TNPSC Thervupettagam

மிஷேல் டு செர்டூ: அன்றாடம் எனும் அளப்பரிய செயல்

September 15 , 2023 435 days 280 0
  • ஒரு கோட்பாட்டு நூலை, சிந்தனையாக்கத்தை, கவிதை போன்ற மொழியில் எழுத முடியுமா என்று நீங்கள் யோசித்தால், அவசியம் வாசிக்கவேண்டிய நூல் என மிஷேல் டு செர்டூ (Michel de Certeau, 1925-1986) எழுதிய ‘Practice of Everyday Life’ (1984) என்கிற நூலைக் கூறலாம்.
  • நாஸிகளிடமிருந்து தப்பிச்செல்லும்போது இளம் வயதிலேயே தற்கொலை செய்துகொண்ட ஜெர்மானிய சிந்தனையாளர் வால்டர் பெஞ்சமினைப் (1892-1940) போலத் தெறிப்புகளும் திறப்புகளும் நிறைந்த நடைக்குச் சொந்தக்காரர் செர்டூ. இயேசு சபை என்றழைக்கப்படும் Jesuit Order (Society of Jesus) பாதிரியாரான இவர், பாரிஸிலும் அமெரிக்காவிலும் பல்கலைக்கழகங்களில் பேராசிரியராக இருந்தார்.
  • வரலாறு, உளவியல், தத்துவம் எனப் பல்துறை அறிஞராக விளங்கினார். பிரெஞ்சு மொழியில் பிரசுரமான இவரது கணிசமான எழுத்துக்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், அவரது சர்வதேசப் புகழுக்குக் காரணமாக இருப்பது, ‘அன்றாட வாழ்க்கைச் செயல்முறைஎன்கிற நூலும், அன்றாடம் குறித்த சிந்தனையும்தான்.

நகரத்தில் நடத்தல்

  • அடர்த்தியான பல அத்தியாயங்கள் கொண்ட இந்த நூலை முழுமையாக வாசித்துள்ளவர்கள் குறைவாகத்தான் இருப்பார்கள் என்றாலும், நகரத்தில் நடத்தல் (Walking in the City) என்கிற அத்தியாயத்தைப் பெரும்பாலோர் படித்திருப்பார்கள் என்பதுடன், ஆரோக்கியமான முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் பல்வேறு துறைகளில் இந்த அத்தியாயம் மாணவர்களுக்கான வாசிப்புப் பட்டியலில் இடம்பெறுவது இயல்பு. ஏனெனில், அனைவர் மனதிலும் எளிதில் பதியக்கூடிய ஓர் உருவகத்தை அவர் அதில் தருகிறார்.
  • எம்பயர் ஸ்டேட் பில்டிங் (செர்டூ, செப்டம்பர் 11 அன்று தகர்க்கப்பட்ட உலக வர்த்தக மையத்தைக் குறிப்பிடுகிறார்) போன்ற உயர்ந்த கட்டிடத்திலிருந்து நீங்கள் நியூ யார்க்கின் மன்ஹாட்டன் பகுதியைப் பார்த்தால் அதன் தெருக்களெல்லாம் கிடை-செங்குத்துக் கோடுகளால் அழகாகத் திட்டமிட்டு அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அது பார்ப்பவர் மனதில் திட்டமிடல், அமைப்பாக்கம் குறித்த சிறந்த உருவகமாக, வரைபடப் பிரதியாக மனதில் பதியும்.
  • ஆனால், அந்தத் தெருக்களில் நடக்கும் ஒருவர், அந்த வரைபடத்தைக் காணமாட்டார். மனம்போனபடி வலதுபுறமும், இடதுபுறமுமாக திரும்பி நடப்பார். சிறு சந்துகளில், முக்குகளில் பலவற்றைக் காண்பார். அவர் அவ்விதம் செய்யும்போது அவரது நடையின் வரைபடத்தை அவர்தான் சுயேச்சையாக உருவாக்கிக் கொள்கிறார். அவரைப் போன்ற எண்ணற்றவர்களே அந்த நகரை நிகழ்த்துகின்றனர்.
  • இந்த நூலின் பல்வேறு நுட்பமான கருத்துகளுக்கும் தத்துவப் பார்வைகளுக்கும் அடிப்படையாக இருப்பது இந்த உருவகம்தான். மேலிருந்து பார்க்கும் மொத்த வரைபடம் போன்ற திட்டமிடப்பட்ட வெளி, கீழே நடப்பதில் தன்னிச்சையாக உருவாக்கிக்கொள்ளும் செயல்வெளி.

திட்டமிடுதலும் செயல்படுதலும்

  • செர்டூ ஆங்கிலத்தில் ஸ்டிரேடஜி (strategy), டாக்டிக்ஸ் (tactics) என்கிற இரண்டு சொற்களை முன்னிறுத்துகிறார். தமிழில் மார்க்சிய எழுத்துக்களில் இவற்றை யுத்த தந்திரம், செயல்தந்திரம் என்று பிரித்துக் கூறுவார்கள். போர்முனையில் அல்லது அது போன்ற ஒரு களத்தில் இந்தப் பொருள்கொள்ளுதல் சரிதான். செர்டூ சற்றே விரிவான பொருளில் இவற்றைப் பயன்படுத்துகிறார். அதனைத் திட்டமிடுதல், செயல்படுத்துதல் எனக் குறிப்பிடுவது சரியாக இருக்கும்.
  • எந்த ஒரு அமைப்பும், தயாரிப்பும் ஒரு திட்டத்தின் அடிப்படையில் அல்லது சட்ட திட்டங்களின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன. உதாரணமாக, ஒரு பள்ளியை எடுத்துக்கொண்டால் கட்டிடங்கள், வகுப்பறைகள், விதிமுறைகள், கட்டணங்கள், சேர்க்கை, பணி நியமனம் எனப் பல்வேறுபட்ட தயாரிப்புகள் நிகழ்கின்றன. அது செயல்படத் தொடங்கும் போது மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் இவர்களது அன்றாடச் செயல்பாடுகள், உறவுகள், முரண்கள் ஆகியவையே பள்ளி செயல்படுதலைத் தீர்மானிக்கும். விதிமுறைகளால் ஒவ்வொரு உச்சரிப்பையும், அசைவையும் தீர்மானிக்க முடியாதல்லவா?
  • இதனை யோசித்தால் அன்றாடமே பெரும் செயல்வெளியாக இருப்பதைக் காணலாம். இங்கே உண்மையில் வெளியென்பது காலம். ஆனால், நேர்கோடான கடிகாரக் காலமல்ல. பல்வேறு தருணங்களாக விரவிக் கிடக்கும் காலம். ஒரு வகுப்பில் மாணவியை ஆசிரியை பாராட்டுகிறார்.
  • அனைவரும் கரவொலி எழுப்புகிறார்கள். இன்னொரு வகுப்பில் மாணவியை ஆசிரியை தண்டிக்கிறார். மாணவி கண்கலங்குகிறார். உடல்நலமின்றி ஒரு மாணவி ஓய்வறையில் இருக்கிறார். அவரது தோழி அவருக்கான மருந்தைக் கொண்டுவந்து கொடுக்கிறார். அன்றாடத்தின் நிகழ்வுகளின், செயல்களின் விரிவு அளப்பரியது.
  • நாயகர்களின் வரலாறும் சாதாரணர்களின் அன்றாடமும்: நாயகர்கள் பெரும் அரசுகளை உருவாக்குகிறார்கள். மனிதர்களைத் திரட்டுவார்கள். காவியங்களை எழுதுவார்கள். அவர்களே காவியத்தின் நாயகர்களாக இருப்பார்கள். அவர்கள் செயல்பாடுகள் அனைத்தும் பெரும் திரளான சாதாரணர்களின் மூலமாக, அவர்களைக் கொண்டே, அவர்களுக்காகவேகூட நிகழ்த்தப் படுவதாக இருக்கும்.
  • வரலாற்று முகங்களாக, முகவர்களாக விளங்கும் நாயகர்களும், அறியப்படாத அநாமதேயமான சாதாரணர்களும் அன்றாடத்தின் பரப்பிலேதான் சந்தித்துக் கொள்கிறார்கள். எங்கோ ஒரு மலைப்பதையிலோ நடுக்கடலிலோ வரலாற்று நாயகனும் சாதாரணனும் தனித்து விடப்படும் போது அன்றாடம் அவர்கள் மேல் கவிந்துகொள்கிறது.
  • காரண காரியமும் தற்செயலும்: அன்றாடத்தின் செயல்வெளி தற்செயல்களால் நிறைந்துள்ளது. வழமைகள் உள்ளன. ஆனாலும் அவற்றினூடாக வித்தியாசமான செயல்கள், நிகழ்வுகள் உறுதியான காரணங்களைக் கூறமுடியாதபடி தற்செயலாக நிகழ்கின்றன. வரலாற்று எழுதியல் தற்செயல்களை ஏற்பதில்லை, அந்த இருண்ட இடைவெளிகளை அது காரண காரிய தர்க்கத்தால் இட்டு நிரப்ப முயல்கிறது. ஒருவர் ஏன் ஒரு செயலைச் செய்தார் என்று திட்டவட்டமாக அவராலேயே சொல்ல இயலாது. ஏதோ செய்தேன்என்பது விளக்கம் கிடையாது. ஆனால், ஏதோவொரு விளக்கத்தை எப்போதும் கற்பிக்கலாம். சொல்லப்போனால் பல விளக்கங்களைக் கற்பிக்கலாம். எல்லா விளக்கங்களுக்கும் இடையில் தற்செயல் நிழலாக நகர்ந்து செல்கிறது.
  • அன்றாடப் பேச்சுமொழியும் அப்படித்தான் புதிய சுழிப்புகளை உருவாக்குகிறது. நீ ஆணியே புடுங்க வேண்டாம்என்று ஒருவர் தமிழில் சொன்னால் அதற்குப் பல தொனிப்பொருட்கள் சாத்தியம். அவை அகராதிகளால் சிறைப்பிடிக்க முடியாதவையாகும்.

நன்றி: இந்து தமிழ் திசை (15 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories