- தொல்லியல் ஆய்வுக் களங்களைப் பார்வையிடும் ஆர்வமும் அவற்றைப் பற்றி அறிந்து கொள்ளும் துடிப்பும் தமிழ் மக்களிடம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது அதிகரித்துள்ளது. கீழடியில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்துக்கு வந்து குவியும் மக்கள் கூட்டமே இதற்குச் சான்று.
- விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளத்தில் நடக்கும் அகழாய்வுப் பணிகளையும் அங்கு புதிதாகத் திறக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தையும் கொளுத்தும் வெயிலையும் பொருள்படுத்தாது மக்கள் அலைஅலையாக வந்து பார்த்துச்செல்கின்றனர்.
- இந்த உணர்வுக் கொந்தளிப்பின் மீது பயணித்தே ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படமும் ‘வீரயுக நாயகன் வேள்பாரி’ நாவலும் பெரும் வெற்றி பெற்றன என்று கூறலாம்.
நகைப்புக்குரிய மிகைப்படுத்தல்:
- இப்படிப் பழம்பெருமைகளைத் தேடிச்செல்லும் துடிப்பை நம் முன்னோடிகள் பலரும் தூண்டிவிட்டு வளர்த்தெடுத்த வரலாறும் நமக்கு உண்டு. தமிழ்த் தேசிய அரசியலைக் கையிலெடுக்கும் எவரும் தமிழரின் பழம்பெருமைகளைப் பேசாமல் விட்டதில்லை.
- உலகின் பிற மொழிகள் எதற்கும் இல்லாத தனித்துவமான இயல்புகள் நம் தமிழ் மொழிக்கு உண்டு என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், ‘கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி’ என்று சொல்லி, இன்றைக்குப் பெருமைப்பட்டுக்கொள்வது நகைப்புக்கு இடமாகிவிடும்.
- மொழியியலுக்கு அரும்பணி ஆற்றியுள்ள தேவநேயப் பாவாணர், பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையார் போன்ற நம் மகத்தான முன்னோடிகளின் பங்களிப்பை நாம் போற்ற வேண்டும். அதே நேரத்தில், அவர்கள் முன்வைத்த குமரிக் கண்டம், லெமூரியாக் கண்டம் போன்ற கோட்பாடுகளை நாம் இன்றைக்கும் அப்படியே தூக்கிப்பிடிக்க முடியுமா?
மூதாதையர் யார்?
- அறிவியலாளர் சு.கி.ஜெயகரன் எழுதிய ‘மூதாதையரைத் தேடி..’ [காலச்சுவடு பதிப்பகம், முதற் பதிப்பு 1991] என்கிற நூலிலிருந்து எடுக்கப்பட்ட இப்பகுதி மேற்படிக் கற்பிதமான கருதுகோள்களை உடைக்கிறது:
- ‘மரபியல் ஆய்வுகளும், தொல்லியல் ஆய்வுகளும் ஆதிமனித இனம் தோன்றியது ஆப்பிரிக்கா என்பதை உறுதிசெய்வதால் அக்கண்டமே மானுடத்தின் தொட்டிலாகக் கருதப்படுகிறது. ஏறத்தாழ 1,00,000 ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவில் வாழ்ந்த ஹோமோ சேப்பியன் இனக் கூட்டத்திலிருந்து தற்கால மனிதர் தோன்றினர் என்பது ஆய்வுகளிலிருந்து தெரியவருகிறது.
- இதுவரை தெற்காப்பிரிக்காவில் நடத்தப்பட்ட அகழாய்வுகளால் கண்டுபிடிக்கப்பட்ட தொல்லுயிர் எச்சங்கள், எவ்வாறு ஹோமோ எரக்டஸிலிருந்து பழம் ஹோமோ சேப்பியன் (Archaic Homo sapien) பரிணமித்து, அதன் வழித்தோன்றலான ஹோமோ சேப்பியன் (தற்கால மனிதன்) உருவானான் என்பதைக் காட்டுகின்றன. இப்பரிணாம வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களைக் காட்டும் தடயங்கள் பல கிடைத்துள்ளன.’
- ‘தாய்வழி வரும் மைட்டகாண்ட்ரியல் டிஎன்ஏ-க்களின் (Mt DNA) ஆய்வுகளும் தந்தை வழிவரும் Y குரோமோசோம் டிஎன்ஏ-க்களின் ஆய்வுகளும் தற்கால மனிதர் 1,00,000 மற்றும் 2,00,000 ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவில் உருவானதை ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. அவர்களின் வழித்தோன்றல்களான தற்கால மனிதர் தலைநிலம் வழியாக ஐரோப்பாவிற்கும், கடற்கரையை ஒட்டிய பகுதிகளின் வழியாக இந்தியா, இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியா வரையும் 50,000 - 60,000 ஆண்டுகளுக்கு முன் குடியேறினர்.
- அக்காலகட்டத்தில் கடல் மட்டம் 100 மீ.க்கும் அதிகமாகத் தாழ்ந்திருந்ததால், கண்டச் சரிவுகளின் (Continental shelf) பெரும்பகுதி நிலமாயிருந்தது. கடற்கரைகள் இன்றிருப்பதைவிட வெகுவாக அகன்றிருந்தன. அப்பகுதிகளின் வழியாகவும் ஆதிமனிதக் குடியேற்றங்கள் ஏற்பட்டன’.
உடையும் ‘உண்மைகள்’:
- இது தொடர்பான அறிவியல் கண்டுபிடிப்புகளைத் தொகுத்து எளிய மொழியில் டோனி ஜோசப் ‘ஆதி இந்தியர்கள்’ என்கிற நூலில் அளித்துள்ளார். ஹரப்பா நாகரிகத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து அந்நாகரிகத்தின் மக்கள் தெற்கு நோக்கி வந்த கதையை ஆர்.பாலகிருஷ்ணன் தன்னுடைய ‘ஒரு பண்பாட்டின் பயணம்’ என்கிற ஆய்வு நூலில் குறிப்பிடுகிறார்.
- சங்க இலக்கியத்தில் காணப்படும் பெயர்களும் பொருள்களும் கீழடி, கொந்தகை உள்ளிட்ட அகழாய்வுத் தளங்களில் தொடர்ந்து கிடைத்துக்கொண்டிருப்பது, நாம் இதுகாறும் நம்பிவந்த பல ‘வரலாற்று உண்மைக’ளைக் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளன.
- லெமூரியாக் கண்டம் இன்றைய தமிழகத்துக்குத் தெற்கே 700 காத தூரத்துக்குப் பரவியிருந்ததாக நம் முன்னோடிகள் குறிப்பிடும் தூரத்தைக் கிலோ மீட்டராக மாற்றிக் கணக்கிட்டால், அந்நிலப்பரப்பு அண்டார்க்டிகாவுக்கும் கீழே அந்தரத்தில் பரவியிருந்ததாக வருகிறது.
- ஆகவே, நம் முன்னோடிகள் காலம் காலமாகச் சொல்லிவந்தார்கள் என்பதற்காக அதையே பிடித்துக்கொண்டிருக்காமல், தற்காலம் வரைக்கும் வந்துள்ள ஆய்வுகளை உள்வாங்கி, நியாயமான பெருமிதங்கள் எவையெல்லாம் நமக்கு உண்டோ அவற்றுக்கு மட்டும் பெருமைப்படுவதே நியாயம்; அதுவே அறிவியல்பூர்வமான அணுகுமுறை.
சோழர்களும் அடிமைகளும்:
- இதே கோணத்தில் ‘சோழர் காலப் பெருமிதங்க’ளையும் நாம் மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். வரி கட்ட முடியாமல் சோழர் காலத்தில் கிராமங்களைவிட்டு ஊரோடு ஓடிப்போன மக்களைப் பற்றிய கல்வெட்டுகளையும் செப்பேடுகளையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். வரிகட்ட முடியாத ஏழை மக்களையும் விட்டுவைக்காமல் அவர்கள் குடிசையுள் புகுந்து ‘வெண்கலம் எடுத்து மண்கலம் உடைத்து’ வரி வசூல் செய்த சோழர் காலத்துக் கொடுமைகளையும் கணக்கில் கொள்ளத்தான் வேண்டும். மேலும் சொல்வதானால், மனிதர்களை வாங்கி விற்கும் அடிமை முறையும் பிற்காலச் சோழர் காலத்தில் இருந்ததாகத் ‘தமிழகத்தில் அடிமை முறை’ என்கிற தன் ஆய்வு நூலில் ஆ.சிவசுப்பிரமணியன் நிறுவியுள்ளார்.
- இரு சோற்றுப்பதமாக இங்கே சோழர் காலம் பற்றியும் குமரிக் கண்டம் பற்றியும் மட்டும் குறிப்பிட்டுள்ளேன். ராஜராஜசோழனை உரிமை கொண்டாட 23 சாதி அமைப்புகள் களத்தில் நின்றதைக் கவனத்தில் கொண்டு, நாம் பழம்பெருமை பேசுவதிலும் ஒரு பகுத்தறிவுப் பாதையைத் தேர்வு செய்துகொள்ள வலியுறுத்த வேண்டும்!
நன்றி: தி இந்து (29 – 05 – 2023)