TNPSC Thervupettagam

மின்னல் மரணங்கள்!

July 25 , 2020 1641 days 1459 0
  • கேட்பதற்கு சற்று ஆச்சரியமாகவே இருக்கும். ஆனால், கடந்த மாதத்தில் மட்டும் உத்தரப் பிரதேசம், பிகார் ஆகிய இரண்டு மாநிலங்களில் நூற்றுக்கும் அதிகமானோர் ஒரே மாதத்தில் மின்னல் பாய்ந்து உயிரிழந்திருக்கிறார்கள்.

  • இதுபோல, ஆண்டுதோறும் இந்தியாவில் 2,000-க்கும் அதிகமானோர் மின்னல் பாய்ந்து உயிரிழக்கிறார்கள் என்றாலும்கூட, இந்த ஆண்டு உயிரிழப்பு அதிகமாகக் காணப்படுகிறது.

  • ஜூலை முதல் வாரத்தில் மட்டும் 11 பேர் மின்னல் பாய்ந்ததால் உயிரிழக்க நேரிட்டிருக்கிறது. அதேபோல, பிகாரிலும் 26-க்கும் அதிகமானோர் கடந்த ஒரு மாதத்துக்குள் மின்னல் பாய்ந்ததால் உயிரிழக்க நேரிட்டிருக்கிறது.

  • இப்படி மின்னல் வெட்டுக்கு உள்ளாகிறவர்கள், பெரும்பாலும் விவசாயிகளாகவும் அவர்களின் குடும்பத்தினராகவும்தான் இருக்கிறார்கள். நேரம், காலம் பார்க்காமல் கொட்டும் மழையிலும்கூட விவசாயப் பணிகளுக்கு குடும்பத்தினருடன் புறப்பட்டுவிடுவதுதான் விவசாயிகள் மின்னல் வெட்டால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பதற்கான மிக முக்கியமான காரணம்.

  • நம்மில் பலரும் இடி, மின்னல் போன்றவை இயற்கையின் சீற்றங்கள் என்று கருதுவதால், அவை நமது கட்டுப்பாட்டில் இல்லை என்று நினைக்கிறோம். ஆனால், உண்மை அதுவல்ல.

இடி-மின்னல் வெட்டு

  • கி.பி. 1800-க்கு முன்பு, வீடுகள் மீது இடி-மின்னல் தாக்கி, தூங்கிக் கொண்டிருக்கும் குடும்பங்கள் உயிரிழப்பது உலகெங்கிலும் சர்வசாதாரணமாகவே இருந்து வந்திருக்கிறது.

  • அவையெல்லாம் இருபதாம் நூற்றாண்டிலிருந்து குறையத் தொடங்கின. உலகின் பல பாகங்களிலும் இடி-மின்னல் பாதிப்பால் உயிரிழப்போர் எண்ணிக்கை, உயிரிழக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை, பாதிக்கப்படும் கட்டடங்களின் எண்ணிக்கை ஆகியவை கணிசமாகவே குறைந்துவிட்டன.

  • இடி-மின்னல் போன்றவை தொடராமல் இல்லை; நின்றுவிடவும் இல்லை. ஆனால், வீடு கட்டும் முறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள், மின்சார வயர்கள் பயன்பாடு, "எர்த்' கையாளப்பட்டு பாதிப்பு பூமிக்குச் செல்லும் அறிவியல் வளர்ச்சி போன்றவை மின்னல் வெட்டு மரணங்களின் எண்ணிக்கையை சர்வதேச அளவில் கணிசமாகக் குறைத்திருக்கின்றன.

  • இப்போதெல்லாம் வளர்ச்சியடைந்த நாடுகளில் மின்னல் வெட்டு மரணம் அநேகமாக இல்லை.

  • கடந்த அரை நூற்றாண்டாக, மின்னல் வெட்டாலான பாதிப்பும் உயிரிழப்புகளும் வளர்ச்சியடையும் நாடுகளிடையேதான் மிக அதிகமாகக் காணப்படுகின்றன.

  • அவற்றில் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும் நாடாக இந்தியா இருந்து வருகிறது.

  • 2006-2015 ஆண்டுகளுக்கு இடையே, இந்தியாவில், வெள்ளப்பெருக்காலும், புயலாலும் உயிரிழந்தோரைவிட, மின்னல் பாய்ந்ததால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகம்.

  • பருவ நிலை தொடர்பான பேரழிவுகளால்கூட, இடிமின்னல் பாதிப்பு அளவுக்கு உயிரிழப்பை ஏற்படுத்த முடிந்ததில்லை. இவற்றில் பெரும்பாலான மரணங்கள் கிராமப்புறங்களில்தான் காணப்படுகின்றன.

  • அங்கே உள்ள கட்டடங்களில் மின் இணைப்புகள் முறையாகச் செய்யப்படாமல் இருப்பதும், முறையாகக் கட்டப்படாத மண் குடிசைகள், கச்சா வீடுகள், அலுமினியம் தகரக் கூரைகளாலான குடியிருப்புகள் ஆகியவை காணப்படுவதும் மின்னல் பாய்ந்வதற்கு முக்கியக் காரணங்கள்.

  • கிராமப்புற விவசாயிகளுக்கும் ஏழை மக்களுக்கும் போதுமான விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதால் இடி - மின்னல் ஏற்படும்போது மரங்களுக்கு அடியில் அவர்கள் தஞ்சமடைகிறார்கள்.

  • புயலின்போதும் இதேதான் நடக்கிறது. இடி-மின்னலால் மரங்கள் தாக்கப்படும்போது, அதற்குக் கீழேயிருக்கும் அப்பாவி விவசாயிகள் மரணமடைகிறார்கள்.

விழிப்புணர்வு வேண்டும்

  • மின்னல் பாயாமல் இருப்பதற்காக, சில செயலிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்றாலும்கூட, அவை இன்னும் பொதுமக்கள் மத்தியில் பரவலாக அறியப்படவில்லை.

  • "தாமினி' என்கிற செயலி உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தச் செயலி இடி-மின்னல் குறித்த முன்னெச்சரிக்கையை வழங்குகிறது. ஆனால், இந்தியாவிலுள்ள எத்தனை கிராமப்புற ஏழைகளுக்கும் சரி, நகர்ப்புற ஏழைகளுக்கும் சரி இப்படியொரு செயலி இருப்பது குறித்த புரிதல் இருக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பருவ மழை வரும்போது அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்கிற ஆர்வம் விவசாயிகளிடம் காணப்படுவதற்கு, நீர் மேலாண்மை குறைபாடுகள் ஒரு முக்கியமான காரணம்.

  • அமெரிக்காவை எடுத்துக் கொண்டால் அங்கே மின்னல் பாய்ந்ததால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களில் பெரும் பாலானோர் விளையாட்டு வீரர்களும், நீண்ட தொலைவு சைக்கிள் பயணம் செல்பவர்களுமாக இருக்கிறார்கள்.

  • ஆப்பிரிக்க நாடுகளை எடுத்துக்கொண்டால் நூற்றுக்கணக்கான பள்ளிக் குழந்தைகள்தான் மின்னல் பாய்ந்து பலியாகின்றனர். இதுபோல, ஒவ்வொரு நாட்டுக்கும் இடி-மின்னலால் பாதிக்கப்படும் நபர்கள் வேறுபடுகிறார்கள். இதுகுறித்த ஆய்வு முறையாக இதுவரை நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை.

  • மின்னல் பாய்வதால் ஏற்படும் மரணங்கள் தவிர்க்கப்படக் கூடியவை. போதுமான புரிதல் இல்லாமல் இருப்பதால், கிராமப்புற ஏழைகள் மிக அதிகமாகப் பாதிக்கப்படுவதுதான் வருத்தத்துக்குரிய விஷயம்.

  • அதை மாற்றுவதற்கான முயற்சி முறையாக எடுக்கப்படவில்லை. இழப்பீடுகள் இதற்குத் தீர்வல்ல. முறையான விழிப்புணர்வும் அரசின் ஊரக வளர்ச்சித் துறையும் வேளாண் துறையும் மக்கள் மத்தியில், குறிப்பாக, ஏழை விவசாயிகள் மத்தியில் "தாமினி' செயலி குறித்தும், இடி, மின்னல், பெருமழை வந்தால் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்தும், முறையான புரிதலையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதுதான் இதற்குத் தீர்வாக இருக்க முடியும்!

 

நன்றி: தினமணி (25-07-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories