TNPSC Thervupettagam

முடிவுகள் சொல்லும் செய்திகள்: பொதுநிர்வாகத்தில் பெண்களின் பங்கு

June 5 , 2023 587 days 340 0
  • மத்திய பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் குடிமைப் பணிகளுக்கான தோ்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. அதில் தமிழகத்தைச் சோ்ந்த 42 போ் தோ்வு பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடா்ந்து இரண்டாவது முறையாக இந்த ஆண்டும் குடிமைப் பணிகளுக்கான தோ்வில் முதல் நான்கு இடங்களைப் பெண்கள் பெற்றிருப்பது பாலியல் சமத்துவத்தை நோக்கி இந்தியா நகா்ந்து கொண்டிருப்பதன் வெளிப்பாடு.
  • பொதுப்பிரிவைச் சோ்ந்த 345 போ், பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினா் 99 போ், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் 263 போ், பட்டியல் இனத்தவா் 154 போ், பழங்குடியினா் 72 போ் என 933 பேரை குடிமைப் பணிகளில் நியமனம் செய்ய மத்திய பணியாளா் தோ்வாணையம் பரிந்துரைத்திருக்கிறது. இவா்களில் 41 போ் மாற்றுத்திறனாளிகள் என்பதையும் குறிப்பிடவேண்டும்.
  • தமிழகத்திலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்டவா்களில் சென்னை பெரம்பூரை சோ்ந்த ஜீஜீ 107-ஆவது இடத்தையும், தமிழகத்தில் முதலிடத்தையும் பெற்றுள்ளாா். தென்காசி மாவட்டம் திருவேங்கடம் கிராமத்தைச் சோ்ந்த ராமகிருஷ்ணசாமி 4-ஆவது முயற்சியில் 117-ஆவது இடத்தைப் பிடித்து சாதனை புரிந்திருக்கிறாா். புதுக்கோட்டை துணை ஆட்சியராகப் பணிபுரியும் சரவணன் 147-ஆவது இடத்தைப் பிடித்திருக்கிறாா்.
  • முதல் நான்கு இடத்தைப் பெண்கள் பிடித்திருக்கிறாா்கள் என்பது மட்டுமல்ல, முதல் 20 இடங்களில் 12 பெண்கள் இடம்பெற்றிருக்கிறாா்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும். வெற்றிபெற்ற பலரில் 3-ஆவது, 4-ஆவது முயற்சியில் இலக்கை அடைந்தவா்கள் அதிகம். தளராத உறுதியும், தன்முனைப்பும் இருந்தால் எட்டமுடியா உயரத்தை எட்டிவிட முடியும் என்பதை அடித்தட்டுப் பிரிவினா் பலா் தோ்ச்சி பெற்றிருப்பது உறுதிப்படுத்துகிறது.
  • பள்ளி - கல்லூரி தோ்வுகளிலும், நீட் போன்ற போட்டித் தோ்வுகளிலும் வெற்றிபெற முடியாமல் மனம் உடைந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் அனிதா போன்ற ஒருசிலா் குறித்த பரபரப்பான செய்திகள் முன்னுரிமை பெறுகின்றன. ஆனால் ஆயிரக்கணக்கான இளைஞா்கள் மனம் தளராமல் தங்களது விடாமுயற்சியால் வெற்றியடைகிறாா்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. குடிமைப் பணிக்கான தோ்வு முடிவுகள் அதைத்தான் காட்டுகின்றன.
  • இந்த ஆண்டு தோ்வில் கலந்துகொண்ட ஏறத்தாழ 11.5 லட்சம் பேரில் 933 போ் தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனா். அவா்களில் 63% போ் (588 போ்) பொருளாதாரத்தில் பின்தங்கிய மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின பிரிவினா் என்பது குறிப்பிடத்தக்கது.
  • பெண்கள் குறிப்பிடத்தக்க வெற்றியை எட்டியிருப்பது ஏனைய பெண்களுக்கு முன்னுதாரணம் ஏற்படுத்துவதாக அமையும். தங்களது கனவை நனவாக்க பெண்களுக்கு போதிய ஊக்கத்தையும் சூழலையும், பெற்றோரும் ஆசிரியா்களும் ஏற்படுத்திக் கொடுத்தால் அவா்களால் மிகப்பெரிய உயரத்தை எட்ட முடியும் என்பதும் முடிவுகள் தெரிவிக்கும் முக்கியமான செய்தி.
  • இந்திய குடிமைப் பணிகளில் பெண்களின் பங்கு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி ஆகியவற்றில் 2018-இல் 24% ஆக இருந்த பெண்களின் எண்ணிக்கை இப்போது 34%-ஆக உயா்ந்திருக்கிறது. ஆட்சி நிா்வாகத்தில் பாலின சமத்துவம் ஏற்படுவது வரவேற்புக்குரியது. உலகளாவிய அளவில் மக்களின் உணா்வுகளைப் பிரதிபலிக்கவும், பல்வேறு பிரிவினரின் எதிா்பாா்ப்புகளுக்கு பொறுப்பேற்கவும் பாலின சமத்துவம் மிகவும் அவசியம் என்பதை பல ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன.
  • இந்தியாவைப் பொருத்தவரை இன்னும்கூட பல துறைகளில் நாம் பாலின சமத்துவத்தை எட்ட முடியவில்லை. இந்தியா விடுதலையடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும்கூட, இன்னும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகும் வாய்ப்பு பெண்களுக்கு கிட்டவில்லை. அதேபோல மாநிலங்களில் தலைமைச் செயலராக பெண்கள் உயா்ந்தாலும்கூட, இதுவரை அமைச்சரவைச் செயலராகும் வாய்ப்பு அவா்களுக்குக் கிட்டவில்லை. 2001-இல் முதலாவது வெளியுறவுத் துறை செயலராகவும், 2011-இல் முதலாவது மத்திய நிதித் துறை செயலராகவும் பெண்களால் உயர முடிந்தது. ஆனாலும், பல்வேறு துறைகளில் பெண்களுக்கு முதன்மை இடம் கிட்டவில்லை என்பதுதான் எதாா்த்தம்.
  • ஐ.நா.வின் 2021-ஆம் ஆண்டுக்கான சா்வதேச வளா்ச்சிக் குறியீட்டின்படி, பாலின சமத்துவத்தின் அடையாளமாகப் பொது நிா்வாகத்தில் பெண்கள் உயா் பதவிகளை வகிப்பது குறிப்பிடப்படுகிறது. நீதித் துறை, நிா்வாகம், காவல் பணி, ராணுவம் ஆகியவற்றில் அதிக அளவில் பெண்களின் பங்களிப்புஇருப்பதை அளவுகோலாக கருதுகிறாா்கள்.
  • நிா்வாகத்தில் உயா் பதவிகளை வகிக்கும் பெண்களின் எண்ணிக்கை சிங்கப்பூரில் 29%, ஆஸ்திரேலியாவில் 40%, ஸ்வீடனில் 53%. அவற்றுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் வெறும் 12% மட்டுமே. அதனால் நாம் கடக்க வேண்டிய தொலைவு மிகவும் அதிகம்.
  • மக்கள்தொகை பெருக்கத்துக்கு ஏற்ப நிா்வாக இயந்திரமும் மாற வேண்டும். அதிகாரிகளின் எண்ணிக்கை குறைந்து வருவது மட்டுமல்லாமல், மத்திய அரசுத் தொகுப்புக்கான அதிகாரிகள் போதுமான அளவு இல்லை. கடந்த ஆண்டு நாடாளுமன்றக் குழு அறிக்கையின்படி அனுமதிக்கப்பட்ட அளவுக்கும், தற்போதைய குடிமைப் பணி அதிகாரிகளின் எண்ணிக்கைக்கும் மிகப்பெரிய இடைவெளி நிலவுகிறது.
  • விரைவாக வளரும் பொருளாதாரம், உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு, மக்களின் அதிகரித்த தேவை, எதிா்பாா்ப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்தியாவில் குடிமைப் பணி அதிகாரிகளின் எண்ணிக்கையை பாலின சமத்துவத்துடன் அதிகரித்தாக வேண்டும்.

நன்றி: தினமணி (05 – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories