TNPSC Thervupettagam

மார்செல் மாஸ்: ஈதல், இசைபட வாழ்தல்

June 5 , 2023 587 days 468 0
  • மார்செல் மாஸ் [Marcel Mauss 1872-1950], பிரெஞ்சு சமூகவியல் சிந்தனையாளர். இவரது தாய்மாமனும் ஆசிரியருமான எமில் தர்கைம் [Emile Durkheim 1858-1917] மற்றொரு புகழ்பெற்ற சமூகவியல் அறிஞர் ஆவார். மானுடச் சமூகங்களின் கட்டமைப்பு எப்படி உருவானது என்ற கேள்வியை எழுப்பும் சமகால சமூகவியல், மானுடவியல் சிந்தனைகளை எடுத்துக்கொண்டால் எமில் தர்கைம், மாக்ஸ் வெபர் [Max Weber 1864-1920], கார்ல் மார்க்ஸ் [Karl Marx 1818-1883] ஆகிய மூவரும்தான் அவற்றுக்கான வேறுபட்ட, அதே சமயம் விரிவான உரையாடலைக் கட்டமைக்கும் சிந்தனைச் சட்டகங்களை வழங்கியவர்கள் எனக் கருதப்படுகிறது.
  • மார்செல் மாஸின் புகழ்பெற்ற நூல், The Gift: Forms and Functions of Exchange in Archaic Societies [1925]. தமிழில் ஈகை, கொடை, தானம், பரிசு எனப் பல சொற்கள் அதற்கு ஈடாக உள்ளன. மாஸ் எழுப்பும் கேள்விகளுக்குப் பொருத்தமாக ஈகை என்ற சொல் இருப்பதாக நினைக்கிறேன். குறிப்பாக, ‘ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு’ என்ற வள்ளுவர் குறள் முக்கியமானது.
  • இந்த நூல் வடமேற்கு அமெரிக்காவிலும், பசிபிக் கடலில் உள்ள பாலினீசிய, மாலினீசியத் தீவுகளிலும் உள்ள ஆதிவாசி இனக் குழுவினர், பண்டைய சமூகங்களில் எப்படி ஈகை என்பது சமூகக் கட்டமைப்பின் ஆதாரமாக விளங்கியது என்பதை விளக்குகிறது. அடிப்படையில் மூன்று விதிகள் ஈகை என்னும் செயலினை வரையறுக்கின்றன.

முதல் விதி

  • ஒருவர் தன்னிடம் உள்ள பொருளை மற்றவருக்கு வழங்க வேண்டும். இரண்டாவது விதி, தனக்கு வழங்கப்படும் பொருளை மற்றவர் பெற்றுக்கொள்ள வேண்டும். மூன்றாவது விதி, வழங்கியவருக்கு அதற்குப் பதிலாகத் தன்னிடம் உள்ள பொருளைப் பெற்றுக்கொண்டவர் வழங்க வேண்டும்.
  • இது பண்டமாற்று, வர்த்தகம்போலத் தொனித்தாலும் அவற்றின் மறுதலை எனலாம். பண்டமாற்றிலும், வர்த்தகத்திலும் பரிவர்த்தனை தனக்குச் சாதகமாக முடிய வேண்டும் என்று ஒருவர் நினைப்பது அடிப்படை. அதாவது, தன் நலனைத் தானே முதன்மைப்படுத்தித்தான் வர்த்தகப் பரிவர்த்தனை நடக்கும். ஆனால், ஈகைப் பரிவர்த்தனையில் தன் நலன் ஒத்திப்போடப்பட வேண்டும். தன்னுடைய ஈகை தனக்கு நன்மை பயக்கும் என நம்ப வேண்டுமே தவிர, தானாக அதனை ஈட்ட முயலக் கூடாது.
  • ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்பதுபோல. ஈகை நியதிகள், விதிகள் போலத் தொனித்தாலும் தாமாக மனமுவந்து செய்யப்பட வேண்டும். ஒருவருக்குச் சமூகத்தில் கிடைக்கும் அங்கீகாரம், கெளரவம், மதிப்பு, மரியாதை எல்லாம் அவருடைய ஈகைத்தன்மையிலேயே அடங்கியிருக்கிறது. அதிகாரத்தைப் பெற சேகரிக்கலாம்; ஆனால் நுகர்வதற்கல்ல, ஈவதற்கே சேகரிக்க வேண்டும்.

பாட்லாட்ச்:

  • அமெரிக்கா, கனடாவின் பசிபிக் கரையோரத்தில் வசித்த இனக்குழுக்களிடையே வழங்கிய சொல் ‘பாட்லாட்ச்’. இது குறிப்பிட்ட தருணங்களில் இனக்குழுத் தலைவரால் அளிக்கப்படும் சடங்குரீதியான விருந்தாகும். இந்த விருந்துக்குப் பிற இனக்குழுத் தலைவர்கள் அழைக்கப்படுவார்கள். அவர்களுக்கு மதிப்புக்குரிய பரிசுகள் வழங்கப்படும். இது தவிர, எரியும் நெருப்பிலும் தன்னிடமுள்ள மதிப்புக்குரிய பொருள்களைப் போட்டு எரிப்பார் தலைவர்.
  • விருந்துக்கு வந்த மற்ற தலைவர்களும் கூடிய விரைவில் ஒரு விருந்தினை வைத்து, முதலாமவரைவிட அதிகப் பரிசுகளை வழங்க வேண்டும், அழிக்க வேண்டும். அப்போதுதான் அவருக்கு மரியாதை. இல்லாவிட்டால் அவர் முதலாமவரைவிடத் தாழ்ந்தவராகக் கருதப்படுவார்.
  • இந்த மனோவியலின் அடிப்படை என்னவென்றால், உபரியைச் சேகரிப்பது என்பது, தான் வைத்து அனுபவிப்பதற்கு அல்ல அல்லது தன்னிடம் அபூர்வமான பொருள்கள் உள்ளன என்று காட்டிப் பெருமைப்படுவதற்கு அல்ல. சமூகத்தில் பெருமை, கெளரவம், அதிகாரம் என்னவென்றால், தான் சேகரித்தவற்றைப் பிறருக்கு வழங்குவது, நெருப்பில் இட்டோ நீரில் இட்டோ அழிப்பது.
  • இது ஒருவகையான அதிகாரத்துக்கான போர்தான்; ஆனால் இதில் வெற்றி, தாமுடைமை வைத்துக்கொள்வதில் இல்லை; துறப்பதில், வழங்குவதில், அழிப்பதில்தான் உள்ளது. ஆரியர்களின் யாகங்கள், வேள்விகளில் இந்த அம்சத்தைக் காணலாம். ஆனால், பிராமணர்களின் தர்ம சாஸ்திரங்களை அவர்கள் வசதிக்காக அவர்களே எழுதிக்கொண்டார்களோ என்ற ஐயத்தைப் பதிவுசெய்கிறார் மார்செல் மாஸ்.

திருமண விருந்து, சீர்வரிசை, மொய் எழுதுதல்:

  • தமிழ்ச் சமூகங்களிலும் இது போன்ற கெளரவம், பெருமை சார்ந்து செலவழித்தல், வழங்குதல் போன்றவை நிலவிவந்துள்ளன; இன்றும்கூட முற்றிலும் மறைந்துவிடவில்லை. உதாரணமாக, பங்காளி வீட்டுத் திருமண விருந்தில் இருபது வகை உணவு வழங்கினார்கள் என்றால், தன் வீட்டுத் திருமணத்தில் இருபத்தைந்து வகை உணவு வழங்கப்பட வேண்டும் என்று கருதுவது உண்டு.
  • ஊரையே அடைத்துப் பந்தல் போட்டு, ஊருக்கே நாலு நாள் விருந்து வைத்து, பல ஆண்டுகள் தாங்கள் அளித்த விருந்தின் பெருமை பேசப்பட வேண்டும் என்று நினைத்து, சொத்தின் கணிசமான பகுதியை விற்றவர்கள் உண்டு. தன் வீட்டுத் திருமணத்தில் உறவினர் வைத்த மொய்யைவிட அதிகமாக, அவர் வீட்டுத் திருமணத்தில் மொய் எழுதுவதே பெருமை. இல்லாவிட்டால் வாழ்வதில் பொருள் இல்லை. அதே போலத்தான் தாய்மாமன் சீர் போன்றவையும் மானப் பிரச்சினையாகிவிடும்.
  • பயன்பாட்டுவாத, தனிமனிதவாத மறுப்பு: தனி நபர்களே சமூகத்தின் அடிப்படை அலகுகள், அவர்கள் தங்கள் நலனை மேம்படுத்திக்கொள்ள விரும்புவதே சமூக அமைப்பின் அடிப்படை என்று கருதுவது பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டில் வலுப்பெற்றது. இதைத் பயன்பாட்டுவாதம் (Utilitarianism) என்பார்கள். நவீனப் பொருளாதாரம், முதலீட்டியம் போன்றவை இவ்விதமாக ஒருவர் உபரி உற்பத்தியை எல்லாம் லாபமாக, முதலீட்டுச் சேகரமாக மாற்றி, பெரும் முதலீட்டாளராக வளர்ச்சி பெற வேண்டும் என்பதாகவே அமைந்துள்ளன.
  • இத்தகைய தனிநபர்மையவாதத்துக்குப் பதிலாக ஒட்டுமொத்த சமூக நிதர்சனம் (Total Social Fact) என்பதே ஒருவர் செயலுக்கான, பொருளுக்கான மதிப்பினை, அர்த்தத்தை வழங்குகிறது; அதில்சமூகவியல், அறவியல், சடங்கியல், அழகியல், அரசியல் எனப் பல பரிமாணங்களும் இணைந்தே இயங்குகின்றன என்ற மாற்றுச் சிந்தனையை முன்வைத்ததே இந்த நூலின் முக்கியத்துவமாகக் கருதப்படுகிறது.

நன்றி: தி இந்து (05 – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories