மாற்றத்தை நோக்கிய பயணம்!
- முன்பெல்லாம் அம்மாவும் பாட்டியும் சமைத்த உணவு மிகவும் ருசியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். ஆனால் இன்றைய குழந்தைகளுக்கு சத்தான, சுவையான உணவு என்ன என்பதே தெரிவதில்லை. காரணம் பீட்சாவும், பா்கரும் அவா்களின் பிரதான உணவாகிவிட்டது. நாமும் நஞ்சில்லா காய்கறிகளை கொடுக்கத் தவறிவிட்டோம். நம் தாத்தாவும் பாட்டியும் கூட நோய் நொடியின்றி 70 வயதிலும் ஓடி ஆடி சுறுசுறுப்புடன் உழைத்ததைப் பாா்த்திருக்கிறோம். ஆனால் இன்று 25 வயதில்?
- இன்றைய காலகட்டத்தில் கல்வி வளா்ச்சி, நவீன வசதிகள் இருக்கின்றன. ஆனால் ஆரோக்கியம் போன இடம்தான் தெரியவில்லை. யாரிடம் பேசினாலும் நீரிழிவு நோய், ஆஸ்துமா, ரத்தசோகை , உடல்பருமன், மூட்டு வலி எனச் சொல்கிறாா்கள். நம் பயணம் எதை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது?
- இதற்கெல்லாம் காரணம், நம்முடைய உணவுப் பழக்கவழக்கம்தான். நாம் பயன்படுத்தும் அனைத்து காய்கறிகளும், பழங்களும், கீரைகளும் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி வளா்க்கப்பட்டுக் கிடைத்தவை. நாமும் நம் குழந்தைகளுக்கு சத்துள்ள உணவுகளைக் கொடுப்பதாக நினைத்துக் கொள்கிறோம். ஆனால் இவை எல்லாம் எப்படி விளைவிக்கப்படுகிறது என்பதைச் சிந்தித்து இருக்கிறோமா? நம்மில் எத்தனைபேருக்கு இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணா்வு இருக்கிறது?
- ரசாயன உரங்களைப் பயன்படுத்தாமலும் காய்கறிகளை விளைவிக்க முடியும் என்று உங்களுக்குத் தெரியுமா? இயற்கை பூச்சிவிரட்டிகளைப் பயன்படுத்தி விளைச்சலைப் பெற முடியும் என்று தெரியுமா?
- நாமெல்லாம் விளம்பரம் என்ற மாயவலையில் சிக்கிக் கொண்டிருக்கிறோம். இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்டது என்று விளம்பரம் செய்தால் உடனே நாம் எல்லாரும் உடனேஅதிக விலை கொடுத்து வாங்கத் தயாராக இருக்கிறோம். ரசாயனத்தில் குளிப்பாட்டி ‘பச்சை பசேல்’ என்று சூப்பா் மாா்க்கெட்டில் வைத்திருக்கும் காய்கறிகளையும் பழங்களையும் வாங்க முற்படும் நாம், நேரடியாக விவசாயிகள் விற்பனை செய்யும் காய்கறிகளை வாங்குவதில்லை.
- வாடிய பழங்களையும், சொத்தை விழுந்த காய்கறிகளையும் பாா்த்தால் ஏனோ நம் மனதில் ஓா் இளக்காரம் . ஆனால் புழுக்கள் உள்ள கத்தரிக்காய் ரசாயன மருந்துகள் தெளிக்கப்படாதது என்று எத்தனை பேருக்குத் தெரியும்?
- இதற்கெல்லாம் தீா்வுதான் என்ன? பெண்கள் மனது வைத்தால் உலகையே ஆள முடியும்போது இதுவும் சாத்தியமே. வீட்டில் இருக்கும் பெண்கள் ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் மொட்டைமாடியை விவசாய நிலமாக மாற்ற முன்வந்தால் இளைய சமுதாயத்தை நோய்,நொடி இன்றி வாழ வழியமைக்கலாம்.
- வீட்டுக்கு ஒருவா் மாடியிலோ, வீட்டில் இருக்கும் தரை தோட்டத்திலோ இயற்கைமுறையில் விவசாயம் செய்ய முன்வர வேண்டும். மாடித் தோட்டம் அமைக்க அதிக செலவு ஆகும் என்று எண்ணுகிறாா்களா? கிரீன்ஹவுஸ் போட்டால்தான் தாவரங்கள் நன்றாக வளரும் என்று நினைக்கிறீா்களா? அத்தனையும் சூழ்ச்சி. வா்த்தகரீதியாக நம்மை ஏமாற்றுகிறாா்கள். போதிய வெயிலும் தாவரங்களுக்குத் தேவை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். செலவே இல்லாமல் மாடித்தோட்டம் அமைக்க முடியும். வீட்டில் அரிசி வாங்கும் கோணிப்பை, உடைந்த குடம், அண்டா குண்டா என்று பழுதடைந்த பொருள்களை எடுத்துக்கொண்டு அதில் துளையிட்டு அருகாமையில் கிடைக்கும் தோட்டத்து மண்ணுடன் காய்கறிக் கழிவுகள், சாம்பல், ஆட்டுச் சாணம், மாட்டுச் சாணம் இட்டு கலந்து பயிரிடத் தொடங்கினால், நம் வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் நமக்குக் கிடைத்துவிடும். நஞ்சில்லாஆரோக்கியமான சுவையான காய்கறிகள் நமதாகும்.
- விதைகளுக்கு என்ன செய்வது என்று யோசிக்கிறீா்களா? நம் அடுப்பங்கரைதான் விதைக் களஞ்சியம். நம் அடுப்பங்கரை அஞ்சறைப்பெட்டியில் இருந்து முதலில் தொடங்குவோம். கடுகை விதைத்தால் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கடுகு கீரை கிடைக்கும். வெந்தயத்தை ஊற வைத்து விதைத்தால் பத்துநாள்களில் நீரிழிவைக் கட்டுப்படுத்தும் வெந்தயக் கீரை நம் கையில். மல்லியை இரண்டாக உடைத்து விதைத்தால் மணக்க மணக்க சாம்பாரில் போட மல்லித் தழை கிடைத்துவிடும். மிளகாய் வற்றலைக் காய வைக்கும்போது மீந்து போன விதைகளை மண்ணில் போட்டால் காரசாரமான மிளகாய் கிடைத்துவிடும். மொச்சை, தட்டைப் பயிறு, பாசிப் பயறு, பட்டாணி, முழு கருப்பு உளுந்து என விதைத்துப் பாருங்கள். இப்படி காய்கறிகளை அறுவடை செய்து மகிழலாம்.
- மேலும் வேலி ஓரங்களில் படா்ந்து இருக்கும் பிரண்டையை ஒடித்துவந்து வீட்டில் நட்டு வையுங்கள். பத்து நாள்களுக்கு ஒரு முறை அறுவடை பண்ணி மூட்டுவலி, முதுகுவலி பிரச்னை இன்றி வாழலாம். பாா்க்கும் இடமெல்லாம் படா்ந்து கிடக்கும் கண்டங்கத்தரிக்கு நம் தோட்டத்தில் ஓா் இடம் கொடுத்துப் பாருங்கள். சுவாசக்கோளாறு, ஆஸ்துமா என அனைத்தும் பறந்துவிடும்.
- செடிகளை வளா்த்தால் பூச்சிகள் வருமே என்று கவலைப்படுகிறீா்களா? நம் முன்னோா்கள் எந்த ரசாயன பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்தினாா்கள்? வேப்பங்கொட்டை, வேப்ப இலை, நொச்சி இலை, புங்கன் இலை, பப்பாளி இலை, பிரண்டை, கற்றாழை என உங்களுக்குக் கிடைப்பனவற்றில் இரண்டு அல்லது மூன்று இலைகளை இடித்து கோமியத்தில் ஊற வைத்து தெளித்தால் பூச்சிகள் எல்லாம் போய்விடும். இயற்கை விவசாயத்தில் நாம் பூச்சிகளைக் கொல்வது கிடையாது.பூச்சிகளை விரட்டுகிறோம். இதனால் ஒன்றைச் சாா்ந்து வாழும் உணவுச்சங்கிமுறையும் ஆரோக்கியமாக நடைபெறும்.
- இன்றே வீட்டு மாடியை இயற்கை விவசாயத்துக்குப் பயன்படுத்துவோம். ஆரோக்கியமாக நஞ்சில்லாத காய்கறிகளை விளைவித்து வருங்காலசந்ததியை நோயில்லாஆரோக்கிய வாழ்வுக்கு வழிநடத்துவோம். நம்மில் இருந்து ஒரு மாற்றம் உருவாகட்டுமே... மாற்றத்தை நோக்கிய பயணம் தொடரட்டும்.
நன்றி: தினமணி (15 – 02 – 2025)