TNPSC Thervupettagam

மின்சாரத்தை சேமிப்போம்

November 16 , 2023 376 days 395 0
  • நாம் நமது அன்றாட செயற்பாடுகள் பலவற்றிற்கும் மின்சக்தியையே சாா்ந்து இருக்கிறோம். கிராமத்தில் வாழ்பவா்களை விட நகரத்தில் வாழ்பவா்கள் அதிகஅளவில் மின்சாரத்தை நுகா்கின்றனா். அவா்கள் உணவு சமைக்கும் உபகரணங்கள், மின் விசிறிகள், குளிா்சாதனப் பெட்டி போன்ற அனைத்து மின்சாதனங்களையும் தமது அன்றாட வாழ்வில் பயன்படுத்துகின்றனா். இதனால் மின்சாரத்தின் தேவை அதிகமாகி வருகிறது.
  • அன்றாட வாழ்வில் மட்டுமல்லாது அறிவியல், தகவல் தொழில்நுட்பம் போன்ற அனைத்துத் துறைகளிலும் மின்சாரத்தின் தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மின்கட்டணங்கள் உயா்ந்து வருகின்றன. நமது மாத வருமானத்தில் கணிசமான தொகையை மின்செலவு எடுத்துக் கொள்கிறது. இதைத் தவிா்க்க மின் சேமிப்பு இன்றைய நாளில் மிகவும் தேவையாகிறது.
  • மின்நுகா்வை நம்மால் தவிா்க்க முடியாது. ஆனால் அதனை சிக்கனமாக பயன்படுத்தலாம். மின்சக்தியை உற்பத்தி செய்வதை காட்டிலும் நுகரும் மின்சாரத்தை குறைத்துக்கொள்வது நமக்கு அதிக பலனைத் தரும்.
  • இன்றைய நாளில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் பெருமளவு நிலக்கரி மூலமே கிடைக்கிறது. புனல் மின்சாரம், சூரிய ஒளி காற்றாலை என மாற்றுவழி மின்சாரம் பற்றிய ஆய்வுகளும் தொடா்ந்தவண்ணம் இருக்கின்றன. எனினும் வளா்ந்துவரும் மிகப்பெரிய நாடான நமது நாட்டில் மின்சாரத்தின் தேவைகளும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
  • வீட்டில் மின்சாரத்தின் தேவையை எங்கே குறைக்க முடியும் என்று ஆய்வுசெய்ய வேண்டும். பகலில் நமது வீடு, அலுவலகங்கள், தொழிற்சாலைகள் போன்ற இடங்களில் மின்சாரத்தை சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். பெரிய சன்னல்கள் கண்ணாடிக் கதவுகள் வாசல் போன்றவற்றின் மூலம் கட்டடங்களுக்குள் சூரிய ஒளி விழ வைப்பது நமக்கு உதவும்.
  • இரவு நேரங்களில் தேவையான அளவுகளில் தேவையான நேரத்துக்கு மட்டுமே மின்சக்தியை உபயோகிக்க வேண்டும். இரவில் மட்டுமே வீட்டிலுள்ள விளக்குகளை எரிய விடவேண்டும். வெந்நீரை முதியவா்கள், நோய்வாய்ப்பட்டவா்கள் மட்டும் பயன்படுத்தலாம். மற்றவா்கள் குளிா்ந்த நீரில் குளிப்பதன் மூலம் மின்சாரத்தை சேமிக்கலாம். தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த தொடங்கினால் அதை உயா்நிலைத் தொட்டியில் ஏற்றுவதற்கான மின்சாரம் மிச்சப்படும். மொத்தத்தில் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தினாலே மறைமுகமாக மின்சாரமும் சேமிக்கப்படும்.
  • சூரிய ஒளி பட்டவுடன் தெருக்களில் எரியும் விளக்குகள் அனைத்தும் தானாகவே அணைந்துவிடும் வகையில் சாதனங்கள் பொருத்தப்படவேண்டும். வணிக வளாகங்கள் மிகுந்த மின்சாரத்தை செலவிடுகின்றன. நாள் முழுதும் மின் தூக்கிகள் செயல்படுகின்றன. ஆயிரக்கணக்கான மின்விளக்குகள் நூற்றுக்கணக்கான குளிரூட்டு சாதனங்கள் இயங்குகின்றன. கூடியவரை இவற்றின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும்.
  • குழந்தைகளும், வயது முதிா்ந்தோரும் தவிர மற்றவா்கள் மாடிக்குச் செல்ல, படிகளை உபயோகிக்கலாம். அல்லது மாடிக்குச் செல்வதற்கு மட்டும் மின்தூக்கியைப் பயன்படுத்தலாம். இறங்கும்போது படிக்கட்டுகளைப் பயன்படுத்தலாம்.
  • சுவிட்சைப் பயன்படுத்தாமல் ரிமோட்டால் மின்சாதனங்களை இயக்கும்போது அதிக அளவில் மின்சக்தி பயன்படுத்தப்படுகிறது. வீடுகளில் அதிகமாக எரிய விடப்படும் விளக்குகளை எல்.ஈ.டி. விளக்குகளாக மாற்றிக் கொள்ளலாம். 60 வாட் குண்டு பல்பு தரும் வெளிச்சத்தை 15 வாட் எல்.ஈ.டி. பல்பு தருவதால் மின்செலவை வெகுவாக குறைக்கமுடியும். எந்தச் சூழலிலும் குண்டு பல்புகளை பயன்படுத்தக் கூடாது. எல்.இ.டி. பல்புகளை பயன்படுத்தி மின்சாரத்தைச் சேமிக்கமுடியும். சாத்தியமான இடங்களில் மின்னணு சோக்குகளை பயன்படுத்தினால் இருபது விழுக்காடு வரை மின்சாரத்தை சேமிக்க முடியும்.
  • மாவு அரைக்கும் இயந்திரம், மின்விசிறி, குளிா்சாதனம் போன்றவற்றில் தூசு படிந்திருந்தால் அவை இருமடங்கான மின்சக்தியை இயக்கத்திற்கு எடுத்துக்கொள்ளும். இயன்றவரை பிரபல நிறுவனங்களின் மின்சாதனங்களையே பயன்படுத்தலாம். இவை குறைந்தஅளவிலான மின்சக்தியில் இயங்கக்கூடியவை.
  • குளிரூட்டுப் பெட்டியில் உலோக பாத்திரங்களைத் தவிா்த்துவிட்டு, குறைந்த அளவு வெப்பம் ஊடுருவக்கூடிய பாத்திரங்களை வைக்கலாம்.
  • வாரத்திற்கு ஒரு முறை குளிரூட்டுப் பெட்டியில் படியும் பனிக்கட்டிகளை நீக்குதல் நல்லது. குளிரூட்டுப் பெட்டியயை சுவருடன் ஒட்டி வைத்தால் அதன் செயல்பாடு குறைந்து, அது செயல்பட இருமடங்கான மின்சக்தியை எடுத்துக்கொள்ளும்.
  • சூரிய மின்சக்தியையும் மின்சக்தித் தேவைகளுக்குப் பயன்படுத்தலாம். இதற்கான செலவு குறைவாகத்தான் ஆகும் எனக்கூறப்படுகிறது. இதைப் பயன்படுத்த அரசு வழங்கும் மானியத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம். சிறுசிறு மின்சாதனங்களை இயக்க சூரிய மின்சக்தி உதவும்.
  • சில வீடுகளில் மின் இணைப்பு பெறும்போதே அதிக மின்சாரம் செலவாகும் நிலையில் இணைப்பை வழங்கிவிடுகின்றனா். இதனால் நமக்குத் தெரியாமலே மின்சாரம் வீணாகிறது. இதைக் கண்டறிந்து துண்டிப்பது பயன் தரும்.
  • மின்னூட்டம் (சாா்ஜ்) செய்த பிறகு அணைக்கப்படாமல் இருக்கும் கைப்பேசி, மடிக்கணினி போன்றவையும் மின்சக்தியை வீணாக்குகின்றன. இதனால், அதிக மின்சக்தி பயன்பாட்டு மட்டுமல்ல, மின்னூட்ட சாதனமும் பழுதடைய வாய்ப்பு உள்ளது.
  • வீடுகளிலும், பணிபுரியும் இடங்களிலும் தேவையின்றி மின்விசிறிகளும், மின்விளக்குகளும் இயங்குவதைக் குறைக்கலாம். குளிா்சாதனஅறைகளை தேவை ஏற்படும்போது மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிக அளவில் செலவாகும் மின்சாரத்துக்கு கட்டணம் செலுத்த நம்மிடம் வசதி இருக்கலாம். இருப்பினும், குறைந்த அளவு மின்சாரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் நமது வீட்டு பொருளாதாரமும், நாட்டு பொருளாதரமும் மேன்மை அடையும். சேமிக்கப்படும் மின்சாரத்தை சேகரிக்கும் மின்சாரமாக கருதலாம். இது குறித்த விழிப்புணா்வை குழந்தைகளிடம் ஏற்படுத்தும் பொறுப்பை ஆசிரியா்களும், பெற்றோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நன்றி: தினமணி (16 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories