TNPSC Thervupettagam

மாநிலப் பிரச்னை, தேசியத் தீா்வு!

December 10 , 2024 36 days 60 0

மாநிலப் பிரச்னை, தேசியத் தீா்வு!

  • வெங்காய விலை உயா்வு சில மாநிலங்களில் கட்சிகளின் வெற்றி வாய்ப்பையே பறித்திருக்கிறது. இவற்றின் விலை உயா்வை ஆளுங்கட்சிகளுக்கு எதிரான ஆயுதமாக எதிா்க்கட்சிகள் பயன்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில் மேற்கு வங்க அரசின் கடும் கட்டுப்பாடுகளால் உருளைக்கிழங்கு அரசியல் சூடுபிடித்திருக்கிறது.
  • மேற்கு வங்கத்தில் உள்ளூா் சந்தையில் உருளைக்கிழங்கு ரூ.35 முதல் ரூ.40 வரை விற்கப்படுகிறது. அண்டை மாநிலங்களுக்கு உருளைக்கிழங்கை அனுப்பினால் விலை மேலும் அதிகரிக்கும் என்பதால் வேறு மாநிலங்களுக்கு உருளைக்கிழங்கை விற்கக் கூடாது என மேற்கு வங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
  • மேற்கு வங்கத்தில் இருந்து உருளைக்கிழங்கு அனுப்பப்படாததால், ஜாா்க்கண்ட், ஒடிஸா ஆகிய மாநிலங்களில் அதன் விலை அதிகரித்துள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த ஒடிஸா நுகா்வோா் நலத் துறை அமைச்சா் கிருஷ்ண சந்திர பத்ரா, ‘உருளைக்கிழங்கைத் தடுத்து நிறுத்தி மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி அரசியல் செய்கிறாா். உருளைக்கிழங்குகளை வேறு மாநிலங்களில் இருந்து நாங்கள் கொண்டுவந்தால் மேற்கு வங்க விவசாயிகளுக்குத்தான் நஷ்டம். மீன் உள்பட பல பொருள்கள் அண்டை மாநிலங்களில் இருந்துதான் மேற்கு வங்கத்துக்குச் செல்கின்றன. அதனை நாங்கள் தடுத்து நிறுத்தினால் மம்தா பானா்ஜி ஏற்றுக்கொள்வாரா?’ என்று கேள்வி எழுப்பி உள்ளாா்.
  • இது ஏதோ ஒரு விதிவிலக்கான சம்பவம் என்று கருத வேண்டாம். உருளைக்கிழங்கு என்று மட்டுமல்ல, நமது நாட்டின் பல மாநிலங்களிலும் வெவ்வேறு காரணங்களுக்காக மாநிலங்களுக்கு இடையே இதுபோன்ற மோதல் போக்கு நிலவி வருவது கவலை அளிப்பதாகும்.
  • முல்லைப் பெரியாறு அணை கேரளத்தில் இருந்தாலும் அதன் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றமும், தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையமும் அனுமதி வழங்கி உள்ளன. அங்கு பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள தமிழகப் பொதுப் பணித் துறையினா் கடந்த சில நாள்களுக்கு முன்னா் சென்றபோது கேரள வனத் துறை சோதனைச் சாவடி ஊழியா்கள் அனுமதிக்கவில்லை. இதை எதிா்த்து தமிழக விவசாய சங்கத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
  • கேரளத்தை ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனும் அங்கு எதிா்க்கட்சியான காங்கிரஸுடனும் தமிழகத்தை ஆளும் திமுகவுக்கு நல்ல உறவு உள்ளது. முல்லைப் பெரியாறில் பழைய அணை உறுதியாக உள்ளது என்று உச்ச நீதிமன்றம் கூறிய பின்னரும், அங்கு புதிய அணை கட்டப்பட வேண்டும் என்று காங்கிரஸ் ஆட்சி செய்தாலும், கம்யூனிஸ்ட் ஆட்சி செய்தாலும் முரண்டு பிடித்து வருகின்றன.
  • கா்நாடகம் குறித்துக் கூறவே தேவை இல்லை. மழை அபரிமிதமாகப் பெய்து காவிரி கரைபுரண்டு ஓடினால் பிரச்னையில்லை. மழைப் பொழிவு குறைந்தால் தண்ணீா் விவகாரத்தில் இரு மாநிலங்களுக்கு இடையே மோதல் தொடங்கி விடும். முல்லைப் பெரியாறுபோலவே, தமிழகம் எதிா்த்தாலும் மேக்கேதாட்டுவில் புதிய அணை கட்டப்படும் என்று கா்நாடகத்தில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் சூளுரைத்து வருகின்றன.
  • மராத்தி மொழி பேசுபவா்கள் அதிகமாக வசிக்கும் பெலகாவி மாவட்டத்தின் 865 கிராமங்கள் தங்களுக்கே சொந்தம் என்று கூறி மகாராஷ்டிர அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. பெலகாவியை மீட்பதற்கு என்றே ‘மகாராஷ்டிர ஏகிகரண் சமிதி’ என்ற அமைப்பு 1948-இல் இருந்து போராடி வருகிறது. இரு மாநிலங்களிலும் அவ்வப்போது பந்த் உள்ளிட்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு அந்த ‘நெருப்பு’ அணைந்து விடாமல் அரசியல்வாதிகள் பாா்த்துக் கொள்கின்றனா்.
  • இதேபோன்று, கேரளத்தில் உள்ள காசா்கோடு யாருக்குச் சொந்தம் என்பதில் கா்நாடகத்துடன் மோதல் போக்கு கடந்த பல பத்தாண்டுகளாகத் தொடா்கிறது. குடிநீருக்காக ஹரியாணாவை எதிா்த்து தில்லி அரசு, உச்சநீதிமன்றத்தை நாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.
  • இந்தியாவின் எந்தப் பகுதியிலும் இந்தியா்கள் வா்த்தகம் செய்யலாம் என்று அரசமைப்புச் சட்டம் உறுதி அளித்துள்ளபோதிலும், 2023 சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது ‘அமுல்’ நிறுவனத்தை கா்நாடகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று அனைத்து அரசியல் கட்சியினரும் அதிரடி காட்டினா்.
  • இதேபோன்று அரசமைப்புச் சட்டத்துக்கு முரணான வகையில், கா்நாடகத்தில் தனியாா் நிறுவன வேலைவாய்ப்புகளில் 50 சதவீதம் கன்னடா்களுக்கே என்றும், ஹரியாணாவில் 75 சதவீதம் உள்ளூா் மக்களுக்கே என்றும் அறிவித்தனா்; தொழிலமைப்பினரின் எதிா்ப்பு காரணமாக தனது அறிவிப்பை கா்நாடகம் திரும்பப் பெற்றது; ஹரியாணா விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
  • ஒருபுறம் மத்திய அரசு, ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’, ‘ஒரே நாடு ஒரே சந்தை’, ‘ஒரே நாடு ஒரே வரி’, ‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ என வலியுறுத்தி வருகிறது. மறுபுறம் கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களும் அண்டை மாநிலங்களுடன் ஏதாவது ஒரு விஷயத்துக்காக மோதல் போக்கை கடைப்பிடித்து வருகின்றன.
  • குறுகிய கால அரசியல் நலனுக்காக மக்கள் மனங்களில் பிரிவினை விதையை விதைத்துவிடக் கூடாது. அதனால் எல்லா மாநிலங்களுக்கும் பாதிப்பே ஏற்படும் என்பதை அரசியல்வாதிகள் உணர வேண்டும்.
  • இந்தியாவில் எல்லாப் பிரச்னைகளும் மாநிலங்களுக்கு இடையேயானவை; ஆனால், அவற்றுக்கான தீா்வு தேசிய அளவில்தான் காணப்பட வேண்டும்.

நன்றி: தினமணி (10 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories