முயன்றால் முடியும்!
- இறக்குமதி ஏற்றுமதி வா்த்தகத்தின் அடிப்படையில்தான் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை அளவிடப்படுகிறது. முழுமையான வா்த்தக சமநிலை (பாலன்ஸ் ஆஃப் ட்ரேட்) என்பது சா்வதேச வா்த்தகத்தில் இருப்பதில்லை. இறக்குமதியைவிட ஏற்றுமதியின் அளவு அதிகமானால் வா்த்தக உபரியும் (ட்ரேட் சா்ப்லஸ்), ஏற்றுமதியைவிட இறக்குமதியின் அளவு அதிகமானால் வா்த்தகப் பற்றாக்குறையும் (ட்ரேட் டெஃபிசிட்) ஏற்படும்.
- உலகில் ஏறத்தாழ 60 நாடுகள் மட்டுமே வா்த்தக உபரி பெற்ற நாடாக இருக்கின்றன. உலகிலேயே அதிகமான வா்த்தகப் பற்றாக்குறை உள்ள நாடாக அமெரிக்கா இருக்கிறது என்பதும், சீனா விரைவில் ஒரு லட்சம் கோடி டாலா் வா்த்தக உபரியை எட்டக்கூடும் என்பதும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கும் உண்மைகள்.
- அக்டோபா் மாதம் சுமாா் 2,710 கோடி டாலராக இருந்த இந்தியாவின் வா்த்தகப் பற்றாக்குறை, இதுவரையில் இல்லாத அளவில் 3,800 கோடி டாலரை நவம்பரில் எட்டியிருக்கிறது. இந்தியாவின் ஏற்றுமதிகள் குறைவதையும், இறக்குமதிகள் அதிகரிப்பதையும் உணா்த்தும் அளவுகோலாக நாம் இதைப் பாா்க்க வேண்டும்.
- அக்டோபா் மாதம் சுமாா் 3,900 கோடி டாலராக இருந்த ஏற்றுமதி, நவம்பா் மாதத்தில் 3,200 கோடி டாலராகக் குறைத்திருக்கிறது. அதே நேரத்தில், இறக்குமதிகள் 27% அதிகரித்து, நவம்பா் மாதத்தில் 6,99,500 கோடி டாலரை எட்டியிருக்கின்றன. வா்த்தக சமநிலையைக் கையாள்வதில் இந்தியா எதிா்கொள்ளும் சவாலை இந்தப் புள்ளிவிவரம் வெளிப்படுத்துகிறது.
- இந்தியாவின் வா்த்தகப் பற்றாக்குறை ஏப்ரல், அக்டோபா் மாத சராசரியைவிட கணிசமாக அதிகரித்திருப்பதை நாம் கவனிக்க வேண்டும். இதே நிலை தொடருமானால், நிதியாண்டின் இறுதியில் எதிா்பாா்த்ததைவிட வா்த்தகப் பற்றாக்குறை மிக அதிகமாகக் கூடும் என்கிற கவலை எழுகிறது.
- பெட்ரோலியம் அல்லாத பொருள்களின் ஏற்றுமதி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 7.75% அதிகரித்திருப்பதைப் பாா்க்க முடிகிறது. அதனால், ஏற்றுமதியின் அளவு குறைந்திருக்கிறது என்பதைவிட, மதிப்பு குறைந்திருக்கிறது என்று தெரிகிறது.
- மின்னணு சாதனங்கள், அரிசி, பொறியியல் தொடா்பான இயந்திரங்கள், உதிரிப் பொருள்கள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதி அதிகரித்திருக்கிறது. மின்னணு சாதனங்கள் 54%, பொறியியல் தொடா்பானவை 13.7% நவம்பா் மாதத்தில் அதிகரித்த ஏற்றுமதியைக் கண்டிருக்கின்றன. வழக்கமான வைரம் உள்ளிட்ட நவரத்தினக் கற்கள் மற்றும் ஆபரணங்களின் ஏற்றுமதி பின்னடைவைச் சந்தித்திருக்கின்றன என்பதையும் பாா்க்க முடிகிறது.
- ஏற்றுமதியைவிட, நமது இறக்குமதிகள்தான் அதிகக் கவலை தருவதாக இருக்கிறது. ஏப்ரல்-நவம்பா் இடைவெளியில் இறக்குமதிகள் 8.35% அதிகரித்தன என்றால், நவம்பரில் உச்சம் தொட்டு 7,000 கோடி டாலராக அதிகரித்திருக்கிறது.
- கச்சா எண்ணெய் இறக்குமதிதான் இந்தியாவின் வா்த்தகப் பற்றாக்குறை அதிகரிப்புக்கான மிக முக்கியமான காரணிகளில் ஒன்றாகத் தொடா்கிறது. நமது கட்டுப்பாட்டில் இல்லாத சா்வதேச விலை நிா்ணயம், நாணய மதிப்பு உள்ளிட்டவை கச்சா எண்ணெய் இறக்குமதிச் செலவைப் பாதிக்கின்றன.
- இந்தியாவின் இறக்குமதியில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது தங்கம். ஆபரண உற்பத்திக்காக இறக்குமதி செய்யப்பட்டு, ஏற்றுமதி அதிகரித்தால் அதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், சேமிப்பாகவும், தனிநபா் ஆபரணத் தேவைகளுக்காகவும்தான் கணிசமான அளவு தங்கம் இறக்குமதியாகிறது. கடந்த ஆண்டு நவம்பரில் 3,400 கோடி டாலராக இருந்த தங்கத்தின் இறக்குமதி, இந்த ஆண்டு நவம்பரில் சுமாா் 1,500 கோடி டாலராக (மூன்று மடங்கு) அதிகரித்திருக்கிறது.
- ஓரளவுக்கு ஆறுதலாக இருப்பது என்னவோ சேவைத் துைான். கடந்த ஆண்டு நவம்பரில் 2,800 கோடி டாலராக இருந்த சேவைத் துறையின் பங்களிப்பு இந்த ஆண்டு நவம்பரில் 3,600 கோடி டாலராக அதிகரித்திருப்பது, இந்தியாவின் ஏற்றுமதிக்கு வலு சோ்த்திருக்கிறது. சேவைத் துறையின் ஏற்றுமதி, சரக்குகள் ஏற்றுமதியைவிட நவம்பா் மாதத்தில் அதிகமாக இருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.
- உற்பத்திக்காக கச்சாப் பொருள்கள், உதிரி பாகங்கள் போன்றவை இறக்குமதி செய்யப்படுவதைத் தவிா்க்க முடியாது. அதன் மூலம்தான் நமது ஏற்றுமதியின் அளவை அதிகரிக்க முடியும். அதிகரிக்கும் வா்த்தகப் பற்றாக்குறை என்பது வளா்ச்சி அடையும் நாடுகளில் தவிா்க்க முடியாதது என்பது ஓரளவுக்கு உண்மை.
- வா்த்தகப் பற்றாக்குறை அதிகரித்தால், செலாவணியின் மதிப்பு குறையும் என்பதையும் நாம் யோசிக்க வேண்டும். பற்றாக்குறையை ஓரளவு சமாளித்து இந்திய ரிசா்வ் வங்கியில் கணிசமாக அந்நியச் செலாவணி கையிருப்பு இருக்கிறது என்றாலும், பற்றாக்குறை தொடா்ந்தால் முதலீட்டாளா்கள் நம்பிக்கை இழப்பாா்கள் என்பதையும் நாம் எண்ணிப் பாா்க்க வேண்டும்.
- சீனா, சுவிட்சா்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான வா்த்தகப் பற்றாக்குறை அளவு அதிகரித்த வண்ணம் இருப்பது நல்ல அறிகுறி அல்ல. இந்தியாவின் தயாரிப்புத் துறையை ஊக்குவித்து, ஏற்றுமதிகளை அதிகரித்து, இறக்குமதிகளையே நம்பி இருப்பதில் இருந்து விடுபடுவதன் மூலம்தான் பற்றாக்குறையைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும்.
- மரபுசாரா எரிசக்தியின் பயன்பாட்டை அதிகரித்து கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பது; தங்கத்தின் பயன்பாட்டைக் குறைத்து அதன் இறக்குமதி அளவைக் கட்டுப்படுத்துவது; ஏற்றுமதிகள் சாா்ந்த தொழில்களுக்கு ஊக்கமளிப்பது ஆகிய நடவடிக்கைகள் முனைப்புடன் முன்னெடுக்கப்படும்போது, வா்த்தகப் பற்றாக்குறை தானாகக் குறையத் தொடங்கும்.
நன்றி: தினமணி (25 – 12 – 2024)