TNPSC Thervupettagam

மாற்றம் தருமா இலாகா மாற்றம்

May 31 , 2023 592 days 400 0
  • பட்ஜெட் கூட்டத்தொடருக்குப் பிறகு பெரிய அளவிலான அமைச்சரவை மாற்றத்தை ஏற்படுத்துவார் பிரதமர் நரேந்திர மோடி என்கிற எதிர்பார்ப்பு பொய்த்துவிட்டது. ஒருவேளை மழைக்கால கூட்டத்தொடருக்கு முன் சில மாற்றங்கள் ஏற்படலாம். இப்போதைக்கு சிறிய அளவிலான இலாகா மாற்றம் மட்டும் செய்யப்பட்டிருக்கிறது.
  • மத்திய சட்ட அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜு திடீரென்று மாற்றப்பட்டதன் பின்னணி பலருக்கும் புதிராகவே இருக்கிறது.
  • அரசுக்கும் நீதித்துறைக்கும் இடையே நிலவிய மோதல் போக்கின் கடுமையைக் குறைப்பதற்காக, பரபரப்பான சட்ட அமைச்சகத்திலிருந்து அதிகம் பேசப்படாத புவி அறிவியல் துறையின் அமைச்சராக்கப்பட்டார் கிரண் ரிஜிஜு என்று கருத இடமிருக்கிறது.
  • சட்ட அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜுவின் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் குறித்த வெளிப்படையான விமர்சனங்கள், நரேந்திர மோடி அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தின என்பது உண்மை. பிரதமரின் அனுமதியுடன்தான் அமைச்சர் கிரண் ரிஜிஜு இது போன்ற கருத்துகளை வெளியிடுகிறார் என்கிற ஐயப்பாடு நீதித்துறைக்கு ஏற்பட்டிருந்தால், வியப்படைய ஒன்றுமில்லை. சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு மட்டுமல்லாமல், குடியரசு துணைத் தலைவராகவும், மாநிலங்களவைத் தலைவராகவும் இருக்கும் ஜகதீப் தன்கரின் நீதித்துறை குறித்த கருத்துகளும் அந்த ஐயப்பாட்டை மேலும் வலுப்படுத்தின.
  • ஒடிஸா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான எஸ். முரளீதரை சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கக் கோரிய கொலீஜியத்தின் பரிந்துரை ஏற்கப்படாததும், ஆறு மாதம் தலைமை நீதிபதி இல்லாமல் சென்னை உயர்நீதிமன்றம் இருந்ததும் மத்திய சட்ட அமைச்சகத்தின் மீதான நீதித்துறையின் அதிருப்திக்கு முக்கியக் காரணங்கள். அரசின் பிடிவாதம் தளராததால், நீதித்துறை தனது பரிந்துரையை வற்புறுத்தாமல் விட்டுக்கொடுத்தது என்றாலும், அந்த நிகழ்வால் உருவான கசப்புணர்வு அகலவில்லை. அதை அகற்ற சட்ட அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜு முயலவும் இல்லை.
  • நீதித்துறைக்கு நரேந்திர மோடி அரசு விடுக்கும் சமாதான முயற்சியாக கிரண் ரிஜிஜுவின் இலாகா மாற்றமும், அர்ஜுன்ராம் மேக்வாலிடம் சட்ட அமைச்சகத்தை ஒப்படைத்ததும் அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகின்றன. கிரண் ரிஜிஜுவைப்போல கேபினட் அந்தஸ்து வழங்கப்படாமல் தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சராக அர்ஜுன்ராம் மேக்வால் நியமிக்கப்பட்டிருக்கிறார். கூடவே அவருக்கு நாடாளுமன்றத் துறையும், கலாசாரத் துறையும் வழங்கப்பட்டிருக்கிறது.
  • இன்னும் சில மாதங்களில் அர்ஜுன்ராம் மேக்வாலின் சொந்த மாநிலமான ராஜஸ்தானில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலும் காத்திருக்கிறது. அவற்றைக் கருத்தில்கொண்டுதான் அர்ஜுன்ராம் மேக்வாலிடம் சட்டத் துறையின் பொறுப்பு பிரதமரால் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.
  • கிரண் ரிஜிஜுவைப்போல, அதிரடி அரசியலுக்கு சொந்தக்காரர் அல்ல அர்ஜுன்ராம் மேக்வால். மிகச் சாமானியமான பின்னணியிலிருந்து தன்னுடைய உழைப்பாலும் விடா முயற்சியாலும் பல நிலைகளைக் கடந்து இப்போது மத்திய சட்ட அமைச்சர் நிலைக்கு உயர்ந்திருக்கிறார் அவர்.
  • நடிகர் தர்மேந்திராவின் மக்களவைத் தொகுதி என்று அறியப்பட்ட ராஜஸ்தான் மாநிலம் பிகானீரிலிருந்து 2009-இல் தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் தொடர்ந்து மூன்று முறையாக அந்தத் தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்து வருகிறார் மேக்வால். மிகச் சாதாரணமான அடித்தட்டு பட்டியலினக் குடும்பத்தில் பிறந்த மேக்வால், தன்முனைப்பாலும் கடும் உழைப்பாலும் சட்டப் படிப்பு, முதுகலை மேலாண்மைப் பட்டம் ஆகியவற்றைப் பெற்றவர்.
  • போட்டித் தேர்வு எழுதி தபால் துறையில் டெலிபோன் ஆப்பரேட்டராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். துறை சார்ந்த தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளராக அரசியல் வாழ்க்கையிலும் அடியெடுத்து வைத்தார். வேலை பார்த்துக்கொண்டே மீண்டும் போட்டித் தேர்வெழுதி ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்நிலை அதிகாரியாக தேர்ச்சி பெற்றார். இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாக பதவி உயர்வு பெற்று ராஜஸ்தான் மாநிலத்தில் பல அரசுப் பதவிகளை வகித்த அனுபவமும் அவருக்கு உண்டு.
  • ராஜஸ்தானிகளுக்கே உரித்தான தலைப்பாகையுடன் நாடாளுமன்றத்துக்கு மிதிவண்டியில் வரும் உறுப்பினராக இருந்த அவர் மீது பிரதமர் நரேந்திர மோடியின் பார்வை விழுந்ததில் வியப்பில்லை. இப்போது அவரை சட்ட அமைச்சராக முன்னிலைப்படுத்தி இருப்பதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது.
  • மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதமே இருக்கும் நிலையில், பட்டியலினத்தைச் சேர்ந்த மேக்வாலின் நியமனத்தின் பின்னால் அரசியலும் இருக்கிறது. ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரக் குழுவின் தலைவராக அவர் நியமிக்கப்படக்கூடும் என்று சொல்லப்படுகிறது.
  • பாஜகவின் கர்நாடக மாநில தோல்விக்குக் காரணம், பட்டியலின மற்றும் பிற்படுத்தப் பட்டவர்களின் வாக்குகள் காங்கிரûஸ நோக்கி நகர்ந்திருப்பதுதான் என்று பாஜக தலைமை கருதுகிறது. ராஜஸ்தானிலிலுள்ள 200 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 34 தொகுதிகள் பட்டியலினத்தவர்களுக்கான தனித்தொகுதிகள். அவற்றில் 12 உறுப்பினர்கள்தான் பாஜகவினர். ஏனைய 22 தொகுதிகளையும் குறிவைத்து பாஜகவின் பிரசாரம் முடுக்கிவிடப்படுகிறது. அசோக் கெலாட் அரசின் மீது அதிருப்தியில் இருக்கும் பட்டியலின வாக்குவங்கியை பாஜகவை நோக்கி நகர்த்த பாஜக தலைமை பயன்படுத்த நினைக்கும் துருப்புச் சீட்டுதான், அர்ஜுன்ராம் மேக்வால்.
  • துருப்புச் சீட்டு வெற்றியைத் தந்தால், மேக்வாலின் அடுத்த நகர்வு முதல்வர் பதவியாக இருக்கக் கூடும்.

நன்றி: தினமணி (31 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories