TNPSC Thervupettagam

மீண்டு வருமா மேற்கிந்தியத் தீவுகள் அணி

July 6 , 2023 552 days 457 0
  • உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளின் கிரிக்கெட் அணிகளும் தாக்குதல், எதிர்த்தாக்குதல், தற்காப்பு, சரிவிலிருந்து மீண்டு வருதல் ஆகிய பல்வேறு உத்திகளுடன் கூடிய அணுகுமுறைகளை கடைப்பிடிப்பது வழக்கம்.
  • ஆனால், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் அணுகுமுறை என்பது சென்ற நூற்றாண்டில் திறமை, தன்னம்பிக்கை ஆகிய இரண்டின் கலவையாக இருந்தது. சென்ற தலைமுறைகளைச் சேர்ந்த மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர்கள் அசாத்திய திறமை உடையவர்களாக இருந்ததால், சமயங்களில் அலட்சியமாக விளையாடினாலும் , அதையும் மீறி அந்த அணியினால் மகத்தான பல வெற்றிகளைப் பெற முடிந்தது.
  • ஆனால், தற்போது அந்த அணிக்காக விளையாடுகின்ற வீரர்களிடம் திறமைக்குறைவுடன், வெற்றிபெற வேண்டும் என்ற உத்வேகமும் இல்லாத காரணத்தினால் அந்த அணி தொடர்ச்சியாகப் பல தோல்விகளைப் பெற்று வருகிறது. அத்தகைய மோசமான தோல்விகளின் உச்சமாக இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள ஐ.சி.சி. 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பைப் போட்டிக்கு அந்த அணியினால் தகுதி பெறவும் இயலவில்லை என்பது உலகெங்கிலுமுள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் வருத்தமளிப்பதாக அமைந்துள்ளது.
  • மேற்கிந்தியத் தீவுகளைப் பொருத்தவரை, கிரிக்கெட் என்பது கொண்டாட்டத்துக்குரிய ஒரு திருவிழா ஆகும். அங்குள்ள ரசிகர்களும் ரசிகைகளும் தங்களின் குடும்ப சகிதமாக கிரிக்கெட் மைதானத்துக்கு வருகை தருவதும், கிடார், டிரம்ஸ், டிரம்பட் போன்ற இசைக்கருவிகளை இசைத்தபடி ஆட்ட நேரம் முழுவதும் அவர்கள் ஆடியும் பாடியும் கொண்டாடி மகிழ்வதைக் காணக் கண்கோடி வேண்டும்.
  • உண்மையில் கூறுவதென்றால் அத்தீவுகளின் மக்கள் கொண்டாடுவதற்கு கிரிக்கெட்டை விட்டால் வேறு எதுவுமே இல்லை. அண்மைக் காலங்களில் தடகளப் போட்டிகளில் அத்தீவுகளைச் சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் சில வெற்றிகளைப் பெற்று வருகின்றனர்.
  • குறிப்பாக ஜமைக்காவைச் சேர்ந்த உசைன் போல்ட் நூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பல பதக்கங்களை வென்றுள்ளார் என்ற போதிலும், அத்தீவுக் கூட்டத்தைச் சேர்ந்த அனைவரும் கொண்டாடி மகிழ்வது கிரிக்கெட் விளையாட்டையே. மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்களைப் பொருத்தவரை, அங்குள்ள கிரிக்கெட் மைதானம் ஒவ்வொன்றும் கொண்டாட்டக் களமாகவே இருந்து வந்துள்ளது.
  • சர் கார்ஃபீல்டு சோபர்ஸ், கிளைவ் லாயிட், விவியன் ரிச்சர்ட்ஸ் ஆகியோர் தலைமை வகித்த அணிகள் உலகெங்கிலும் பற்பல வெற்றிகளைப் பெறுவதும், உள்நாட்டு மைதானங்களில் அந்த வெற்றிகளைத் தொடர்வதும் 1960-கள் முதல் 1980 வரையிலும் ஒரு தொடர் நிகழ்வாகவே இருந்து வந்தது.
  • அதற்கடுத்த தலைமுறையைச் சேர்ந்த ரிச்சி ரிச்சர்ட்ஸன், பிரையன் லாரா, கார்ல் ஹூப்பர் உள்ளிட்டோர் தலைமை வகித்தபோது, ஏறக்குறைய அதே சூழல் தொடர்ந்தது. அப்படிப்பட்ட அணியினால், திறமை வாய்ந்த பேட்டர்கள், வேகப் பந்து வீச்சாளர்கள், விக்கெட் கீப்பர்கள், ஆல்ரவுண்டர்கள் ஆகியோரை அடுத்தடுத்து தயார் செய்ய முடியாமல் போனதுதான் சோகம்.
  • மேலும் 1999-ஆம் ஆண்டு முதற்கொண்டு இந்த அணிக்குத் தலைமை வகித்த ஜிம்மி ஆடம்ஸ், சிவநாராயண் சந்திரபால், கிறிஸ் கெய்ல், டேரன் ஸமி உள்ளிட்டோர் வெற்றிகளை விடத் தோல்விகளையே அதிக அளவில் பெற்றுத் தந்துள்ளனர்.
  • இடைப்பட்ட காலத்தில் டேரன் ஸமியின் தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் அணி இரண்டு முறை இருபது ஓவர் உலகக் கோப்பையை வென்றது என்றபோதிலும், டெஸ்ட் கிரிக்கெட், ஐம்பது ஓவர்களைக் கொண்ட ஒருநாள் போட்டி ஆகியவற்றில் அந்த அணியின் திறமை குறைந்து கொண்டே வந்துள்ளது.
  • ரிகார்டோ போவெல், ட்வைன் பிராவோ உள்ளிட்ட வீரர்கள் சற்றே அதிரடியாக விளையாடக் கூடியவர்கள் என்றாலும், எப்போது அவர்கள் தங்கள் விக்கெட்டைப் பறி கொடுப்பார்கள் என்பதை யாராலும் கணிக்க முடியாது.
  • புதிய தலைமுறையைச் சேர்ந்த பந்துவீச்சாளர்களும் அவ்வளவாக சோபிக்கவில்லை. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, முந்தைய தலைமுறையைச் சேர்ந்த வீரர்களின் போராட்ட குணம் இன்றைய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர்களிடம் குறைந்துகொண்டே வந்திருக்கிறது. இக்காரணங்களினால் அவ்வணியின் வெற்றிவாய்ப்புகள் குறைந்து கொண்டே வந்தன.
  • இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து, ஒரு காலத்தில் வெல்ல முடியாத அணியாக விளங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணியை இம்முறை உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடும் தகுதியைக் கூடப் பெற இயலாத நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறது.
  • 1975, 1979 ஆகிய இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற முதல் இரண்டு உலகக் கோப்பைகளை அதிரடியாக வென்றதுடன், 1983-ஆம் ஆண்டு நடைபெற்ற மூன்றாவது உலகக் கோப்பை போட்டியில் எதிர்பாராதவிதமாக இந்தியாவிடம் தோற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தது மேற்கிந்தியத் தீவுகள் அணி. தற்போது முதன்முதலாக உலகக் கோப்பை போட்டியில் இடம்பெற முடியாமல் போனதைக் கிரிக்கெட் ரசிகர்களால் அவ்வளவு எளிதாகக் கடந்து சென்றுவிட முடியாது.
  • குறிப்பாக, ஒவ்வொரு கிரிக்கெட் போட்டியையும் ஒரு திருவிழாவைப் போலக் கொண்டாடி ரசித்து மகிழும் மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த ரசிகர்களுக்கும் இது மாபெரும் அதிர்ச்சியாகவே இருக்கும்.
  • தனித்தனித் தீவுகளாக இருக்கும் ஆறுநாடுகள் மட்டுமின்றி, பல்வேறு கிரிக்கெட் சங்கங்களும் இணைந்ததொரு சிக்கலான கூட்டணியாக மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் அமைந்துள்ளது.
  • தங்களது அணி உலகக் கோப்பையில் இடம்பெறாத அதிர்ச்சியில் இருந்து அந்த வாரியம் விரைவில் மீண்டு வரவேண்டும். அத்துடன் நில்லாமல், உலகளாவிய கிரிக்கெட் ஜாம்பவான்களின் துணையுடன் தங்களது அணிக்குப் புத்துயிரூட்டுவதற்கு முன்னுரிமை அளித்துச் செயல்பட வேண்டும்.
  • அடுத்த ஐ.சி.சி. உலகக் கோப்பைக்கு மேற்கிந்தியத் தீவுகள் அணி தகுதி பெறுவதுடன் அந்தக் கோப்பையை வெல்லும் திறமையையும் அந்த அணி அடைய வேண்டும். இதுவே உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

நன்றி: தினமணி (06 – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories