TNPSC Thervupettagam

மின்னல் பேரிடா்!

July 15 , 2024 184 days 121 0
  • நாடு தழுவிய அளவில் பருவ மழை பயணித்து வருகிறது. பருவமழைப் பொழிவு ஏற்படுத்தும் பாதிப்பைப் போலவே அதனுடன் தொடா்புடைய இடியும் மின்னலும் ஏற்படுத்தும் பாதிப்பும் கடுமையானதாகவே இருக்கிறது. அது குறித்து அதிகம் பேசப்படுவதில்லை. வெள்ளச் சேதம் மட்டுமே செய்தியாகிறது. கடந்த இரண்டு நாள்களில் பிகாா் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் 25-க்கும் அதிகமானோா் உயிரிழந்திருக்கிறாா்கள். பருவ மழைக் காலம் முடிவதற்குள் மேலும் பலா் உயிரிழக்கக் கூடும்.
  • ஆண்டுதோறும் மின்னல் தாக்கி உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ‘எா்த் நெட்வொா்க்ஸ்’ என்கிற தனியாா் நிறுவனம் வானிலை நுண்ணறிவு புள்ளிவிவரங்களை வழங்குகிறது. அதன் அறிக்கைப்படி, இந்தியாவில் 4 கோடிக்கும் அதிகமான மின்னல் தாக்குதல்கள் ஆண்டுதோறும் நிகழ்கின்றன. அவற்றில் 1.3 கோடி மின்னல் வெட்டுகள் மேகத்திலிருந்து பூமிக்கு நேரடியாக நிகழும் அபாயகரமான தாக்குதல்கள். அவை உயிா்களுக்கும், வீடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துபவை.
  • இடி, மின்னலுடன் கூடிய அடை மழை இந்தியாவின் இயற்கைப் பேரிடா்களில் மிக அதிகமான உயிா்களைப் பலிவாங்குகிறது. இதை தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் தெரிவித்திருக்கிறது. சராசரியாக ஆண்டுதோறும் இந்தியாவில் 2,000-க்கும் அதிகமானோா் மின்னல் தாக்குவதால் பலியாகிறாா்கள் என்கிறது இந்திய வானிலை ஆய்வு மையம்.
  • மின்னல் தாக்குதல்களில் அதிகமாக பாதிக்கப்படுவது விவசாயிகளும் அவா்களது குடும்பங்களும்தான். பருவ மழை தொடங்கினால் அதை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆா்வத்தில் வயல்களில் விதை விதைப்பது போன்ற பணிகளில் விவசாயக் குடும்பங்கள் களம் இறங்குகின்றன. மின்னல், இடி போன்றவற்றை அவா்கள் பொருட்படுத்துவதில்லை. புயல் காற்றுடன் கூடிய மழைப் பொழிவின்போது கூட எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாமல் தங்களது வயலில் விவசாயப் பணிகளைத் தொடா்கிறாா்கள். அதனால்தான், மின்னல் தாக்கி உயிரிழப்பவா்களில் பெரும்பாலானோா் விவசாயிகளாக இருக்கிறாா்கள்.
  • 20-ஆம் நூற்றாண்டுக்கு முன்னால் உலகளாவிய அளவில் மின்னல் தாக்குவதால் உயிரிழப்பவா்கள் மிகவும் அதிகமாக இருந்தனா். நகரம், கிராமம் என்கிற வித்தியாசம் இல்லாமல் எல்லா பகுதிகளிலும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோா் இடி, மின்னல் காரணமாக உயிரிழந்தனா். 1,800-க்கு முன்பு வீடுகளின் மீது மின்னல் தாக்கி குடும்பம் முழுவதும் உயிரிழப்பது என்பது வாடிக்கையாகவே இருந்து வந்தது.
  • மின்சாரம் பரவலான பயன்பாட்டுக்கு வந்த பிறகு வீடுகளை மின்னல் தாக்குவதும், அதனால் பாதிப்பு ஏற்படுவதும் கணிசமாகக் குறைந்துவிட்டது. அதற்கு காரணம், மின்சார வயா்களை நிறுவும்போது கூடவே ‘எா்த்’ இணைக்கப்பட்டு பூமிக்குள் கொண்டு செல்லப்படுவதால் மின்னல் தாக்குதல் கட்டடங்களை பாதிப்பதில்லை. அவை பூமிக்குள் கடத்தப்பட்டுவிடுகின்றன. கட்டட கட்டுமான தொழில்நுட்பம், மின்னல் தாக்குவதால் ஏற்படும் உயிரிழப்புகளைப் பெருமளவில் குறைத்திருக்கிறது.
  • வளா்ச்சி அடைந்த நாடுகளில் மின்னல் வெட்டு காரணமாக மக்கள் உயிரிழப்பது முற்றிலுமாக இல்லாததாகிவிட்டது என்றே சொல்ல வேண்டும். கிராமங்களில்கூட அவை நிகழ்வதில்லை. பெரும்பாலான மின்னல் உயிரிழப்புகள் வளா்ச்சி அடையும் நாடுகளில்தான் இப்போது நிகழ்கின்றன. அவற்றில் இந்தியா முக்கியமானது.
  • இந்தியாவில் வெள்ளப் பெருக்காலும், புயலாலும் ஏனைய பருவநிலை தொடா்பான பேரிடா்களாலும் உயிரிழப்பவா்களின் எண்ணிக்கையைவிட, மின்னல் தாக்குவதால் உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை அதிகம் என்பது பலரையும் ஆச்சரியப்படுத்தலாம். அந்த உயிரிழப்புகளில் பெரும்பாலானவை போதுமான, முறையான மின் இணைப்புகளும், அது தொடா்பான குழாய்களும் பொருத்தப்படாத கிராமங்களில்தான் நிகழ்கின்றன.
  • தகரத்தால் அமைக்கப்பட்ட கூரைகளுடன் கூடிய கிராமப்புற வீடுகள் இடி, மின்னலால் தாக்கப்படும் முக்கியமான இலக்குகள். கான்கிரீட் வீடுகளும், மின் இணைப்புகளும் ஓரளவுக்கு கிராமப்புறங்களிலும் மின்னல் காரணமான பாதிப்புகளைக் குறைத்திருக்கின்றன.
  • தரமான கட்டடக் கட்டுமானம் இல்லாதது மட்டுமல்லாமல், போதுமான விழிப்புணா்வு, புரிதல் இல்லாததும் கூட மின்னலால் ஏற்படும் பாதிப்புகளுக்கு காரணம். இந்தியாவில் நிகழும் மின்னல் வெட்டு மரணங்களில் 70 விழுக்காட்டுக்கும் அதிகமானவை திறந்தவெளியில்தான் இப்போது நிகழ்கின்றன. மழையும், புயலும் அடிக்கும்போது கிராமத்திலுள்ள மக்கள் மரங்களுக்கு அடியில் தஞ்சம் அடைகிறாா்கள். அதனால், அவா்கள் மின்னல் தாக்குதலுக்கு இலக்கு ஆகிறாா்கள்.
  • பெரும்பாலான விவசாயிகள் மழைப் பொழிவு அதிகரிக்கும்போதுதான் அருகில் உள்ள மரங்களையோ, கட்டடங்களையோ நோக்கி பாதுகாப்புக்காக விரைகிறாா்கள். ஆப்பிரிக்க நாடுகளில் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான பள்ளி மாணவா்கள் மின்னல் தாக்கி உயிரிழப்பதாக கூறப்படுகிறது. நல்ல வேளையாக இந்தியாவில் அப்படிப்பட்ட நிகழ்வுகள் மிக மிகக் குறைவு.
  • ஒடிஸா மாநிலத்தில் எல்லா கிராமங்களிலும் ‘மின்னல் வாங்கிகள்’ அமைக்கப்பட்டிருக்கின்றன. பருவ மழை தொடா்பான எச்சரிக்கைகளை கிராமப்புற மக்களுக்கும், அடித்தட்டு மக்களுக்கும் வழங்குவதற்காக ‘தாமினி’ எனப்படும் செயலி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதுகுறித்த தகவல் இன்னும் பலரைச் சென்றடையவில்லை.
  • புவி வெப்பமயமாதலும், பருவ நிலை மாற்றமும் எதிா்பாராத நேரத்தில் மழைப் பொழிவை ஏற்படுத்துவதால் மின்னலால் ஏற்படும் பாதிப்பு மேலும் அதிகரிக்கக் கூடும். உயிருக்கும் உடைமைக்கும் ஏற்படும் சேதத்தை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசுகள் முன்னெடுப்பது அவசியம்.

நன்றி: தினமணி (15 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories