TNPSC Thervupettagam

முதலாளிகளின் நலனுக்காகத் தொழிலாளர்களை வஞ்சிப்பதா

April 25 , 2023 627 days 417 0
  • பாஜக தலைமையிலான மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக, அக்கட்சி ஆட்சி செய்யாத மாநில அரசுகளை ஒருங்கிணைப்பதில் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு முன்முயற்சி எடுத்துவருகிறது. ஆனால், மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டத்திருத்தத்தை - பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் அமல்படுத்தப்படாத சட்டத்திருத்தத்தை - எவ்விதத் தயக்கமும் இன்றி அமல்படுத்துகிறது தமிழ்நாடு அரசு. நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் தொழிற்சாலைகள் சட்டத்தில் 65ஏ சட்டத்திருத்தத்தை, கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி அரசு நிறைவேற்றி உள்ளது.

சட்டம் என்ன? திருத்தம் என்ன?

  • தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் பணியிடச் சூழ்நிலைகளையும் (Working conditions), வேலை நேரத்தையும், ஊதியத்துடன் வழங்க வேண்டிய விடுமுறைகளையும் ஒழுங்குபடுத்துவதற்காக, ‘தொழிற்சாலைகள் சட்டம் 1948’ இயற்றப்பட்டது. குறிப்பாக, பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் தொழில் மற்றும் பணி இடர்களிலிருந்து (Industrial and occupational hazards) பாதுகாப்பது இச்சட்டத்தின் முக்கிய இலக்காகும்.
  • இச்சட்டத்தில் தொழிலாளர்களின் வேலை நேரம் (Working hours of adults) என்ற பிரிவில், விதிவிலக்குகள் அளித்தல் (Power to make exempting rules) என்பதை விதியாக ஏற்று, 65ஏ சட்டத் திருத்தத்தை முன்வைத்துள்ளது தமிழ்நாடு அரசு.
  • தொழிலாளர்களின் வேலை நேரம், மிகை நேர வேலை, அதற்கான ஊதியம், மிகை நேர வேலையை ஈடுகட்டுவதற்கான விடுமுறை, பணியின்போது விட வேண்டிய ஓய்வு நேரம் ஆகிய வகை இனங்களில் இதுவரை தொழிலாளர்கள் பெற்ற உரிமைகளை முழுமையாக இழப்பதற்கு இச்சட்டத் திருத்தம் வழிவகை செய்கிறது.
  • இந்திய அரசால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம், திமுகவின் தொழிலாளர் அமைப்பான தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் (தொ.மு.ச.) அங்கம் வகிக்கும் மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு மேடையில் உள்ள அமைப்புகளின் தொடர் போராட்டத்தின் வாயிலாக நடைமுறைக்குக் கொண்டுவரப்படவில்லை.
  • இந்நிலையில், தொழிற்சாலைகள் சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டுவருவதில் தமிழ்நாடு அரசு பெருமைப்பட்டுக் கொள்கிறது. தொழிற்சாலைகளை நடத்தும் முதலாளிகளுடைய சங்கங்களின் விருப்பத்துக்காக இச்சட்டத்திருத்தத்தை அரசு கொண்டுவந்துள்ளதாக விளக்க உரையில் சொல்லப்பட்டுள்ளது.

சட்டத் திருத்தம் யாருக்கானது?

  • தொழிலாளர்களின் - குறிப்பாக பெண் தொழிலாளர்களின் நலனுக்காக இது கொண்டுவரப்பட்டுள்ளதாக மார் தட்டுகிறது மாநில அரசு. ஆனால், உண்மை என்னவென்பதை ஊடகங்களிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு சொல்லிவிட்டார். அதாவது, அந்நிய மூலதனம் தமிழ்நாட்டுக்கு வருவதற்கு ஏதுவாகத் தொழிலாளர் சட்டங்களில் இதுவரை இருந்துவந்த உறுதித்தன்மையை நெகிழ்வுக்கு உள்ளாக்கியிருக்கிறது அரசு.
  • சந்தையின் தேவைக்கும் சூழலுக்கும் உகந்த வகையில், எப்போதெல்லாம் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய தேவை முதலாளிகளுக்கு ஏற்படுகிறதோ அப்போது எந்தக் கேள்வியும் கேட்காமல் தமது உழைப்பு சக்தியைக் கொடுத்தே தீர வேண்டும் என நிர்ப்பந்திக்கிறது இந்தச் சட்டத்திருத்தம். அதுவும் இந்தியாவில் ‘மே தின’த்தின் நூற்றாண்டு நிறைவு தினத்தையொட்டி இது நடந்தேறியிருக்கிறது.
  • கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாகச் சட்டபூர்வமாக ஆக்குவதற்கான கோரிக்கைகள் முதலாளிகள் தரப்பிலிருந்து வந்துகொண்டுதான் இருந்தன. அதேவேளையில், இடதுசாரித் தொழிற்சங்கங்கள் மட்டுமின்றி மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி உள்ளிட்டோரும் வேலை நேரத்தைச் சட்டபூர்வமாக 6 மணி நேரமாக மாற்ற வேண்டும் எனத் தொடர்ந்து பேசிவந்துள்ளதை, ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’ இன்று மறந்தது ஏன் என்றுதான் புரியவில்லை. இதோ, எதிர்பார்த்ததைப் போல, 12 மணி நேர வேலை சட்டத்திருத்த மசோதா வரவேற்கத்தக்கது எனத் தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

விதியாகும் விதிவிலக்குகள்:

  •  தொழிற்சாலை திருத்தச் சட்டம் 65ஏ மூலமாக 51, 52, 54, 55, 56, 59 ஷரத்துக்கள்வழி தொழிலாளர்கள் பெற்றுவந்த உரிமை, இந்தச் சட்டத்திருத்தத்தின் மூலம் முழுமையாகப் பறிக்கப்பட்டுவிட்டது. ஒரு நாளின் மொத்த வேலை 9 மணி நேரம், ஓய்வு நேரத்தைச் சேர்த்து ஒரு நாளின் மொத்த வேலை நேரம் 10:30 மணி நேரம், கூடுதல் நேர வேலை (overtime work) ஒரு வாரத்தில் 48 மணி நேரம் எனச் சட்டரீதியாகப் பெறப்பட்ட உரிமைகள் தற்போது திமுக அரசால் பறிக்கப்படுகின்றன. எவ்வித வரம்புகளும் இன்றி முதலாளிகள் தங்கள் விருப்பத்துக்கு இணங்க நேர வரையறை வைத்துக்கொள்ள அரசு வழிவகுத்துவிட்டது.
  • அதிலும், கூடுதல் நேர வேலைக்காகத் தொழிலாளி பெற வேண்டிய கூடுதல் ஊதியம் சட்டரீதியாகப் பறிக்கப்பட்டுவிட்டது. கர்நாடக மாநிலத்தில் ஆட்சியில் உள்ள பாஜக, கடந்த மாதம் இத்தகைய சட்டத்திருத்தத்தை அங்கு மேற்கொண்டது. அதில் வேலை நேரம் அதிகபட்சம் 48 மணி நேரமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
  • ஆனால், தமிழ்நாடு சட்டமன்றத்தில்நிறைவேற்றப்பட்ட சட்டத்திருத்தத்திலோ அதிகபட்சஅளவு (Upper ceiling) குறித்து வரையறுக்கப்படவில்லை. அதாவது, முதலாளிகள் தங்கள்விருப்பம் போல் தொழிலாளிகளின் உழைப்பைச்சுரண்டுவதற்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இயந்திரத்துக்காக மனிதர்களா?

  • உற்பத்தித் துறையில் நவீன இயந்திரங்கள் உருவாக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. அதன் காரணமாக மனிதர்களின் உழைப்பு நேரம் குறைக்கப்பட்டு, கூடுதல் பொருளீட்டி வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டாடுவதற்கான சூழல்கள் உருவாக்கப்பட வேண்டும். ஏன் இவ்வாறு நடக்கவில்லை அல்லது இத்தகைய சூழல் உருவாவதற்கு எந்தத் தளத்தில் பயணிக்க வேண்டும் என்ற உரையாடல்கள் நடைபெற வேண்டும்.
  • அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் வேலை நேரம் கணிசமாகக் குறைக்கப்பட்டுவரும் சூழலில், மனிதவளக் குறியீடுகளில் ஐரோப்பிய நாடுகளோடு ஒப்பிட்டு, தமிழ்நாடு மேம்பட்டிருப்பதாகப் பெருமைப்பட்டுக்கொள்ளும் ஆட்சியாளர்கள், ‘வேலை நேரத்தை’ மட்டும் கண்டுகொள்ளாதது ஏன் என்பது இன்னொரு கேள்வி.
  • அதிலும் குறிப்பாக, உற்பத்தித் துறையில் உழைப்புப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் பெரும்பாலும்பிற்படுத்தப்பட்ட, பட்டியல் சாதிகளைச் சேர்ந்தவர்கள்தாம். குறிப்பாக, பெண் தொழிலாளர்கள் கணிசமானவர்கள். நிலைமை இவ்வாறு இருக்க, சமூக நீதி அடிப்படையில் அரசியல் நடத்தும் திமுக இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல், தொழிற்சாலைகள் சட்டத்தில் இப்படி ஒரு திருத்தம் கொண்டுவந்தது நியாயமா?
  • இப்படியான கேள்விகளை, தமிழ்நாடு அரசு நோக்கி திராவிட, தலித், பொதுவுடமைச் சிந்தனையாளர்கள் வலுவாக எழுப்ப வேண்டும். இந்த மசோதா நிறுத்தி வைக்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டத்திருத்த மசோதாவைத் திரும்பப் பெறுவதே முழுமையான தீர்வை வழங்கும். இந்தச் சட்டத்திருத்தம் திரும்பப் பெறப்படும்வரை போராட வேண்டும். கண்ணியமிக்க வாழ்க்கை உறுதிசெய்யப்படாத பிரிவினருக்கு அதை உறுதிப்படுத்த அந்தப் போராட்டம் வழி வகுக்கும்.

நன்றி: தி இந்து (25 – 04 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories