TNPSC Thervupettagam

முற்றுப்புள்ளி எப்போது

May 5 , 2023 632 days 412 0
  • இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஜம்மு-காஷ்மீரிலுள்ள ரஜௌரி - பூஞ்ச் செக்டாரில் ராணுவ கண்காணிப்பு வாகனத்தின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் ஐந்து வீரர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஒருவர் காயமடைந்திருக்கிறார். எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகேயுள்ள ஜம்மு பகுதியில் இந்தத் தாக்குதல் நடந்திருக்கிறது.
  • அந்த ராணுவ வாகனம் தீக்கிரையாக்கப்பட்ட காட்சி புல்வாமா தாக்குதலை நினைவு படுத்துகிறது. பயங்கரவாதிகளின் இருப்பிடமோ, அடையாளமோ இன்னும் கண்டு பிடிக்கப் படவில்லை. ஆனால், பயங்கரவாதம் அழிந்துவிடவில்லை என்பதை இந்தத் தாக்குதல் தெரிவிக்கிறது.
  • இதே பூஞ்ச் பகுதியில் இதற்கு முன்பும் தாக்குதல்கள் நடந்திருக்கின்றன. 2021 அக்டோபர் மாதம் இந்த வனப்பகுதியில் ஒன்பது ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். கடந்த ஜனவரி மாதம் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் பொதுமக்கள் ஏழு பேர் கொல்லப் பட்டனர். 13 பேர் பலத்த காயமடைந்தனர். ஒன்றிய பிரதேசத்தின் பீர் பஞ்சால் பகுதியில் அமைந்துள்ள இந்த பாதை, காஷ்மீர் பள்ளத்தாக்கின் தெற்கு பகுதியை நோக்கிச் செல்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்த வனப்பகுதியில் தொடர்ந்து பல பயங்கரவாதச் செயல்கள் அரங்கேறியிருக்கின்றன.
  • பயங்கரவாத அமைப்புகளை எதிர்கொள்ள ராணுவத்தால் அமைக்கப்பட்டிருக்கும் ராஷ்ட்ரீய ரைஃபிள்ஸ் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் பயணித்த அந்த ராணுவ வாகனம் கையெறி குண்டுகளாலும், எதையும் துளைக்கக்கூடிய தோட்டாக்களாலும் தாக்கப்பட்டிருக்கும் செய்தி எளிதில் கடந்து போகக்கூடியதல்ல. அத்தாக்குதல் அடர்த்தியான காட்டுப் பகுதியில், குறிப்பாக தாக்குதலுக்கு ஏற்ற பலவீனமான பகுதியில் நடந்திருக்கிறது. இதற்குப் பின்னால் முறையான திட்டமிடலும், போதுமான தளவாடங்களும் காணப்படுகின்றன. இந்தத் தாக்குதலை உளவுப் பிரிவின் தோல்வி என்றுதான் கூற வேண்டும். தேசிய புலனாய்வு முகமை இது குறித்த விசாரணையைத் தொடங்கியிருக்கிறது.
  • காஷ்மீரில் நடக்கும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு ஓர் ஒற்றுமை உண்டு. பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கோ, இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கோ முக்கியமான தலைவர்களோ, அதிகாரிகளோ அரசுமுறைப் பயணம் மேற்கொள்வதற்கு முன்னால் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படுவது வழக்கம். இரு நாடுகளுக்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தைக்கான அறிகுறிகள் தோன்றினாலும் தாக்குதல்கள் நிகழ்கின்றன. இந்தியா - பாகிஸ்தான் உறவு சுமுகமாகிவிடக்கூடாது என்பதில் பயங்கரவாத அமைப்புகள் முனைப்பாக இருப்பதைத்தான் அவை காட்டுகின்றன.
  • ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் இந்தியா, சில நாள்களில் அந்த அமைப்பின் சுற்றுலா தொடர்பான சர்வதேசக் கூட்டத்தை காஷ்மீரில் நடத்த இருக்கிறது. அதைத் தடுப்பதற்கும், முறியடிப்பதற்கும் பயங்கரவாதிகள் இந்த முயற்சியை முன்னெடுத்திருக்கக் கூடும்.
  • கோவாவில் ஷாங்காய் கூட்டுறவு மாநாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கிறது. அதில் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் புட்டோ ஜர்தாரி கலந்துகொள்ள இருக்கிறார். அது குறித்த அறிவிப்பு வெளியான சில நாள்களிலேயே பூஞ்ச் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது தற்செயல் நிகழ்வு அல்ல.
  • பூஞ்ச் தாக்குதலுக்காக காஷ்மீரில் நடக்கவிருக்கும் ஜி20 கூட்டத்தையோ, கோவாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாட்டையோ ரத்து செய்துவிடவில்லை. திட்டமிட்டபடி, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலாவல் புட்டோ கோவா மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா வந்துள்ளார்.
  • இந்தியா போன்ற வலிமையான ஜனநாயக நாடு பயங்கரவாதத் தாக்குதல்களால் தடம்புரண்டு விடாது. இதுபோன்ற பல தாக்குதல்களை கடந்த அரை நூற்றாண்டு காலமாக நாம் தொடர்ந்து சந்தித்து வருகிறோம். பாகிஸ்தானின் மறைமுக ஆதரவு இருப்பதால்தான் பயங்கரவாதமும், தீவிரவாதமும் தொடர்கின்றன. இல்லையென்றால் இதற்குள் விரக்தியில் அந்த அமைப்புகள் துவண்டு போயிருக்கும். இந்தியாவுடன் சுமுகமான உறவைப் பேணாததால் பாகிஸ்தான் எதிர்கொள்ளும் இழப்புகள் ஏராளம் என்று அந்நாட்டின் தலைவர்கள் உணராமலும் இல்லை.
  • இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகமும் சுற்றுலாவும் முற்றிலுமாக தடைபட்டிருக்கின்றன. தூதரக உறவும் இல்லாத நிலை காணப்படுகிறது. அப்படியிருந்தும், 2021 பிப்ரவரி முதல், போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்கப்பட்டு எல்லையில் நேரடி மோதல்கள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன. மறைமுக பேச்சுவார்த்தைகளும்,  கலந்தாலோசனைகளும் இல்லாமலும் இல்லை. சுமுகம் இல்லாத இருநாட்டு உறவில் இவை ஆக்கபூர்வமான நகர்வுகள்.
  • இந்திய இறையாண்மைக்கு எதிராக பாகிஸ்தானிலிருந்து இயங்கும் பயங்கரவாத அமைப்புகள் நடத்தும் இதுபோன்ற தாக்குதல்கள் புதிதொன்றுமல்ல. ஜனநாயகம் குறித்தும், இறையாண்மை குறித்தும், பயங்கரவாதத்தைக் கடுமையாக எதிர்த்தும் கோஷமிடும் ஜனநாயக நாடுகள், அரசின் மறைமுக ஆதரவுடன் இன்னொரு ஜனநாயக நாட்டில் நடத்தப்படும் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து மௌனம் காப்பது வியப்பாக இருக்கிறது. ஐஎஸ், அல்-காய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் மேலை நாடுகளில் தாக்குதல் நடத்தும்போது மட்டும்தான் அவை பயங்கரவாதச் செயல்கள் என்று அந்த நாடுகள் கருதுகின்றனவோ என்னவோ...

நன்றி: தினமணி (05 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories