TNPSC Thervupettagam

முதியோரைப் பேணுவோம்

June 15 , 2023 389 days 322 0
  • ஐக்கிய நாடுகள் மக்கள்தொகை கணிப்பின்படி, 2019-இல் உலகில் 70.3 கோடி மக்கள் 65 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள். இது உலக மக்கள்தொகையில் 16% ஆகும். உலக முதியோர் மக்கள்தொகையில் இந்தியா இடம் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்திய அரசு 1999-ஆம் ஆண்டு வகுத்துள்ள தேசிய கொள்கை 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதினரை மூத்த குடிமக்கள் என்று வரையறுத்துள்ளது.
  • தற்போது கேரள மாநில மக்கள்தொகையில் முதியவர்கள் சதவீதம் 16.5 ஆகவும், தமிழகத்தில் 13.6 ஆகவும் இருக்கிறது. அடுத்தடுத்த இடங்களில் ஹிமாசல் (13.1%), பஞ்சாப் (12.6%), ஆந்திரம் (12.4%) ஆகிய மாநிலங்கள் உள்ளன. இதே போல, நாட்டிலேயே முதியவர்கள் மிகக் குறைவாக கொண்ட மாநிலங்களின் பட்டியலில் பிகார் (7.7%) முதலிடத்திலும், அடுத்தடுத்த இடங்களில் உத்தர பிரதேசம் (8.1%), அஸ்ஸாம் (8.2%) ஆகிய மாநிலங்களும் இருக்கின்றன.
  • வரும் 2031-இல் கேரளத்தில் 20.9%, தமிழகத்தில் 18.2%, ஹிமாசலில் 17.1%, ஆந்திரத்தில் 16.4%, பஞ்சாபில் 16.2% என்று முதியவர்களின் விழுக்காடு இருக்கும் என ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. ஒரு மாநிலத்தில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது அங்கு வளர்ந்த பொருளாதாரம், மருத்துவ வசதிகள் இருப்பதற்கான அறிகுறி ஆகும்.
  • முதியோர் சிலர் குடும்பத்தினரோடும் சிலர் தனித்தும் வாழ்கின்றனர். வசதி படைத்தவர்கள் தம் கடமைகள் முடிந்த பிறகு, முதியோர் இல்லத்தில் காலம் கழிக்கின்றனர். தனித்து வாழும் ஆண்களை விட தனித்து வாழும் பெண் முதியோர்கள் படும் வேதனை மிகக் கொடுமையானது.
  • பெற்றோர்களிடமிருந்து எல்லா உடைமைகளையும் பயமுறுத்திப் பறிக்கும் இரக்கமற்ற பிள்ளைகளும் உள்ளனர். பிள்ளைகளுக்கு தங்கள் சொத்துகளை எழுதிக்கொடுத்தும் சில பெற்றோர்கள் சரிவர பராமரிக்கப்படுவதில்லை. உடல், மன பலகீனம், மறதி, காரணமில்லாத எரிச்சல், கோபம், முதுமையால் வரும் நோய், உடல் தளர்வு, புறக்கணிக்கப்படுதல், தனிமை, வறுமை, சமூக அந்தஸ்தில் சரிவு போன்றவை முதியோர் எதிர்நோக்கும் முக்கிய சவால்களாகும்.
  • முதுமையில் மருத்துவ சிகிச்சைக்கான செலவுகள் அதிகமாக வாய்ப்பு அதிகம். எனவே வாய்ப்புள்ள அரசு அல்லது இதர மருத்துவ காப்பீட்டுத் திட்டங்களில் அவர்கள் இணைவது அவர்களுக்கு மனநிம்மதியைத் தரும். உடலும் மனமும் அனுமதிக்கும் காலம் வரை அனுபவம் உள்ள ஏதேனும் ஒரு பகுதி நேர பணியில் சேரலாம்.
  • முதியோர் எந்த நிலையிலும் தான் உயிருடன் இருக்கும்வரை தனக்கு சொந்தமான சொத்து, வங்கித்தொகை போன்றவற்றை தனது வாரிசுகள் பெயரில் மாற்றக் கூடாது. அவை அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளவரைதான் அவர்களுக்கு ஓரளவாவது பிள்ளைகளின் ஆதரவு கிடைக்கும்.
  • தங்களைப் பராமரித்துக் கொள்ள போதுமான பொருளாதார வசதியோ சொத்துகளோ இல்லாத முதியோர், "பெற்றோர், மூத்த குடிமக்கள் பராமரிப்பு - நல சட்டம் 2007'-இன் கீழ் அவர்களின் வாரிசுகளிடமிருந்து பராமரிப்புத் தொகையினை சட்டப்படி பெற முடியும்.
  • பிள்ளைகள் இல்லாத முதியோர் தங்கள் சொத்தை அனுபவித்துக் கொண்டிருப்பவர் அல்லது தங்கள் காலத்திற்குப் பிறகு தங்கள் சொத்தை அடைய இருப்பவர் ஆகியோர் மீதும் பராமரிப்புத் தொகை கோரி மனு செய்யலாம். கோட்டாட்சியர் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள ஓர் உரிமையியல் நீதிமன்றத்திற்கு சமமான தீர்ப்பாயத்தில் இதற்கான மனுவினை தாக்கல் செய்யலாம்.
  • தீர்ப்பாயம் மூத்த குடிமக்களுக்கு தேவையான உணவு, உடை, இருப்பிடம், மருத்துவ வசதி ஆகியவற்றுக்குத் தேவையான தொகையைப் பெற்றுத்தரும்.
  • முதியோர் தங்களுக்கான அரசின் சலுகைகளை பயன்படுத்திக் கொள்வதில் மேலும் அதிக முனைப்புடன் செயல்பட வேண்டும். முதியோரைப் பாதுகாக்க, தனியாக வாழும் முதியோரின் தொடர்பு எண்களை இளைஞர்கள் அறிந்து கொள்ளலாம். அவற்றை அவர்களுக்கான அரசின் உதவி எண்களில் அளித்து அவர்களிடையே தொடர்பு ஏற்படுத்தி உதவலாம்.
  • ஒவ்வொரு ஊரிலும் முதியோருக்கென சமுதாய மையம் ஒன்றைத் தொடங்க வேண்டும். அவர்களுக்கான உணவு, நாளேடுகள், வானொலி, தொலைக்காட்சி, மருத்துவ வசதி போன்றவற்றை ஊராட்சி மூலம் இலவசமாக அளிக்கலாம். அதிகரித்து வரும் முதியோர் மக்கள்தொகைக்கேற்ப, நமது திட்டங்களும் கொள்கைகளும் மாற வேண்டியது உடனடித் தேவையாகும்.
  • எத்தனையோ ஆண்டு காலமாக, கால நேரம் பார்க்காமல் எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் உழைத்து வந்த முதியவர்கள் இனியாவது நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழவேண்டும். அப்போதுதான் இந்தியாவை முழுமையான வளர்ச்சிஅடைந்த ஒரு நாடாக கருதமுடியும்.
  • இதற்கான விழிப்புணர்வு பள்ளியிலிருந்தே தொடங்க வேண்டும். இன்றைய இளைஞர்கள், தாங்கள் நாளைய முதியவர்கள் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் இளையோர் - முதியோர் உறவு வலுப்படும்.
  • இன்று (ஜூன் 15) உலக முதியோர்  அவமதிப்பு விழிப்புணர்வு நாள்.

நன்றி: தினமணி (15 – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories