TNPSC Thervupettagam

முறைகேடுகள் களையப்பட வேண்டும்

July 29 , 2024 167 days 160 0
  • ‘நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளின் காரணமாக மறுதேர்வு நடத்தப்பட வேண்டும்’ என்னும் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்ட நிலையில், இந்த ஆண்டு நீட் தேர்வு தொடர்பான சர்ச்சை சற்றே ஓய்ந்துள்ளது. அதே நேரம், தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான விசாரணை நடந்துகொண்டிருப்பதை மறந்துவிட முடியாது.
  • 2024 மே 5 அன்று நீட் தேர்வு நடைபெற்ற பிறகு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக உச்ச நீதிமன்றத்திலும் உயர் நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டன.
  • திட்டமிடப்பட்டதற்கு முன்னதாக, அதுவும் மக்களவைத் தேர்தல் முடிவு வெளியான ஜூன் 4 அன்றே நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதால் சர்ச்சைகளும் சந்தேகங்களும் வலுவடைந்தன. மறுதேர்வு நடத்த வேண்டும் என்று சில இடங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
  • நீட் தேர்வு தொடர்பான வழக்குகளின் விசாரணையில் உச்ச நீதிமன்றம் சில முக்கியமான உத்தரவுகளைப் பிறப்பித்தது. சில மையங்களில் தேர்வு தாமதமாகத் தொடங்கியதாக 1,563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்ணை ரத்து செய்தது.
  • நீட் தேர்வில் கேட்கப்பட்ட இயற்பியல் வினா ஒன்றுக்கு இரண்டு விடைகள் சரியானவையாகக் கருதப்பட்டு, மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கேள்விக்கான சரியான விடையை டெல்லி ஐஐடியைச் சேர்ந்த இரண்டு நிபுணர்கள் மூலம் உறுதிப்படுத்திக்கொண்ட உச்ச நீதிமன்றம், இன்னொரு விடையைத் தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கான மதிப்பெண்ணை ரத்துசெய்ய உத்தரவிட்டது.
  • இதனால் சுமார் நான்கு லட்சம் மாணவர்கள் எதிர்மறை மதிப்பெண் உட்பட மொத்தம் ஐந்து மதிப்பெண்களை (4 1) இழப்பர். இவ்விரு உத்தரவுகளால் முழு மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை 67இலிருந்து 17 ஆகக் குறைந்தது.
  • இதுபோன்ற குளறுபடிகளால் பாதிக்கப்படுவது மாணவர்கள்தான். இது நிச்சயமாகத் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். மேலும் ஒட்டுமொத்த நீட் தரவரிசையைப் பாதிக்கக்கூடிய இத்தகைய பிழைகள் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டுக்குப் பிறகே களையப்பட்டுள்ளன என்பதும் கவனிக்கத்தக்கது.
  • வினாத்தாள் கசிவு தொடர்பான குற்றச்சாட்டுகளைத் தேசியத் தேர்வு முகமை மறுத்துவந்தது. இந்நிலையில், பாட்னாவில் ஒரு தேர்வு மையத்திலிருந்து வினாத்தாள் கசிந்தது தொடர்பாக மருத்துவ மாணவர்கள் உட்பட ஐந்துக்கும் மேற்பட்டோரை சிபிஐ கைது செய்துள்ளது. கோத்ரா உள்ளிட்ட வேறு சில இடங்களிலும் தேர்வு முறைகேடுகள் நடந்துள்ளன.
  • தேசியத் தேர்வு முகமையின் செயல்பாடுகள் குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதன் தலைமை இயக்குநராக இருந்த சுபோத் குமார் சிங் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார். தேர்வு முகமையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்கு இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.ராதாகிருஷ்ணன், எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா ஆகியோரைக் கொண்ட உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இதுபோன்ற நடவடிக்கைகள் நம்பிக்கை அளிக்கின்றன.
  • அத்துடன், நீட் தேர்வு மீதான நம்பிக்கையைச் சீர்குலைக்கும் அளவுக்குப் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி, மறுதேர்வு நடத்துவதற்கான கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஜூலை 23 அன்று நிராகரித்துவிட்டது. இதன் மூலம் மாணவர்களுக்கான மறுதேர்வுச் சுமை தவிர்க்கப்பட்டுள்ளது.
  • அதேவேளையில், நீட் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்கள் முற்றிலும் அகல வேண்டும் என்றால், முறைகேடுகள் அனைத்தின் மீதும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட்டுக் குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். முறைகேடுகளை முற்றிலும் தவிர்ப்பதற்குத் தேவையான சீர்திருத்த நடவடிக்கைகளுக்குத் தேசியத் தேர்வு முகமையும் மத்திய அரசும் தயாராக வேண்டியது அவசியம்.

நன்றி: இந்து தமிழ் திசை (29 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories