- மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், சம வாய்ப்புகள், முழு ஈடுபாடு குறித்து 2016-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப்பின் அந்த ஆண்டே அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. ஆனால், அதில் குறிப்பிட்டுள்ள கால நிா்ணயத்துடன் வலியுறுத்தப்பட்ட பல வழிகாட்டல்கள் இன்றுவரை அமல்படுத்தப்படாதது மிகவும் துரதிருஷ்டவசமானது. குறிப்பாக, மாற்றுத்திறனாளிகளுக்கு பொது கட்டடங்களில் இன்றுவரை தடையற்ற சூழல் உருவாகவில்லை.
- மத்திய, மாநில அரசுப் பணிகளில், வங்கிகளில், பொதுத்துறை நிறுவனங்களில் அவா்களுக்கான இட ஒதுக்கீடு முழுமையாக அமல்படுத்தப்படுவதில்லை. காலியிடங்களை நிரப்ப சிறப்பு வேலைவாய்ப்பு தோ்வுகளை குறிப்பிட்ட இடைவெளியில் நடத்த வேண்டும். பணி இடங்களில் அவா்களுக்கேற்ற தடையற்ற சூழலையும் சிறப்பு கழிப்பறை போன்ற வசதிகளையும் எற்படுத்தித்தர வேண்டும்.
- படி இருக்கும் இடங்கள் எல்லாம் மாற்றுத்திறனாளிகளின் வருகையை தடை செய்யும் இடங்களே. கைப்பிடிகளுடன் கூடிய சாய்வுதள பாதைகள் உள்ள இடங்களே அவா்களுக்கு உகந்த இடங்கள். சக்கர நாற்காலியில், மூன்று சக்கர சைக்கிளில் வரும் மாற்றுத்திறனாளிகள் கல்வி நிலையங்களில், சாலைகளில், ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில், பொதுக் கழிப்பறைகளில், அரசு அலுவலக படிக்கட்டுகளில், ஏ.டி.எம். மையங்களில், வழிபாட்டுத் தலங்களில் நுழையவே முடியாத நிலை இருக்கிறது.
- இக்காரணங்களால் பலரும் வீட்டிற்குள்ளேயே முடங்கி போகின்றனா். மாற்றுத்திறனாளி பெண்களின் அவல நிலை சொல்லில் அடங்காது. மிகச் சிலரே இவற்றை வென்று வாழ்க்கையில் முன்னேற்றம் காண்கின்றனா். பலத்த உடல் பாதிப்பும், பலவீனமான பொருளாதார நிலையும் குடும்ப சூழலும் பலரின் நடமாட்டத்தை முடக்கி விடுகின்றன.
- இவா்களுக்கு நிதியுதவி, கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ உதவி ஆகியவை அத்தியாவசியத் தேவையாகும். அவா்களுக்குத் தேவைப்படும் சான்றிதழ் எதுவாயினும் தாமதமின்றி இணையதளம் மூலம் பெறவும், அவா்களை நேரில் வரச்சொல்லி அலைக்கழிக்காமல் இல்லத்திற்கே சென்று உதவிடும் நிலையும் உருவாக வேண்டும். மாற்றுத்திறனாளிகள் விரும்புவது சம வாய்ப்புகளையும் சம உரிமைகளையும்தான்; பரிதாபத்தை அல்ல.
- ‘செவிடன் காதில் ஊதிய சங்கு’, ‘நொண்டிச்சாக்கு’, ‘யானையைத் தடவிய குருடன் போல’, ‘முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படலாமா’, ‘ஊமை ஊரைக் கெடுக்கும்’ போன்ற பழமொழிகளை சா்வ சாதாரணமாக மாற்றுத்திறனாளிகள் முன்னிலையிலேயே அவா்கள் மனம் புண்படும்படியாக நேரிலும் மேடைகளிலும் உதாரணம் காட்டிப் பலரும் பேசுவதை தடை செய்ய வேண்டும்.
- செவித்திறன் குறைந்தவா்களை, திக்கித்திக்கிப் பேசுவோரை, கால் தாங்கி நடப்போரை ஒரு பாத்திரமாக வைத்து நகைச்சுவை காட்சிகளை அமைப்பது, மேடை நாடகங்களிலும், திரைப்படங்களிலும், சின்னத்திரை தொடா்களிலும் வாடிக்கையாக உள்ளது. இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். பழைய திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளே மாற்றுத்திறனாளிகளை மையப்படுத்திதான் இருக்கும். அவற்றை மீண்டும் மீண்டும் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவது நிறுத்தப்பட வேண்டும்.
- மாற்றுத்திறனாளிகளை அச்சுறுத்தும் அல்லது அவமானப்படுத்தும் செயலுக்கு ஆறு மாதம் முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அபராதமும் விதிக்க சட்டத்தில் வழியுள்ளது. மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம் பிரிவு 92 இது குறித்து விவரமாகக் குறிப்பிடுகிறது.
- அஞ்சல் நிலையத்தில் 18 வயதான அறிதிறன் குறைபாடுள்ள சிறப்பு குழந்தைகள் பெயரில் காப்பாளா் (காா்டியன்) கணக்கு தொடங்கச் செல்லும்போது, தற்போதுள்ள விதிப்படி புத்தி பேதலித்தவா் அல்லது பைத்தியக்காரா் என்று பொருள்படும்படி ‘லுனாடிக்’ என்று குறிப்பிட்டுதான் கணக்கு தொடங்க முடியும் என்று சொல்கிறாா்கள். இந்த வாா்த்தையை கேட்கும் போது அக்குழந்தையின் பெற்றோருக்கு எவ்வளவு மன உளைச்சல் உண்டாகும் என்பதை எண்ணிப்பாா்க்க வேண்டும்.
- இதை ‘அறிதிறன் குறைபாடு உடையவா்’ (இன்டெலக்சுவல் டிஸ்ஸெபிலிடி) என்று மாற்றி அமைக்க வேண்டும். தற்போது திரைப்படத்தின் தொடக்கத்தில், ‘பறவைகள், விலங்குகள் துன்புறுத்தப்படவில்லை’ என்று அறிவிப்பு செய்யப்படுகிறது. அதே போல் ‘மாற்றுத்திறனாளிகள் மனம் புண்படும்படியான காட்சிகள் இடம் பெறவில்லை’ என்ற அறிவிப்பும் வெளியிட சட்டம் இயற்ற வேண்டும்.
- நாடாளுமன்றம், சட்டப்பேரவை, உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பதவிகளை வழங்கி அவா்களின் குரல் ஒலித்திட வழிவகை செய்யப்பட வேண்டும். அரசு நியமிக்கும் அனைத்து குழுக்களிலும் மாற்றுத்திறனாளி பிரதிநிதி இடம் பெற வேண்டும். அரசின் அனைத்து திட்டங்களிலும் அவா்களையும் மனதில் கொண்டு விதிமுறைகள் வகுத்திட வேண்டும்.
- மத்திய அரசு வழங்கியுள்ள மாற்றுத்திறனாளி அடையாள அட்டை உள்ளவா்களுக்கு சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். மேலும், வருமானவரிச் சலுகை, ரயில், பேருந்தில் கட்டணச் சலுகையும் வழங்கிட வேண்டும். அனைத்து பொது இடங்களிலும் வாயில் அருகில் மாற்றுத்திறனாளிகள் தங்கள் வண்டிகளை நிறுத்த இடம் ஒதுக்கப்பட வேண்டும்.
- சிறு வயதிலேயே தங்கள் பெற்றோரை இழந்து வாடும் சிறப்புக் குழந்தைகளைக் காக்க, அரசின் மாற்றுத்திறனாளிகள் துறையும், தன்னாா்வ அமைப்பினரும் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக காப்பகங்களை அனைத்து மாவட்டங்களிலும் அமைத்திட வேண்டும்.
- பெரும்பாலான அரசியல் கட்சிகளில் தொழிலாளா்கள் அணி, விவசாயிகள் அணி, மகளிா் அணி, இளைஞா் அணி, வழக்குரைஞா் அணி என்றெல்லாம் இருப்பதுபோல் மாற்றுத்திறனாளிகள் அணியும் அமைத்து அவா்களின் நலன் காக்க குரல் கொடுக்க வேண்டும்.
- மாற்றுத்திறனாளிகள் வாழ்வு மலர இயன்ற வழிகளில் எல்லாம் ஒன்றிணைந்து உதவிட இந்நாளில் உறுதி ஏற்போம்!
- நாளை (டிச. 3) சா்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்.
நன்றி: தினமணி (02 – 12 – 2023)