TNPSC Thervupettagam

முடிவுகளைத் தீர்மானித்த சமூக நீதி அரசியல்

June 11 , 2024 215 days 166 0
  • மக்களவைத் தேர்தலில் பாஜக 240 தொகுதிகளில் வென்று கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்திருக்கிறது. ஆனால், அக்கட்சி தனிப் பெரும்பான்மையைப் பெறத் தவறியுள்ளது. இண்டியா கூட்டணிக் கட்சிகள் 230க்கு மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற்றன. குறிப்பாக, 2014இல் 48 இடங்களிலும், 2019இல் 52 இடங்களிலும் மட்டுமே வென்று நாடாளுமன்றத்தில் அதிகாரபூர்வ எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெறத் தவறிய காங்கிரஸ், இந்த முறை 99 தொகுதிகளில் வென்றிருப்பது அக்கட்சியின் சாதனையாகப் பார்க்கப்படுகிறது. பாஜகவினரின் அதீத நம்பிக்கையையும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளையும் பொய்யாக்கி, இண்டியா கூட்டணிக் கட்சிகள் வலுவான எண்ணிக்கையுடன் எதிர்க்கட்சி வரிசையில் அமரவிருக்கின்றன. சமூக நீதி அடிப்படையிலான அணுகுமுறைதான் இண்டியா கூட்டணிக்கு வலுசேர்த்தது என்று சொல்லலாம்!

மாற்றம் தந்த மாநிலங்கள்:

  • இந்தத் தேர்தலில் பாஜக மிக வலுவான செல்வாக்குடன் ஆதிக்கம் செலுத்துவதாகக் கருதப்பட்ட உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா ஆகிய மாநிலங்களிலும், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய மாநிலக் கட்சிகள் இரண்டும் பிளவுபட்டுள்ள மகாராஷ்டிரத்திலும், இண்டியா கூட்டணிக்குக் கணிசமான வெற்றி கிடைத்திருக்கிறது. இதுவே தேர்தல் முடிவுகளைத் தீர்மானித்திருக்கிறது.
  • பாஜக அரசு ஆட்சி செய்துவரும் உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியும் காங்கிரஸும் முறையே 37 மற்றும் 6 தொகுதிகளில் வென்றுள்ளன. 2019 தேர்தலில் 62 தொகுதிகளைக் கைப்பற்றியிருந்த பாஜகவின் எண்ணிக்கை 33 ஆகக் குறைந்துள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டது பாஜக அரசின் மிகப் பெரிய சாதனையாக முன்வைக்கப்பட்ட நிலையில், அயோத்தியை உள்ளடக்கிய ஃபைஸாபாத் தொகுதியில் பாஜக தோல்வி அடைந்துள்ளது. பொதுத் தொகுதியான ஃபைஸாபாத்தில் சமாஜ்வாதி கட்சியின் தலித் வேட்பாளர் அவதேஷ் பிரசாத் வெற்றிபெற்றுள்ளார்.
  • ராஜஸ்தானில் 2023 டிசம்பரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜகவிடம் ஆட்சியைப் பறிகொடுத்தது காங்கிரஸ். 2019 மக்களவைத் தேர்தலில் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதும் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளையும் பாஜக வென்றிருந்தது. ஆனால், இந்த முறை பாஜக 14 தொகுதிகளை வென்றிருக்கும் நிலையில், காங்கிரஸ் 8 தொகுதிகளை வென்றிருக்கிறது. பாஜக ஆட்சியில் உள்ள ஹரியாணாவில் மொத்தமுள்ள பத்தில் ஐந்து தொகுதிகளில் காங்கிரஸ் வென்றுள்ளது.

சமூகநீதி அரசியலின் தாக்கம்:

  • ராஜஸ்தான் தேர்தல் தோல்விக்குப் பிறகு முதல்வர் பதவியை இழந்த அசோக் கெலாட், மதரீதியாக வாக்காளர்களைப் பாஜக பிளவுபடுத்தியதே காரணம் என்று ராகுல் காந்தியிடம் கூறியிருக்கிறார். ஆனால், அந்தத் தேர்தலில் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையிலான வாக்கு விகித இடைவெளி சுமார் 2% என்பதைச் சுட்டிக்காட்டிய ராகுல், வாக்காளர்கள் பிளவுபட்டிருந்தால் இது எப்படிச் சாத்தியம் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். சமூக நீதி, மக்கள் பிரச்சினைகளை மையப்படுத்திய அரசியலும் காங்கிரஸுடனான கூட்டணிக்குத் தயாராக இருக்கும் மாநிலக் கட்சிகளை அனுசரிக்கும் போக்குமே பாஜகவின் வெற்றியைத் தடுக்கும் என்பதை உணர்த்தி, அந்தப் பாதையில் கட்சியை வழிநடத்த ராகுலுக்கு ராஜஸ்தான் தோல்வி அனுபவம் உதவியது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதி அறிக்கையில் சாதிவாரிக் கணக்கெடுப்பு, இட ஒதுக்கீட்டுக்கான 50% உச்ச வரம்பு நீக்கப்படும், 30 லட்சம் அரசுப் பணிகள் நிரப்பப்படும் எனச் சமூக நீதியையும் வேலைவாய்ப்பையும் மையப்படுத்திய வாக்குறுதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
  • 80 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டன. காங்கிரஸுக்கு வெற்றிவாய்ப்பு இருப்பதாக நம்பப்பட்ட தொகுதிகள் ஒதுக்கப்படாதது குறித்து, கட்சித் தொண்டர்களிடையே அதிருப்தி நிலவவே செய்தது. ஆனால், சமாஜ்வாதி கட்சியினருடன் தேர்தல் நேரத்தில் இணைந்து பணியாற்றுவதற்கான தடையாக அது இருக்கவில்லை. ராகுலுக்கும் அகிலேஷுக்கும் இடையிலான ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் அடிமட்டத் தொண்டர்கள் வரை பரவியது. இது இரண்டு கட்சிகளுக்கும் இடையில் வாக்குப் பரிமாற்றம் சரியாக நிகழ்வதை உறுதிப்படுத்தியது.
  • மேலும், இரண்டு கட்சிகளும் இணைந்து சமூக நீதித் திட்டங்கள். வேலைவாய்ப்பின்மைப் பிரச்சினை ஆகியவற்றில் கவனம் செலுத்தின. 400 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சி அமைப்போம் என்னும் முழக்கத்துடன் பாஜக தேர்தலை எதிர்கொண்டது. அத்தனை தொகுதிகளில் வெற்றிபெற்றால் அரசமைப்புச் சட்டத்தை மாற்றிவிடுவார்கள் என்னும் பிரச்சாரத்தை ராகுலும் அகிலேஷும் இணைந்து முன்னெடுத்தனர். பாஜகவின் ஃபைஸாபாத் வேட்பாளர் லல்லு சிங், “அரசமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும் என்றால், நாடாளுமன்றத்தில் நமக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருக்க வேண்டும்” என்று பிரச்சாரத்தின்போது பேசினார். இது அரசமைப்புச் சட்டத்தால் உறுதிசெய்யப்பட்ட உரிமைகளைப் பெற்றுள்ள சமூகங்களைச் சேர்ந்த வாக்காளர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது. “அம்பேத்கரே நினைத்தாலும் அரசமைப்புச் சட்டத்தை மாற்ற முடியாது” என்று தேர்தல் பிரச்சாரத்தில் மோடி உறுதி அளித்தாலும் அது வாக்காளர்களின் அச்சத்தைப் போக்கவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
  • இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பல்வேறு சாதிகளைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு 32 தொகுதிகள், பட்டியல் சாதியினருக்கு 16, உயர் சாதியினருக்கு 10, இஸ்லாமியர்களுக்கு நான்கு எனத் தொகுதிகளை ஒதுக்கினார் அகிலேஷ். இதன் மூலம் சமாஜ்வாதி கட்சி யாதவ் மற்றும் இஸ்லாமியர்களுக்கு மட்டுமான கட்சி என்னும் விமர்சனத்தை முறியடித்தார்.
  • உத்தரப் பிரதேச அரசுப் பணிகளுக்கான தேர்வில் வினாத்தாள் கசிந்ததால் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டன. இது வேலைவாய்ப்பின்மைப் பிரச்சினை குறித்த இளைஞர்களின் அதிருப்தியை அதிகரித்தது. இதனோடு இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து என்னும் அச்சமும் சேர்ந்துகொண்டது. இதனால் முந்தைய தேர்தல்களில் பாஜகவுக்கு வாக்களித்த இடஒதுக்கீட்டுப் பிரிவினரில் கணிசமானோர் இந்தத் தேர்தலில் இண்டியா கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர். ‘காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சாதி, பட்டியல் பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டைப் பறித்து இஸ்லாமியர்களுக்குக் கொடுத்துவிடுவார்கள்’ என்கிற பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினரின் பிரச்சாரம் எடுபடவில்லை.
  • ராஜஸ்தான், ஹரியாணா, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் ஆளும் கட்சிகள் மீதான விவசாயிகளின் அதிருப்தி, இண்டியா கூட்டணிக் கட்சிகளுக்குக் கிராமப்புறப் பகுதிகளில் வெற்றிவாய்ப்பைப் பெற்றுத் தந்துள்ளது. அதேநேரம், இந்த மாநிலங்களிலும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் சாதி வாக்காளர்களை இண்டியா கூட்டணிக் கட்சிகள் ஈர்த்துள்ளன. சமூக நீதி அரசியல், அரசமைப்புச் சட்டம் குறித்த அச்சம் ஆகியவை இந்த மாநிலங்களிலும் தாக்கம் செலுத்தியிருப்பதை இதிலிருந்து உணர முடிகிறது.

தனித் தொகுதிகளில் மாற்றம்:

  • சமூக நீதித் திட்டங்களை முன்னிறுத்தியது பல மாநிலங்களில் இண்டியா கூட்டணிக்குப் பலன் அளித்துள்ளது. இந்தியாவில் பட்டியல் சாதியினருக்கும் பட்டியல் பழங்குடியினருக்குமான தனித் தொகுதிகளில் 2014இல் 71 இடங்களிலும், 2019இல் 72 இடங்களிலும் பாஜக வென்றிருந்தது. இந்த முறை அதன் எண்ணிக்கை 55ஆகக் குறைந்துள்ளது. மாறாக, 2019 மக்களவைத் தேர்தலில் வெறும் ஏழு தனித் தொகுதிகளில் மட்டுமே வென்றிருந்த காங்கிரஸ், இந்த முறை 32இல் வென்றுள்ளது. பட்டியல் சாதியினருக்கான தனித் தொகுதிகளை எடுத்துக்கொண்டால், கடந்த முறை ஆறு தொகுதிகளில் வென்றிருந்த காங்கிரஸ், இந்த முறை 20ஐக் கைப்பற்றியுள்ளது.
  • பட்டியல் சாதி மக்கள் நாடு முழுவதும் வெவ்வேறு வகையில் வாக்களித்திருக்கிறார்கள் என்றாலும், முக்கியமான மாநிலங்களில் இண்டியா கூட்டணிக்குக் கணிசமாக வாக்களித்திருக்கிறார்கள் என்பதை வாக்குப்பதிவுத் தரவுகள் உணர்த்துகின்றன. ஆனால், பழங்குடிகளிடையே பாஜகவின் செல்வாக்கு வலுவாகவே இருக்கிறது. மத்தியப் பிரதேசத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் சத்தீஸ்கரில் அதிகத் தொகுதிகளிலும் பாஜக வென்றிருப்பதற்குப் பழங்குடிகளின் ஆதரவு முக்கியப் பங்களித்திருப்பதாகக் கருதப்படுகிறது.
  • ஒட்டுமொத்தமாக சமூக நீதி, அரசமைப்புச் சட்டம் குறித்த விவாதங்கள் மக்களவைத் தேர்தல் முடிவுகளில் பெரும் தாக்கம் செலுத்தியிருக்கின்றன. இதுவே 2024 மக்களவைத் தேர்தலின் கவனத்துக்குரிய அம்சம்.

நன்றி: இந்து தமிழ் திசை (11 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories