TNPSC Thervupettagam

மாறுகிறேன், எனவே வாழ்கிறேன்

December 25 , 2024 29 days 81 0

மாறுகிறேன், எனவே வாழ்கிறேன்

  • நீ என்னவாக மாற விரும்புகிறாய் என்று கேட்டால் தயங்காமல் சொல்வேன். ஒரு பச்சோந்தியாக. அதுதான் என் இலக்கு. அதை அடைவதற்குத்தான் போராடிக் கொண்டிருக்கிறேன். ஏன் போராட்டம் என்றால், ஒரு பச்சோந்தியாக மாறுவது எளிதல்ல. நிறைய உழைக்க வேண்டும். நிறைய கற்க வேண்டும். நிறைய அனுபவம் பெற வேண்டும். நிறைய ஆராய வேண்டும். ஆனால் பாருங்கள், ஒரு பச்சோந்தி சர்வ சாதாரணமாக இயல்பிலேயே முழு நிறைவான ஓர் உயிராக இருக்கிறது. ‘பெர்ட்ரண்ட் ரஸல்’ ஆக இருப்பது அல்ல, ஒரு பச்சோந்தியாக இருப்பதுதான் என்னைப் பொறுத்தவரை பெரும் சாதனை.
  • ‘உயிரே போனாலும் நான் மாற மாட்டேன். குழந்தையாக இருந்தபோது எப்படி இருந்தேனோ அப்படித்தான் இப்போதும் இருக்கிறேன். இனியும் இருப்பேன்.’ இப்படி ஒருவரால் அறிவிக்க முடியும் என்றால், அவர் மிக நல்ல மனிதராகத்தான் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைப்பீர்கள்.
  • அவரை முழுமையாக ஏற்பீர்கள். என்ன ஆனாலும் எது நடந்தாலும் மாறாமல் இருப்பது நல்ல பண்பு என்றும் அடிக்கடி மாறிக்கொண்டே இருப்பது மோசமான விஷயம் என்றும்தான் பெரும்பாலானோர் நம்புகின்றனர். அதோ போகிறாரே அவர் ஒரு பச்சோந்தி என்று நீங்கள் யாரையாவது குறிப்பிட்டால், ஐயோ, அவரை நம்ப முடியாது என்பதுதான் நீங்கள் உணர்த்த விரும்பும் செய்தி, இல்லையா?
  • 50 ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு ரஸலாக இருந்தேன். 25 ஆண்டுகளுக்கு முன்பு வேறொரு ரஸலாக மாறி இருந்தேன். 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்த ரஸலும் சென்ற ஆண்டு இருந்த ரஸலும் கிட்டத்தட்ட வெவ்வேறு மனிதர்கள். சென்ற மாத ரஸலை நீங்கள் இன்று காண முடியாது. நேற்று நீங்கள் வந்திருந்தால் இன்றைய ரஸலைச் சந்தித்திருக்க முடியாது. ஆண்டுகளை விட்டுத் தள்ளுங்கள். மணிக்கு மணிகூட மாற வேண்டியிருக்கும். மாறியும் இருக்கிறேன்.
  • பல ஆண்டுகளாக நான் கொண்டிருந்த ஒரு நம்பிக்கையைப் போன மாதம் கைவிட்டேன். நான் எதைச் சரியென்று போன வாரம் வாதம் செய்தேனோ அதை இன்று காலை முதல் மறுத்துக்கொண்டிருக்கிறேன். போன மாதம் வரை எனக்குப் பிடிக்காமல் இருந்த ஓர் உணவு, இதோ இன்று காலை முதல் பிடிக்கத் தொடங்கி இருக்கிறது. பொருந்தாததால் பல ஆண்டுகளாக நான் அணியாமல் வைத்திருந்த ஒரு சட்டை கடந்த ஆண்டு கச்சிதமாகப் பொருந்தியது. அடடா, இனி இதை அடிக்கடி அணிய வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். ஆனால், ஆறே மாதங்களில் சட்டை சுருங்கிவிட்டது. நான் வளர்ந்துவிட்டேன்.
  • என் இதயம், என் ரத்தம், என் நகம், என் தசை, என் முடி, என் அறிவு, என் ஆற்றல் அனைத்தும் தொடர்ச்சியாக உருமாறிக்கொண்டே இருக்கின்றன. என் வீடு மாறிக்கொண்டிருக்கிறது. பலமுறை வாசித்த ஒரு கவிதையை இன்று வாசிக்கும்போது அது வேறொரு புதிய பொருளை அளிப்பதை உணர்ந்தேன். சாக்ரடிஸும் அரிஸ்டாட்டிலும் ரூஸோவும் மாபெரும் தத்துவ மேதைகள், சந்தேகமே இல்லை.
  • ஆனால், இன்றைய உலகைப் புரிந்துகொள்ள அவர்களுடைய சொற்கள் போதும் என்று சொல்ல முடியுமா? நிச்சயம் முடியாது. தத்துவம் மாறிக்கொண்டிருக்கிறது. எப்போதோ எழுதப்பட்ட சொற்களைக் கொண்டு மாறிக்கொண்டிருக்கும் ஓர் உலகை நம்மால் புரிந்துகொள்ள முடியாது. கணிதம் வளர்ந்துகொண்டிருக்கிறது. உயிரியல் வளர்ந்துகொண்டிருக்கிறது. கலை வளர்ந்துகொண்டிருக்கிறது.
  • நேற்று நாம் கண்ட வானம் இன்று இல்லை. மரமும் செடியும் கொடியும் இலையும் தொடர்ச்சியாக வளர்ந்துகொண்டிருக்கின்றன. காற்று மாறுகிறது. நீர் மாறுகிறது. நிலம் மாறுகிறது. பூமி மாறுகிறது. நட்சத்திரங்கள் மாறுகின்றன. போன ஆண்டு நிலவிய வெப்பம் இந்த ஆண்டும் நிலவும் என்று சொல்ல முடியாது. காலம் நில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. நம் ஆடை மாறுகிறது. நம் ருசி மாறுகிறது. நம் ஆற்றல் மாறுகிறது. நம் பார்வை மாறுகிறது. நம் சிந்தனை மாறுகிறது. மாறிக்கொண்டே இருப்பதுதான் இயல்பு என்கிறது அறிவியல்.
  • புதிய கண்டுபிடிப்புகள் நிகழும்போது நம் நம்பிக்கைகளை நாம் மாற்றிக் கொள்ளத்தான் வேண்டும். புதிய சூழல் உருவாகும்போது அதற்கேற்ப நம் சிந்தனைகளும் செயல்பாடுகளும் மாறத்தான் வேண்டும். என் உடலின் வளர்ச்சியைப் பொருள்படுத்தாமல் அதே சட்டையை என்னால் இன்று அணிய முடியுமா? போன வாரம் வந்த அதே புதன்தான் இன்றும் வந்திருக்கிறது என்று அன்றைய செய்தித்தாளை இன்று எடுத்து வாசிக்க முடியுமா? முடியாது. அதற்கான அவசியமும் இல்லை என்கிறது பச்சோந்தி.
  • சூழலுக்கு ஏற்ப மாறுங்கள். காலத்துக்கு ஏற்ப வளருங்கள். நேற்றைய நம்பிக்கைகளை இன்று புதிதாகப் பரிசோதியுங்கள். நேற்றைய சரி, தவறுகளை இன்று புதிதாக ஆராயுங்கள். புதிய வெளிச்சங்களை நோக்கிச் சென்றுகொண்டே இருங்கள். புதிய கற்பனைகளை, புதிய நம்பிக்கைகளை, புதிய கனவுகளைத் தொடர்ந்து நாடிக்கொண்டே இருங்கள். புதிது புதிதாகக் கற்றுக்கொண்டே இருங்கள். கற்க, கற்க மாறிக்கொண்டே இருங்கள். மாற்றம்தான் வளர்ச்சி. மாற்றம்தான் அழகு. மாற்றம்தான் இயற்கை.
  • அன்பினால் ஈர்க்கப்பட்டு, அறிவால் வழிநடத்துவதுதான் சிறந்த வாழ்க்கை.
  • பயம் என்பது மூடநம்பிக்கை. பயத்தை வெல்வதே ஞானத்தின் ஆரம்பம். - பெர்ட்ரண்ட் ரஸல், தத்துவவியலாளர், கணிதவியலாளர், சமூக சீர்திருத்தவாதி.

நன்றி: இந்து தமிழ் திசை (25 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories