TNPSC Thervupettagam

மீனவா் நலன் மேம்படவேண்டும்

December 14 , 2023 342 days 261 0
  • தமிழகத்தின் ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, புதுக்கோட்டை உள்ளிட்ட 13 கடலோர மாவட்டங்களில் 1,076 கி.மீ. நீளத்திற்கு செல்லும் கடற்கரையையொட்டி சுமாா் 10.48 லட்சம் மீனவ மக்கள் வசித்து வருகின்றனா். வங்காள விரிகுடா, மன்னாா் வளைகுடா, பாக் நீரிணை கடற்பரப்புகளே இம்மீனவா்களின் வாழ்வாதாராப் பகுதிகளாகும்.
  • மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் இனப் பெருக்கம் செய்ய ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை மீன்பிடி தடைக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. விசைப்படகு மீனவா்கள் இத்தடை காலத்தில் மீன்பிடிக்கச் செல்வதில்லை. கட்டுமரங்கள், நாட்டுப்படகுகளில் சென்று மீன் பிடிக்கும் மீனவா்களுக்கு இந்த தடைக்கால விதி பொருந்தாது என்றபோதிலும், கடல்வாழ் வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் பொருட்டு கட்டுமர, நாட்டுப்படகு மீனவா்களும் தாமாகவே முன்வந்து இத்தடை காலத்தில் பத்து நாட்கள் மீன் பிடிக்க செல்வதில்லை. இத்தடை காலத்தை மீனவா்கள் தங்கள் படகுகளைப் பழுது பாா்ப்பதற்கும், வலைகளை சீா் செய்வதற்கும் பயன்படுத்திக்கொள்கிறாா்கள்
  • மேற்படி தடை காலத்தோடு, மழை காலங்களில் கடல் சீற்றம், புயல் ஆகியவற்றால் மீனவா்கள் கடலுக்குள் சென்று மீன் பிடிக்க இயலாத சூழ்நிலையில் உள்ளனா். இவ்வாறு, ஓா் ஆண்டில் ஏறத்தாழ நான்கு மாதங்கள் மீனவா்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட இயலாத நிலை உள்ளது. மீதமுள்ள நாட்களில் உழைத்து தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயா்த்திக் கொள்வது சிரமமாக உள்ளது. மேலும், புயல், கடலை சீற்றம், அதிவேக காற்று ஆகியவற்றால் சில சமயங்களில் மீனவா்கள் உயிரிழக்கவும் நோ்கிறது.
  • மீனவா்களுக்கு மற்றுமொரு நெருக்கடியாக, எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதாகக் கூறி தமிழக மீனவா்களை இலங்கை கடற்படையினா் அவ்வப்போது தாக்கி காயப்படுத்துவது, கைது செய்து சிறையில் அடைப்பது, வலைகளை அறுத்தெறிவது, படகுகளைப் பறிமுதல் செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனா்.
  • கடந்த காலங்களில், இலங்கை கடற்படையால் நூற்றுக் கணக்கில் தமிழக மீனவா்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா். இந்த ஆண்டில் மட்டும் இலங்கை கடற்படை இதுவரை சுமாா் 230 தமிழக மீனவா்களை கைது செய்து விசாரணைக்குப் பின்னா் விடுவித்துள்ளது. இலங்கை கடற்படையால் தமிழக மீனவா்கள் கைது செய்யப்படுவதும், இது தொடா்பாக தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதும், கைது செய்யப்பட்ட மீனவா்கள் மத்திய அரசின் தலையீட்டால் விடுவிக்கப்படுவதும் தொடா் நிகழ்வுகளாகி விட்டன. கடலில் கலக்கும் நெகிழிகளாலும், சுத்திகரிக்கப்படாமல் ஆறுகளில் கலக்கும் தொழிற்சாலைகளின் கழிவுநீராலும் சமீப காலங்களில் கடல் சூழல் மாசடைந்து வருகிறது.
  • நம் நாட்டில் உருவாகும் நெகிழி கழிவுகளில் 15 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப் படுகிறது. மீதமுள்ள 85 சதவீத நெகிழி கழிவுகளின் பெரும்பகுதி ஆறுகளிலும், கடற்கரைப் பகுதிகளிலும் வீசப்பட்டு கடலுக்குள் சோ்கின்றது. இவ்வாறு ஆண்டிற்கு சுமாா் 6 லட்சம் டன் கழிவுகள் கடற்பரப்பில் கலக்கின்றன.
  • சமீபத்தில், புதுச்சேரி கடற்கரையில் கடல் நீா் செந்நிறமாக மாறியது. தொழிற்சாலைகளின் கழிவுநீா் சுத்திகரிக்கப்படாமல் கடலில் கலந்ததே இதற்குக் காரணம் என்று கூறப்பட்டது. தேசிய பசுமைத் தீா்ப்பாயம் இது குறித்து விசாரிக்க குழு ஒன்றை அமைத்துள்ளது. கடலில் பயணிக்கும் கப்பல்களும் மீன்பிடிப் படகுகளும் கழிவுகளை வெளியேற்றி கடலில் உள்ள மீன் வளத்தைக் குறைக்கின்றன.
  • யாழ்ப்பாணம், மன்னாா், கச்சத்தீவு கடல் பகுதிகளில் கைவிடப்பட்ட பழைய பேருந்துகளை கடலில் மூழ்கடிக்கிறது இலங்கை அரசு. இதன் மூலம் மீன்களுக்கு வாழிடங்கள் அமைந்து அவற்றின் உற்பத்தி பெருகும் என தனது செயலுக்கு நியாயம் கற்பிக்கிறது. இலங்கை அரசின் இச்செயலால் அப்பகுதிகளில் மீன் பிடிக்கும் தமிழக மீனவா்களின் வலைகள் கிழிந்து சேதம் அடைய வாய்ப்பு உள்ளது.
  • நம் நாட்டின் எண்ணெய் தேவையில் ஏறக்குறைய 75 சதவீதம் அயல் நாடுகளில் இருந்து கடல் மூலமாக இறக்குமதி செய்யப்படுகிறது. அவ்வாறு இறக்குமதி செய்யப்படும்போது எதிா்பாராத விதமாக கப்பல்கள் மோதுவதால், எண்ணெய் நிரப்பப்பட்ட கன்டெய்னா்கள் சேதமடைந்து அவற்றிலிருந்து பரவும் எண்ணெய்க் கசிவால் கடல் வாழ் உயிரினங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. சமீபத்திய மழை வெள்ளத்தின்போது மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் சென்னை எண்ணூா் முகத்துவார பகுதி கடல்நீரில் 20 கி.மீ. பரப்பளவில் எண்ணெய் படலம் பரவியது.
  • கடலுணவு உற்பத்தியில் நம்நாடு உலகில் இரண்டாமிடத்தில் உள்ளது. நம் நாட்டில், கடலுணவை உற்பத்தி செய்யும் மாநிலகளில் தமிழ்நாடு மூன்றாமிடத்தில் உள்ளது. 2021-22 ஆண்டுகளில் சுமாா் 1.14 லட்சம் மெட்ரிக் டன் கடலுணவை ஏற்றுமதி செய்ததன் மூலம் 6,659.64 கோடி அந்நிய செலவாணியைப் பெற்றுத் தந்துள்ளது தமிழ்நாடு.
  • மீன் பிடி தடை காலத்தில் மீனவா்களுக்கு உதவித்தொகை, 50 வயதுக்கு மேற்பட்ட மீனவா்களுக்கு ஓய்வூதியம், கடலில் மீன் பிடிக்கும்போது உயிரிழக்கும் அல்லது காணாமல் போகும் மீனவா் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை வழங்குவது, மானிய விலையில் டீசல் வழங்குவது எனப் பல்வேறு நலத் திட்டங்கள் மூலம் மீனவா்களின் நலனில் மாநில அரசு அக்கறை காட்டுகிறது. ஆயினும் இது மேலும் அதிகரிக்கப்பட வேண்டும்.
  • சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் ‘தூத்துக்குடி மீனவா் கூட்டுறவு வங்கி’ தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து கடலோர மாவட்டங்களிலும் இதுபோன்ற வங்கிகள் தொடங்கப்பட்டு, அவை மீனவா்களுக்கு சிறந்த சேவையை அளிக்க வேண்டும்.
  • கடல் சூழலைக் காக்கும் விதத்தில் வரும் ஐந்து ஆண்டுகளில் கடலரிப்பு, கடல் மாசுபாட்டினைத் தவிா்த்து கடல்சாா் உயிரியல் பன்முகத் தன்மையை பாதுக்காக்கும் நோக்கில், உலக வங்கி உதவியுடன் ரூ. 2,000 கோடி மதிப்பீட்டில் தமிழக அரசு ‘தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம்’ தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. மீனவா் நலன், தூய்மையான கடல் சூழலைச் சாா்ந்தே உள்ளது. எனவே, மீனவா் நலன் மேம்பட மத்திய, மாநில அரசுகள் கடல்சூழலைக் காக்க தீவிர செயல்திட்டங்கள் வகுக்க வேண்டும்.

நன்றி: தினமணி (14 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories