- பொறியியல் படித்த ஒரு சமூகச் செயற்பாட்டாளரும் மீன்பிடிப்பதில் நீண்ட கால அனுபவம் உள்ள ஒரு பாரம்பரிய மீனவரும் சந்தித்தால் என்ன நடக்கும்? காலநிலை மாற்றம் குறித்த சில புரிதல்கள் செயற்பாட்டாளருக்கு இருந்தன. 40 ஆண்டுகளுக்கு முன்பு தான் புழங்கிய கடல், தற்போது மாறிவிட்டது என்கிற உணர்வு மீனவருக்கு இருந்தது. இந்த இரண்டுவிதமான சிந்தனைகளின் ஒருங்கிணைப்பு ஓர் ஆய்வுக்கு இட்டுச்சென்றது.
- சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் நித்தியானந்த் ஜெயராமனும் ஊரூர் ஆல்காட் குப்பத்தைச் சேர்ந்த பாரம்பரிய மீனவர் பாளையமும் கடந்த 5 ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வின் பின்னணி இதுதான். அந்த ஆய்வு அறிக்கை, சென்னை பெசன்ட் நகரில் அண்மையில் வெளியிடப்பட்டது. மீனவர்களின் பார்வையிலிருந்து கடல் சார்ந்த அறிவியலை பொதுச்சமூகம் கற்றுக் கொள்வதற்கான அரிய வாய்ப்பாக இந்த ஆய்வு அமைந்துள்ளது.
மீனவர் மொழி
- வங்கக்கடலின் தென்சென்னை சார்ந்த பகுதியில், 2018லிருந்து 2023 வரை 1,179 நாள்களுக்கு இந்த ஆய்வு நடைபெற்றது. காற்றின் திசை, கடல் நீரோட்டங்கள், அமைதி, கொந்தளிப்பு உள்ளிட்ட கடலின் நிலை குறித்த தகவல்கள் தினமும் காலை 5.30லிருந்து 6.30 வரை கவனிக்கப்பட்டன.
- இந்த ஆய்வைப் புரிந்துகொள்வதற்குக் கடலை அறிந்துகொள்ள மீனவர்கள் பயன்படுத்தும் மொழியை அறிந்து கொள்வது முதலில் அவசியம். காரணம், சென்னை மீனவர்களது கடல் சார்ந்த மொழி வேறாகவும் கன்னியாகுமரி மீனவரின் கடல் சார்ந்த மொழி வேறாகவும் இருக்கும்.
- கட்டுமர மீன்பிடிப்பு என்பது காற்று, திசை, வானம், உள்ளூர்க் கடலில் மீன் கிடைக்கும் இடங்கள், மீன்களின் தன்மை போன்றவற்றை உள்வாங்க வேண்டிய ஒரு செயல்பாடு. கடல், அதன் படுகையை ஒட்டிச் சேறு, பாரு (பாறை), தரை (மணல்) என வகைப்படுத்தப்படுகிறது. சென்னை மீனவர்களுக்கு இரண்டு பருவங்கள் உள்ளன. தெற்கிலிருந்து காற்று வீசுவது, அங்கிருந்து நீரோட்டம் வருவது ‘கச்சான் நாள்’ எனவும்; வடக்கிலிருந்து காற்று வீசுவது, அங்கிருந்து நீரோட்டம் வருவது ‘வாடை நாள்’ எனவும் அழைக்கப்படுகிறது.
- காற்றின் திசை, வேகம்-கொந்தளிப்பு-அது இல்லாமல் இருப்பது-ஈரத்தன்மை-வெப்பம் உள்ளிட்ட இயல்புகள் ஆகியவற்றை வைத்துக் காற்றை ஒன்பது வகைகளாக மீனவர்கள் வகைப்படுத்துகின்றனர். அவை ஈரான், கச்சான் ஈரான், நீண்ட கச்சான், கச்சான் கோடை முதலியவை. வடக்கிலிருந்து வட மேற்கு நோக்கி வீசும் ‘குன் வாடை’ என்பது புயல் காற்று. புயல் கரையைக் கடந்த பின்னர் கடலில் வீசும் மென்மையான காற்றைத் தென்னல் என்கின்றனர்.
கடலின் இயல்பு
- கடல் நீரோட்டம் நான்கு வகைப்படும். தெற்கிலிருந்து வடக்காகச் செல்லும் தெற்கு நீரோட்டம் கச்சான் பருவத்தில் காணக்கிடைக்கும். வடக்கிலிருந்து தெற்காகச் செல்லும் வடக்கு நீரோட்டம் வாடைக் காற்றுக் காலத்தில் இருக்கும்.
- வழக்கமாகக் கச்சான் பருவம் ஜனவரி18இல் தொடங்கி செப்டம்பர் 30இல் முடியும். அதை ஒட்டித் தொடங்கும் வாடைப் பருவம், ஜனவரி மூன்றாம் வாரத்தில் மெல்லப் பின்வாங்கி விடும். 30 ஆண்டுகளுக்கு முன்புவரை, கடல் சூழல் பெரிதாக மாறியிராத காலத்தில் பருவ மாற்றங்கள் தொடங்குவது, முடிவது, கடலின் தன்மை போன்றவை பெருமளவு சீரான வகையிலேயே இருந்தன.
- கச்சான் பருவத்தில் கடல் பொதுவாக அமைதியாக இருக்கும். இடையே சில நாள்கள் மிதமான அல்லது அதிகமான கொந்தளிப்புடன் இருக்கும். சித்திரை, வைகாசி மாதங்களில் கோடைப்புயல் வீசும். கொந்தளிப்பு அதிகமாக உள்ள அந்நாள்களில் மீன்கள் அதிக அளவில் கிடைக்கும்.
- ஆடி மூன்றாம் வாரத்தில் மேற்கு மலைத் தொடரில் உற்பத்தி ஆகும் காவிரி உள்ளிட்ட ஆறுகளில் தோன்றும் பருவமழை வெள்ளம், மண் சத்துகள் நிரம்பிய நீரை வங்கக் கடலில் சேர்க்கும். சில நீரோட்டங்களும் சேர்ந்து குளிர்நீரைக் கரையை நோக்கித் தள்ளும். இவை எல்லாம் இணைந்து சத்துகள் நிறைந்து செம்பழுப்பு நிறத்தில் உள்ள நீரைத் தெற்கிலிருந்து வடக்காகத் தள்ளும். இது ’வண்டத்தண்ணி’ எனப்படுகிறது. இது மீனவர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு நிகழ்வு. இதில் உள்ள சத்துகளையும் சிறு உயிரினங்களையும் தேடி எல்லா வகை மீன்களும் வரும். அப்போது மீனவர்களுக்குப் பரிசு மழைபோல மீன்கள் பிடிபடும்.
எல்லாம் மாறிவிட்டது
- தற்போது கடல் பெரும் மாற்றத்துக்கு உள்ளாகியிருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. மூன்று கச்சான் பருவங்கள், நான்கு வாடைக் காற்றுப் பருவங்கள் ஆகியவை குறித்த தகவல்கள் திரட்டப்பட்டன. 2019லிருந்து கச்சான் பருவம் வழக்கத்தை விடப் பிந்தித் தொடங்கி, வழக்கத்தைவிட முன்பே முடிந்திருக்கிறது. இந்தப் பருவம், 33 நாள்கள் குறைந்ததாகி விட்டது.
- வாடைப் பருவம் தாமதமாகத் தொடங்கி, தாமதமாக முடிகிறது. இதன் 70 விழுக்காடு நாள்கள் கடல் கொந்தளிப்பாக இருக்கும் நிலை மாறி, 45 விழுக்காடு நாள்கள் மட்டுமே கொந்தளிப்பாக உள்ளன. மீன்பிடித் திருவிழா போலத் திகழும் வண்டத்தண்ணி நிகழ்வு, கடைசியாக 2019 ஆகஸ்ட்டில் காணக் கிடைத்தது. அதன் பிறகு அமையவில்லை.
பாளையம்
- கச்சான் பருவத்திலிருந்து வாடைப் பருவத்துக்கு மாறும் புரட்டாசியில் கடல் அமைதியாக, தெளிவாக நீல நிறத்தில் இருக்கும். இரவு நேரத்தில் வலைவீசி மீன் பிடிக்க ஏதுவாக இருக்கும். இந்த ஆய்வு நடைபெற்ற ஆண்டுகள் முழுவதுமே இவ்வகை மீன்பிடிப்பு மோசமான ஒன்றாகவே இருந்தது.
- மீனவர்களது தொழில் உத்தரவாதமற்றதாகி உள்ளதுடன், அவர்கள் தாயாக, கடவுளாகக் கருதும் கடலின் இயல்பு இப்படி மாறிருப்பது தாங்கிக்கொள்ள இயலாத வேதனை தரக்கூடியதாக உள்ளது.
கடலைச் சீரழிக்கும் பெருநகரம்
- ‘ஒரு மீனவர் பார்வையில் காலநிலை மாற்றம்’ என்னும் பெயரிலான இந்த ஆய்வறிக்கை வெளியீட்டு நிகழ்வு, மீனவச் சமூகத்தின் கடல்சார் ஆளுமைத்தன்மையைப் பெரிதும் மதிப்பதாக இருந்தது. ஆய்வாளர்களில் ஒருவரான மூத்த மீனவர் பாளையம், ஆய்வு குறித்து விளக்கினார்.
- அதில் சில செய்திகள் படிப்பினையாகக் கொள்ளத்தகுந்தவை. “நாங்கள் அன்றைய வானிலையையும் மீன் இருப்பையும் கணிப்பதற்கு வானத்தையும் காற்றையும் கவனிக்க வேண்டியிருக்கும். கடல்நீரின் தன்மையையும் கவனிக்க வேண்டும். அதற்கு அதன் நிறத்தையும் சுவையையும் அறிந்துகொள்வது அவசியம்.
- ஆற்றுவெள்ளத்தால் அடித்து வரப்பட்ட சத்துகள், சிறுசிறு உயிரினங்கள் போன்றவை கடலில் கலந்திருக்கும். கடலில் நேரடியாக நிகழும் மாசுபாடுகளுடன், நகரங்களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளும் கடலில் கலக்கும். கடந்த சில ஆண்டுகளாகவே கடல்நீரைச் சுவைத்துப் பார்க்கையில், சாக்கடை நாற்றம் அடிக்கிறது.
- நிலத்தில் நடக்கும் செயல்பாடுகள், கடலை நேரடியாகப் பாதிக்கும் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். கடலுக்கும் நமக்குமான உறவு சுரண்டல் அணுகுமுறையாக மாறியதற்கு நிலமே ஊற்றுக்கண். தொழில்மயப்படுத்தப்பட்ட மீன்பிடிப்பு, கடல் சூழலைப் பாதிக்கும் இன்னொரு பிரச்சினை.
- இழுவைப்படகு, வளைய வலைகள் போன்றவை இதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் அளவுக்கு அதிகமாக மீன் பிடிக்கப்படுவதுடன், மீன் குஞ்சுகள், கருவுற்ற மீன்கள் போன்றவையும் சேர்த்துப் பிடிக்கப்படுகின்றன. இது கடலின் உயிர்ச்சூழலை அழிக்கிறது” என்று சுட்டிக்காட்டுகிறார் பாளையம்.
நன்றி: இந்து தமிழ் திசை (23 – 03 – 2024)