TNPSC Thervupettagam

முடிவுக்கு வரட்டும் தலைநகரத் தடுமாற்றம்

September 17 , 2024 71 days 94 0

முடிவுக்கு வரட்டும் தலைநகரத் தடுமாற்றம்

  • மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதேவேளையில், தனக்குக் கிடைத்திருக்கும் பிணையைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட அர்விந்த் கேஜ்ரிவால் முன்னெடுக்கும் முயற்சிகளும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குப் பல்வேறு வகையில் குடைச்சல் கொடுத்துவந்த பாஜகவின் செயல்பாடுகளும் மக்கள் மன்றத்தில் ஏமாற்றத்துடன் பார்க்கப்படுவதை மறுக்க முடியாது.
  • இந்த வழக்கில் ஏற்கெனவே ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சஞ்சய் சிங், மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட நிலையில், செப்டம்பர் 13 இல் அர்விந்த் கேஜ்ரிவாலுக்குப் பிணை வழங்கி உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். ஏற்கெனவே அமலாக்கத் துறை வழக்கில் ஜூலை 12இல் கேஜ்ரிவாலுக்கு இடைக்காலப் பிணை வழங்கப்பட்டிருந்தாலும் சிபிஐ-யின் கைது நடவடிக்கை அவரை மேலும் பல நாள்களுக்கு திஹார் சிறையில் அடைத்துவைக்க வழிவகுத்தது.
  • இந்நிலையில், சிபிஐ வழக்கிலும் கேஜ்ரிவாலுக்குப் பிணை வழங்கியிருக்கும் உச்ச நீதிமன்றம், விசாரணை அமைப்புகளின் செயல்பாடு குறித்தும் காத்திரமான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறது. கூடவே, கேஜ்ரிவால் முதல்வர் அலுவலகத்துக்குச் செல்லக் கூடாது; கோப்புகளில் கையெழுத்திடக் கூடாது என்பன போன்ற நிபந்தனைகளையும் விதித்துள்ளது.
  • இதையடுத்து, கேஜ்ரிவால் இனி முதல்வர் பதவியில் தொடரக் கூடாது என பாஜக அழுத்தம் கொடுத்தது. அவர் சிறையில் இருந்தபடியே முதல்வராகத் தொடர்ந்ததையும் பாஜக தொடர்ந்து விமர்சித்து வந்தது.
  • இந்நிலையில், முதல்வர் பதவியிலிருந்து விலகப்போவதாக அறிவித்திருக்கிறார் கேஜ்ரிவால். 2025 பிப்ரவரி 11இல் ஆம் ஆத்மி அரசின் பதவிக்காலம் முடிவுக்கு வரவிருக்கும் நிலையில், மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலுடன் முன்கூட்டியே (நவம்பர் மாதத்தில்) டெல்லி தேர்தலை நடத்துமாறு தேர்தல் ஆணையத்துக்குக் கோரிக்கையும் விடுத்திருக்கிறார்.
  • மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950இன் 15ஆவது பிரிவின்படி சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவுறுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு. எனினும், வாக்காளர் பட்டியலை இறுதிசெய்வது உள்ளிட்ட பணிகள் இன்னமும் தொடங்கப்படாத நிலையில், முன்கூட்டியே தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்றே சட்ட வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
  • ஒரு பக்கம் இந்த வழக்குகளை வைத்தே அர்விந்த் கேஜ்ரிவாலை ஊழல்வாதியாகச் சித்தரிக்க பாஜக முயல்கிறது என்றால், இந்த வழக்கில் இன்னமும் நிரபராதி என விடுவிக்கப்படாத நிலையிலும் இதை வைத்துத் தனக்கு அனுதாபம் தேடிக்கொள்வதில் கேஜ்ரிவால் முனைப்புக் காட்டுகிறார். ஊழலுக்கு எதிரான மாபெரும் போராட்டத்தை நடத்தி, கேஜ்ரிவாலுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்த அன்னா ஹசாரே, ‘அரசியலுக்குள் நுழைய வேண்டாம்’ எனத் தான் கூறிய அறிவுரைக்கு கேஜ்ரிவால் செவிசாய்க்கவில்லை என விமர்சித்திருக்கிறார்.
  • இப்படி பாஜகவும் ஆம் ஆத்மி கட்சியும் பரஸ்பரம் குற்றம்சாட்டிக்கொண்டாலும், பாதிப்பு என்னவோ மக்களுக்குத்தான். அரசு நிர்வாகத்தில் ஏற்பட்ட சுணக்கத்தால் தண்ணீர்ப் பற்றாக்குறை, மழை, வெள்ளம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் மக்களுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.
  • புதிய முதல்வர் பதவிக்கு ஆதிஷி, சவுரவ் பரத்வாஜ், கோபால் ராய், கைலாஷ் கெலாட், இம்ரான் ஹுசைன், கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபடுகின்றன. யார் முதல்வரானாலும் உடனடியாக அரசு நிர்வாகத்தை முழுமையான செயல்பாட்டுக்குக் கொண்டுவருவதுதான் முதன்மையான பணியாக இருக்க வேண்டும். அரசியல் மோதல்களுக்கு மக்கள் பாதிப்புக்குள்ளாவதை இனியும் அனுமதிக்க முடியாது!

நன்றி: இந்து தமிழ் திசை (17 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories