TNPSC Thervupettagam

மிக்ஜாம் பாதிப்புகள்: திட்டமிடலின் போதாமை

December 13 , 2023 220 days 149 0
  • சென்னையையும் அதைச் சுற்றியுள்ள மூன்று மாவட்டங்களையும் புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயலின் பாதிப்பிலிருந்து சில பகுதிகள் மெல்ல மெல்ல மீண்டாலும், பல பகுதிகள் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பாமல் இருப்பதும் அரசின் திட்டமிடலில் உள்ள போதாமையை உணர்த்துகிறது. 2015 சென்னைப் பெருமழையைவிட இந்த ஆண்டு 45% அதிகமாக மழைபொழிந்ததே வெள்ளப் பாதிப்புக்குக் காரணம் எனச் சொல்லப்பட்டாலும், முந்தைய ஆண்டுகளின் அனுபவத்திலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளாமல், போதுமான முன்னேற்பாடுகளைச் செய்யாமல் இருந்ததுதான் மக்களை மிக மோசமான பாதிப்புக்குள்ளாக்கியது.
  • புயல் தங்கள் மாநிலத்தை நோக்கி வருவதை அறிந்ததுமே, ஆந்திர அரசு 9,000 நிவாரண முகாம்களை அமைத்து, அவற்றில் ஆயிரத்துக்கும் அதிகமானோரைத் தங்கவைத்தது குறிப்பிடத்தக்கது; தமிழ்நாடு அரசு போதிய அளவுக்கு நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது.
  • அதேவேளையில், சில அமைச்சர்கள், அதிகாரிகள் களத்தில் இறங்கிப் பணியாற்றியது, வெளி மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட ஊழியர்களையும் பேரிடர் மீட்புப் பணியில் ஈடுபடுத்தியது போன்றவை காலம் கருதிய செயல்பாடுகள். சென்னையின் பல முக்கியச் சாலைகளில் மழைநீர் வடிகால் சீராகப் பராமரிக்கப்பட்டதால் ஒரே இரவில் தண்ணீர் வடிந்துவிட்டது.
  • பிற பகுதிகளில் மழைநீர் வடிவதில் ஏற்பட்ட சிக்கலே பெரும்பாலான பகுதிகளை வெள்ளம் சூழக் காரணமானது. கொசஸ்தலை, கூவம், அடையாறு, கோவளம் ஆகியவற்றின் கரையோரங்களை மையப்படுத்தி மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்றன. 2012இல் சென்னை மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட பகுதிகளில், இந்தப் பணிகள் முழுமையாக நிறைவடையாததும் வெள்ளத்துக்குக் காரணம். கழிவுநீர் அகற்றுதல், திடக்கழிவு மேலாண்மை போன்றவை சீராகப் பராமரிக்கப்பட்டிருந்தால் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்காது.
  • நீர் வழித்தடங்களின் மீதும் நீர்நிலைகளின் மீதும் கட்டிடங்களைக் கட்டியதும் வெள்ளப் பெருக்குக்குக் காரணம். 2015 நிலவரப்படி சென்னையில் உள்ள 19 ஏரிகளின் நிலப்பரப்பு 1,130 ஹெக்டேரில் இருந்து 645 ஹெக்டேராகக் குறைந்துள்ளதாகப் பொதுப் பணித் துறையின் நீர்வள ஆதார அமைப்பு தெரிவித்துள்ளது. மழை நேர உயிரிழப்புகளைத் தடுக்கும் பொருட்டு மின் விநியோகத்தை நிறுத்தியது பாராட்டத்தக்கது.
  • ஆனால், பல பகுதிகளில் இரண்டு முதல் ஐந்து நாள்கள்வரை மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதிக்குள்ளாகினர். பெரும்பாலான இடங்களில் தொலைத்தொடர்பு முற்றிலுமாக முடங்கியதால் மீட்புப் பணியில் சுணக்கம் ஏற்பட்டது. வட சென்னை, தென் சென்னைப் பகுதிகளில் பல வீடுகளை வெள்ளம் சூழந்திருக்க, சில பகுதிகளை மட்டும் மனதில் கொண்டு ‘புயலில் இருந்து மீண்டது சென்னை’ என்கிற தவறான செய்தி பரவியதும் மீட்புப் பணிகளில் பின்னடைவை ஏற்படுத்தியது.
  • இயற்கைச் சீற்றங்களின்போது ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் மக்கள் பக்கமிருந்து செயலாற்ற வேண்டும்.
  • அதிகாரத்தில் இருப்பவர்கள், ‘தண்ணீர் தேங்கத்தான் செய்யும், இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது’, ‘எங்கள் ஆட்சியில் இது நடக்கவில்லை’ என்று பொறுப்பைத் தட்டிக்கழிக்க முயல்வது மோசமான முன்னுதாரணங்கள். ஒரு நகரின் வளர்ச்சி என்பது மக்களின் வளர்ச்சியையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். சென்னை மாநகராட்சியோடு புதிய பகுதிகள் இணைக்கப்படும்போது அடிப்படைக் கட்டமைப்புக்குப் போதுமான வகையில் நிதி ஒதுக்குவதும் அவற்றைச் செயல்படுத்துவதும் அவசியம். திட்டமிடுதலில் நேர்கிற சிறு தவறுகள்கூட மக்களைத்தான் நேரடியாகப் பாதிக்கும். அடுத்து ஒரு வெள்ளம் வரும்போது காரணங்களைத் தேடாமல், முன்னெச்சரிக்கையோடு செயலாற்றுவதே அரசுக்கு அழகு.

நன்றி: தி இந்து (13 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories