TNPSC Thervupettagam

மீண்டும் உயிர் பெற்ற சாகர்ணி ஆறு!

September 29 , 2024 105 days 173 0

மீண்டும் உயிர் பெற்ற சாகர்ணி ஆறு!

  • இரண்டு கிராமவாசிகளும் ஒரு சூழலியல் ஆர்வலரும், இரண்டு மாவட்டங்களின் அதிகாரிகளும் சேர்ந்து பத்தாண்டுகளுக்கு முன்னால் அடியோடு வற்றி, அடையாளமே இல்லாமல் மண்ணில் புதைந்துவிட்ட ‘சாகர்ணி’ என்ற ஆற்றைத் தேடி பயணப்பட்டார்கள்.
  • பிரதாப்கட் மாவட்டத்தில் 20 கிராமங்கள் வழியாக பாய்ந்தோடிய ஆறு எங்கே போயிருக்கும் என்று பழைய நில வரைபடங்களையெல்லாம் ஆராய்ந்தார்கள். இந்தக் கதை ஓராண்டுக்கு முற்பட்டது, இப்போது ஆறு செழித்தோடுகிறது என்ற உவப்பான செய்தியை முதலிலேயே அறிவது நல்லது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ஒதுக்கப்படும் நிதியைப் பயன்படுத்தி, 30,000 கிராம மக்கள் தொடர்ந்து உழைத்து, 28 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த ஆறுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள்!
  • பல பத்தாண்டுகளாக சரியான கவனிப்பின்றி இந்த ஆற்றில் நீர்வரத்து குறைந்து, ஆங்காங்கே மண் மேடிட்டதல்லாமல் வண்டல் படிந்து கெட்டியாகி ஆறு எது, தரை எது என்று தெரியாமல் கலந்துவிட்டது. சில இடங்களில் கோரைபோல புற்கள் வளர்ந்தன. சில இடங்களில் பக்கத்து வயல்காரர்கள் ஆறு ஓடிய இடத்தையும் தங்களுடைய நிலத்துடன் சேர்த்து அனுபவிக்கத் தொடங்கிவிட்டார்கள். சிலர் வீடுகளைக் கட்டிக்கொண்டார்கள். மூத்தவர்களுக்கே ஆறு ஓடிய காலம் ஏதோ நிழலாடுவதுபோலத்தான் நினைவில் இருந்தது. ஆனால், ஆற்றை ஒட்டி கிராம மக்களிடைய நிலவிய சில தொன்மக் கதைகள் மட்டுமே ஆறு ஓடியதற்கான வாய்மொழி அடையாளமாக இருந்தது.

பாலத்தில் பெயர் பலகை

  • அஜய் கிராந்திகாரி ஒருநாள் தனது பைக்கில் ஓரிடத்தைக் கடந்தார். ‘சாகர்ணி’ என்றொரு பெயர்ப் பலகையைப் பார்த்தார். அந்தப் பெயரில் கிராமமோ, குடியிருப்போ, நிறுவனமோ அருகில் இல்லை என்பது தெரிந்தது. உடனே அங்கேயே பைக்கை நிறுத்திவிட்டு, “இந்தப் பாலத்துக்கு ஏன் இந்தப் பெயர்?” என்று எதிர்ப்பட்டவர்களைக் கேட்டார். பலரிடம் விடை இல்லை. பிறகுதான் அது ஆற்றின் பெயர் என்று தெரிந்தது.
  • பாலத்துக்கு அடியில் பார்த்தால் தண்ணீரே இல்லை, அடர்த்தியாக கோரைப் புற்கள் மட்டுமே வளர்ந்திருந்தன. பள்ளிக்கூடப் பாடப்புத்தகத்தில் பிரதாப்கட் மாவட்டத்தில் ஓடும் எட்டு ஆறுகளில் ஒன்று என்று சாகர்ணி பற்றிப் படித்தது அவருக்கு நினைவுக்கு வந்தது. அது அந்த ஆறுதானா என்பதை உறுதிப்படுத்தவே 45 வயதான அவருக்கு சில நாள்கள் பிடித்தன. ‘பர்யாவரண் சேனா’ என்ற பெயரில் பிரதாப்கட் மாவட்டத்தில் சூழலைக் காக்கும் தன்னார்வத் தொண்டு அமைப்பை நடத்திக்கொண்டிருக்கிறார் அவர்.
  • அருகிலேயே உள்ள நெவாரி, மதுப்பூர், சராய் நஹர் ராய் என்ற கிராமங்களில் சென்று ஆற்றைப் பற்றிய தகவலைத் திரட்ட முயன்றார். பெரும்பாலானவர்கள் அந்தப் பெயரையே கேள்விப்பட்டதில்லை, ஆறையும் பார்த்ததில்லை என்றே பதில் அளித்தனர். வரிஸ்டா என்ற கிராமத்தில் தேங்கிய குட்டைபோல இருந்த நீரைக் காட்டி, இதுதான் சாகர்ணி என்றார்கள். “மழைக்காலத்தின்போது சாகர்ணியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதை சிறுவயதில் பார்த்ததாக நினைவு” என்ற கோயில் பூசாரி, அது எந்த ஆண்டு, எந்த இடம் என்று தெரியவில்லை என்று கூறிவிட்டார். இருபதாண்டுகளுக்கும் மேல் அந்த ஆறு ஓடாததால் எவருக்கும் அங்கு ஆறு இருந்தது என்ற நினைவுகூட மங்கிவிட்டது.

மாவட்ட ஆட்சியர் அக்கறை

  • சுற்றுச்சூழல் பிரச்சினை குறித்த மாதாந்திரக் கூட்டத்தின்போது, சாகர்ணி ஆறு எங்கிருந்து எங்கே ஓடியது, எப்படி மறைந்தது என்று தகவல் திரட்ட முடியுமா என்று பிரதாப்கட் மாவட்ட ஆட்சியர் சஞ்சீவ் ரஞ்சனிடம் கேட்டது அவர்களுடைய சங்கம். அவரும் அந்த ஆறு மாவட்டத்தில் ஓடியதை வரைபடங்களிலிருந்தும் ஆவணங்களிலிருந்தும் உறுதிப்படுத்திக்கொண்டார். அவரும் மாவட்டத்தின் முன்னாள் அதிகாரி சேகராவும் 2023 அக்டோபரில் சந்தித்து, சாகர்ணிக்கு எப்படிப் புத்துயிர் ஊட்டுவது என்று தீவிரமாக ஆலோசனை செய்தனர்.
  • 25 முதல் 30 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் மண் மேடிட்டும் கோரைகள் வளர்ந்தும் விவசாய வேலைக்காகவும் இதர பயன்பாட்டுக்காகவும் மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டும் தடயமே இல்லாமல் ஆறு மறைந்துவிட்டது பெரிய சவாலாக இருந்தது. ஆற்றின் நீளத்தில் 80%க்கும் மேல் அடையாளம் இல்லாமல் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. சுற்றுச்சூழல் நோக்கிலும் பண்பாட்டு அடிப்படையிலும் ஆற்றை மீட்பது அவசியம் என்று கருதிய அதிகாரிகள், மக்கள் அமைப்புகளுடன் இது தொடர்பாக ஆலோசனை கலந்தனர்.
  • ஆற்றை மீட்க வேண்டும் என்றால் ஆற்றையே மறைத்துக்கொண்டிருக்கும் மண் வெட்டி எடுக்கப்பட வேண்டும், செடி-கொடிகள் அகற்றப்பட வேண்டும், வீடுகள் விளைநிலங்கள் மீட்கப்பட வேண்டும் என்பது புரிந்தது. அதற்கு முதலில் அதிக நிதி, ஆள்பலம் தேவைப்பட்டது. மாவட்ட பாசன, தண்ணீர் வள, வேளாண் துறைகளிடம் போதிய நிதி இல்லை. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட நிதியை இதற்குப் பயன்படுத்தினால் என்ன என்று அதிகாரிகள் முடிவுசெய்தனர். அதன்படி, இயற்கை வளங்களை நிர்வகிக்கும் திட்டத்தின் கீழ் ரூ.1.41 கோடியைத்தான் இதற்கு ஒதுக்கினர்.
  • ஆறு ஓடிய தடத்தில் இருந்த 20 கிராம பிரதான்களையும் (ஊராட்சித் தலைவர்கள்) அழைத்து ஆற்றைப் புதுப்பிக்க வேண்டிய அவசியத்தை எடுத்துச்சொல்லி, திட்டத்தையும் விளக்கி, ஒத்துழைப்பை நாடினர். கிராம மக்கள் ஆக்கிரமிப்புகளைவிட்டு வெளியேறுவதிலிருந்து, ஆற்றைத் தோண்டும் வேலையைச் செய்வதிலிருந்து, அனைத்திலும் ஒத்துழைக்க வேண்டும் என்பது கூறப்பட்டது. பிரதான்களும் மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டனர்.
  • ஆறு வறண்டுவிட்டதால் நிலத்தடி நீர் வற்றிவிட்டதுடன், மழைக்காலத்தில் மழை நீர் வடிய இடமில்லாமல் கிராமங்களை வெள்ளக்காடாக்குவதுடன் நிலங்களிலும் பாய்ந்து சேதப்படுத்துவதை அவர்கள் நேரிலேயே பார்த்துவருகின்றனர்.

வேலைவாய்ப்புத் திட்டம்

  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கான சட்டம் 2005இல் இயற்றப்பட்டது. அதன்படி கிராமங்களில் வேலை கிடைக்காத ஏழைகள் அரசை அணுகி வேலை தருமாறு கோரினால், திட்டப்படி வேலையும் கொடுத்து ஊதியமும் கொடுக்க வேண்டும். ஓராண்டில் அதிகபட்சம் நூறு நாள்களுக்கு இதில் வேலை பெறலாம். இந்தத் திட்டத்துக்கு ஏழைகளிடம் வரவேற்பு இருந்தாலும் நில உடைமையாளர்கள் உள்பட பலரிடமிருந்தும் எதிர்ப்புகளும் விமர்சனங்களும்தான் அதிகமாக இருந்தன.
  • இந்தத் திட்டப்படி மேற்கொள்ளப்படும் வேலைகள் திருத்தமாகவும் முழுமையாகவும் அமைவதில்லை, வேலை செய்கிறவர்கள் சில மணி நேரம் மட்டுமே வேலை செய்துவிட்டு ஓய்வெடுக்கப்போகிறார்கள், இதை மேற்பார்வை செய்ய வேண்டியவர்கள் அவர்களுக்கு உடந்தையாக இருக்கிறார்கள், விவசாய வேலைகளுக்கு இதனால் விவசாயத் தொழிலாளர்கள் கிடைப்பதில்லை, சிறிய விவசாயிகளுக்கு விவசாய வேலைகளுக்கான கூலிச் செலவு அதிகமாகிவிடுகிறது என்று பல கோணங்களில் இதைக் குறை சொல்கிறார்கள். “ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பல தோல்விகளில் இன்றளவும் நேரடியான சாட்சியாக இருப்பது இந்த வேலைவாய்ப்பு உறுதி திட்டம்” என்று குஜராத் முதல்வராக இருந்தபோது நரேந்திர மோடியே இதைச் சாடியிருக்கிறார்.
  • பிரதாப்கட் மாவட்டத்திலும் இந்த வேலைவாய்ப்பு உறுதி திட்டம் ஏனோ தானோவென்றுதான் நடந்தது. கிராமத் தலைவர்கள் திட்டங்களை சரியாக மேற்பார்வை செய்வதில்லை, வேலையைத் தொடர்ச்சியாகவும் முழுமையாகவும் யாரும் முடிப்பதில்லை என்று கிராந்திகாரியே பல முறை வருத்தப்பட்டிருக்கிறார்.
  • “மிகப் பெரிய திட்டமான சாகர்ணி புதுப்பிப்புப் பணியை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் எடுத்துக்கொண்டதே பிற மாவட்டங்களுக்கும் மாநிலங்களுக்கும் நல்ல வழிகாட்டியாக இருக்கக்கூடிய செயல்” என்று நெவாரி கிராமத்தைச் சேர்ந்த சுய உதவிக்குழுத் தலைவர் சரிதா பாண்டே மகிழ்கிறார்.

பண்பாட்டு முக்கியத்துவம்

  • இந்தத் திட்டத்தில் உழைத்த 30,000 பேரில் அறுபது வயது நிரம்பிய சிவகுமாரியும் ஒருவர். “இந்த ஆறைப் பராமரிக்க வேண்டும் என்ற அக்கறையே இல்லாமல் இத்தனை ஆண்டுகளாக அலட்சியப்படுத்திவிட்டார்கள், இங்கே ஆறு ஓடியது என்பதே எனக்கு மறந்தேபோய்விட்டது. இப்போது பாருங்கள் இந்த ஆறு பழையபடி ஆழமாகவும் அகலமாகவும் நீர் நிரம்பி சுழித்து ஓடும் அழகை; இந்த ஆற்றங்கரையை சீர்படுத்தும் வேலையைத் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையில் செய்தேன். இதை ஓடை என்று இனி யாரும் சொல்ல முடியாது” என்று பெருமிதம் பொங்க சுட்டிக்காட்டுகிறார் சிவகுமாரி.

ராமாயண காலத்தது

  • உத்தர பிரதேசத்தின் பிரதாப்கட் மாவட்டத்தில் கங்கை, கோமதி, சாய் ஆகிய நதிகளுடன் எட்டு நதிகள் ஓடுகின்றன, அதில் ஒன்று சாகர்ணி. இந்த ஆறின் பெயர் வால்மீகி எழுதிய ராமாயணத்தில் இடம்பெற்றுள்ளது. நெவாரி கிராமத்துக்கு அருகில் குயிலான் என்ற பெரிய குளத்திலிருந்து இந்த ஆறு தோன்றுகிறது. இருபது கிராமங்கள் வழியாகப் பாய்ந்து பிறகு பன்வீர் காச் என்ற கிராமத்தில் சாய் என்ற இன்னொரு ஆற்றுடன் கலந்துவிடுகிறது. 1904ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியா அரசிதழில், ‘இந்த ஆற்றின் கரைகள் மிகவும் உயரமாகவும் செங்குத்தாகவும் இருந்ததாக’ பதிவாகியிருக்கிறது.
  • இந்த ஆறு மிக நீண்டதோ, மிகவும் முக்கியமாக கருதப்பட்டதோ இல்லை. ஆனால், குயிலான் தேவி ஆலயக் கதைகளில் இந்த ஆறு பேசப்படுகிறது. நெவாரி கிராமத் தொடக்கத்திலேயே குயிலான் தேவி ஆலயம் இருக்கிறது. ஆலயத்தைச் சுற்றி ஓங்கி வளர்ந்த பழமையான அரச மரங்கள் வரிசையாக நிற்கின்றன. கிருஷ்ணரின் வளர்ப்புத் தாய் யசோதைதான், குயிலான் தேவி என்று மக்கள் நம்புகின்றனர்.
  • வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் இங்கே வழிபட கிராமப் பெண்கள் தவறுவதே இல்லை. ஆண்டுதோறும் பெரிய திருவிழாவும் (மேளா) நடைபெறுகிறது. 400 ஆண்டுகளுக்கு முன்னால் காளிகா பகத் என்ற பூசாரி ஆற்றின் அக்கரையில் வாழ்ந்தாராம். ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடினாலும் அவர் ஆற்றைக் கடந்துவந்து பூஜைகள் செய்வாராம்.
  • கடந்த ஆண்டு (2023) குயிலான் தேவி ஆலயத்தைச் சுற்றிலும் சோளம், கம்பு, கோதுமை உள்ளிட்ட பயிர்களைத்தான் நிலங்களில் சாகுபடி செய்திருந்தார்கள். ஆலயத்துக்கு அருகிலிருந்த ஆற்றின் தோற்றுவாயான குளமே மண் சேர்ந்துவிட்டதால் சிறிய குட்டையாகத்தான் சுருங்கியிருந்தது. இப்போது அது ஆழமும் பரப்பளவும் அதிகரித்த பெரிய திருக்குளமாக மாறிவிட்டது. ஆறும் அதிலிருந்து களைத்து ஓடுகிறது. இந்தக் கோவிலைச் சுற்றி ஆங்காங்கே சிறு குட்டைகளும் குளங்களும் இருந்தன. ஆனால், ஆறு தோன்றிய இடம் இதுதான் என்றே அடையாளமே இல்லாமல் மண் மேடிட்டிருந்தது.

மழைக்கால வெள்ளம்

  • ‘ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓட வழியில்லாமல் எங்களுடைய நிலங்களில் பாய்ந்துவிடும். இதனால் ஆண்டுதோறும் ஒரு போகத்தில் பயிர்ச் சேதம் கட்டாயமாகியிருந்தது’ என்று கோவிலுக்குப் பக்கத்திலேயே வீடும் நிலமும் உள்ள ரோஷன்லால் படேல் நினைவுகூர்கிறார்.
  • இந்த வெள்ளச் சேதம் காரணமாகத்தான், ஆற்றுக்குப் புத்துயிர் தரும் திட்டத்துக்கே பலரும் சம்மதித்தனர். ஆற்றுக்காக நிலங்களை அரசு கையகப்படுத்த வந்தபோது யாரும் மாற்று நிலம் கொடுக்குமாறு அரசிடம் கேட்கவில்லை. ஆறு பாய்ந்த இடத்தை நாம்தான் ஆக்கிரமித்திருந்தோம், அதனால் மாற்று நிலம் வேண்டாம் என்று முடிவுசெய்துவிட்டனர்.

முன்னோடித் திட்டம்

  • உத்தர பிரதேசத்தின் ஃபதேபூர் மாவட்டத்திலும் சசூர் – கடேரி என்ற இரு சிற்றாறுகளுக்கு மாவட்ட ஆட்சியர் காஞ்சன் வர்மா 2013இல் புத்துயிர் ஊட்டியிருந்தார். அந்த முன்மாதிரிதான் இப்போது சேகராவுக்கும் ரஞ்சனுக்கும் ஊக்கம் அளித்தது. ஃபதேபூரிலும் உள்ளூர் வேலைவாய்ப்பு திட்டத்துடன் ஆறுகள் புதுப்பிப்பு திட்டம் இணைக்கப்பட்டது. சாகர்ணி ஆற்றில் நீர் நிரம்பி ஓடுவதால் அனைத்து கிராமங்களிலும் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துவிட்டதை மாவட்ட தண்ணீர் வளத் துறை அதிகாரியும் வேளாண்மைத் துறை அதிகாரியும் மகிழ்ச்சியோடு சுட்டிக்காட்டுகின்றனர்.
  • ‘பிரதாப்கட் மாவட்டத்தில் 80% விவசாயிகள் ஆழ்துளைக் கிணறுகள் மூலம்தான் நிலத்தடி நீரை வெளியே எடுத்து விவசாயம் செய்கின்றனர். இப்போது நிலத்தடி நீர்மட்டம் உயர்வது அவர்கள் அனைவருக்குமே பயன் அளிக்கும்’ என்று வேளாண் துறை துணை இயக்குநர் வினோத்குமார் யாதவ் சுட்டிக்காட்டுகிறார். “இந்த மாவட்டத்தில் பல ஆறுகள் ஓடினாலும் இங்கே அணையோ நீர்த்தேக்கமோ இல்லாமல் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுவருகிறது. பக்கத்து மாவட்டங்களிடம் கெஞ்சித்தான் தேவைக்கு அதிக நீரைப் பெற்றுவருகிறோம். இனி அந்தக் கவலை தீரும்” என்கிறார் சேகரா. இந்தத் திட்டத்தின் முதல் நோக்கம் தண்ணீர் வளத்தில் தன்னிறைவு பெறுவது, இரண்டாவது மழைக்கால வெள்ளத்திலிருந்து கிராமங்களையும் விளை நிலங்களையும் காப்பது, இரண்டும் இப்போது நிறைவேறுகிறது என்றார் சேகரா.
  • சசூர் – கடேரி ஆறுகளுக்குப் புத்துயிர் ஊட்டிய 2013ஆம் ஆண்டு சாதனை உத்தர பிரதேசத்திலேயே வேறு மாவட்டங்களுக்கு மட்டுமல்ல, பிஹார், ஜார்க்கண்ட் மாநிலங்களிலும் இதேபோன்ற திட்டங்களை மேற்கொள்ளக் காரணமாக அமைந்துவிட்டது. ஓடி, மந்தாகினி, சோட், தாம்சா ஆறுகள் அப்படித்தான் புத்துயிர் பெற்றன. சாகர்ணி ஆற்றுக்கு புத்துயிர் ஊட்டுவது வெற்றி பெற்றுவிட்டதால் லோனி ஆற்றையும் தம்தமா ஏரியையும் அடுத்து புத்துயிர் பெற திட்டமிட்டுள்ளனர் மாவட்ட ஆட்சியரும் கிராந்திகாரியும்.

ரோஷன்லால் பெருமிதம்

  • “என் ஆயுளில் முதல்முறையாக இந்த ஆண்டுதான் மழைக்கால வெள்ளம் என் வயல்களில் பாயாமல் வடிந்தது” என்று தனது நண்பரும் நீண்ட கால வாடிக்கையாளருமான அருண் யாதவிடம் பெருமையாகக் கூறுகிறார் மாதோபூர் கடைவீதியில் வெற்றிலை பாக்குக் கடை வைத்திருக்கும் ரோஷன்லால். அருகில் இருக்கும் ஹரீஷ் சிங் என்பவர், “சாகர்ணி ஆறா – எங்கே இருக்கிறது?” என்று அவர்களைப் பார்த்துக் கேட்கிறார். இருவரும் புத்துயிர் பெற்ற ஆற்றைப் பற்றிக் கூறியதும், ‘ஓ அதுவா, நான்கூட ட்விட்டரில் படித்தேன்’ என்று மகிழ்ச்சி பொங்கக் கூறினார் ஹரீஷ் சிங்.
  • அஜய் கிராந்திகாரி இப்போது சாலையில் நடக்கும்போது இதுவரை அறிமுகமே இல்லாதவர்கள்கூட அருகில் வந்து, ‘நீங்கள்தான் சாகர்ணி ஆறு திட்டத்துக்கு உழைத்தவராமே, பாராட்டுகள்’ என்று கையைப் பிடித்துக் குலுக்குகிறார்கள். சாகர்ணி ஆறு மீண்டும் மறைந்துவிடாமலிருக்க ஆற்றின் இரு கரைகளிலும் வழிநெடுக மரக் கன்றுகளை நடுகின்றனர். சில இடங்களில் தடுப்பணைகள் கட்டிவிட்டனர். மீன் குஞ்சுகளையும் வளர்க்கின்றனர். ஆண்டுதோறும் ஆற்றில் சேரும் சேற்றையும் சகதியையும் அகற்றுவது என்று அனைத்து கிராமங்களிலும் தீர்மானித்துள்ளனர்.

நன்றி: அருஞ்சொல் (29 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories