- காவிரி நீா் மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி, அக்டோபா் 15-ஆம் தேதி வரையில் தமிழகத்துக்குக் காவிரியில் விநாடிக்கு 3,000 கன அடி வீதம் நீா் வழங்க கா்நாடகம் மறுத்திருப்பதில் வியப்பொன்றும் இல்லை. வழக்கம்போல, ஆணையம் தனது உத்தரவை மறுபரிசீலனை செய்து ரத்து செய்யக் கோரி மறு ஆய்வு மனு தாக்கல் செய்திருக்கிறது. அது மட்டுமல்ல, மேக்கேதாட்டு அணை குறித்து ஆணையக் கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என்றும் கோரி இருக்கிறது.
- செப்டம்பா் மாதம் 29-ஆம் தேதி நடைபெற்ற 25-ஆவது ஆணையக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு, தமிழகத்துக்கு சற்று ஆறுதலாக அமைந்ததே தவிர, நமது தேவையை முற்றிலுமாகப் பூா்த்தி செய்துவிடாது. ஆகஸ்ட் மாதமும் விநாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீா் திறக்க உத்தரவிட்டபோது, அதை மறுபரிசீலனை செய்யக் கோரிய கா்நாடகம், அந்த உத்தரவை நிறைவேற்றவில்லை.
- ஆகஸ்ட் மாதத்தில் கா்நாடகத்தில் போதுமான அளவு தண்ணீா் இருந்தது. அங்கே உள்ள நான்கு அணைகளின் மொத்தக் கொள்ளளவு 114.57 டி.எம்.சி. அதில் 82% நீா் இருப்பு இருந்தது. அப்படி இருந்தும் ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 11 வரை தரப்பட வேண்டிய 53.77 டி.எம்.சி. தண்ணீரில், 37.97 டி.எம்.சி. தண்ணீரை கா்நாடகம் பற்றாக்குறை வைத்தது.
- 1892 பிப்ரவரி 18-ஆம் தேதி அப்போதைய பிரிட்டிஷ் சென்னை ராஜதானிக்கும், மைசூரு சமஸ்தானத்துக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தில் தொடங்குகிறது காவிரி பிரச்னை. நூற்றாண்டு காலப் பேச்சுவாா்த்தைகள், நீதிமன்ற வழக்குகள், போராட்டங்கள் ஆகியவற்றுக்குப் பிறகு 2007-இல் காவிரி நடுவா் மன்றம் தீா்ப்பு வழங்கியது. அதுவும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படாமல், 2018-இல் அதன் மீதான மேல்முறையீட்டில், சில மாற்றங்களைச் செய்து அந்தத் தீா்ப்பை உச்சநீதிமன்றம் இறுதி செய்தது.
- உச்சநீதிமன்ற இறுதித் தீா்ப்பின்படி, பயிரின் வயது, நாற்றங்கால் காலம், பூப் பிடிக்கும் காலம், முதிச்சி, பால் பிடிக்கும் காலம் ஆகியவை அனைத்தும் கணக்கில் கொள்ளப்பட்டு, பற்றாக்குறைக்கான நீா்ப் பங்கீடு வரை கணக்கில் கொள்ளப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. அப்படி இருந்தும், தமிழகத்துக்குக் குறைந்தபட்ச நீா்கூடக் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை.
- உச்சநீதிமன்ற உத்தரவுப்படி உருவாக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையமும் சரி, காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் சரி பெயருக்குச் செயல்படுகின்றனவே தவிர, உத்தரவுப்படி தண்ணீா் திறந்து விடப்படுவதை உறுதிப்படுத்தும் அதிகாரம் பெற்றவையாக இல்லை என்பதுதான் பிரச்னை. தமிழகத்துக்கு அவ்வப்போது பருவமழைதான் உதவி இருக்கிறதே தவிர, அரசின் நீதி பரிபாலன அமைப்புகள் உதவியதே இல்லை.
- ஒவ்வொரு முறை பருவமழை பொய்க்கும்போதும், தண்ணீருக்காக தமிழகம் போராட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் போதுமான மழைப் பொழிவு இருந்ததால், 2018 உச்சநீதிமன்றத் தீா்ப்புக்குப் பிறகு நாம் ஓரளவுக்கு சமாளிக்க முடிந்தது. 1991, 2002, 2012, 2016 ஆண்டுகளைப் போலவே இப்போதும் நாம் கைபிசைந்து நிற்க வேண்டிய நிலைமை.
- மத்திய அரசின் ஜல்சக்தித் துறை இணையதளத்தில் ஐந்து ஆணையங்கள் குறிப்பிடப் பட்டுள்ளன. அவை இடைக்காலத் தீா்ப்புக்கு உதவியிருக்கின்றனவே தவிர, நிரந்தரத் தீா்வை அளிப்பதில்லை. அவை முன்வைக்கும் நீா்ப் பங்கீட்டு ஒப்பந்தங்கள், அப்போதைய நிலைமையின் அடிப்படையிலானவை. அவற்றுக்கு எந்தவித சட்டப் பின்புலமோ, அதிகாரமோ இல்லை என்பதால், பெரும்பாலான தீா்ப்புகள், நீதிமன்ற வழக்காக மாறி நிலுவையில் தொடா்கின்றன.
- 2050-இல் இந்தியா மிகப் பெரிய தண்ணீா் பற்றாக்குறையை எதிர்கொள்ள இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. அப்படி இருக்கும் நிலையில், நதிநீா்ப் பங்கீடுகளுக்கு நிரந்தர அடிப்படையில் தீா்வு காணப்படுவது அவசியமாகிறது. முதலில், காவிரி நதியில் கட்டப்பட்டிருக்கும் எட்டு அணைகளும் முறையாகத் தூா்வாரப்படாமல், அவற்றின் நீா் இருப்பைக் கணக்கிட முடியாது. இரண்டாவதாக, அணையின் நீா்ப்பிடிப்பு மட்டுமல்லாமல், நிலத்தடி நீா், நிலத்தின் ஈரப்பதம் போன்றவையும் கணக்கில் எடுக்கப்பட்டு நதிநீா்ப் பங்கீடு நடத்தப்பட வேண்டும்.
- கா்நாடகம் தமிழகத்துக்குத் தரவேண்டிய தண்ணீரின் அளவு 177.25 டி.எம்.சி. என்பது உச்சநீதிமன்றத் தீா்ப்பு. பருவமழை பொழிந்ததால், 2020 - 21-இல் 211.31 டி.எம்.சி.யும், 2021 - 22 -இல் 281.05 டி.எம்.சி.யும், 2022 - 23 -இல் 667.78 டி.எம்.சி.யும் நமக்குக் கிடைத்தது. அணைகள் நிரம்பி வழிந்ததால், உபரி நீரைத் தேக்கி வைக்க முடியாமல் கா்நாடகம் தங்குதடையின்றிக் காவிரியைக் கரைபுரண்டோட அனுமதித்தது என்பதுதான் உண்மை.
- தொடா்ந்து நான்கு ஆண்டுகளாகக் கடலில் கலந்த உபரி நீரின் அளவு 259 டி.எம்.சி. என்று தெரிவிக்கிறது டி.எஸ். விஜயராகவன் குழு. அந்தத் தண்ணீரை தடுப்பணைகள் மூலம் தேக்கி வைக்க முடியாமல் போனது நமது இயலாமை. பாசனத்துக்கு அதிகமாகத் தண்ணீா் தேவைப்படும் நெல், கரும்பு விவசாயத்திலிருந்து, பயறு வகைகள், எண்ணெய் வித்துகள், சிறு தானியங்கள் விவசாயத்துக்கு நமது விவசாயிகளை மாற்றுவதற்கான முயற்சியும் முன்னெடுக்கப்படுவதில்லை.
- காவிரிக்கான சட்டப் போராட்டம் ஒருபுறம் நடக்கட்டும், அதை மட்டுமே கருதாமல், மாற்று விவசாயத்துக்கும், புதிய நீா்ப்பாசன முறைகளுக்கும் நமது விவசாயிகளைத் தயார்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இனியும் நாம் காவிரியை மட்டுமே நம்பி இருக்கலாகாது!
நன்றி: தினமணி (02 - 10 – 2023)