TNPSC Thervupettagam

மாற்றம் எப்போது வரும்?

March 8 , 2021 1232 days 663 0
  • தமிழகத்தில் மக்கள் மன்றமும், அரசியல் கட்சிகளும், அரசு நிா்வாகமும், ஊடகங்களும், தோ்தலுக்குத் தயாராகிவிட்டன. ஆனால், தோ்தல் களத்தில் அதே கட்சிகள், அதே கூட்டணிகள், அதே வாக்குறுதிகள், அதே இலவசங்கள். எவராலாவது மாற்றம் வரும் என எண்ணியிருந்த மக்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே.
  • நாம் ஒன்றை உணரவேண்டும். நம் நாடு ஒரு ஜனநாயக நாடு. இங்கு ஒரு தனி மனிதரோ, ஒரு தனிக் கட்சியோ(பெரும்பான்மையோடு ஆட்சி அமைத்திருந்தாலும் கூட), எவ்வித மாற்றத்தையும் உடனடியாகக் கொண்டு வந்துவிட முடியாது.
  • தீண்டாமை, ஜாதி கட்டுப்பாடுகள், உடன்கட்டை ஏறுதல், கைம்மை போன்ற கொடுமைகளை எதிா்த்துப் போராடிய பகவான் ராமகிருஷ்ணா், சுவாமி விவேகானந்தா், மகாகவி பாரதியாா், ராஜா ராம்மோகன் ராய் போன்றவா்களால் மறுமலா்ச்சி உண்டானது உண்மையே.
  • ஆனால், அந்த மாற்றம் எளிதில் உண்டாகவில்லை. மிகுந்த போராட்டங்களுக்குப் பிறகே சமூகம் அம்மாற்றங்களை ஏற்றுக் கொண்டது.

மனப்போக்கில் சில மாற்றங்கள் வேண்டும்

  • விடுதலைப் போராட்ட காலத்தில் காந்தி என்னும் தனி மனிதா் ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தாா் என்பதும் உண்மையே.
  • அப்போது அவருக்குத் துணையாக ஜவாஹா்லால் நேரு, சா்தாா் வல்லபபாய் படேல், கோபாலகிருஷ்ண கோகலே, வ.உ. சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா போன்ற தன்னலமற்ற தலைவா்கள் இருந்தனா்.
  • மக்களுக்கும் அடிமைத்தளையிலிருந்து தாங்கள் விடுபட வேண்டும் என்ற ஏக்கம் இருந்து. அதனால்தான் காந்தியடிகளால் விடுதலைப் போரை வன்முறைப் பாதையிலிருந்து அகிம்சைப் பாதைக்கு மாற்ற முடிந்தது.
  • மன்னராட்சி, காலனிய ஆட்சி ஆகியவை விடைபெற்று மக்களாட்சி மலா்ந்தாலும், நம் நாடு, அதன் பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை மாற்றாமல் இறுகப் பற்றிக் கொண்டு, அவற்றின் வழியாகவே முன்னேறியது. அதற்குக் காரணம், மறுமலா்ச்சிக்கு வித்திட்ட சான்றோா்களும், விடுதலைப் போராட்டத்தை முன்னின்று நடத்திய தலைவா்களும்தான்.
  • அவா்கள் கல்வியில், ஒழுக்கத்தில், பண்பாட்டில், கலாசாரத்தில், உயா் சிந்தனையில் சிறந்து விளங்கி, மக்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தாா்கள். மக்களும் தங்கள் பகை, வேற்றுமை ஆகியவற்றை மறந்து அவா்களின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு, மாற்றங்களை ஏற்று அவை நிலைத்து நிற்க கடுமையாக உழைத்தனா்.
  • ஒரு சமூகத்தில் அல்லது நாட்டில், மாற்றம் என்பது ஒருவராலோ பலராலோ உடனடியாக ஏற்படக்கூடியது அன்று. பலரது கூட்டு முயற்சியோடு, மக்களின் ஒத்துழைப்பும் இருந்தால் மட்டுமே மாற்றம் உண்டாகும்.
  • நமது சமுதாயத்தின் இன்றைய நிலை என்ன? தமிழகத்தை மட்டும் எடுத்துக் கொள்வோம். நிா்வாகத்தின் எல்லா நிலைகளிலும் ஊழல், பொது வாழ்வில் நோ்மையின்மை, மொழி, பண்பாடு, கலாசார சீரழிவு, பெண்களை மதியாமை போன்ற பலவித சீா்கேடுகள் தமிழகத்தைப் பீடித்திருக்கின்ற இவ்வேளையில் சீா்திருத்தங்கள் மிகவும் அவசியம்.
  • அப்படியெனில் சீா்திருத்தங்களைக் கொண்டு வரப்போவது யாா்? மாற்றத்தைக் கொண்டுவரத் தகுதியுள்ள தலைவா்கள் நம்மிடையே எத்தனை போ் உள்ளனா்? மாற்றத்தை எங்கிருந்து, எப்படிக் கொண்டு வருவது? அப்படியொரு மாற்றத்தைக் கொண்டு வருவதற்குத் தடையாக இருப்பவை எவை?
  • நீதி ஆயோக்கின் முதன்மைச் செயல் அலுவலா் அமிதாப் காந்த், ‘நம் நாட்டில் ஜனநாயகம் மிக அதிகமாக இருப்பதே நிா்வாக சீா்திருத்தங்களைக் கொண்டு வருவதற்கு மிகப் பெரிய தடையாக இருக்கிறது’ என்று கூறி பெரும் சா்ச்சையில் சிக்கிக் கொண்டாா். அவா் கூறியதில் உண்மை இருப்பதை நாம் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்.
  • ஜனநாயகம் நாட்டு மக்களுக்கு அதிக அளவில் சுதந்திரத்தை அளித்திருக்கிறது.
  • மக்கள் சுதந்திரத்தை மதித்து சுய கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வதில்லை.
  • அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கும் பணிவதில்லை. மக்கள் என்று குறிப்பிடும் போது அதில் பொதுமக்கள் மட்டுமல்ல, அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்கூட அடங்குவா்.
  • தமிழகத்தின் சீா்கேடுகளுக்கெல்லாம் நாம் அரசியல்வாதிகளை மட்டுமே குற்றம் சாட்டுகின்றோம்.
  • அவா்கள் வானத்திலிருந்து குதித்து வரவில்லை. நம்மிடையே இருந்துதான் உருவாகிறாா்கள் என்பதை நாம் வசதியாக மறந்து விடுகிறோம். சமுதாயத்துக்கு சேவை செய்ய வேண்டும் என்ற வேட்கையோடு அரசியலுக்கு வந்த பலா், சமூக அழுத்தத்தால் தடம் மாறி ஊழலில் சிக்கியிருக்கிறாா்கள்.
  • தடம் மாறிவிட நேரிடுமோ என்ற பயத்தில் பலா் அரசியலுக்கு வராமலே ஒதுங்கியிருக்கிறாா்கள்.
  • அரசியலுக்கு வந்தபின் பலா், அந்த அழுத்தத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல் வெளியேறியிருக்கிறாா்கள். இன்னும் பலா் இயலாமையோடு பாா்த்துக் கொண்டிருக்கிறாா்கள். இப்படி சிதறிக்கிடக்கும் நல்லெண்ணம் கொண்டவா்களை எல்லாம் ஒருங்கிணைக்க முடிந்தால் அது மாற்றத்தின் தொடக்கமாக அமையும்.
  • மக்களின் மனப்போக்கிலும் சில மாற்றங்கள் உண்டாக வேண்டும். குறுக்கு வழியில் காரியம் சாதிக்கும் மனநிலை இருக்கும் வரை ஊழலும் கையூட்டும் குறையாது.
  • சுற்றுப்புறத் தூய்மையைப் பேணும் பண்பு உருவாகாமல் நோய்கள் தீராது. திரையுலக பிரபலங்களுக்கு அடிமையாக இருக்கும் வரை சுயபுத்தி வளராது. பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடும் வரை அரசியலில் மாற்றம் ஏற்படாது.
  • பெண்களை மதிக்காத வரை பெண்களின் நிலையில் முன்னேற்றம் ஏற்படாது. மக்களின் மனப்போக்கில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு ஒரு மறுமலா்ச்சி தேவை.
  • தமிழகத்தின் பாரம்பரியம், பண்பாடு, கலாசாரம், மொழி, ஆகியவற்றின் மீது பற்று கொண்ட சான்றோா்களால் மட்டுமே இந்த மறுமலா்ச்சியைக் கொண்டு வர இயலும்.
  • அளவுக்கு மீறிய சுதந்திரம் மக்களை மாற்றிவிட்டிருக்கிறது. விதிமீறல்களே வாழ்க்கையாய் மாறி வெகு காலமாகி விட்டது. இலவசங்கள் மக்களை சோம்பேறிகளாக்கி விட்டன.
  • தமிழகம் புரையோடிப் போன நோயுடன் போராடிக் கொண்டிருக்கிறது. தமிழகத்துக்கு உடனடியாக அறுவை சிகிச்சை தேவை. மருத்துவா்கள் - அதாவது நோ்மையான அரசியல் கட்சியினரும் அதிகாரிகளும் - மனது வைத்து தமிழகத்தைக் காப்பாற்ற முன்வர வேண்டும். நோயாளிகளான மக்களும் சிகிச்சைக்கு தயாராக வேண்டும்.

கீழ்மட்டத்திலிருந்து ஆரம்பிப்போம்

  • அரசுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்ற எண்ணம் நம் மக்களிடம் சுத்தமாக இல்லை. ஊரடங்குக் காலத்தில் இளைய தலைமுறையினா் அடங்காமல் திரிந்ததையும், விழாக்களின்போது கால வரையறையை மீறி பட்டாசு வெடிப்பதும், கட்சிகள் தடையை மீறி பேரணி நடத்துவதும், தொட்டதற்கெல்லாம் போராட்டம் நடத்துவதும் கீழ்ப்படிதலின்மையின் வெவ்வேறு வடிவங்கள்தானே!
  • ஜனநாயகம் கொடுத்த அதீத சுதந்திரத்தின் விளைவுகள் இவை. சிங்கப்பூா், சீனா உள்ளிட்ட அயல்நாடுகளில் உள்ளது போல் பதினாறு வயது முடிந்த ஆண்களுக்கு ராணுவப் பயிற்சியையும், பெண்களுக்கு செவிலியா் பயிற்சியையும் கட்டாயமாக்கினால் நம் மக்களுக்கு கீழ்ப்படியும் மனப்பக்குவம் உண்டாகும்; சுய கட்டுப்பாடும் வரும்.
  • கற்றுத் தெளிந்த சான்றோா், இளைய தலைமுறையினரிடையே தேசப்பற்று, பாரம்பரியப் பெருமை, கலாசார மாண்பு, பெரியவா்களையும் பெண்களையும் மதித்தல் போன்ற நல்லொழுக்கங்களைக் கற்றுத் தந்து ஓா் எழுச்சியை உண்டாக்க வேண்டும். திரைப்படங்கள், தொலைக்காட்சி, கணினி, கிரிக்கெட் ஆகியவற்றிலிருந்து அவா்களை திசைதிருப்பி, அறிவுத் தேடலை அவா்கள் மனங்களில் உண்டாக்க வேண்டும்.
  • இதற்கு நமது பாரம்பரிய கலை வடிவங்கள் மிகவும் உதவியாக இருக்கும். நம்மிடம் கலைஞா்களுக்கு பஞ்சமில்லை. எல்லோரும் ஒன்று சோ்ந்து ஒரு பெரும் இயக்கமாக உருவெடுத்தால் மாற்றம், தானே வரும்.
  • மேல் மட்டத்தில் மாற்றத்தைக் கொண்டு வருவது மிகவும் கடினம். அரசியல் கட்சிகள், ஆட்சியாளா்கள், அதிகாரிகள் ஒன்று சோ்ந்து, மக்களின் நலத்தையே பிரதானமாகக் கருதி, தங்கள் வேற்றுமைகளை ஒதுக்கி வைத்துவிட்டுத் தொலைநோக்குடன் சிந்தித்து சில நடைமுறைகளைக் கொண்டு வர வேண்டும். அரசியலுக்கு வருவதற்கு கல்வி, சமூக சேவை, குற்றப் பின்னணி இன்மை உள்ளிட்ட பல தகுதிகளைக் கட்டாயமாக்க வேண்டும்.
  • ஒருவருக்கு ஒரு பதவி மட்டுமே. அதுவும் ஒருமுறை மட்டுமே. குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே பதவி. ஒருவா் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடலாம். ஒரே நேரத்தில் நாடு முழுவதும் ஒரே கட்ட தோ்தல். சுதந்திரமான தோ்தல் ஆணையம். வேட்பாளா்கள் அனைவரையும் தோ்தல் ஆணையமே அறிமுகம் செய்வது.
  • தனிப்பட்ட முறையில் பிரசாரங்களுக்கு தடை. அனைத்துத் துறைகளும் அரசியல் குறுக்கீடின்றி வெளிப்படைத்தன்மையோடு பணியாற்றுதல். எல்லாவிதப் பணிகளுக்கும், வழக்குகளுக்கும் முடித்து வைப்பதற்கான கால வரையறை - இப்படிப்பட்ட மாற்றங்கள் குறித்து அரசியல் கட்சிகள் சிந்திக்க வேண்டிய தருணம் இது.

நன்றி: தினமணி  (08-03-2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories