TNPSC Thervupettagam

முதலீட்டாளர்களுக்கு கொண்டாட்டம்தான்

June 28 , 2024 151 days 234 0
  • பங்குச் சந்தையில் நடப்பது சூதாட்டம்தான் என்று ஒருசிலர் சொல்லி வந்தாலும், நீண்டகால அடிப்படையில் நல்ல வலுவான நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துவரும் முதலீட்டாளர்கள் நல்ல லாபத்தைப் பெற்று வருகின்றனர். 30 முதல் தர நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் வியாழக்கிழமை 79,000 புள்ளிகளைக் கடந்து புதிய வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியது. இதேபோல, 50 முதல் தர நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டியும் 24,000 புள்ளிகளைக் கடந்து புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளது.
  • பங்குச் சந்தையைப் பொருத்தவரையிலும், 2024- ஆம் ஆண்டு முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல ஆண்டாக அமைந்துள்ளது. கடந்த ஆண்டுகளில் பங்குச்சந்தை பல்வேறு சவால்களை சந்தித்திருந்தாலும், அவற்றை எல்லாம் திறம்பட எதிர்கொண்டு முதலீட்டாளர்களிடம் நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தியுள்ளது. சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் ஓராண்டில் 28% வரை உயர்ந்துள்ளன.
  • உலகளாவிய பொருளாதாரக் காரணிகள், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, மத்தியில் ஆளும் அரசின் பொருளாதார சீர்த்திருத்த நடவடிக்கைகள், அரசியல் சூழல் ஆகியவற்றின் தாக்கம் அனைத்தும் உடனடியாக பங்குச் சந்தையில் அவ்வப்போது எதிரொலிப்பதன் காரணமாக சந்தையில் ஏற்றமும், இறக்கமும் இருப்பது சகஜமான ஒன்று என்பதை அனைவரும் அறிவர்.
  • இந்த அடிப்படையில் பார்த்தால், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி-50, நிஃப்டி நெக்ஸ்ட்-50, நிஃப்டி மிட்கேப், நிஃப்டி ஸ்மால் கேப் பட்டியல்களில் இடம்பெற்றுள்ள பல முன்னணி நிறுவனப் பங்குகள் கடந்த ஓராண்டில் நல்ல லாபத்தை அளித்துள்ளன.
  • நிஃப்டி-50 பட்டியலில் சில நிறுவனப் பங்குகள் மட்டுமே கடந்த ஓராண்டில் லேசான சரிவைச் சந்தித்துள்ளன. அதே சமயம், சில முன்னணிப் பங்குகள் 100 சதவீதத்துக்கு மேலும் லாபம் ஈட்டிக் கொடுத்துள்ளன. ஓராண்டு கணக்கில் பார்த்தால் ஆதாயப் பட்டியலில்தான் அதிகமான பங்குகள் உள்ளன.
  • இதே போல முன்னணி நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி ஆட்டோ குறியீடு 70%, மெட்டல் 60%, பிஎஸ்யு பேங்க் குறியீடு 80%, ரியால்ட்டி 115%, எண்ணெய்-எரிவாயு குறியீடு 60% உயர்ந்துள்ளது. இவை அனைத்தும் ஓராண்டு சாதனை. இதனால், நீண்ட கால அடிப்படையில் முதலீடுகளை மேற்கொள்வோருக்கு கணிசமான லாபத்தை பங்குச்சந்தை அளித்துள்ளது என்பதை உணர முடியும். நீண்ட கால அடிப்படையில் நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய மியூச்சுவல் ஃபண்ட் நிதித் திட்டங்களும் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளன.
  • இந்நிலையில், அடுத்து வரும் ஆண்டுகளில் சென்செக்ஸ் 1 லட்சம் புள்ளிகûளைத் தொட்டுவிடும் என்ற நேர்மறை எதிர்பார்ப்புள்ளது. மேலும், உலக அளவில் பணப்புழக்கமும் பொருளாதாரமும் வளர்ச்சி பெறும்பட்சத்தில் சென்செக்ஸ் அந்த இலக்கை அதிவிரைவாக எட்டினால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.
  • இந்தியாவைப் பொறுத்தவரையில், நல்ல நிலையில் உள்ள பருவமழை, வளர்ச்சி பெற்று வரும் கிராமப் பொருளாதாரம், தொழில் துறை வளர்ச்சி, உத்வேகம் பெறும் பொருளாதார வளர்ச்சி, மத்திய அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளில் தொழில் துறையினர் கொண்டுள்ள அதீத நம்பிக்கை ஆகியவை பங்குச்சந்தை மேலும் உத்வேகம் பெறுவதற்கு முக்கியக் காரணிகளாக உள்ளன என்று தர நிர்ணய நிறுவனங்கள் கூறுகின்றன.
  • இவை தவிர ஏற்றுமதி, நுகர்வுத் திறன், பொதுத் துறை வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவிக்கும் கூடுதல் மூலதனம் ஆகியவையும் பங்குச் சந்தைக்கு மேலும் வலுசேர்க்கும். மேலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2024-25 நிதியாண்டில் 7 சதவீதத்துக்கு மேல் இருக்கும் என ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கணித்துள்ளது. இந்நிலையில், பங்குச் சந்தை மேலும் வலுப்பெறுவதற்கே அதிக வாய்ப்பு உள்ளதாக சந்தை வட்டாரங்கள் கருதுகின்றன. இதனால், மிகுந்த இடர்ப்பாடுள்ள பங்குச் சந்தையில் முதலீடுகளை மேற்கொள்ள அச்சப்படும் முதலீட்டாளர்கள், மிகவும் குறைவான இடர்ப்பாடு கொண்ட மியூச்சுவல் ஃபண்ட் என்கிற பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடுகளை துணிந்து மேற்கொள்ளலாம் என்று நிதி ஆலோசகர்கள் கூறுகின்றனர்.
  • இந்த ஆண்டில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள முன்னணி நிறுவனங்களில் சில நிறுவனங்கள் மட்டுமே எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. பெரும்பாலான முன்னணி நிறுவனங்களின் வருவாய், நிகர லாபம் ஏறுமுகத்தில் இருந்துள்ளது. இந்த நிறுவனப் பங்குகளும் நல்ல லாபம் அளித்துள்ளன.
  • வளர்ந்து வரும் நாடுகளின் பங்குச் சந்தைகளில் இந்திய பங்குச் சந்தை, வரும் ஆண்டுகளில் மிகச் சிறப்பான ஏற்றத்தைப் பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இது முதலீட்டாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனப் பங்குகளின் சந்தை மூலதன மதிப்பு ரூ.450 லட்சம் கோடியை நெருங்கியுள்ளது. இதுதவிர அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப் பெரும்பான்மை பெறாவிட்டாலும், கூட்டணியாகத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது. இது பங்குச்சந்தையில் "காளை'யின் ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தும் என்று சந்தை வல்லுநர்கள், ஆய்வாளர்கள் நம்புகின்றனர். இதனால், இந்த ஆண்டும் முதலீட்டாளர்களுக்குக் கொண்டாட்டம்தான் என்பது மறுப்பதற்கில்லை!

நன்றி: தினமணி (28 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories