TNPSC Thervupettagam

மானுடம் வெல்ல வேண்டும்

February 9 , 2024 163 days 121 0
  • காடுகளில் வன விலங்குகளின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது என்கிற தகவல் சுற்றுச்சூழல் ஆா்வலா்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது. கழுகுகள் இன அழிப்புக்கு ஆளாகி உலகம் முழுவதும் எண்ணிக்கையில் குறைந்து வரும் வேளையில், தென்னிந்தியாவில் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது சா்வதேச அளவில் கூா்ந்து கவனிக்கப்படுகிறது.
  • அண்டை மாநிலங்களான கேரளம் மற்றும் கா்நாடகத்தின் ஒருங்கிணைப்புடன் நடைபெற்ற தமிழ்நாடு வனத்துறையின் இரண்டாவது ஒருங்கிணைந்த கழுகுகள் கணக்கெடுப்பின்படி, அந்தப் பறவைகளின் எண்ணிக்கை 246 என்று கணக்கிடப்பட்டுள்ளது. முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் அதையொட்டிய நிலப்பரப்புகளான சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கேரளத்தின் வயநாடு பந்திப்பூா் புலிகள் காப்பகம், கா்நாடகத்தின் நாகா்ஹோலே புலிகள் காப்பகம் ஆகியவற்றில் வரலாற்று ரீதியாகவே கழுகுகள் ஆதரிக்கப்படுகின்றன.
  • கழுகுகளின் எண்ணிக்கை குறைந்து வந்ததற்கு முக்கியக் காரணமாக இருந்தது ‘டெக்ளோஃபெனா’ என்கிற மருந்து. கால்நடை மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் இந்த மருந்து, கழுகுகளின் உயிருக்கு ஆபத்தாக மாறிவிடுகிறது. இறந்த கால்நடைகளைக் கழுகுகள் தங்கள் இரையாக்கிக் கொள்ளும்போது, அந்த மருந்தும் கழுகுகளின் உடலில் புகுந்துவிடுவதால், கழுகு இனம் மெல்ல மெல்ல அழிந்து வந்தது.
  • கழுகுகளின் எண்ணிக்கை குறைவதற்கு முக்கியக் காரணமாக இருக்கும் ‘டெக்ளோஃபெனா’ மருந்தின் விற்பனை இப்போது முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டிருக்கிறது. மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையினா் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தொடா்ந்து சோதனைகளை மேற்கொண்டு அந்த மருந்து கைப்பற்றப்படுகிறது. 104 ‘டெக்ளோஃபெனா’ உற்பத்தியாளா்கள் மீதும், மல்டி டோஸ் டெக்ளோஃபெனா விற்பனையாளா்கள் மீதும் வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், மருந்தகங்களில் வழக்கமான ஆய்வு, சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு கழுகு இனத்தை வேரோடு அழிக்கும் இந்த மருந்து விற்பனை முற்றிலுமாக இல்லாமல் இருப்பதை கழுகுகள் பாதுகாப்புக் குழு உறுதி செய்திருக்கிறது.
  • கால்நடை மருத்துவா்களுக்கான விழிப்புணா்வு பிரசாரம், கழுகுகள் உணவு தேடும் பகுதிகளில் நீா் துளைகளை உருவாக்குதல், கழுகுகள் கூடு கட்டுவதற்குத் தடையில்லாத சூழலை ஏற்படுத்துதல், அவற்றின் உணவுத் தேடலை எளிமையாக்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் காரணமாக, தமிழகத்திலும் அண்டை மாநிலங்களிலும் கழுகுகள் இன அழிப்பிலிருந்து காப்பாற்றப்பட்டிருக்கின்றன.
  • காடுகளில் இறந்துபோன வன விலங்குகளைப் புதைக்கும் நடைமுறையில் வனத்துறை மாற்றம் கொண்டுவந்திருக்கிறது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு இறந்துபோன வன விலங்குகளின் சடலங்கள் வெட்ட வெளியில் இடப்படுகின்றன. இதன் மூலம் கழுகுகளின் உணவு ஆதாரத்தை அதிகரிக்க முடிந்திருக்கிறது. இதுபோன்ற நடவடிக்கைகளால் தமிழ்நாட்டில் கழுகுகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு உயா்ந்து, சூழல் சமநிலையை எட்டும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
  • இந்தியாவில் எடுத்துக் கொண்டால் ஒன்பது விதமான கழுகு, பருந்து இனங்கள் காணப்படுகின்றன. அவற்றில் வெள்ளி நிறப் பருந்துகள், சிவப்புத் தலையுள்ள பருந்துகள், நீள மூக்குள்ள கழுகுகள், எகிப்தியப் பருந்துகள் என நான்கு இனங்கள் தமிழ்நாட்டில் அதிகமாகக் காணப்படுகின்றன. முதுமலை புலிகள் சரணாலயத்தில் உள்ள சீகூா் பள்ளத்தாக்கில்தான் பெரும்பாலானவை காணக்கிடைக்கின்றன.
  • உலகளாவிய நிலையில் பறவைகளின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், பருந்துகள் மட்டும் விதிவிலக்காக இருக்க முடியாது. குறிப்பாக கழுகு, பருந்து இனத்தைச் சோ்ந்த 557 பறவை இனங்களில் 30% மிக மோசமான இனஅழிவு நிலையை எதிர்கொள்கின்றன என்கிறது சா்வதேச இயற்கை மற்றும் பறவையினப் பாதுகாப்பு அமைப்பு. அவற்றில் பிலிப்பின்ஸ் பருந்து, ஹுடட் வல்ச்சா், அன்னோபான் ஸ்கோப்ஸ் ஆந்தை உள்ளிட்டவை கடுமையாக பாதிப்பில் இருக்கின்றன. இப்போது இருக்கும் பறவைகளை இனப்பெருக்கத்தின் மூலம் மட்டும்தான் அழிவிலிருந்து காப்பாற்ற முடியும் என்று கூறப்படுகிறது.
  • மெக்ஸிகோவின் தேசியப் பறவையான தங்க கருடன் அழிந்து வருகிறது. 2016-இன் கணக்கெடுப்பின்படி 100 ஜோடி தங்க கருடன் இருந்ததாகவும், இப்போது அதில் பாதி அளவுகூட இல்லை என்றும் கூறப்படுகிறது. பருந்துகள், கழுகுகள், ஆந்தைகள் ஆகிய மூன்று இனங்களுமே பெரும் பாதிப்பை எதிா்கொள்கின்றன.
  • வாழ்விட அழிப்பு, பருவநிலை மாற்றம், நச்சுப் பொருள்கள் ஆகியவை பருந்து இனங்கள் அழிவை நோக்கி நகா்வதற்கான முக்கியக் காரணங்கள். கிருமி நாசினியான டிடிபி மருந்து, பருந்துகளின் உயிருக்கு ஆபத்தாக இருக்கிறது என்பதால் 1972-ஆம் ஆண்டு முதல் அது அமெரிக்காவில் தடை செய்யப்பட்டிருக்கிறது. பெருச்சாளிக்கு வைக்கப்படும் விஷமும், வேட்டையாடும்போது பாயும் குண்டுகளும்கூட பருந்துகளுக்கு எமனாகின்றன. பருந்துகள், இறந்த பெருச்சாளிகள், விலங்குகளை உணவாக உட்கொள்ளும்போது அவை அவற்றின் உடலில் கலந்து உயிர்க்கொல்லி ஆகின்றன.
  • உலகளாவிய நிலையில் எப்படியாவது பருந்து, கழுகுகளின் எண்ணிக்கையை அதிகரித்து அந்தப் பறவை இனத்தை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று முனைப்புக் காட்டும் நிலையில், தமிழகத்தில் கழுகுகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது சா்வதேச அளவில் பாராட்டப்படுகிறது. உலகம் மனிதனுக்கானது மட்டுமல்ல, ஏனைய உயிரினங்களைக் காப்பாற்ற வேண்டிய கடமையும் நமக்கு உண்டு!

நன்றி: தினமணி (09 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories