TNPSC Thervupettagam

மீன்களுக்குள் மறைந்திருக்கும் தமிழ்

June 6 , 2023 540 days 525 0
  • தமிழ் மொழி ஓர் அறிவார்ந்த மொழி. தன்னைச் சூழ்ந்துள்ள உயிர்களுக்கும் இயற்கைக்கும் தமிழர்கள் சூட்டியுள்ள பெயர்கள் அருமையானவை, பொருள் செறிந்தவை.
  • எடுத்துக்காட்டாக, ஆங்கிலத்தில் பாஸ்கிங் ஷார்க் (Basking Shark) என அழைக்கப்படும் சுறாவை எடுத்துக்கொள்வோம். உலகின் மிகப்பெரிய மீனான அம்மணி உழுவைக்கு (பெட்டிச்சுறா - Whale Shark) அடுத்து மிகப்பெரிய மீன் இந்த மேய்ச்சல் சுறாதான். இது எப்போதும் கடலின் மேற்பரப்பிலேயே அலைந்து திரிந்து சூரிய ஒளியில் வெயில்காய்வதாக நினைத்து ஆங்கிலத்தில் இதற்கு பாஸ்கிங் ஷார்க் எனப் பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
  • ஆனால், நமது மொழியில் அப்படிப் பெயர் சூட்டப்படவில்லை. தமிழர்களுக்குச் சூரிய ஒளியில் வெயில்காயும் பழக்கமும் கிடையாது. கடல்மட்டத்தின் மேலேயே எப்போதும் நீந்தி கடல்மேற்பரப்பில் வாய்விரித்தபடி கவுர்களை (Diatom - நுண்பாசி) மேய்ந்து இரையெடுக்கும் இந்தச் சுறாவுக்கு மேய்ச்சல் சுறா எனத் தமிழர்கள் மிகப் பொருத்தமாகப் பெயர் சூட்டியிருக்கிறார்கள். அந்த வகையில் பார்த்தால் ஆங்கிலத்தைவிடத் தமிழே அறிவியல்பூர்வ மொழி.
  • அடுத்தபடியாகப் பெருஞ்சுறா எனப்படும் வெள்ளைச்சுறா (White shark). பெருஞ்சுறாவின் மேற்பகுதி பழுப்பு கலந்த கரும்பலகை நிறத்தில் இருக்கும். சில சுறாக்கள் ஈயச்சாம்பல் நிறத்தில் இருக்கும். பெருஞ்சுறாவின் வயிற்றுப்பகுதி மட்டுமே அழுக்கு கலந்த வெள்ளை நிறமாக அமைந்திருக்கும்.
  • ஆனால், இந்தச் சுறாவுக்கு ‘வெள்ளைச் சுறா’ என்று ஆங்கிலத்தில் பொருத்தம் இல்லாமல் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழிலோ இது ‘பெருஞ்சுறா’ எனப் பொருத்தமாகப் பெயர் பெற்றுள்ளது. இரைகொல்லி சுறாக்களில் மிகப்பெரியது என்பதுடன் கடலில் இரையைக் கொல்லும் வேட்டை மீன்களில் மிகப்பெரியதும் பெருஞ்சுறாதான். எனவே, பெருஞ்சுறா அல்லது பெருவஞ்சுறா (பெருவன்சுறா) என்கிற பெயரே இதற்குச் சாலப் பொருத்தமானது.

திருக்கையும் பாக்குவெட்டியும்

  • திருக்கை மீன் வகைகளில் ஒன்று ஓலைவாலன் திருக்கை (Cowtail Stingray). தமிழகத்தின் சோலைக்காடுகளில் சுற்றித் திரியும் சோலை மந்திக்கு நீடுமயிர் ஊகம், சிங்காளம் போன்ற தமிழ்ப்பெயர்கள் இருந்தாலும்கூட, அதன் ஆங்கிலப் பெயரைத் தமிழ்ப்படுத்தி சிங்கவால் குரங்கு என நீண்ட காலமாக அழைக்கப்பட்டுவருகிறது. ஓலைவாலன் திருக்கைக்கு அப்படி மாட்டுவாலன் திருக்கை என்கிற பெயர் இல்லை. ஓலைவாலன் திருக்கை என்றே அழைக்கப்படுகிறது.
  • பார் எனப்படும் பவழத்திட்டுப் பகுதியில் வாழும் அரிய பெரிய வகை மீன்களில் ஒன்று பாக்குவெட்டி (Humphead Wrasse). ஏறத்தாழ ஆறடி நீளமும், 180 கிலோ எடையும் உள்ள பார் மீன் இது. தடித்த உதடுகளையும் நெற்றியில் முடிச்சு போன்ற சதையும் கொண்ட இந்த மீன் நெப்போலியன் மீன், மாவோரி என்றெல்லாம் ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. ஆனால், தமிழில் இந்த மீனின் பெயர் பாக்குவெட்டி.
  • இந்த அழகிய பெரிய மீன், பலமான பற்களால் கடினமான ஓடுகளை உடைய முள்தோலிகளை முறுக்கைத் தின்பதுபோல நொறுக்கித் தின்னக்கூடிய பண்பைப் பெற்றது. எனவே, பாக்குவெட்டி என்கிற பொருத்தமான பெயரை இந்த மீன் பெற்றிருக்கிறது. பவழத்திட்டுகளை விரைவாக அழிக்கக்கூடிய ஒரு நட்சத்திர உயிரினமும் இந்தப் பாக்குவெட்டி மீனின் முதன்மை உணவில் ஒன்று.

அந்திப்பன்னா

  • தமிழகக் கடல்மீன்களில் ஒன்று அந்திப்பன்னா (Indian Threadfish). பாரை இன மீன்களில் ஒன்றான இந்த அந்திப்பன்னாவுக்குக் கண்ணாடி மீன், சாய்சதுரப் பாரை என்கிற பெயர்களும் உள்ளன. அந்தி என்பது ஒருநாளில் இருமுறை வந்து செல்லக்கூடிய பொழுது. ஒரு நாளில் காலை அந்தி, மாலை அந்தி என்று இரண்டு அந்திகள் உண்டு. இருள் விலகிச் சூரியன் வரும் நேரம் காலை அந்தி. சூரியன் விலகி இருள் படரும் நேரம் மாலை அந்தி.
  • பாரை இன மீன் களுக்குப் பொதுவாக அதிகாலைப் பொழுதி லும் அந்திமாலை நேரத்திலும்தான் பார்வை நன்றாகத் தெரியும். பாரை மீன்கள் மிகச் சுறுசுறுப்பாக, இரை மீன்களை வேட்டையாடக்கூடிய நேரமும் இதுதான். அதிலும் குறிப்பாக அந்திப்பன்னா அதிகாலைப் பொழுதிலும், அந்திசாயும் கருக்கல் நேரத்திலும்தான் அதிக சுறுசுறுப்போடு இயங்கும். எனவே, அந்திப்பன்னாவுக்கு அந்தப் பெயர் ஏன் வந்தது என்பது இப்போது புரிந்திருக்கும்.

உயிர் வாழும் தமிழ்

  • கடல்மீன்களில் விந்தையான உருவம் கொண்ட மீன்களில் ஒன்று அடுப்பூதி மீன். ஆங்கிலத்தில் இந்த மீன் கார்னெட் மீன் (Cornet Fish) எனப்படுகிறது. கார்னெட் என்பது எக்காளம் போன்ற ஓர் ஊதுகுழல் இசைக்கருவி. குழாய் போன்ற வாயும், வாலடியில் தனித்துத் தெரியும் சாட்டை போன்ற அமைப்பும், நீள்வட்டக் கண்களும் இந்த மீனின் தனித்துவ அடையாளங்கள். குழல்வாய் கொண்ட இந்த மீனுக்குத் தமிழில் வழங்கும் பெயர் அடுப்பூதி. அடுப்பு ஊதப் பயன்படும் ஊதாங்குழல்போல இதன் தோற்றம் இருப்பதால் இந்தப் பெயர் வந்தது.
  • தமிழகக் கடலோரங்களில் வாழும் கண்கவர் மீன்களில் ஒன்று புள்ளி இலத்தி (Scatophagus argus). ஆர்கஸ் என்பது புள்ளிகளைக் குறிக்கும். ஆனால், ஸ்கேட்டோபாகஸ் என்கிற பெயர் சாணம் உண்ணும் மீன் என்கிற பொருளில் அமைந்தது. ஆங்கிலத்தில்கூட ஸ்கேட் என்பதுதான் இந்த மீனின் பெயர். அதன்மூலம், இது கழிவை உண்ணும் மீன் எனத் தெரிகிறது. தமிழில் (இ)லத்தி என்பது குதிரையின் கழிவைக் குறிக்கும் பெயர். அந்த வகையில் நமது மீனவ முன்னோர்கள் தமிழில் மிகச்சரியான பெயரையே இந்த மீனுக்குச் சூட்டியிருக்கிறார்கள்.
  • தமிழில் திரவி என்று ஒரு மீன் உண்டு. திரவிமூக்குச் சுறா என்று ஒரு சுறா வகைகூட உண்டு. ஆனால், திரவி என்கிற பெயருக்குப் பொருள் தேடினால், கிடைப்பது கடினம். இதைப் போல ஆராங்கு, மழுவன், கருந்திரளி, கற்றாளை... இப்படிப் பல ஆயிரம் மீன்களுக்கான பெயர்களில் பல்வேறு அர்த்தங்கள் ஒளிந்திருக்கக் கூடும். கடல் மீன்களுக்குள்ளும் உயிர் வாழ்கிறது தமிழ்.

நன்றி: தி இந்து (06 – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories