TNPSC Thervupettagam

மீட்புத் தொகுப்பு தேவைதானா

June 15 , 2023 576 days 379 0
  • சுதந்திர இந்தியாவின் வளர்ச்சியில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. குறு சிறு தொழில்கள் பரவலாக அமைந்ததிலும், வேலைவாய்ப்பை அதிகரித்ததிலும் அவை முக்கியப் பங்கு வகித்தன. ரயில்வே, விமானப் போக்குவரத்து, தகவல் தொலைத்தொடர்பு உள்ளிட்ட சேவைத் துறைகளிலும் பொதுத் துறை நிறுவனங்களின் பங்களிப்பை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது.
  • விடுதலை பெற்ற முதல் கால் நூற்றாண்டில், தனியார் முதலீடு இல்லாத சூழலில், பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றை முன்மாதிரியாகக் கொண்டு தனியார் துறையும் களமிறங்க வேண்டும் என்பதுதான் குறிக்கோள். எதிர்பார்த்ததைப்போல தனியார் பங்களிப்பு அதிகரிக்காததாலும், அரசுத்துறை நிறுவனங்கள் பொறுப்பேற்பு உணர்வுடன் செயல்படாததாலும் காலப்போக்கில் அவை சுமையாக மாறத்தொடங்கின. 1991-இல் பொருளாதார சீர்திருத்தமும், அதன் மூலம் தனியார்மயமும் அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணம் அதுதான்.
  • மிகப்பெரிய சுமையாக மாறிவிட்ட ஏர் இந்தியா விமான நிறுவனம், டாட்டா நிறுவனத்துக்கு விற்கப்பட்டது. தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கிவந்த ஏர் இந்தியா நிறுவனத்தை தக்க வைத்துக் கொள்ள மக்கள் வரிப்பணம் பல்லாயிரம் கோடி ரூபாய் வீணானதுதான் மிச்சம். கடைசியில் உலகளாவிய நிலையில் அசையா சொத்துக்களுடன் இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்குவதற்குக் கூட யாரும் முன்வராத நிலையில், டாட்டா நிறுவனத்திடம் அவர்கள் கேட்ட விலைக்கு விற்று அரசு கைகழுவி இருக்கிறது.
  • ஏர் இந்தியா நிறுவனத்தைப்போலவே தொடர்ந்து இழப்பை எதிர்கொள்ளும் இரண்டு சேவை நிறுவனங்கள் பிஎஸ்என்எல் எனப்படும் பாரத் சஞ்சார் நிகாமும், எம்டிஎன்எல் எனப்படும் மஹாநகர் டெலிபோன் நிகாமும். தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கும் இந்த நிறுவனங்களைத் தக்கவைத்துக் கொள்ளும் பிரயத்தனத்தில் இப்போது மீண்டும் ஒரு மீட்புத் தொகுப்பை (பெயில் அவுட் பேக்கேஜ்) மத்திய அமைச்சரவை அங்கீகரித்திருக்கிறது. இது கடந்த நான்கு ஆண்டுகளில் மேற்கொள்ளப்படும் மூன்றாவது முயற்சி.
  • 2019-இல் பொதுத்துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் இவற்றை மீட்டெடுக்க ரூ.69,000 கோடி வழங்கப்பட்டது. ரூ.20,000 கோடிக்கான 4ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு அதில் அடக்கம். ஏனைய தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 5ஜி அலைக்கற்றைக்கு மாறுவதற்கான முன்னேற்பாடுகளை செய்துகொண்டிருந்தபோது பிஎஸ்என்எல், எம்டிஎன்எல்-க்கு 4ஜி அலைக்கற்றைக்கான அனுமதி வழங்கப்பட்டது என்பதுதான் வேடிக்கை.
  • அப்போதே பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் இவற்றை தனியார்மயமாக்கலாம் என்கிற யோசனை முன்மொழியப்பட்டது. ஆனால் அதை வாங்க யாரும் முன்வரவில்லை. மீண்டும் மீண்டும் மீட்புத் தொகுப்பு வழங்கிக் காப்பாற்றுவது என்பது வரிப்பணத்தை மேலும் மேலும் விரயமாக்குவது என்பதை அரசும், தொழிற்சங்கங்களும் புரிந்துகொள்ளவில்லை. அப்போதே அந்த பொதுத்துறை நிறுவனங்களின் அசையா சொத்துகளை நல்ல விலைக்கு ஏலம் விட்டிருந்தால், அத்தனை ஊழியர்களுக்கும் கணிசமான இழப்பீடு வழங்கி மூடுவிழா நடத்தியிருக்கலாம். வரிப்பணம் தொடர்ந்து விரயமாகி இருக்காது.
  • மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2022-இல், நஷ்டத்தில் இயங்கும் பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் பொதுத் துறை தொலைத்தொடர்பு நிறுவனங்களை மீட்புத் தொகுப்பு வழங்கி மீண்டும் உயிர்ப்பிக்க நினைத்த மத்திய அரசு, ரூ.1.64 லட்சம் கோடி வழங்கியது. இந்த மூலதன உதவியின் மூலம் பொருளாதார ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும், அலைக்கற்றை சேவை ரீதியாகவும் அந்தப் பொதுத்துறை நிறுவனத்தை தனியார் நிறுவனங்களுடன் போட்டிபோட வைக்க முடியும் என்கிற தப்புக்கணக்கை மத்திய அரசு போட்டது.
  • ஒருகாலத்தில் தொலைபேசித் துறையின் மொத்த குத்தகை பெற்றிருந்த பொதுத்துறை தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்-இன் வாடிக்கையாளர் விகிதம் அக்டோபர் 2019-இல் 46.6% ஆக இருந்தது. மே 2022-இல் 28.7% ஆக குறைந்திருந்தது. அதாவது ரூ.69,000 கோடிக்கான 2019 மீட்புத் தொகுப்பு வீணானது.
  • ஆனால் அதனால் ஒரு நன்மை விளைந்தது. முன்பு அந்த நிறுவனத்தின் வருவாயில் 75% அளவில் 1.65 லட்சம் ஊழியர்களுக்கு வழங்கி வந்த ஊதியச் செலவு படிப்படியாக குறைக்கப்பட்டது. மொத்த வருமானத்தில் 36% ஆக ஊழியர்களுக்கான செலவு குறைந்தது ஓரளவுக்கு இழப்பை குறைக்க உதவியது.
  • இப்போது மீண்டும் மத்திய அமைச்சரவை ரூ.89,000 கோடிக்கான மீட்புத் தொகுப்பை அறிவித்திருக்கிறது. இதையும் சேர்த்தால் கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.3.22 லட்சம் கோடி - சராசரியாக ஆண்டொன்றுக்கு ரூ.80,500 கோடி அல்லது நாள்தோறும் ரூ.220 கோடி - பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் பொதுத்துறை நிறுவனங்களுக்கு மத்திய அரசு மக்களின் வரிப்பணத்திலிருந்து வழங்கியிருக்கிறது.
  • மார்ச் 31, 2023 நிலவரப்படி, 60,104 ஊழியர்கள் பிஎஸ்என்எல்-லிலும், 3,500 ஊழியர்கள் எம்டிஎன்எல்-லிலும் பணியாற்றுகிறார்கள். முதல் இரண்டு தொகுப்புகளும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைப்பும் பிஎஸ்என்எல்-லின் கடனை ரூ.32,944 கோடியிலிருந்து ரூ.22,289 கோடியாக குறைத்திருக்கிறது என்பது என்னவோ உண்மை.
  • பல தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களே (ஏர்செல், ரிலையன்ஸ், பிபிஎல், டாட்டா இன்டிகாம்) செயல்பட முடியாமல் விலகிவிட்ட நிலையில், லாபகரமாக இயக்க முடியாத பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்களை மீட்புத் தொகுப்புகளின் மூலம் தக்க வைத்துக் கொள்வது தேவைதானா என்கிற கேள்வியை எழுப்பத் தோன்றுகிறது.

நன்றி: தினமணி (15 – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories