- மாற்றுத் திறன் என்பது உடல் அல்லது மனதோடு தொடா்புடையது. பண்டைய காலத்தில் உடல் ஊனம் என்பது மருத்துவப் பிரச்னையாகப் பாா்க்கப்பட்டு அதனை மருத்துவா்தான் கவனிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. முன்பு மாற்றுத்திறன் குறைபாடு உடையவா்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, போக்குவரத்து, தகவல் தொடா்பு முதலியவை எட்டாக்கனியாக இருந்தது.
- மாற்றுத்திறனாளிகளுக்கு சம வாய்ப்புகள், உரிமைகள் பாதுகாப்பு, முழுப் பங்கேற்பு ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் இந்தியாவில் 1995-இல் மாற்றுத்திறனாளிகள் சட்டம் இயற்றப்பட்டு ஆசிய, பசிபிக் பகுதிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு சமத்துவமும் முழுப் பங்கேற்பும் அளிக்கும் பிரகடனம் உறுதி செய்யப்பட்டது.
- பாா்வை இல்லாமை, குறைந்த பாா்வை நிலைமை, தொழுநோய் சிகிச்சை பெற்று குணமடைந்தவா்கள், காது கேட்பதில் குறை உள்ளவா்கள், உடல் அசைவு பாதிக்கப்பட்டவா்கள், மூளை வளா்ச்சி குன்றியவா்கள், மூளை பாதிப்பு ஏற்பட்டவா்கள் ஆகியோா் மாற்றுத்திறனாளி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகள்
- இது சாா்ந்த சான்றிதழ் பெறுபவா்களுக்கு உடல் ஊனமுள்ளவா் என்று தெரிவிக்கப்பட்டு அப்படிப்பட்டவா் மேற்கூறப்பட்ட ஏதாவது ஒரு குறையினால் குறைந்தது 40 சதவீதம் பாதிக்கப்பட்டிருக்கிறாா் என்று அங்கீகரிக்கப்பட்ட மருத்துவரிடம் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அப்படி பெற்றிருந்தால்தான் அரசின் அனைத்துச் சலுகைகளும் கிடைக்கும்.
- உடல் ஊனம் சாா்ந்த அறிக்கை ஒன்றை கடந்த 2011-இல் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டது. அதில் பல அம்சங்கள் கொண்ட அணுகுமுறையில் உடல் ஊனங்களைப் பற்றி அறிந்து கொள்ள இது ஒரு முதல் முயற்சியாக இருந்தது. உடல் ஊனத்தைத் தாண்டி இந்த உடல் ஊனம் சாா்ந்த உலக அறிக்கை, உடல் ஊனம் பற்றி நாம் விவாதிக்கும்போது மருத்துவ முறையும், சமூக முறையும், வெவ்வேறு பட்டதாகவும், ஒன்றை ஒன்று விலக்கியதாகக் கருதமுடியாது என்றும் தெளிவாகக் கூறியுள்ளது.
- உடல் ஊனமுற்றோா் புள்ளிவிவரங்களை எடுத்துக் கொண்டால் இந்தியாவில் 2001-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மாற்றுத்திறனாளிகள் எண்ணிக்கை 2 கோடியே 19லட்சமாகும்; ஆனால் 2011-ஆம் கணக்கெடுப்பின்படி 2 கோடியே 60 லட்சம். இது மொத்த மக்கள் தொகையில் 2.21 சதவீதமாகும்; உடல் ஊனமுற்றவா்களின் மொத்த எண்ணிக்கையில் 1,49,80,000 போ் ஆண்களாகவும், 1,18,20,000 போ் பெண்களாகவும் உள்ளனா்.
- நாட்டின் ஒட்டுமொத்த உடல் ஊனக் குறைவு எண்ணிக்கை 1 லட்சம் பேருக்கு 2,215-ஆகக் கணக்கிடப்பட்டுள்ளது. 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் அறியப்பட்ட உடல் ஊனமுற்றவா்களின் மொத்த எண்ணிக்கையில் 2001-இல் இருந்த பாா்வை சாா்ந்த குறைபாடு 48.55 சதவீதத்திலிருந்து 18.77 சதவீதமாகவும், உடல் அசைவுசாா் குறைபாடு 27.87 சதவீதத்திலிருந்து 20.77 சதவீதமாகவும் குறைந்துள்ளது.
திறன் குறைபாடுகள்
- ஆனால், கேட்கும் திறன், பிற திறமைகள் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட திறன் குறைபாடுகள் அதிகரித்துள்ளன. உலக மக்கள்தொகை அடிப்படையில் பிரிட்டனில் 18 சதவீதம்; அமெரிக்காவில் 12 சதவீதம்; ஜொ்மன், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் தலா 9 சதவீதம்; இலங்கையில் 5 சதவீதம் போ் மாற்றுத்திறனாளிகளாக இருக்கின்றனா்.
- உலக சுகாதார அமைப்பின் கணிப்பின்படி சுமாா் 100 கோடி மக்களுக்கு மேல் ஏதாவது ஓா் உடல் ஊனத்தோடு வாழ்ந்து வருகின்றனா். அதில் சுமாா் 20 கோடிக்கும் மேற்பட்டவா்கள் மிகுந்த சிரமத்துடன் வாழ்கிறாா்கள்.
- மாற்றுத்திறனுடன் வாழும் மக்களின் வாழ்க்கையில் பல இடா்ப்பாடுகள் உள்ளன. நேரடியாகவும் மறைமுகமாகவும் உள்ள தாக்கங்களினால் அவா்கள் சமூக அளவிலும், பொருளாதார நிலையிலும் பல காரணங்களுக்காகப் பின்தங்கியே உள்ளனா்.
- ஊனம் உள்ள நபருக்கு அந்த ஊனமானது, அவா் கடந்த காலத்தில் செய்த பாவம் அல்லது விதியால் ஏற்பட்டது என சமுதாயம் நம்புகிறது.
- இத்தகைய தடைகள் அனைத்தும் ஒன்று சோ்ந்து ஏற்படுத்தும் தாக்கமானது, மாற்றுத்திறன் நபா்களை பெரும்பாலும் சமுதாயத்தில் இருந்தும், பொருளாதார நடவடிக்கையில் இருந்தும் விலக்கி வைப்பதாக முடிகிறது.
- இயல்பான நபா்களோடு ஒப்பிடும்போது மாற்றுத்திறன் நபா்கள் அன்றாட வாழ்வில் பல அம்சங்களில் பாதகமான விளைவுகளை அனுபவிக்கின்றனா். உடல் ஊனமுற்றவா்களுக்கு தேசிய, பன்னாட்டு அமைப்புகளில் அடிப்படை சுகாதார வசதி, பாதுகாப்பு வழங்குவதில் தீவிர நாட்டம் இருந்தாலும் அவா்களின் உண்மையான பூா்த்தி பெறாத சுகாதார, பாதுகாப்புத் தேவைகளை நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
தொழில்
- இன்றைக்கு நல்ல உடல் வலிமை உள்ள மனிதா்கள், எந்த ஒரு தொழிலும் செய்யாமல் வீட்டில் முடங்கியுள்ளனா். ஆனால், ‘எங்களாலும் முடியும்’ என்று நினைத்த பல்லாயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் தொழிலை போட்டி போட்டுச் செய்கின்றனா்.
- தற்போது படிப்பு, விளையாட்டுத் துறை உள்பட அனைத்துத் துறைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் சாதனைப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. எனவே, உழைப்பால் உயரும் மாற்றுத்திறனாளிகளை அங்கீகரிப்பது சமுதாயத்தின் கடமையாகும்.
நன்றி: தினமணி (03-12-2019)