சிகள் இருந்ததில்லை.
- என்றாலும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், ஆங்கிலம் என இருமொழிக் கொள்கையைப் பின்பற்றிக் கல்வியில் மேம்பட்ட படிநிலைகளைத் தமிழ்நாடு கடந்து வந்திருக்கிறது. வலுவான பொதுக் கல்வி அமைப்புகள் மூலம் முன்னோடியாகச் செயல்பட்டும் வந்திருக்கிறது.
- இதற்கு முன்பு பலதரப்பட்ட துறைகள் சார்ந்த கொள்கைகளை வகுத்து அரசு வெளியிட்டுள்ளது. ஆனால், கொள்கைகளை வகுப்பதோடு எதுவும் நின்றுவிடக் கூடாது. அதில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளில், மக்கள் நலன் சார்ந்தவற்றைச் செயல்படுத்தும்போதுதான் அரசு பின்பற்ற முனையும் கொள்கைகளுக்கு அர்த்தம் இருக்கும். இது மாநிலக் கல்விக் கொள்கைக்கும் பொருந்தும்.
நன்றி: இந்து தமிழ் திசை (09 – 07 – 2024)