TNPSC Thervupettagam

மாயங்களை நிகழ்த்தும் வாசிப்பு

September 5 , 2023 489 days 602 0
  • வாசிப்பில் தடுமாறும் குழந்தைகளைப் பற்றிய கவலை தீர்ந்தபாடில்லை. கணிச மான எண்ணிக்கையில் நடுநிலை, உயர்நிலை வகுப்பு குழந்தைகள்கூட வாசிப்பில் தடுமாறுவதைப் பார்க்க முடிகிறது. இதைச் சரிசெய்யும் துறைசார் முயற்சிகளும் தீவிரமடைந்து வருகின்றன. அண்மையில் முன்னோடித் திட்டமாக பள்ளிக் கல்வித் துறை அறிமுகப் படுத்தியிருக்கும் வாசிப்பு இயக்கம்’, கதை வாசிப்பை முன்வைக்கிறது.

மெல்ல கற்போர்

  • எழுத்துகளை அறியவும், அதைத் தொடர்ந்து வார்த்தையாக உச்சரிக்கவும் தொடர் பயிற்சிகள் தேவை. அதற்கு கால அவகாசமும் தொடக்கநிலை வகுப்புகளில் உண்டு. அப்பயிற்சியில் விடுபட்ட குழந்தைகளே வகுப்பில் முன்னேறிய பிறகும் வாசிப்பில் தடுமாறுகின்றனர்.
  • இதைச் சரிசெய்ய அவ்வப்போது அனுப்பப்படும் சுற்றறிக்கையின் வழி பள்ளிதோறும் வாசிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கெனச் சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அப்பயிற்சி தொடங்கும்போதே அடைவுக்காக ஒரு குறுகிய காலத்தை முன்பே வரையறுத்துக் கொள்கிறது; மதிப்பீட்டின் மீதான கவனத்தோடு அணுகப்படுகிறது.
  • வாசிப்பு என்பது எழுத்தை அறிதல், வார்த்தைகளை உச்சரித்தல் என்கிற பயிற்சிகளைத் தாண்டிய தொடர் நடவடிக்கை. இதில் கதை வாசிப்பு மிக முக்கியப் பங்கை வகிக்கிறது. பாடப் புத்தக வாசிப்போடு ஒப்பிடு கையில் கதை வாசிப்பு கற்றலை நிர்ப்பந்திப்பதில்லை. இதன் உள்ளும் கற்கும் வாய்ப்பு இருக்கலாம். அதை வற்புறுத்தாமல் இன்பத்தை முன்னிறுத்தி நகரும் தன்மை கதை வாசிப்புக்கு உண்டு.

களத்திலிருந்து ஓர் உதாரணம்

  • இனிப்புக் கீரைஎன்றொரு கதை. அக்கதையில் ஓர் ஆட்டுக்குட்டி, இனிப்புக் கீரையைத் தேடிப்போய் தொலைந்துபோய் விடுகிறது. குட்டி யைத் தேடி அம்மா ஆடு பயணிக்கிறது. இனிப்புக்கீரை கிடைத்ததா? அம்மா ஆடு தன் குட்டியைக் கண்டறிந்ததா? என்பதுதான் கதை. கதையில் வரும் ஆட்டுக்குட்டியின் பெயர் கீகீ’. இக்கதை ஒவ்வொரு பக்கமும் படங்களைக் கொண்ட கதை.
  • எழுத்தை உச்சரிக்கத் தெரியாத ஒரு தொடக்கப்பள்ளி மாணவி இக்கதையை வாசிக்க முயல்கிறார். அதிலிருக்கும் படங்களையும் தெரிந்த மிகச் சில சொற்களையும் வைத்து, ஆடு தொலைந்ததையும் அம்மா ஆடு தேடிப் போவதையும் புரிந்துகொள்கிறார்.
  • அருகிலிருந்த நாகராஜன் என்கிற வாசிப்பு இயக்கக் கருத்தாளரிடம் அந்த ஆட்டுக்குட்டியின் கதையைச் சொல்லுகிறார். கதை பற்றிய உரையாடல் நடக்கிறது. ஒவ்வொரு பக்கத்திலும் ஆட்டுக்குட்டியின் கீகீஎனும் பெயர் வருகிறது. நாகராஜன் ஆட்டுக்குட்டியின் பெயரைச் சொன்னதும் அம்மாணவி அப்பெயரை உச்சரித்துப் பின்தொடர்கிறார்.
  • அடுத்தடுத்து புரட்டும்போது ஏழாவது பக்கம், எட்டாவது பக்கம் என வரும் நிலையில் அம்மாணவி கீகீஎனும் ஆட்டுக்குட்டியின் பெயரை வாசிக்கிறார். இது கீகீதான் சார்என அப்பெயரை அடையாளம் காண்கிறார். உச்சரிக்கத் தெரியாத மாணவி இப்போது கீஎன்கிற எழுத்தைக் கற்றுக்கொண்டுவிட்டாள். அவள் கீகற்றுக்கொண்ட அனுபவம் மறக்க முடியாத அனுபவமாக மாறுகிறது.

விரியும் கற்பனை உலகு

  • அடுத்த கதைப் புத்தகத்தை அந்த மாணவி கையிலெடுக்கிறார். கற்றல் சுயமுயற்சி தன்னார்வமாக நிகழ்கிறது. அடுத்தடுத்து வாசிக்கத் தூண்டும்படியான ஆர்வத் தையும் மதிப்பீடும் நிர்ப்பந்தமும் அற்ற வாய்ப்பையும் கதை வாசிப்பால் தர முடிகிறது.
  • ஒரு குழந்தை இயல்பாகவே சந்தோஷத்தைத் தேடும். அவை கதைகளில் கொட்டிக் கிடக்கின்றன. யார் உதவியும் இன்றிக் குழந்தை தானே புத்தகங்களைக் கையிலெடுத்து வாசிப்பதை சுயவாசிப்புஎன்கிறோம். சுயவாசிப்புக்குப் பின்னிருக்கும் சுதந்திரம் என்கிற உளவியலே குழந்தைகளுக்கு வாசிப்பின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. சுயவாசிப்புக்குக் கதைப் புத்தகங்களே ஆகப்பொருத்தமான தேர்வு.
  • மெல்லக் கற்கும் மாணவர்களுக்கும் கற்பனைத் திறன் உண்டு. பெரியவர்கள் யோசிக்கவே முடியாத விசயங்களைக் அக்குழந்தைகள் கதைகளாகச் சொல் வதைக் கேட்டிருக்கிறேன். எழுத்து, சொற்பிழையோடு கதை எழுதிய பல குழந்தைகளின் கற்பனை உலகத்தை வகுப்பில் வாசித்திருக்கிறேன். அவர்களின் ஆசைகளும் கனவுகளும் யதார்த்தத்திலிருந்து மேலெழும்பிப் பறப்பதைக் கண்டு வியந்திருக்கிறேன்.
  • நிச்சயமாக ஒரு கதை வாசிப்பு மெல்லக் கற்போரிடம் மாயங்களை நிகழ்த்தும். கதைகளை மெல்லக் கற்போருக்கெனத் திட்டமிட்டு உருவாக்குவதும் அதைத் தொடர் இயக்கமாக எடுத்துச் செல்வதும் காலத்தின் தேவை. விடுபடும் குழந்தை கள் பேசத் தொடங்கினால் வகுப்பறை மேலும் உயிர்பெறும். பள்ளிசார் நடவடிக்கைகளில் அது நேர்மறையான பல மாற்றங்களைத் தருவிக்கும்.

நன்றி: இந்து தமிழ் திசை (05 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories