TNPSC Thervupettagam

மாற்றுத் திறனாளிகளின் வலியைப் பேச...

November 19 , 2024 3 days 90 0

மாற்றுத் திறனாளிகளின் வலியைப் பேச...

  • மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்கள் அதிகம் என்பதைப் பொதுச் சமூகம் ஓரளவுக்குப் புரிந்துவைத்திருக்கிறது. அதையும் தாண்டி ஏராளமான இன்னல்கள் உண்டு. உடல் உபாதைகள், உளவியல்ரீதியான பலவீனம், கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துகிற தடைகள், அன்றாட வாழ்வில் எதிர்கொள்ள வேண்டிய சிரமம், கல்வி, வேலைவாய்ப்பு, இடஒதுக்கீடுகளை முழுமையாகப் பெறுவதிலும் இடர்ப்பாடுகள் என மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை பல்வேறு வகையான சிக்கல்களோடுதான் தொடர்கிறது. இதன் விளைவால் பல மனத் தடைகளும் ஏற்படுகின்றன. அன்றாடம் அவதிக்குள்ளாகும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு எந்த அளவுக்கு உதவி செய்கிறது?

சட்டமும் குழப்​பங்​களும்:

  • சர்வதேச அழுத்​தத்தின் காரணமாக இந்தியாவில் உருவாக்​கப்பட்ட மாற்றுத்​திறனாளிகள் சட்டம் 1995 என்பது சீனாவில்​ 1992இல் உருவான பிவாகோ மில்லெனியம் சட்டகம் (Biwako millennium framework) என்பதன் வெளிப்​பாடாகவே இயற்றப்​பட்​டிருந்தது. மாற்றுத்​திறனாளி​களுடைய பிரச்​சினை​களில் பல துறைகள் சம்பந்​தப்​பட்​டிருப்​பதைக் கவனித்த சட்டம் இயற்றும் அறிஞர்கள், இங்கு இயற்றப்பட்ட சட்டத்தில் இரண்டு பிரிவுகளை மாநிலத்​திலும் மத்தி​யிலும் ஏற்படுத்​தினர்.
  • இவற்றில் ஒன்று, மாநில ஒருங்​கிணைப்புக் குழு; மற்றொன்று, மாநிலச் செயல்​பாட்டுக் குழு. அதேபோன்று மத்திய அரசிலும் இப்படியான குழுக்கள் இருக்கவே செய்தன. இந்தக் குழுக்கள் அரசுக்கு ஆலோசனை வழங்கும் குழுக்​களாகவே இருந்தன.
  • இந்நிலை​யில், இந்தியா​வினுடைய முதல் ‘மாற்றுத்​திறனாளிகள் சமவாய்ப்புப் பங்கேற்புச் சட்டம் - 1995’, 2016இல் காலாவ​தி​யாகிப் போனது. அதை மேம்படுத்திப் புதிதாக ‘மாற்றுத்​திறனாளிகள் உரிமைச் சட்டம் - 2016’ உருவாக்​கப்​பட்டது. இந்தச் சட்டத்​தில், முன்புபோல இரண்டு மிக முக்கியமான குழுக்கள் உருவாக்​கப்​பட்​டிருந்தன. அவற்றை - மாநில ஆலோசனை வாரியம், மத்திய ஆலோசனை வாரியம் என இந்தச் சட்டம் ஏற்படுத்த முனைந்தது.
  • இந்தப் புதிய சட்டத்​தின்படி, மத்தியில் மூன்று ஆணையர்கள் என்றும், மாநிலத்தில் ஓர் ஆணையர் என்றும் மாற்றம் செய்யப்​பட்​டிருந்தது. மத்திய ஆணையத்தின் மூன்று ஆணையர்​களில் ஒருவர் தலைமை ஆணையராக​வும், மற்ற இருவரும் அவருக்குக் கீழே செயல்​படும் ஆணையர்​களாகவும் நியமிக்​கப்​பட்​டனர்.
  • இந்த இரண்டு ஆணையர்​களில் ஓர் ஆணையர் மாற்றுத்​திறனாளியாக இருக்க வேண்டும் என மாற்றுத்​திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016 வலியுறுத்து​கிறது. இவருக்கு உதவுவதற்காகச் சுமார் 15 பேர் கொண்ட ஓர் ஆலோசனைக் குழுவை ஏற்படுத்​தவும் சட்டத்தில் வழிவகை செய்யப்​பட்​டுள்ளது.
  • இதேபோன்று மாற்றுத்​திறனாளிகள் உரிமைச் சட்டத்தின் (2016) கீழ் பிரிவு 79இன்படி மாநிலங்​களிலும் மாற்றுத்​திறனாளி​களுக்கான தனித்துவ ஆணையர் என்கிற பொறுப்பு ஏற்படுத்​தப்​பட்​டிருந்தது. இந்தச் சூழலில், தமிழ்​நாட்டில் ஏற்கெனவே அரசுத் திட்டங்களை நடைமுறைப்​படுத்து​வதற்கு உருவாக்​கப்​பட்​டிருந்த ஆணையர் பதவியை​யும், மாற்றுத்​திறனாளிகள் சட்டம் 1995 இன்படி உருவாக்​கப்பட்ட ஆணையர் பதவியையும் அதிகார வர்க்கம் தங்கள் நிர்வாக வசதிக்கு ஏற்றவாறு இணைக்க முயன்றது; இதையடுத்து முந்தைய அரசு 2018இல் இரண்டையும் ஒரே பதவியாகக் காட்டியது. இந்த நடவடிக்கையால் மாற்றுத்​திறனாளி​களுக்கான தனித்துவ ஆணையம் என்கிற சீரிய நோக்கம் சீர்குலைந்தது.

புதிய அரசும் நம்பிக்கையும்:

  • தென் கொரியாவில் 2012இல் ஒன்றுகூடிய மாற்றுத்​திறனாளிகள், இன்ஜியான் என்கிற நகரத்தில் ‘இன்ஜியான் பிரகடன’த்தை முன்வைத்​தார்கள். இதிலுள்ள 10 இலக்கு​களில் இரண்டாவது இலக்காக ‘முடிவெடுக்கிற முக்கியமான பதவிகளுக்கு மாற்றுத்​திறனாளி​களைக் கொண்டுவர வேண்டும்’ என்று தீர்மானிக்​கப்​பட்டது. உரிமைகளை உண்மையாக மாற்ற முடிவெடுக்​கின்ற இடத்துக்கு மாற்றுத்​திறனாளிகளை நகர்த்த வேண்டும் என்பதே இந்த இலக்கின் நோக்கம் என்று அந்தப் பிரகடனத்தில் மிகத் தெளிவாகக் குறிப்​பிடப்​பட்டது.
  • இதுகுறித்து டிசம்பர் 3 இயக்கம் அவ்வப்போது குரல் கொடுத்து வந்தது. இரண்டு ஆணையர்​களையும் ஒரே ஆணையராக மாற்றுவது ஏற்புடையதல்ல; மாற்றுத்​திறனாளி​களுக்கான உரிமை​களைப் பற்றி விசாரித்துத் தீர்வு சொல்கின்ற ஒரு தனித்துவ ஆணையர் நியமிக்​கப்பட வேண்டும் என்கிற கோட்பாட்டை வலியுறுத்தி மாற்றுத்​திறனாளி​களுக்கான கூட்டு இயக்கமும் அரசுக்குக் கடிதம் எழுதியது. அதிகார வர்க்கம் அதற்குச் செவிசாய்க்க​வில்லை.
  • தமிழ்​நாட்டில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த பிறகு, இதற்கான மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்கிற முனைப்பும் முயற்சி​களும் டிசம்பர் 3 இயக்கத்தால் மீண்டும் தொடங்​கப்​பட்டன. மாற்றுத்​திறனாளி​களுக்கான தனித்துவ ஆணையராக மாற்றுத்​திறனாளி ஒருவர் கொண்டு​வரப்பட வேண்டும் என்கிற கோரிக்கை வலியுறுத்​தப்​பட்டது.
  • அதற்குப் பின் மாற்றுத்​திறனாளி​களுக்கான ஆணையம் எப்படிச் செயல்படாத இயக்குநரகமாக இருந்​து​வரு​கிறது; உரிமைகளை விசாரிப்​ப​தற்கான நீதிமன்றம் இல்லாததால் மாற்றுத்​திறனாளி​களுக்கான உரிமைகள் செயலுக்கு வருவதில் எவ்வளவு சிக்கல்கள் இருக்​கின்றன என்பதைச் சட்டமன்​றத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

உச்ச நீதிமன்ற வழக்கும் தீர்ப்பும்:

  • பல்வேறு மாநிலங்​களில் மாற்றுத்​திறனாளி​களுக்கான சிக்கல்​களுக்குத் தீர்வு காண ஆணையர்கள் நியமிக்​கப்​பட​வில்லை என்பதை நாடாளுமன்ற நிலைக்​குழு​வும், தொடர்ச்​சி​யாகக் கடிதங்கள் வாயிலாகத் தெரிவித்து​வந்தது. டிசம்பர் 3 இயக்கமும் சென்னையில் போராட்டத்தை அறிவித்தது.
  • இதன் விளைவாக உச்ச நீதிமன்​றத்தில் மனுத் தாக்கல் செய்யப்​பட்டு, அதைத் தொடர்ந்து எத்தனை மாநில அரசுகள் மாற்றுத்​திறனாளி​களுக்கான ஆணையரை நியமித்​திருக்​கின்றன என்கிற கேள்வியை உச்ச நீதிமன்றம் எழுப்​பியது. முன்னாள் தலைமைச் செயலாளர் வெ.இறையன்​புவைச் சந்தித்து மாற்றுத்​திறனாளி​களுக்கான ஆணையத்தின் தேவை என்ன, எப்படி அது ஒரே பொறுப்பாக மாற்றப்​பட்டது என்பது குறித்து மாற்றுத்​திறனாளி​களின் இயக்கம் பேசியது.
  • பிரச்​சினைகளை விசாரிக்​கக்​கூடிய வகையில் மாற்றுத்​திறனாளி​களுக்கான ஒரு தனித்துவ ஆணையர் ஒரு தனி அமைப்பாக உருவாக்​கப்பட வேண்டும் என்று வலியுறுத்​தப்​பட்டது. அதன்பின் மாற்றுத்​திறனாளிகள் உரிமைச் சட்டத்தில் குறிப்​பிட்​டுள்​ளபடி,​மாற்றுத்​திறனாளி​களின் ஆணையர் பொறுப்பில் ஜெசிந்தா லாசரஸ் ஐஏஎஸ் நியமனம் செய்யப்​பட்​டார். கடந்த 30 வருடங்களாக மாற்றுத்​திறனாளி​களின் துறையின் தலைவராக இருந்த ஆணையாளர் அலுவலகம் முதல் ​முறை​யாகத் திட்டச் செயலாக்க இயக்குநரகமாக மாற்றப்​பட்டது. இது முக்கியமான ஒரு மாற்றம்.

மைல்கல் சாதனை:

  • முதல் முறையாக மாற்றுத்​திறனாளி ஆணையராக நியமிக்​கப்​பட்​டிருந்த ஜெசிந்தா லாசரஸ் வேறொரு பணிக்கு மாற்றப்​பட்​டதால் அந்தப் பணியிடம் மீண்டும் காலியாக இருந்தது. தனித்துவ ஆணையர் நியமிக்​கப்​பட்​டால்தான் சட்டத்​தினுடைய யதார்த்​தங்​களும், பாதுகாப்பும் கடைக்கோடி மாற்றுத்​திறனாளி வரை சென்றுசேர முடியும் என்பதை மீண்டும் வலியுறுத்தி அரசிடம் முறையீடு செய்தது, மாற்றுத்​திறனாளி​களின் இயக்கம். இதனைத் தொடர்ந்து ஓய்வு​பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சுதன், தனித்துவ மாற்றுத்​திறனாளி​களுக்கான ஆணையராக நியமிக்​கப்​படுவதாக அறிவித்தது தமிழக அரசு.
  • அதிகாரக் கோட்டையாக இருந்த மாற்றுத்​திறனாளிகள் துறையில், மாற்றுத்​திறனாளி​களின் வலிகளுக்​காகப் பேசக்​கூடிய ஒரு தனித்துவ ஆணையர் நடைமுறை செயல்பாட்டுக்கு வந்திருக்​கிறது. மாற்றுத்​திறனாளி​களுக்கான உரிமைகளை உண்மை​யாக்குவது என்கிற நெடிய பயணத்தில் முக்கியமான ஒரு மைல்கல் எட்டப்​பட்​டுள்ளது.
  • ஆனாலும் மாற்றுத்​திறனாளி​களுக்கான ஆணையராக மாற்றுத்​திறனாளி ஒருவர் இருந்​தால்​தான், மாற்றுத்​திறனாளிகள் நாள்தோறும் எதிர்​கொள்ளும் வலிகளையும் பிரச்​சினை​களையும் அனுபவரீ​தி​யாகப் புரிந்​து​கொண்டு சக மாற்றுத்​திறனாளிக்கு நீதி வழங்கு​வதற்​கும், தீர்வு​களைக் கண்டறிவதற்​கும், ஆலோசனைகளை எடுத்​துரைப்​ப​தற்கும் அந்த ஆணையம் சரியான கட்டமைப்பாக இருக்கும் என்கிற கருத்தில் இருந்து மாற்றுத்​திறனாளிகள் இன்றளவும் மாறவில்லை. அதற்கான முயற்​சிகள் தொடரும்​.

நன்றி: இந்து தமிழ் திசை (19 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories