TNPSC Thervupettagam

மின்சாரத்தால் இயங்கும் உடல்

June 28 , 2023 506 days 468 0
  • நம் வீடுகளில் மின்விளக்கை எரிய வைக்க மின்சாரத்தைப் பயன்படுத்துகிறோம். காற்றாடி, மிக்சி, கிரைண்டர் போன்றவை இயங்குவதற்கு மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால், மின்பொருள்கள் மட்டுமல்ல, நம் உடல் இயங்குவதற்கும் மின்சாரம் தேவை. விளையாடும் போது ஒருவர் உங்களை நோக்கிப் பந்தை வீசுகிறார். பந்து வரும் திசையை, வேகத்தைக் கணக்கிட்டு நீங்கள் சரியாகக் கையை நீட்டுகிறீர்கள். இது எப்படிச் சாத்தியம்?
  • இதற்குக் காரணம் நம் உடலுக்குள் நடைபெறும் தகவல் பரிமாற்றங்கள். நம் உடல் கோடிக் கணக்கான செல்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செல்கள் ஒவ்வொன்றும் ஒத்திசைவுடன் இயங்குவதற்கு அவற்றுக்குள் தகவல் பரிமாற்றம் நடைபெற வேண்டும்.
  • இந்தத் தகவல் பரிமாற்றத்தை நடத்துவதற்குதான் நம் உடல் முழுவதும் நரம்புகளால் இணைக்கப்பட்டுள்ளது. இந்த நரம்புகள் அனைத்தும் நம் மூளையில் இடம்பெற்றுள்ள சிறப்பு செல்களான நரம்பணுக்களுடன் (Neurons) பிணைக்கப்பட்டுள்ளன. இந்த நரம்பணுக்கள் மூலம்தான் மூளையில் இருந்து தகவல் உடல் முழுவதும் செல்கிறது. நரம்புகள், நரம்பணுக்களை மின்கம்பிகளாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள்.
  • ஒரு பந்து உங்களை நோக்கி வரும்போது உங்களுடைய கண் அதைப் பார்த்துவிட்டு, அந்தத் தகவலை நரம்பணுக்கள் மூலமாக மூளைக்கு அனுப்புகிறது. அதை மூளை அறிந்துகொண்டு கையைச் சரியான இடத்தில் நீட்டுவதற்குக் கட்டளை இடுகிறது. இந்தக் கட்டளை, நரம்பணுக்கள் மூலம் மீண்டும் கைக்கு அனுப்பப்பட்டு, அதைக் கேட்டறிந்த கை அவ்வாறே செயல்படுகிறது.
  • இந்தத் தகவல் பரிமாற்றம் எப்படி நடைபெறுகிறது? இதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று உங்கள் உடல் வேதிப்பொருள்களைச் சுரந்து அந்தத் தகவலை மூளைக்குச் சொல்லும். ஆனால், இது மிகவும் தாமதமான தகவல் பரிமாற்றமுறை. பந்து வரும் தகவலை உங்கள் மூளை தாமதமாகப் புரிந்துகொண்டு, கட்டளை இடுகிறது என்றால் நீங்கள் பந்தைத் தவறவிட்டு விடுவீர்கள்தானே? பந்தைப் பிடிக்காமல் விடுவதில் பிரச்சினை இல்லை.
  • ஆனால், சூடான பாத்திரத்தில் கையை வைத்துவிட்டீர்கள். அந்தத் தகவல் தாமதமாக மூளைக்குச் சென்றடைந்தால் என்னவாகும்? உங்கள் விரல் புண்ணாகிவிடும். அவ்வாறு நிகழ்வதைத் தடுக்க பாத்திரத்தில் விரல் பட்ட உடனேயே சட்டென்று எடுக்கும் அளவுக்கு வேகமாகத் தகவல் பரிமாற்றம் நிகழ வேண்டும் அல்லவா? இந்தத் தகவல் பரிமாற்றத்துக்குத் தான் மின்சாரம் உதவுகிறது.
  • டெலிபோன் கண்டுபிடிப்பதற்கு முன் தந்தி இயந்திரம் பயன்படுத்தப் பட்டது. தந்தியில் மின்சாரம் செலுத்தப்படும்போது ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்குச் சில நொடிகளில் தகவல் பரிமாறப்படும். அதேபோலத்தான் மின்சமிக்ஞைகள் மூலம் தகவல் உடலுக்குள் பகிரப்படுகிறது. தகவல் பரிமாற்றத்துக்குத் தேவையான மின்சாரத்தை உடலே உற்பத்தி செய்கிறது.
  • நம் உடலில் உள்ள செல்கள் மின்னூட்டத்தைத் (Electric Charges) தயாரிக்கும் தன்மையைப் பெற்றுள்ளன. நம் உடலில் சோடியம், பொட்டாசியம், குளோரைடு எனப் பல பொருள்கள் மின்னூட்டத்தைக் கொண்டுள்ளன. இவற்றை அயனிகள் என்கிறோம். இவை நேர்மின் அயனிகள், எதிர்மின் அயனிகள் என இருவகைப்படும். இவற்றைப் பயன்படுத்தி நம் உடல் மின்சாரத்தைத் தயாரிக்கிறது.
  • நம் மூளையில் நரம்பணுக்களுக்கு வெளியில் நேர்மின் அயனிகள் அதிகம் இருக்கும். நரம்பணுக்களுக்கு உள்ளே எதிர்மின் அயனிகள் அதிகம் இருக்கும். இரண்டையும் சுவர் போன்ற செல்லின் சவ்வு (Membrane) பிரித்திருக்கும். ஆனால், இந்தச் சுவரின் நடுவே புரதத்தால் ஆன அயனிக் கதவுகளும் அமைந்திருக்கும். மின்னூட்டம் கொண்ட அயனிகள் இந்தக் கதவின் வழியே உள்ளேயும் வெளியேயும் பயணிக்கும்போது மின்சாரம் உருவாகிறது.
  • இப்போது உங்கள் காலில் முள் குத்திவிடுகிறது என வைத்துக் கொள்வோம். இந்தத் தூண்டல், அயனிக் கதவுகளைத் திறந்துவிடும். உடனே நரம்பணுக்களுக்கு வெளியே உள்ள நேர்மின் அயனிகள் சரசரவென்று உள்ளே வந்துவிடும். இதனால் உள்ளே இருந்த எதிர்மின்னூட்ட நிலை மாறி, நேர் மின்னூட்ட நிலை ஏற்படும்.
  • இது மின் சமிக்ஞைகளை (Electric Signals) உருவாக்கும். சிறிது நேரத்தில் மற்றொரு கதவு திறக்கப்பட்டு நேர்மின் அயனிகள் மீண்டும் நரம்பணுவுக்கு வெளியே சென்றுவிடும். இவ்வாறு தொடர்ச்சியாக நடைபெறும்போது மின் சமிக்ஞைகள் உற்பத்தியாகி, நரம்பணுக்களுக்கு இடையே பயணித்து உடல் முழுவதும் தகவல் பரிமாறப்படும்.
  • இந்தச் சமிக்ஞைகளின் அளவு, எந்த இடத்தில் இருந்து அந்தச் சமிக்ஞை வருகிறது என்பது உள்ளிட்ட காரணிகளை வைத்து அது என்ன தகவல் என்பதை மூளை புரிந்துகொள்ளும். அதாவது, வரும் தகவல் ’நெருப்பு சுட்டுவிட்டது’ என உணர்த்தும் தகவலா, அல்லது ‘பந்து உங்களை நோக்கி வருகிறது’ என்கிற தகவலா என்பதை மூளை புரிந்துகொண்டு அதற்கு ஏற்றாற்போல வினையாற்றும்.
  • ஆபத்தின்போது நம் உடல் எதிர்வினை யாற்றுவது மட்டுமல்ல, நீங்கள் பார்ப்பது, கேட்பது, முகர்வது, உங்களுக்குள் எழும் பாசம், வலி, சிரிப்பு போன்ற உணர்வுகள், நீங்கள் காணும் கனவு, அசைபோடும் ஞாபகங்கள் என அத்தனையும் இந்தத் தகவல் பரிமாற்றங்களால்தாம் நடைபெறுகின்றன.
  • உங்கள் இதயத்தின் தசை எப்படிச் சுருங்கி விரிய வேண்டும், கண்களின் மூலம் வரும் ஒளியை எப்படிக் காட்சியாக மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட உடல் உறுப்புகளின் இயக்கங்கள்கூட நம் மூளையில் உற்பத்தியாகும் மின்சாரத்தால்தான் நடைபெறுகின்றன.

நன்றி: தி இந்து (28  – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories