TNPSC Thervupettagam

முதியோரைத் தாக்கும் நோய்களை வெல்லும் வழிகள்

November 30 , 2024 44 days 62 0

முதியோரைத் தாக்கும் நோய்களை வெல்லும் வழிகள்

  • இந்தியாவில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்திய மக்கள் தொகையில் 10% பேர் 60 வயதைக் கடந்தவர்கள் என சமீபத்திய புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அறுபது வயதைக் கடந்தவர்களைச் சில குறிப்பிட்ட நோய்கள் தாக்கும். இதை ஆங்கிலத்தில் ‘Geriatric Giants’ என அழைக்கிறோம்.
  • இதனால் பாதிக்கப்பட்ட முதியவர்களில் பலர் நகர முடியாமல் உடலில் போதிய பலமில்லாததால் அடிக்கடி கீழே விழுவர்; சிலரால் சிறுநீரைக் கட்டுப்படுத்த முடியாது. அறிவுத்திறன் குன்றுதல், உடல் தளர்ச்சி, தசை இழப்பு, குறைந்த ரத்த அழுத்தம், மனச்சோர்வு, பதற்றம், எலும்பு பலவீனம், மூட்டுத் தேய்மானம், மூட்டு விறைப்பு போன்ற வற்றால் பாதிக்கப்படுவர்.

நகர முடியாமை:

  • இந்தியாவில் 80 வயதைக் கடந்த முதியவர்களில் 44% பேர், அன்றாடச் செயல்பாடுகளுக்குப் பிறரைத்தான் நம்பி யுள்ளனர். குளிப்பதற்கோ, உணவருந்து வதற்கோ, இயற்கை உபாதைகளான சிறுநீர், மலம் கழிக்கவோ பிறரது உதவியில்லாமல் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். மூளை நரம்பு பாதிப்பு, ரத்த ஓட்டப் பாதிப்பினால் பக்கவாதம் ஏற்பட்டுக் கால், கைகள் செயலிழந்து போகின்றன. இதன் காரணமாக முதியோர் தனித்து இயங்க முடியாத நிலை ஏற்படுகிறது.
  • இதைத் தவிர்க்க ஆரம்ப நிலையிலேயே நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் போன்ற தொற்றா நோய்களை அடையாளம் கண்டு முறையான தொடர் சிகிச்சை எடுத்துவந்தால், முதுமையில் மோசமான பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

சமநிலையின்மை:

  • சில முதியவர்கள் நிற்கும்போதும் நடக்கும்போதும் சமநிலையை இழந்து அடிக்கடி விழுந்துவிடுவார்கள். முதல் முறை விழும்போதே முதுமை உணர்வைப் புரிந்துகொண்டு கைத்தடிகளைக் கொண்டு நடக்கப் பழக வேண்டும். மூத்த குடிமக்கள் குளியல் அறையில் விழுந்து இடுப்பு, மூட்டு எலும்பு உடைவதும், இறப்பதும் சாதாரண நிகழ்வுகளாகிவிட்டன.
  • பார்வைக் குறைபாடு, காது கேளாமை, உதறுவாதம், பக்கவாதம், பலதரப்பட்ட மருந்துகளின் பின்விளைவுகள் உள்ளிட்டவை சமநிலையின்மைக்குக் காரணமாகின்றன. இதற்கு முதுமையில் கண்புரையை நீக்கி, செவியின் கேட்கும் திறனைச் சரிசெய்துகொள்ள வேண்டும். நீங்கள் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளின் எண்ணிக்கையை மருத்துவரின் அறிவுரைப்படி குறைத்துக் கொள்வது நலம்.

சிறுநீர் அடங்காமை:

  • 65 வயதைக் கடந்த முதியவர்களில் 60% பெண்களும் 35% ஆண்களும் சிறுநீரை அடக்க முடியாமல் பாதிக்கப்படுகின்றனர். 65 வயதைக் கடந்த பெண்களுக்குக் கருப்பை, சிறுநீர்ப்பை இறக்கத்தாலும் இந்தப் பிரச்சினை ஏற்படுகிறது. ஆண்களுக்குச் சிறுநீர்ப்பையின் அடியில் புராஸ்டேட் வீக்கம் காணப்படுகிறது. இவ்வீக்கம் சிறுநீரை வெளியேறவிடாமல் தொல்லை தருகிறது. மேலும், முதுமையில் தசைகள் பலவீனமடைவதால் சிறுநீரை அடக்க முடியாமல் அவதிக்கு உள்ளாகின்றனர். சிறுநீர் அடங்காமையைக் குணப்படுத்தும் சிறப்பு மருத்துவர்கள் மூலம் இதற்குச் சிகிச்சை பெறலாம்.

ஞாபக மறதி:

  • முதுமையில் மூளை நரம்புகளில் தொடர் தேய்மானம் ஏற்படுகிறது. இதனால் முதியவர்களிடம் ஞாபக மறதி அதிகரிக்கிறது. மூளை நரம்புத் தேய்மானம் மட்டுமல்லாமல் நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், பக்கவாதம், மூளையில் ரத்தக் கசிவு, ரத்த சோகை, தைராய்டு குறைபாடு, அல்சைமர், டிமென்சியா போன்றவற்றாலும் ஞாபக மறதி ஏற்படும். முதுமையில் நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், உதறுவாதம் போன்ற நோய்களுக்குத் தொடர் சிகிச்சை அவசியம். ரத்த சோகை. தைராய்டு குறைபாடுகளை முழுவதுமாகக் குணப்படுத்த முயல வேண்டும்.

உடல் தளர்ச்சி:

  • இந்தியாவில் 55 சதவீத முதியவர்கள் உடல் தளர்ச்சியால் பாதிக்கப்படு கின்றனர். 30 வயது முதலே உடல் திசுக்கள் சீராகத் தேய ஆரம்பிக்கும். இதனால், உடல் திசுக்களின் செயல்திறன் குறையும். இதைத் தொடர்ந்து உடல் உறுப்புகள் தேய்மானம் அடைந்து, அவற்றின் உடல் செயல்பாடும் குறையும். இதன் விளைவாக உடலில் பலவீனம் ஏற்படுகிறது. உடல் தளர்ச்சியால் பெரும்பாலும் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
  • முதுமையுடன் கூடிய நாள்பட்ட நோய்களான நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், புற்றுநோய் - அவற்றுக்கான சிகிச்சையும் மனச்சோர்வு சார்ந்த மனநல பாதிப்புகளும் உடல் தளர்ச்சிக்குக் காரணிகளாகும். உடல் தளர்ச்சியைக் குறைக்க முதுமையில் ஊட்டச்சத்து நிறைந்த முறையான உணவை உண்ண வேண்டும். போதுமான அளவு உறக்கத்துடன் அன்றாட வாழ்வில் உடற்பயிற்சியையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

சித்த பிரமை:

  • நாள்பட்ட தொற்று நோய்கள், திடீரென ஏற்படும் சுவாசக் குழாய்த் தொற்று, சிறுநீர்த் தொற்று, வைரஸ் கிருமி தொற்று போன்றவற்றால் முதியவர்கள் சுயநினை வைத் திடீரென இழக்கக்கூடும். அச்சூழலில் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறியாமல் சித்த பிரமை பிடித்தவரைப் போல் பேசிக்கொண்டிருப்பார்கள்.
  • சிறுநீர்த் தொற்று, நுரையீரல் தொற்று, டைபாய்டு காய்ச்சல், ரத்த அழுத்த உயர்வு, நீரிழிவு நோய், தாழ்நிலை ரத்தச் சக்கரை, நீர்ப் பற்றாக்குறை, தாது உப்புகளின் குறைபாடு போன்றவையும் வயதான காலத்தில் சித்த பிரமையை ஏற்படுத்தலாம்.
  • சில மருத்துகளின் பின்விளைவுகளும் முதியோரிடத் தில் சித்த பிரமையை ஏற்படுத்தலாம். அவ்வாறான சூழலில் முதியவர்களின் மருந்துப் பயன்பாட்டில் உறவினர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உடனடி சிகிச்சைகளே சித்த பிரமைக்குத் தீர்வாகும்.
  • வீடுகளில் வயதானவர்கள் இருக்கும்போது தொடர் சிகிச்சைக்காக அவர்கள் உண்ணும் மாத்திரை பயன்பாட்டை மருத்துவர் ஆலோசனை இன்றி நிறுத்தக் கூடாது. முதியவர்களைப் பிள்ளைகள், உறவினர்கள் அவர்கள் நேரடிப் பார்வையில் வைத்துப் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். இவற்றின் மூலம் முதியோர்களைப் பாதிக்கும் கடும் நோய்களிலிருந்து பாதுகாக்க முடியும்.

நன்றி: இந்து தமிழ் திசை (30 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories