TNPSC Thervupettagam

முடிவுக்கு வரும் ஒமெகல்

November 24 , 2023 238 days 166 0
  • ஒமெகல் (Omegle) எனும் காணொளி அரட்டைச் சேவை (video chat service) வலைதளம் மூடப்படவிருப்பதாக நவம்பர் முதல் வாரத்தில் அறிவிப்பு வெளியானது. இப்போது மூடப்பட்டுவிட்டது.அதற்கான காரணத்தை ஒமெகல் நிறுவனம் தெரிவிக்கவில்லை. ஒமெகல் நிறுவனர் லீஃப் கே.புரூக்ஸ் வெளியிட்ட அறிக்கையில், பல்வேறு சைபர் குற்றங்களைப் பற்றிப் பேசியிருந்தாலும் குறிப்பிட்டு எந்தக் காரணத்தையும் அவர் சொல்லவில்லை. எனினும், இந்நிறுவனத்துக்கு எதிராக ஒரு சிறுமி தொடர்ந்த வழக்குதான் இதன் பின்னணியில் இருப்பதாகப் பேசப்படுகிறது. இந்த வலைதளத்தைப் பயன்படுத்திய சிறுமி, கடுமையான பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதுதான் இந்த முடிவுக்குக் காரணம் எனச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
  • இணையத்தின் வளர்ச்சி புதிய உச்சங்களைத் தொட்டுவரும் இந்தக் காலத்தில், சமூக வலைதளம் ஒன்று மூடப்பட்டது, அதன் பல லட்சம் பயனாளர்களை அதிர்ச்சியடைய வைத்தது. இந்த வலைதளத்தின் பயனாளர்கள் பெரும்பாலும் பத்து வயதிலிருந்து 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள். தகவல் வெளியானதும், இதுபோன்று வேறு ஏதாவது சமூக வலைதளம் உள்ளதா என அவர்கள் தேடத் தொடங்கியிருக்கிறார்கள். ஆம். இதில் இருக்கும் விபரீதம் பலருக்குப் புரியவில்லை.

அந்நியர்களுடன் அளவளாவலாம்

  • நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் ஃபேஸ்புக், எக்ஸ் (டிவிட்டர்), இன்ஸ்டகிராம் போன்ற சமூக வலைதளம் அல்ல ஒமெகல். இது சமூக வலைதளமும் அரட்டைச் செயலியும் இணைந்தது போன்ற ஒரு வித்தியாசமான வலைதளம். ஃபேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டகிராமிலும் தனிப்பட்ட முறையில் உரையாடுவதற்கும் காணொளி வழியாகச் சந்தித்து உரையாடுவதற்குமான வசதிகள் இருக்கின்றன. ஆனால் உங்கள் நட்புப் பட்டியலில் இல்லாதவர்கள் அல்லது பின்தொடராதவர்கள் உங்களுக்கு தனிப்பட்ட முறையில் மெஸேஜ் அனுப்புவதையும் காணொளி அழைப்பு விடுப்பதையும் நீங்கள் தடுத்து வைக்க முடியும்.
  • ஆனால் ஒமேகலில் நீங்கள் நுழைந்தவுடன் உங்களுக்கு அறிமுகமே இல்லாத அந்நிய நபர்கள் உடனடியாக உங்களுடன் காணொளி வழியாக அரட்டையில் ஈடுபட வருவார்கள். பின்னாள்களில் நீங்கள் அவர்களைப் பின்தொடர்ந்து அவர்களுடன் அரட்டையில் ஈடுபட முயலலாம் என்றாலும், இந்த வலைதளத்தில் இளைஞர்களைப் பெரிதும் வசீகரிக்கும் அம்சம், உலகின் எங்கோ ஒரு மூலையிலிருந்து யாரோ ஒரு நபர், அந்த நொடியில் உங்களுடன் அரட்டையில் ஈடுபட வரும்போது கிடைக்கும் ஆச்சரியம்தான். உங்களிடம் உரையாட வரும் நபர் ஒரு அமெரிக்கராக இருக்கலாம், சீனராக இருக்கலாம், உங்கள் வயதுடையவராக இருக்கலாம், வயது முதிர்ந்தவராக இருக்கலாம்.
  • இளம் பருவத்தினர் பலருக்கு இப்படியான ஒரு ‘ஆன்லைன் சாட்’ அமைப்பு என்பது அவர்களுடைய உளவியலைப் பெரிதும் திருப்தி அடையவைக்கும் விஷயம். 2009இல் தொடங்கப்பட்ட ஒமெகல் வலைதளம், கோவிட் பெருந்தொற்றுப் பொதுமுடக்கக் காலத்தில்தான் மிகவும் பிரபலம் அடைந்தது. அந்நியர்களுடன் பேசுவது, அவர்களைக் கேலி செய்வது என எல்லாவற்றையும் காணொளியாகப் பதிவுசெய்து இன்ஸ்டகிராம் ரீல்களிலும் யூடியூபிலும் போட்டே பல இளைஞர்கள் பிரபலமானார்கள். தங்களுக்கென ரசிகர் வட்டத்தை உருவாக்கிக்கொண்டார்கள். நிறையப் பணமும் சம்பாதித்தார்கள்.

மறைந்திருக்கும் விபரீதம்

  • உலகம் முழுவதும் இளசுகளிடம் பிரபலமாக இருந்த ஒமெகல் வலைதளத்துக்குக் கறுப்புப் பக்கமும் இருந்தது. இதில் வயது வரம்பு குறித்துப் போதிய கண்காணிப்புகள் மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக, அனைத்து வயதினரும் இதில் உள்நுழைந்தார்கள். அப்படித்தான் 11 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமியும் இந்த வலைதளத்துக்குள் நுழைந்தார். யதேச்சையாக அரட்டைக்கு வந்த ஒரு அந்நிய நபருடன் இந்தச் சிறுமிக்கு நட்பு ஏற்பட்டது. அந்த நபர் மெல்ல மெல்ல இந்தச் சிறுமியுடன் ஆபாச அரட்டையில் ஈடுபடத் தொடங்கினார்.
  • பின்னர், அந்தப் பெண்ணின் நிர்வாண ஒளிப்படங்களைச் சேகரிக்கத் தொடங்கினார். சில மாதங்களுக்குப் பின் இந்தச் சிறுமியை இணையம் வழியாகப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கத் தொடங்கினார். பாதிக்கப்பட்ட சிறுமி 2021இல் தகுந்த ஆதாரங்களுடன் புகார் அளித்தார். உண்மையில், இந்தச் சிறுமியின் வழக்கு முதல் வழக்கல்ல; பல ஆண்டுகளாக ஒமெகல் வலைதளத்தின் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன. ஒமெகல் நிறுவனத்தினர் இந்த வழக்குகளுக்காக நீதிமன்றங்களில் அபராதங்களைக் கட்டிக்கொண்டுதான் இருந்தார்கள். இப்படியான வீண் சர்ச்சைகளைத் தவிர்க்கவும் முயன்றார்கள்.
  • எவ்வளவு முயன்றாலும் பாலியல் துன்புறுத்தல் நிகழ்வுகளை அந்நிறுவனத்தால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. வயது வரம்பை ஆரம்பத்தில் சரிசெய்து பார்த்தார்கள். ரிப்போர்ட், மாடரேஷன் என ஒமெகல் நிறுவனம் எடுத்த எந்த நடவடிக்கையாலும் இந்தப் பிரச்சினைகளைக் களைய முடியவில்லை. 2022இல் ஒரு தொண்டு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, ஒமெகல் வலைதளத்தைப் பயன்படுத்தி நிகழ்த்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல் நிகழ்வுகள் தொடர்பாக சுமார் ஆறு லட்சம் வழக்குகள் பதிவாகியுள்ளன எனத் தெரியவந்திருக்கிறது. 2021இல் அந்தச் சிறுமி தொடர்ந்த வழக்கு இந்த வலைதளத்துக்கு முடிவுரை எழுதியிருக்கிறது.

புகார் அளிப்பது அவசியம்

  • வலைதள மூடுவிழா பற்றிய அறிவிப்பை வெளியிட்ட லீஃப் கே.புரூக்ஸ், “இணையத்தில் எந்த வலைதளத்தையும் நன்மைக்காகவும் பயன்படுத்த முடியும்.. தீமைக்காகவும் பயன்படுத்த முடியும். நாங்கள் ஒமெகல் நிறுவனத்தை முடிந்த அளவு அனைவருக்கும் பாதுகாப்பானதாக மாற்ற முனைந்தோம். ஆனால், இப்போது இந்நிறுவனத்தை நடத்துவதற்கான நிதியும் இல்லை, மன உறுதியும் இல்லை” எனக் குறிப்பிட்டிருந்தார். சமூக வலைதளங்கள் நமக்கு ஒருபக்கம் வரம்தான் என்றாலும், அதன் மீதான கண்காணிப்புகளும் அவசியமாகின்றன.
  • இளைஞர்கள் உலவும் இடம் மிகவும் பாதுகாப்பாக உள்ளதா என்பதை நாம் மீண்டும் மீண்டும் கண்காணித்து, விவாதித்து உறுதிசெய்ய வேண்டியுள்ளது. ஒரு சமூக வலைதள நிறுவனம் பாலியல் துன்புறுத்தலுக்காகவும் மனநலச் சிக்கல்களுக்காகவும் ஒரு சிறுமியின் கடினமான போராட்டத்துக்குப் பின்பு மூடப்பட்டிருக்கிறது என்பது, நிறுவனத் தரப்பினருக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடியது என்றாலும், மறுபக்கம் துணிச்சலுடன் புகார் அளிக்க முன்வந்தால், இணையப் பாதுகாப்பில் ஓரளவேனும் முன்னேற்றம் காண முடியும் எனும் நம்பிக்கையும் துளிர்க்கிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (24 - 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories