- குற்றம் செய்பவர்களை சீனாவுக்கு நாடு கடத்தலாம்; விசாரிக்கலாம்; தண்டனை வழங்கலாம் என்ற சீனாவின் சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து ஹாங்காங் மக்கள் 5 லட்சம் பேர் திரண்டு நின்று நடத்தும் போராட்டம் 4 மாதங்களாகத் தொடர்கிறது. நாடாளுமன்ற முற்றுகையில் தொடங்கி, ரயில் நிலையம், விமான நிலையம், பல்கலைக்கழகம், தூதரகம் ஆகியவற்றின் முன் கருப்பு-வெள்ளை முகமூடி, மஞ்சள் நிற ஆடை, குடை எனப் பல்வேறு வகையான போராட்டங்களை வன்முறையின்றி விரிவுபடுத்தி ஹாங்காங் மக்கள் நடத்தினர்.
மக்களின் எதிர்ப்பு
- மக்களின் எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல் வேறு வழியின்றி மசோதாவைத் திரும்பப் பெறுவதாக ஹாங்காங் அரசு அண்மையில் அறிவித்தது. ஆனாலும், மக்களின் எழுச்சி தொடர்கிறது. கருப்பு சட்டையுடன் முகமூடி அணிந்து அமெரிக்க தூதரகம் முன் குவிந்த ஹாங்காங் மக்கள், ஜனநாயகம், மனித உரிமைகளை மீட்டுத் தருமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்குக் கோரிக்கை வைத்துள்ளனர். இங்கிலாந்து தூதரகம் முன்பு குவிந்து உரிமைகளைப் பெற்றுத்தர வேண்டும் என அந்த நாட்டுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஹாங்காங்கில் மனித உரிமைகளை நசுக்கும் அனைத்து வழிகளையும் சீன ஏகாதிபத்தியம் கட்டவிழ்த்துவிட முயன்றது. நெருப்போடு விளையாடாதீர்கள்! ராணுவம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்றெல்லாம் சீனாவின் சர்வாதிகார நிர்வாகம் எச்சரித்தது; ஆனால், துப்பாக்கிகளும், பீரங்கிகளும் செயலிழந்த வரலாற்றை உலகுக்கு ஹாங்காங் மக்கள் உணர்த்தியுள்ளனர்.
விடுதலை
- தனிமனித சர்வாதிகாரத்திலிருந்தோ, இன்னொரு நாட்டின் அடக்குமுறையிலிருந்தோதான் உலகிலுள்ள பெரும்பாலான நாடுகள் விடுதலை பெற்றன என்பதுதான் கடந்தகால வரலாறு.
- 1789-ஆம் ஆண்டு பிரெஞ்சு புரட்சி முதலில் அரசியல் புரட்சியாக தோன்றி, பிறகு சமுதாயப் புரட்சி, சமயப் புரட்சி என்று உருவெடுத்து, ஐரோப்பாவையும், உலகையும் சற்று மாற்றி திருத்தி அமைத்தது.
- 1919-ஆம் ஆண்டு இத்தாலி நாட்டில் முசோலினி அமைத்த பாசிஸ்ட் அரசாங்கம் எப்படி மக்கள் எழுச்சியால் மரணப் படுகுழியில் புதைக்கப்பட்டது என்பது வரலாறு. ஜெர்மனியில் 1943-ஆம் ஆண்டு சர்வாதிகாரி ஹிட்லர் ஆட்சியில் கட்டவிழ்த்து விடப்பட்ட கொடுமைகள், சித்திரவதைகளை மக்கள் எழுச்சி எதிர்கொண்டது வீரமிகு வரலாறு.
உகாண்டா
- உகாண்டா மக்களுக்கு எதிராக சர்வாதிகாரி இடி அமீன் நடத்திய மிருக வெறித் தாக்குதல்களையும், நரமாமிசம் தின்ற அவலத்தையும் எதிர்கொண்டு எழுச்சி கொண்டனர் மக்கள். இறுதியில் நாடுகடத்தப்பட்ட இடிஅமீனின் இறுதிச் சடங்கைக்கூட உகாண்டாவில் நடத்த மக்கள் அனுமதிக்கவில்லை என்பது உலகம் அறிந்த வரலாறு.
1962-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க நிறவெறி அரசு நெல்சன் மண்டேலாவைக் கைது செய்து சிறையில் அடைத்தது. நிறவெறி அரசு அவரை சிறையில் 27 ஆண்டுகள் சித்திரவதைக்கு உள்ளாக்கியது. ஆனால், இறுதியில் மக்களின் மகத்தான எழுச்சி அவருக்கு மகுடம் சூட்டி மகிழ்ந்தது.
- நீக்ரோ அடிமைகளின் விடுதலை சாசனத்தை நிரந்தரமாக்கிட, அவர்களுக்கு வாக்குரிமை வழங்கிட, அமெரிக்க ஐக்கியக் குடியரசின் செனட்டைக் கூட்டினார் அதிபர் ஆபிரஹாம் லிங்கன். 1865-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற வாக்கெடுப்பில் அடிமை ஒழிப்புக்கு ஆதரவாக 119 வாக்குகளும் எதிராக 56 வாக்குகளும் பதிவாகின. நீக்ரோ அடிமைகள் சுதந்திர வானில் சிறகடித்துப் பறந்தனர். அமெரிக்க வெள்ளையினம் வெகுண்டெழுந்தது; ஆனால் நீக்ரோ மக்களின் எழுச்சி காட்டுத் தீயாக மாறியதாலும் அடிமை விலங்கொடித்ததில் அஞ்சாத சிங்கமாக ஆபிரஹாம் லிங்கன் திகழ்ந்ததாலும் அமெரிக்க சரித்திரம் சாதனை படைத்தது; நியாயத்தின் எழுச்சி வென்றது.
- அமெரிக்க அதிபர் ஆபிரஹாம் லிங்கனின் படுகொலைக்குப் பின்னர் கருப்பின மக்கள் முழுமையான விடுதலை பெற முடியாத நிலையில், லட்சக்கணக்கான கருப்பின மக்கள்திரள் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ஆபிரஹாம் லிங்கன் நினைவகத்தின் முன் 1961-ஆம் ஆண்டு திரண்டனர். மக்களின் நம்பிக்கை நாயகன் மார்ட்டின் லூதர் கிங் உணர்ச்சிகரமான பேருரையின் வெப்பக் காற்று குளிரில் நடுநடுங்கிக் கொண்டிருந்த கருப்பின மக்களை எழுச்சியின் உச்சத்துக்கே அழைத்துச் சென்று வெற்றி பெற்றது என்பது வரலாறு.
மக்களின் போராட்டம்
- சிறைச்சாலைகளோ, சித்திரவதை களோ, துப்பாக்கிக் குண்டுகளோ மக்களின் போராட்டத்தைத் தடுத்து விடவோ ஜனநாயக இயக்கங்களை நசுக்கிவிடவோ முடியாது என துருக்கி மக்களின் மதிப்புக்குரிய மாமனிதர்-மிகச் சிறந்த புரட்சியாளர் முஸ்தபா சூபி சூளுரைத்து நின்றதும், மக்கள் அவர் பின்னால் அணிவகுத்து நின்றதும் வரலாறு.
- அரண்மணை அதிகாரிகள் சாதாரண ஒரு கடிதத்தை வைத்துக் கொண்டு அரசியல் எதிரிகளையும் சமுதாயச் சீர்திருத்தம் காண முன் நின்றவர்களையும் சிறையில் அடைத்துக் கொடுமைப்படுத்தி, சித்திரவதை செய்து கொன்று குவித்தனர். மக்கள் மீது அநாகரிக கொடுங்கோன்மை கட்டவிழ்த்து விடப்பட்டது.
- அரண்மனை எதேச்சதிகாரமும் நிலப் பிரபுத்துவ அத்துமீறல்களும் கோர உருவமாக மாறி மக்களை சிறைக்குள் தள்ளிப் பந்தாடியது. கொதித்துக் குமுறி எழுந்த மக்கள் பாஸ்டில் சிறையை சில மணித்துளிகளில் தூள்தூளாக்கி அப்பாவி மக்களை விடுவித்தது பிரெஞ்சு புரட்சியின் வரலாறு.
- 360 ஆண்டுகள் டச்சுக்காரர்களிடமும் மூன்றரை ஆண்டுகள் ஜப்பானியர்களிடமும் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தோனேஷியா, 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17-ஆம் தேதி சுதந்திர நாடாக மலர்ந்திட வித்திட்டது மக்களின் எழுச்சி.
ரஷ்யப் புரட்சி
- ஜார் மன்னர்களுக்கு எதிராக ரஷியப் புரட்சியும், கொடுங்கோன்மைக்கு எதிராக சீனப் புரட்சியும் வரலாற்றில் மறந்துவிடக் கூடியவைகளா?
கம்யூனிசத்தின் தாய் என்று போற்றிப் புகழப்படும் ரஷியப் புரட்சிக்கு அடித்தளமிட்டவர்கள் மக்கள்தான் என்பதை மறுக்க முடியுமா? புரட்சியாளர் லெனின், கம்யூனிச கொள்கையின் தந்தை காரல் மார்க்ஸ், மாக்சிம் கார்கி போன்றோர் புரட்சியில் வெற்றி கண்டதற்கு மக்களின் மகத்தான எழுச்சிதான் என்பதை வரலாறு பதிவு செய்துள்ளது.
- ஒருசில சர்வாதிகாரிகளின் ஆணவத்தாலும் அகம்பாவத்தாலும் 90 சதவீத நாடுகள் அடிமைப்பட்டுக் கிடந்து பின்னர் மக்கள் சக்தி ஒன்று திரண்டு, அவர்கள் விரட்டி அடிக்கப்பட்டனர் என்பதுதான் வரலாற்றுப் பக்கங்கள் உணர்த்தும் பாடம்; படிப்பினை. வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற நிலை எல்லா நாடுகளிலும், அரசியல் இயக்கங்களிலும் பழங்கதையாய் ஆகிவிட்டன என்பதுதான் நிதர்சனம்.
- எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள மக்கள் தயாராக இல்லை என்பதை அரசியல் கட்சிகளும், சமூக இயக்கங்களும் உணர வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டோம் என்ற அகந்தையில் மக்களை அலட்சியப்படுத்தும் போக்கு இனிமேல் உலகின் எந்த மூலையிலும் எடுபடாது.
அடிமை;
- ஆண்டான் என்ற மனநிலையில் எந்தவொரு நாடோ, இனமோ, கட்சியோ, இயக்கமோ, அரசோ செயல்படலாம் என நினைத்தால் அது பகல் கனவாகத்தான் முடியும். ஹாங்காங் மக்கள் கொதித்தெழ சீனாவின் சர்வாதிகாரப் போக்கும் ஆணவமுமே காரணம் என்பதை மக்களின் எழுச்சி நிரூபித்துக் கொண்டிருக்கிறது.
- ஹாங்காங்கின் தலைமை அதிகாரம் படைத்த கேரிலாம், சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்துள்ளார். 1997-ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டிடமிருந்து சீனாவிடம் ஹாங்காங் ஒப்படைக்கப்பட்டது; ஹாங்காங்கை அடிமைப்படுத்த கேரிலாமை சீனா அனுமதித்தது எந்த வகையில் நியாயம்? அடகு பொருளாக ஹாங்காங் மக்களை நடத்துவது மனித உரிமைக்கு எதிரானது அல்லவா? ஜனநாயக தத்துவத்துக்கு முரண் அல்லவா? உலக அரங்கில் அவமானப்பட்டு நிற்பது வல்லரசுக்கு (சீனா) அழகா, நெறியா?
ஹாங்காங் மக்களின் கோரிக்கை
- எனவே, சீனா கௌரவம் பார்க்காமல் ஹாங்காங் மக்களின் கோரிக்கையை ஏற்று அந்த நாட்டை அவர்களிடமே ஒப்படைப்பதன் மூலம் உலக நாடுகளின் பாராட்டைப் பெற முடியும். தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்தான் என்பதுபோல சீனா அடம்பிடித்தால் 1989-ஆம் ஆண்டு செப்டம்பர் 4-ஆம் தேதி சீனாவின் தியானன்மென் சதுக்கத்தில் அந்த நாட்டு ராணுவம் நடத்திய பீரங்கித் தாக்குதல்களால் பலியான ஆயிரக்கணக்கான அப்பாவி மாணவர்களின் ரத்த சகதியின் வாடை இன்று வரை தொடர்வது, அந்த நாட்டின் வரலாற்றில் துடைத்தெறிய முடியாத கறை. அது போன்றதொரு அவலம் ஹாங்காங்கில் மீண்டும் அரங்கேறிட சீனா விரும்புகிறதா?
- சீன அதிபர் ஷி ஜின்பிங் கையில் முடிவு உள்ளது. பிரதமர் மோடியுடன் ஜனநாயகத்தின் ஆலயமாக விளங்கும் இந்தியாவின் தென் திசைக்கு (மாமல்லபுரம்)
சீன அதிபர் விரைவில் வர உள்ள நிலையில் எப்படி இந்தியா மகிழ்ச்சி அடையுமோ, அதே மகிழ்ச்சியை ஹாங்காங் மக்களுக்கும் அவர் வழங்குவார் என எதிர்பார்க்கலாமா?
நன்றி: தினமணி (24-09-2019)