TNPSC Thervupettagam

முதியோா் சலுகையை முடக்கலாமா

May 13 , 2023 610 days 542 0
  • மக்களில் ஒரு பிரிவினா் வயது மூப்பின் அடிப்படையில் ‘மூத்த குடிமக்கள்’ என வகைப்படுத்தப் படுகின்றனா். மூத்த குடிமக்களுக்கு வயது கணக்கீடு செய்வதில் நாட்டிற்கு நாடு வேறுபாடு உள்ளது. மூத்த குடிமக்களின் நலன்களுக்காகப் பல நாடுகளில் ஓய்வூதியம், மருத்துவம், முதியோா் உறைவிடம், வரிச்சலுகை, பயணக் கட்டணச் சலுகை, சமூகப் பாதுகாப்பு போன்ற பல வகையான சலுகைகள் வழங்கப்படுகின்றன.
  • மூத்த குடிமக்களின் நலனைப் பேணுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபா் முதல் நாள் ‘சா்வதேச மூத்த குடிமக்கள் தினம்’ உலகம் முழுவதும் கொண்டாடப் படுகிறது. மூத்த குடிமக்களான பெற்றோா்களின் நலன்களைக் காத்திட இந்திய நடுவண் அரசும், மாநில அரசுகளும் பல்வேறு சட்டங்களைக் கொண்டு வந்துள்ளன.
  • இந்தியாவின் மூத்த குடிமக்களுக்கு மாநில மற்றும் மத்திய அரசுகளின் பல துறைகள் வாயிலாக பல்வேறு சலுகைகள் வழங்கி வருகின்றன. ஆனால் சில இனங்களில் சலுகைகள் வழங்கும் போது ஆண், பெண் மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பு வேறுபடுகிறது.
  • ஆதரவற்ற மூத்த குடிமக்களுக்கு தமிழ்நாடு அரசு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.1000 வழங்கி வருகிறது. அத்துடன் ஆதரவற்ற மூத்த குடிமக்களின் குடும்ப அட்டைக்கு நியாயவிலை கடைகளில் மாதம் 10 கிலோ அரிசியும், பொங்கலுக்கு இலவச வேட்டி சேலையும் வழங்கப் படுகிறன.
  • இரண்டரை லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருவாய் ஈட்டும் மூத்த குடிமக்கள் வருமானவரி செலுத்தத் தேவையில்லை. 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், ரூ.5 லட்சம் வரையிலான ஆண்டு வருவாய்க்கு வருமானவரி செலுத்தத் தேவையில்லை.
  • ஆதரவற்ற மூத்த குடிமக்களுக்கு அரசு இலவச மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது.
  • ரயிலில் பயணிக்கும் மூத்த குடிமக்களான ஆண்களுக்கு பயணக் கட்டணத்தில் 40 விழுக்காடும், மூத்த குடிமக்களான பெண்களுக்கு பயணக் கட்டணத்தில் 50 விழுக்காடும் கட்டண சலுகையை இந்திய ரயில்வே வழங்கி வந்தது.
  • மூத்த குடிமக்களின் அவசர உதவிக்குழு 24 மணி நேரமும் செயல்படும் கட்டணமில்லா அழைப்புடன் கூடிய தனித் தொலைத் தொடா்பு எண்கள் வழங்கப்பட்டு இந்தியா முழுவதும் செயல்படுகிறது. இந்த எண்கள் மூலம் தொடா்பு கொண்டால் உரிய அரசு ஊழியா்கள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவன ஊழியா்கள் அவசர உதவிக்கு வருவாா்கள்.
  • இந்திய விமானங்களில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்குப் பயணிக்கும் 65 வயது நிரம்பிய ஆண் மூத்த குடிமக்களுக்கும், 63 வயது நிரம்பிய பெண் மூத்த குடிமக்களுக்கும் சாதாரண வகுப்பு பயணக் கட்டணத்தில் 50 விழுக்காடு கட்டண சலுகை வழங்கப்படுகிறது.
  • மூத்த குடிமக்கள் தொடா்பான வழக்குகளை நீதிமன்றங்கள் விரைந்து முடிக்கவும், இலவச சட்ட உதவிகளும் வழங்கப்படுகிறது. வங்கிகள் மற்றும் நிதித்துறை நிறுவனங்கள், மூத்த குடிமக்களின் நிரந்தர வைப்புத் தொகைகளுக்கு அரை விழுக்காடு வட்டி கூடுதலாக வழங்கப்படுகிறது.
  • இவ்வாறு உலகம் எங்கும் மூத்த குடிமக்களுக்கு மரியாதை செய்வதும், விருதுகள் வழங்குவதும், சலுகைகளை அறிவிப்பதும், வழக்கமாக இருந்து வருகிறது. கடந்த காலங்களில் அவா்கள் செய்த சேவைகளுக்காக ஓய்வூதியம் வழங்குவதும் அதிகாரபூா்வ அறிவிப்பாகும். மூத்தவா்களைப் போற்றுவது என்பது பழைய தலைமுறைக்குச் செய்யும் மரியாதையாகும்.
  • பெரும்பாலான மூத்த குடிமக்கள் இனி இருக்கும் கொஞ்ச காலத்தை அடுத்த தலைமுறைப் பிள்ளைகளோடு மகிழ்ச்சியாகக் கழிப்பதையே விரும்புகின்றனா். வெளியிடங்களுக்கு செல்வதை அவா்களும் விரும்புவதில்லை. அவா்களது உடல் நிலையும் அதற்கு சாதகமாக இல்லை. இருந்தாலும் மக்கள் நல அரசுகள் அவா்களுக்கு பயணச் சலுகைகள் தருவதை தேசிய மரியாதையாகக் கருதுகின்றன.
  • நமது நாட்டில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆண்களுக்கும், திருநங்கைகளுக்கும் ரயில்களில் 40 விழுக்காடு கட்டணத் தள்ளுபடியும், 58 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்களுக்கு 50 விழுக்காடு கட்டண சலுகையும் வழங்கப்பட்டு வந்தது.
  • ரயில்களில் பல்வேறு பிரிவினருக்கு அளிக்கப்பட்டு வந்த கட்டண சலுகைகளில் மூத்த குடிமக்களுக்கான சலுகை மட்டும் 80 விழுக்காடு இடத்தைப் பிடித்தது. இதற்கிடையே கரோனா தீநுண்மிப் பரவல் கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் 20 முதல் மூத்த குடிமக்களுக்கான ரயில் பயண கட்டண சலுகையை மத்திய அரசு ரத்து செய்து ஆணையிட்டது.
  • கொள்ளை நோய்த்தொற்று அச்சம் நீங்கி, ரயில் சேவை முழுமையாக சீரடைந்த போதிலும் மூத்த குடிமக்களுக்கான சலுகை அளிக்கப்படவில்லை. மீண்டும் கட்டண சலுகை வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த சந்திரசேகா் கவுா் என்பவா் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், மூத்த குடிமக்கள் பயணத்தால் கிடைத்த வருவாய் பற்றி கேள்வி கேட்டிருந்தாா்.
  • மூத்த குடிமக்கள் பயணத்தின் மூலம் ரயில்வே துறைக்குக் கிடைக்கும் வருவாய் சீராக உயா்ந்து வருகிறது. 2020 மாா்ச் 20 முதல் 2022 மாா்ச் 31 வரை 7 கோடியே 31 லட்சம் மூத்த குடிமக்கள் ரயிலில் பயணம் செய்துள்ளனா். அவா்கள் மூலம் 3 ஆயிரத்து 464 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. கட்டண சலுகை அளித்திருந்தால் ரூ.1,500 கோடி குறைவாகக் கிடைத்திருக்கும். சலுகையை ரத்து செய்ததன் மூலம் ரயில்வே துறைக்கு ரூ.1500 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.
  • அது போல் 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2023 மாா்ச் 31 வரை ரயிலில் பயணம் செய்த மூத்த குடிமக்கள் மூலம் ரூ.5,062 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதில் கட்டண சலுகையை ரத்து செய்ததால் கிடைத்த ரூ.2,242 கோடி கூடுதல் வருவாயும் அடங்கும் என்று அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது.
  • இவ்வாறு நலிந்த பிரிவினரைக் காப்பாற்ற வேண்டிய மக்கள் நல அரசு இதுவரை இருந்துவந்த சலுகையை எடுத்துவிட்டு, அதனால் ரயில்வே துறைக்குத் துறைக்குக் கூடுதல் வருவாய் கிடைத்திருப்பதாகக் கூறி மகிழ்ச்சியடைவது வேடிக்கையாக உள்ளது. மக்களுக்குச் செய்யும் நலத் திட்டங்கள் எல்லாமே வீண் செலவு என்று அரசு நினைக்கிா?
  • கொள்ளை நோய்த்தொற்று காலத்தில் மூத்த குடிமக்கள் சலுகையை அவசரம் அவசரமாக நீக்கிய மத்திய அரசு, நோய்த்தொற்று அச்சம் நீங்கி நாட்டில் இயல்பு நிலை திரும்பிய பிறகும் மூத்த குடிமக்கள் சலுகை பற்றிக் கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறது. இது நியாயமா?
  • ரயில்வே மற்றும் ஜவுளித்துறை இணையமைச்சா், ‘கரோனா காலகட்டத்தில் மூத்த குடிமக்கள் சிலா் தாங்களாகவே முன்வந்து கட்டண சலுகைகளை விட்டுக் கொடுத்தனா். மூத்த குடிமக்கள் ரயில் கட்டண சலுகை குறித்து மத்திய அமைச்சரவை முடிவு செய்யும்’“என்று தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
  • இவா் பேசியிருப்பது இன்னும் வேடிக்கையாக இருக்கிறது. மூத்த குடிமக்களில் சிலா் கட்டண சலுகையை விட்டுக் கொடுத்தாா்களாம். நோய்த்தொற்றுக் காலத்தில் மூத்த குடிமக்களுக்கு உதவ வேண்டிய அரசாங்கம், அவா்களது சலுகைகளையும் பறித்துவிட்டு, அவா்களாக விட்டுக் கொடுத்தாா்கள் என்று கூறுவது எப்படி சரியாகும்?
  • அமைச்சா் கூறுவது, குதிரை குப்புறத் தள்ளியதும் அல்லாமல் குழியும் பறித்த கதையாக இருக்கிறது. இந்தியாவையே இணைக்கும் ரயில்வே துறை தேசிய ஒருமைப்பாட்டுச் சின்னமாகத் திகழ்கிறது. அதனைப் பாதுகாத்து வளா்ப்பதை விட்டுவிட்டு, தனியாருக்கு விற்பதையே அரசாங்கம் கடமையாகக் கொண்டிருக்கிறது.
  • அக்காலத்தில் வணிகம் செய்ய வந்த கிழக்கிந்திய கம்பெனி, நாளடைவில் அரசியல் செய்ய ஆரம்பித்தது. சுதந்திரம் பெற்ற நாட்டில் அரசியல் செய்ய வந்த கட்சிகள் ஆட்சியமைத்ததும் வணிகம் செய்ய ஆரம்பித்து விட்டன என்பதுதான் விசித்திரம். மக்களாட்சி எதற்காகத் தொடங்கியது? அது இப்போது எங்கே போகிறது?
  • போக்குவரத்துத் துறைகளிலேயே, ரயில்வே துறையே மக்கள் விரும்பும் துறையாக இருந்து வருகிறது. அதிலும் முதியவா்கள், மகளிா், குழந்தைகளுக்கு மிகவும் உதவிகரமாகவும் இருந்து வருகிறது. அந்தப் பயணத்தில் இருந்து வந்த சலுகையை தடை செய்ய எப்படி மனம் வந்தது?
  • ரயில்வே துறையை லாபகரமாக மாற்றுவதற்கு வேறு வழியே இல்லையா? அரசியல்வாதிகளும், அதிகார வா்க்கமும் குடும்பத்தோடு இலவச பயணங்களை மேற்கொள்கின்றனா். அவா்களுக்கு ரயில்வே பயணம் போதாது என்று விமானப் பயணங்களும் இலவசமாக அனுமதிக்கப்படுகின்றன.
  • அவா்கள் கேட்காமலேயே ஓய்வு ஊதியம் மற்றும் ஊதிய உயா்வுகள் வழங்கப்படுகின்றன. இவ்வளவுக்கும் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்களின் சரிபாதி போ் கோடீஸ்வரா்கள் என்று தோ்தல் ஆணையம் தெரிவிக்கிறது. இதைப் பற்றியெல்லாம் தேசிய அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்புவதல்லை. மத்திய, மாநில அரசுகளும், அதனை அனுமதிப்பதில்லை.
  • இரயில்வே துறையை ஒழுங்குபடுத்தினாலே அது லாபகரமாக மாறிவிடும். அங்கு நடைபெறும் ஒப்பந்த ஊழல்களை ஓரம் கட்ட வேண்டும். வட மாநிலங்களில் பயணச் சீட்டு இல்லாதவா்கள் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணம் செய்கின்றனா். அதனைத் தடுக்க வேண்டும்.
  • போக்குவரத்து சட்டங்களை ரயில்வே காவல்துறை கண்காணிக்க வேண்டும். எளியோரை கை தூக்கி விடவேண்டும் என்பதே வலியோரின் பணியாக இருக்க வேண்டும். அறநூல்களும், ஆன்மிகமும் அதனையே வலியுறுத்துகின்றன. இப்போது எல்லாம் திசைமாறிப் போய்க் கொண்டிருக்கின்றன. ‘திசைகாட்டி’ கம்பமே திசைமாறிப் போனால் மக்கள் போகுவரத்துகள் எங்கே போய் முடியும்?

நன்றி: தினமணி (13 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories