முனைவர் பட்ட ஆய்வுகள்: முற்றுப்புள்ளியை நோக்கிய பயணமா?
- மத்திய அரசின் நிதி உதவி (Junior Research Fellowships) பெறுகின்ற உதவிப் பேராசிரியர் பதவிகளுக்கான தகுதித் தேர்வாக மட்டுமே இருந்த யூஜிசி நெட், சிஎஸ்ஐஆர் நெட் ஆகியவை தற்போது நாடு முழுவதும் முனைவர் பட்ட ஆய்வுகளை மேற்கொள்வதற்கான அடிப்படைத் தகுதி நுழைவுத் தேர்வுகளாக அறிவிக்கப்பட்டுவிட்டன. இதன் மூலம், விளிம்பு நிலைச் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பிஹெச்டி என்பது எட்டாக்கனியாக ஆக்கப்பட்டுள்ளது.
- முனைவர் பட்டம் என்பது பொதுவாக ஒருவர் தேர்வுசெய்த துறையின் மிக உயர்ந்த அளவிலான கல்விச் சாதனையைக் குறிக்கிறது. தன் வாழ்நாளில் ஒருவர் சிறு வயதில் எழுப்பிக்கொண்ட ஒரு கேள்வியை அல்லது ஒரு யோசனையை மனதில் தக்கவைத்துக்கொண்டு, தேடுதலில் ஈடுபட்டு நிகழ்த்துகின்ற முக்கியக் கண்டுபிடிப்புகளை அங்கீகரிக்கின்ற ஆராய்ச்சிப் பட்டமாக இது விளங்குகிறது. மகத்தான இந்த இலக்கை நோக்கிய பயணத்தின் பொது வழிகளை மத்திய அரசு தற்போது மூடியிருக்கிறது.
உலகிலேயே இல்லாத நடைமுறை:
- ஒருவர் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்வதற்கு மூன்று முக்கிய அம்சங்கள் தேவை. முதலாவது, தான் தேர்வுசெய்திருக்கின்ற துறை சார்ந்து ஏற்கெனவே இருக்கக்கூடிய அறிவின் மீது காத்திரமான விமர்சனத்தை வைக்க வேண்டும். அதற்கு விமர்சனபூர்வமான, காரண-காரிய அடிப்படையிலான அணுகுமுறையும், எதையும் கேள்விக்கு உள்படுத்துகின்ற அறிவியல் மனப்பான்மையும் அவசியம். இரண்டாவது, படைப்பாக்கம். அதாவது - ஏற்கெனவே இருக்கின்ற விஷயங்களைக் கடந்து சென்று புதிதாக ஒன்றைக் கண்டுபிடிக்கின்ற படைப்பாற்றல் என்கிற அசலான தன்மை. மூன்றாவது, இவற்றை மிகத் தெளிவாக ஒன்றிணைக்கக்கூடிய கட்டமைப்பு மனநிலை.
- ஆனால், மத்திய அரசு இவற்றைப் பற்றி எந்த விதத்திலும் கவலைப்படவில்லை என்று தெரிகிறது. அரசு வைத்திருக்கின்ற இந்த நுழைவுத் தேர்வு என்பது நான்கில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து எழுது என்னும் எம்.சி.க்யு. வகையைச் சேர்ந்த ஒருவருடைய மனப்பாட அறிவைப் பரிசோதிக்கும் கேள்வித்தாளாக உள்ளது. மிகவும் கீழ் நிலையிலான புரிதல் சார்ந்த தகுதித் தேர்வாக இது அமைந்துள்ளது. இந்தத் தேர்வைப் பயன்படுத்தி, முனைவர் பட்ட ஆய்வுக்கு ஒருவரைத் தேர்வுசெய்வது உலகிலேயே இல்லாத நடைமுறை ஆகும்.
- இந்த நுழைவுத்தேர்வு மூலம் ஏற்படும் இன்னொரு கெடுதல், உயர் கல்வி நிறுவனங்கள் தங்கள் சுயத்தை இழப்பது. கண்டுபிடிப்பு உரிமங்களைப் பெறுவதற்கும், உலக அளவில் தங்களுடைய முனைவர் பட்ட ஆய்வு அறிக்கைகளைப் புகழ்பெற்ற ஆய்விதழ்களில் வெளியிடுவதற்கும் இந்தியாவினுடைய பிரம்மாண்ட கல்வி நிறுவனங்கள் ஐஐடி-க்கள் இடையே ஓர் ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது. ஒரு குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையினுடைய முனைவர் பட்ட ஆய்வுகள் தலைசிறந்தவை என்றால், வேதியியல் முனைவர் பட்ட ஆய்வுகளுக்காகப் பெயர்பெற்ற பல்கலைக்கழகங்கள் உண்டு.
- ‘நானோ’ தொழில்நுட்பம் உள்பட ஒவ்வொரு துறைக்கும் என்று தனித்திறன் வாய்ந்த பெயர்பெற்ற ஆராய்ச்சிக்கூடங்கள் இந்தியா முழுவதும் உள்ளன. இந்தப் பல்கலைக்கழகங்கள் / ஆராய்ச்சிக்கூடங்களின் தனித்துவம் தற்போது தகர்க்கப்பட்டுள்ளது. முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்ள விரும்பும் ஒருவர், முதுகலைப் பட்டம் முடித்த கையோடு பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று, லட்சக்கணக்கில் செலவு செய்தாக வேண்டும் என்கிற அவலநிலையும் உருவாகியிருக்கிறது.
- முனைவர் பட்ட ஆய்வுகளில் டென்மார்க் தலைசிறந்தது. இந்த நாடுதான் சமீபகாலமாக ஏராளமான நோபல் பரிசுகளை வாங்கிக் குவித்துக்கொண்டிருக்கிறது. இங்கு ஒருவர் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்றால், கோபன்ஹேகன் பல்கலைக்கழகம் 3 5 என்னுமொரு கல்வித் திட்டத்தை வைத்துள்ளது. சாதாரண பட்டப்படிப்பு முடித்த கையோடு, முதுகலைப் பட்டத்தோடு முனைவர் பட்டமும் இணைந்து கற்கின்ற எளிய முறைகளை டென்மார்க் பல்கலைக்கழகங்கள் அறிமுகம் செய்துள்ளன.
- நார்வே, ஸ்வீடன், ஜெர்மனி ஆகிய நாடுகளில் ஒருவர் முனைவர் பட்ட ஆய்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால், அவர் ஒரு தலைப்பின் கீழ் தேடுதலை மேற்கொண்டு அதைப் பற்றிய ஆய்வறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். அவருக்கு உறுதுணையாக இருக்கப்போவதாக ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியர் கடிதம் கொடுத்தால் போதுமானது. ஒரு நிபுணர் குழுவின் பரிந்துரை போதும். உலகத்தின் எந்த மூலையில் உள்ள ஆய்வகத்திலும் தன்னுடைய ஆய்வுகளை மேற்கொள்ள அவருக்கு உடனடியாக உதவித்தொகை வழங்கப்படுகிறது.
- அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் பல்கலைக்கழகங்கள் முனைவர் பட்ட ஆய்வுக்கான தேர்வுக் குழுக்களைத் தனித்தனியே கொண்டுள்ளன. நேர்காணல் முறையிலும், துறைசார் வல்லுநர்களுடனான கலந்துரையாடல் மூலமும் ஆய்வாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். மேற்குறிப்பிட்ட அனைத்து நாடுகளிலுமே ஒருவர் முனைவர் பட்ட ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கு முதுகலைப் பட்டம் பெற்றிருந்தால் போதுமானது.
- ஃபின்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் முதலில் ஆராய்ச்சி மாணவராக இணைந்துகொண்டு, ஓரளவு ஆராய்ச்சியை முடித்து முனைவர் பட்டம் பெறுவதற்கு முன் முதுகலைப் பட்டம் படித்துக்கொள்ள வசதிகள் உண்டு; முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்ள எந்தக் கட்டணமும் கிடையாது.
பகுதி நேர ஆய்வுக்கு முற்றுப்புள்ளி:
- ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தலில் பிற நாடுகளைவிட இந்தியா பின்தங்கியிருக்கிறது. உலக அளவிலான ஆய்விதழ்களில் நம் இன்றைய ஆராய்ச்சியாளர்களின் கட்டுரைகள் இடம்பெறுவது மிகவும் அபூர்வமாகிவிட்டது. இன்றைய சூழலில், இந்தியாவில் பட்டப்படிப்பை முடிக்கும் 100 மாணவர்களில் 40 பேர்தான் முதுகலைப் பட்டம் படிக்கச் செல்கிறார்கள்.
- அவர்களில் ஏழு பேர் முனைவர் பட்ட ஆய்வில் இணைந்து அதில் மூன்று பேர் மட்டுமே இறுதியாகப் பட்டம் பெறுகிறார்கள். கடந்த மூன்று ஆண்டுகளில், ஐஐடி-யில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொள்ளும் 50 சதவீதத்துக்கும் அதிகமான மாணவர்கள் அதிகார வர்க்கம், துறை சார்ந்த அழுத்தம் ஆகியவற்றின் காரணமாக அதிலிருந்து வெளியேறிவருகிறார்கள். இந்த நிலையில், ஒருவர் பணி செய்துகொண்டே பகுதி நேரமாக முனைவர் பட்டம் பெற முடியும் என்பதற்கான வழியையும் மத்திய அரசு தற்போது அடைத்துவிட்டது.
- இதன் பின்விளைவுகள் மிக மோசமானவை. இந்தியாவைச் சேர்ந்த அறிவுசால் மாணவர் கூட்டம் முனைவர் பட்டம் மேற்கொள்வதற்கு ஏற்கெனவே அயல் நாடுகளை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கிவிட்டது. விளிம்பு நிலையில் உள்ள - ஆனால் அறிவில் சிறந்த மாணவர்களோ நுழைவுத்தேர்வுக்காகச் செலவு செய்து பயிற்சி வகுப்புகளுக்குப் போக முடியாது என்பதால் முனைவர் பட்டம் மேற்கொள்வதிலிருந்து பின்வாங்கத் தொடங்கிவிட்டனர்.
அறிவுக்கு இல்லை எல்லை!
- சி.வி.ராமன் கடல் கடந்து பயணம் செய்துகொண்டிருந்தபோது, கடல் ஏன் நீல நிறமாக உள்ளது என்கிற கேள்வி அவருக்குள் எழுந்தது. இந்தக் கேள்வியின் அடிப்படையில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு, ராமன் விளைவைக் கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்றார். ஒவ்வொரு வேதிப்பொருளும் ஒரு நட்சத்திரத்தில் எந்த அளவுக்கு இருக்க முடியும் என்கிற கேள்வியை அறிஞர் மேக்நாட் சாஹா எழுப்பிக்கொண்டார்.
- அதற்கான விடை தேடுகின்ற முனைப்பில் இறங்கி, அயனியாக்கச் சமன்பாட்டை வெளியிட்டு உலகின் கவனத்தைப் பெற்றார். இந்தியாவில் உற்பத்தியாகும் கரும்பு ரகங்களில் இனிப்புமிக்கது எது என்பதை ஆய்வின் மூலம் கண்டறிந்து புகழ்பெற்றார் தாவரவியல் அறிஞர் ஜானகி அம்மாள். முனைவர் பட்ட ஆய்வு என்பது படித்து வாங்கும் பட்டமல்ல; புதிய கண்டுபிடிப்பை நோக்கிய அர்ப்பணிப்புமிக்க படைப்பாக்கம் ஆகும். அறிவியல் வளர்ச்சியை நேசிக்கும் ஓர் அரசு, அறிவியல் ஆய்வுகளில் தேவையின்றித் தலையிடாது.
- மக்கள்தொகையில் 50%க்கும் அதிகமான இளைஞர்களைக் கொண்ட நாடு இந்தியா. இப்படி ஓர் இளைய சக்தியை நம் நாடு கொண்டிருக்கும் சூழலில், அனைவரையும் கல்வியை நோக்கி ஈர்க்கின்ற ஒன்றாக நம்முடைய செயல்திட்டங்கள் அமைய வேண்டும். ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் இதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது!
நன்றி: இந்து தமிழ் திசை (22 – 10 – 2024)