TNPSC Thervupettagam

மாலத்தீவு சர்ச்சை: இந்தியாவுக்கான பாடங்கள்

January 17 , 2024 224 days 181 0
  • இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் ஒன்றான லட்சத்தீவுக்குப் பிரதமர் மோடி அண்மையில் மேற்கொண்ட பயணத்தைத் தொடர்ந்து, அண்டை நாடான மாலத்தீவிலிருந்து எழுந்த விரும்பத்தகாத விமர்சனங்களும், அதன் தொடர்ச்சியாக இந்தியாவில் எழுந்த சர்ச்சையும் வெளியுறவுத் துறையில் புதிய பிரச்சினைகளுக்கு வழிவகுத்திருக்கின்றன.
  • ஜனவரி 4ஆம் தேதி லட்சத்தீவுக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, அதன் இயற்கை அழகைப் புகழ்ந்ததுடன், சுற்றுலாவுக்கு மிகவும் உகந்த இடம் என ஒளிப்படங்களுடன் எக்ஸ் (டிவிட்டர்) தளத்தில் பதிவிட்டது, சுற்றுலாவைப் பிரதானமாகக் கொண்டிருக்கும் மாலத்தீவுக்குக் கசப்பை ஏற்படுத்தியது. மாலத்தீவின் அமைச்சர்கள் உள்பட பலர் இந்தியாவுக்கு எதிராகப் பேசத் தொடங்கினர். இதையடுத்து மாலத்தீவுக்கு எதிரான சமூகவலைதளப் போரில், பாஜக அரசுக்கு ஆதரவான பிரபலங்கள் மட்டுமல்லாமல், மத்திய அமைச்சர்களும்கூட பங்கெடுத்தனர்.
  • இதற்கிடையே, ராணுவரீதியிலான ஒத்துழைப்புக்காக மாலத்தீவில் இருக்கும் இந்திய வீரர்கள் வெளியேற வேண்டும் என வலியுறுத்திவந்த மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, அதற்கு மார்ச் 15ஆம் தேதியைக் கெடுவாகவும் அறிவித்திருக்கிறார். ‘இந்தியாவை வெளியேற்றுவோம்என்பதைத் தேர்தல் முழக்கமாகவே முன்வைத்து அதிபரான முய்சு, சீன ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டவர்.
  • இந்தியாவுடன் நல்லுறவைப் பேணிய முந்தைய அதிபர் இப்ராஹிம் முகமது சோலிஹ் முன்னெடுத்த முயற்சிகளை முய்சு முறியடித்துவருகிறார். மேலும், மாலத்தீவின் சொந்த விவகாரங்களில் சீனா தலையிடுவதில்லை என்றும் சான்றிதழ் அளிக்கிறார். இதன் மூலம் இந்தியாவை நேரடியாகவே அவர் விமர்சித்திருக்கிறார்.
  • பொருளாதாரப் போட்டியில் சீனாவுக்கு முக்கியப் போட்டியாளராக நிற்கும் அமெரிக்காவிடம் இந்தியா நெருக்கம் காட்டும் நிலையில், அண்டை நாடுகளை வளைப்பதில் சீனா முனைப்பு காட்டுகிறது. ‘சார்க்’ (SAARC) அமைப்பில் உள்ள பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளிடம் உறவுப் பாலத்தைச் சீனா வலுப்படுத்திவருகிறது.
  • இதற்காகவே அந்நாடுகளின் உள்கட்டமைப்புப் பணிகளுக்காகப் பெரும் தொகையைக் கடனாக வழங்கிவருகிறது. சீனாவிடம் 1.3 பில்லியன் டாலருக்கும் அதிகமாக மாலத்தீவு கடன்பட்டிருப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. சீனாவின் கடன் வலையில் சிக்கிச் சிரமப்படும் இலங்கையின் சமகால வரலாற்றை உள்வாங்கியிருந்தால் மாலத்தீவு இப்படி நடந்துகொள்ளாது என்பது வேறு விஷயம். அதேவேளையில், இவ்விவகாரத்தில் இந்தியாவுக்கும் பாடங்கள் உண்டு.
  • சீனாவுடனான எல்லை விவகாரத்தில், இந்தியாவுக்குச் சாதகமான நாடாக இருந்துவரும் பூடானையும் சீனா தன் பக்கம் சாய்க்க முயல்கிறது. இப்படி வெவ்வேறு பின்னணியில் இந்தியாவின் அண்டை நாடுகளைச் சீனா தன் வசம் ஈர்த்துவரும் நிலையில், வெளியுறவு விவகாரங்களில் இந்தியா கவனமாகக் காய்நகர்த்துவது அவசியம்.
  • மாலத்தீவுக்கு எதிராக இந்தியப் பிரபலங்கள் முன்னெடுத்த சமூகவலைதள யுத்தம் உள்ளிட்ட வழிமுறைகள் எந்த வகையிலும் சர்வதேச அரங்கில் இந்தியாவின் மதிப்பை உயர்த்த உதவாது.
  • எல்லா நாடுகளும் இந்தியாவை ஆதரிக்கும் என எதிர்பார்க்க முடியாது என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறுவது நடைமுறை சார்ந்த உண்மைதான் என்றாலும், அப்படி எளிதாக இந்தப் பிரச்சினைகளைப் புறந்தள்ளிவிட முடியாது. உறுதியான, பக்குவமான, நிதானமான அணுகுமுறைதான் இன்றைய தேவை!

நன்றி: இந்து தமிழ் திசை (17 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories