TNPSC Thervupettagam

முறைப்படுத்தப்படும் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை

January 4 , 2024 367 days 361 0
  • தேவையற்ற நிதிச் செலவினங்களைத் தவிர்க்கும் நோக்கில், வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித் தொகைத் திட்டத்தை முறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்மூலம் பயனாளிகளின் எண்ணிக்கை 40 சதவீதம் வரை குறையும் என எதிர்பார்க்கப் படுகிறது.
  • தமிழகத்தில் 32 லட்சம் ஆண்கள், 36 லட்சம் பெண்கள் என சுமார் 68 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருக்கின்றனர். இவர்களில் 18.75 லட்சம் பேர் 18 வயதுக்குள்பட்டோராகவும், 28 லட்சம் பேர் 30 வயதுக்குள்பட்டோராகவும், 18.50 லட்சம் பேர் 30-45 வயதுக்குள்பட்டோராகவும் இருக்கின்றனர்.
  • 69,000 பேருக்கு ரூ.33.66 கோடி: வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு, வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கும் இளைஞர்கள், இளம் பெண்கள் பயன்பெறும் வகையில், வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித் தொகை வழங்கும் திட்டத்தை கடந்த 2006-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி தொடங்கிவைத்தார்.
  • வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, 5 ஆண்டுகளுக்கும் மேலாகக் காத்திருப்போருக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதோருக்கு மாதந்தோறும் ரூ.200, 10-ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்களுக்கு ரூ.300, 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400, பட்டதாரிகளுக்கு ரூ.600 என 3 ஆண்டுகளுக்கு உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.
  • அதே நேரத்தில், பதிவு செய்து ஓராண்டு காத்திருந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது.
  • மேலும், உதவித் தொகையின் மதிப்பும் குறைந்தபட்சம் ரூ.600 முதல் ரூ.1000 வரை என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
  • இந்தத் திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் மட்டும் 55,417 பயனாளிகளுக்கு உதவித் தொகையாக ரூ.23.68 கோடியும், மாற்றுத் திறனாளிகள் 13,886 பேருக்கு ரூ. 9.98 கோடியும் என மொத்தம் 69,303 பயனாளிகளுக்கு ரூ.33.66 கோடி வழங்கப்பட்டதாக அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

பயனாளிகள் எண்ணிக்கை 40

  • சதவீதம் குறையும்: இந்த நிலையில், மகளிர் உரிமைத் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை உள்பட அரசின் பிற துறைகளிடமிருந்து ஏதேனும் ஒரு திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெறும்பட்சத்தில், இந்தப் பயனாளி இனி வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித் தொகை பெற முடியாது எனக் கூறப்படுகிறது.
  • இதுதவிர, தனியார் நிறுவனங்களில் பணியில் உள்ளவர்களுக்கும் உதவித் தொகையை நிறுத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெறும் பயனாளிகளின் ஆதார் எண்கள், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்திடம் வழங்கப்பட்டு, விவரங்களைச் சரிபார்க்க வேலைவாய்ப்புத் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
  • இதனால், வரும் நிதியாண்டில், வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித் தொகை பெறும் பயனாளிகளின் எண்ணிக்கை 40 சதவீதம் வரை குறையும் எனக் கூறப்படுகிறது.
  • இதுதொடர்பாக வேலைவாய்ப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது: பல்வேறு உதவித் தொகை திட்டங்கள் செயல்படுத்தப்படுவதால், ஒரே பயனாளி பல்வேறு  திட்டங்களின் கீழ் பலன் பெறும் சூழல் உள்ளது. இதனால், அரசுக்கு கூடுதல் நிதிச் செலவினம் ஏற்படுகிறது. இதைக் கருத்தில்கொண்டு, வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித் தொகைத் திட்டப் பயனாளிகளின் விவரங்களை ஆதார் எண் மூலம் கண்காணிக்க உத்தரவிடப்பட்டது.
  • அரசுப் பணியில் சேர்ந்த சிலருக்கும், வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித் தொகை வழங்கப்படுவது அண்மையில் தெரியவந்தது. இதன் எதிரொலியாகவே தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்திடம் பயனாளிகள் பட்டியல் வழங்கப்பட்டு, கண்காணிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நடவடிக்கைகளால் பயனாளிகளின் எண்ணிக்கை 40 முதல் 60 சதவீதம் வரை குறைவதற்கு வாய்ப்புள்ளது என்றனர்.

நன்றி: தினமணி (04 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories