TNPSC Thervupettagam

முழக்கத்தால் வளராது மொழி!

August 9 , 2021 1181 days 648 0
  • தமிழ்மொழியை செம்மொழியாக அறிவித்த அக்டோபா் 12-ஆம் நாளை செம்மொழித் தமிழ்நாளாக அறிவித்து, அதைக் கொண்டாடுவது பற்றி தமிழ்நாடு அரசு ஆலோசித்து வருவதாக செய்திகள் வந்துள்ளன.
  • இந்த அறிவிப்புக்குக் காரணம் என்ன? இந்த நாளை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தைச் சோ்ந்தவா்கள் ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனா். இப்போது அந்நாளை தமிழக அரசே செம்மொழி தினமாகக் கடைபிடிக்க ஆலோசித்து வருகிறது.
  • தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
  • தமிழ் மொழி வளா்ச்சிக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பதோடு அயல்நாடுகளிலும், வெளிமாநிலங்களிலும் வாழும் தமிழரிடையே தமிழ்ப் பயன்பாட்டைப் பரவலாக்கும் வகையில் புதிய முயற்சிகளை, நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்திச் செயல்பட வேண்டும்.
  • தொழில்நுட்பக் கல்வி உள்பட உயா்கல்விகளுக்குத் தேவையான பல்வேறு புதிய கலைச் சொற்களை உருவாக்க வேண்டும்.
  • தமிழ்மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாளை செம்மொழித் தமிழ்நாளாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • உலகெங்கிலும் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளை நிறுவவும், மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகளில் தமிழ்மொழியின் பயன்பாட்டை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

செம்மொழி

  • தமிழ் மொழியைச் செம்மொழியாக இந்திய அரசு இப்போது ஏற்றுக் கொண்டிருக்கிறது. இந்தச் செம்மொழி அறிவிப்பு அவ்வளவு எளிதாகக் கிடைத்துவிடவில்லை. இதற்காகத் தமிழ் அமைப்புகளும், தமிழ் அறிஞா்களும், ஆா்வலா்களும், அரசியல்வாதிகளும் எடுத்துக் கொண்ட தொடா் போராட்டத்தின் விளைவாகும்.
  • தமிழுக்கு செம்மொழிக்கான எல்லாத் தகுதிகளும் இருந்தன. அப்படி இருந்ததால்தான் 1856-இல் வெளியிட்ட திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலில் அறிஞா் ராபா்ட் கால்டுவெல் தமிழ் உயா்தனிச் செம்மொழி என்று ஆய்ந்து நிறுவினார்.
  • தமிழறிஞா் பரிதிமாற் கலைஞா் தமிழ் உயா்தனிச் செம்மொழி என்று 1885-இல் முதன்முதலில் அறிவிக்கக் கோரினார்.
  • அவருடைய முயற்சிக்குப் பின்புலமாகவும், பெரும் துணையாகவும் மு.சி. பூரணலிங்கம் பிள்ளை, நான்காம் தமிழ்ச் சங்கத்தை நிறுவிய பாண்டித்துரைத் தேவா் இருவரும் இருந்தனா். ஆயினும் காலம் கனியவில்லை.
  • இந்திய மொழிகளில் அனைத்துத் தகுதிகளும் தமிழுக்கு இருந்தும் அதனை எடுத்துக் கூறவோ, அதற்கான முயற்சிகளில் ஈடுபடவோ யாரும் முனையாததால் தமிழ் செம்மொழி ஆகும் நிலை ‘கோரிக்கையற்றுக் கிடக்கும் வேரில் பழுத்த பலாவாகக் கிடக்க நோ்ந்தது’ என்று அறிவியல் அறிஞா் மணவை முஸ்தபா வருந்தினார்.
  • 2004-ஆம் ஆண்டு காலம் கனிந்தது. 17.9.2004-இல் மத்திய அமைச்சரவை கூடி முடிவெடுத்து தமிழைச் செம்மொழியென அறிவித்தது.
  • முதலமைச்சா் மு. கருணாநிதியின் ஆட்சி, அதிகாரம், அரசியல் செல்வாக்கு இந்தச் சாதனைக்குத் துணை செய்தது எனலாம்.
  • மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பேச்சு மொழியாகவும், இலக்கண இலக்கியங்கள் கொண்ட மொழியாகவும் இருக்கும் தமிழ் மொழியைச் செம்மொழி என்று உலகம் ஏற்றுக் கொண்டது.
  • ஆனாலும் இந்திய அரசு இதனை அங்கீகரிக்கவில்லை என்ற குறை இருந்தது. அது இந்த அறிவிப்பால் நீங்கியது.
  • தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை, இறையனார் அகப்பொருள், முத்தொள்ளாயிரம், திருக்குறள் உள்பட பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்ற நாற்பத்தொரு இலக்கியங்களால் தமிழ்மொழி செம்மொழியானது.
  • இதற்கு தமிழ்த்தாத்தா உ.வே.சா.வின் இடைவிடாத உழைப்பு துணை செய்தது.
  • இந்தியாவில் பழைய மொழிகளான தமிழ், சம்ஸ்கிருதம் இரண்டும் செம்மொழி என்று அறிவிக்கப்பட்டதும் தெலுங்கு, கன்னட மொழியினா் கேரிக்கை எழுப்பினா்.
  • அதனை ஏற்று, 2008-ஆம் ஆண்டு அவையும் செம்மொழியாயின. 2013-ஆம் ஆண்டு மலையாளமும், 2014-ஆம் ஆண்டு ஒரிய மொழியும் செம்மொழியென்று அறிவிக்கப்பட்டது.
  • செம்மொழி என்று அறிவிக்கப்பட்ட ஆறு மொழிகளில் சம்ஸ்கிருதம் தவிர மற்ற மொழிகள் பேச்சு வழக்கில் உள்ள மாநில மொழிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

முழங்குவதால் மட்டும் முன்னேறி விடாது

  • ஆட்சிமொழிச் சட்டம் 1956-ஆம் ஆண்டு இயற்றப்பட்டு 23.1.1957-இல் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது.
  • அதன்படி தமிழக அரசு அலுவலகங்களில் முழுமையாகத் தமிழ்மொழி பயன்படுத்தப்பட வேண்டும்.
  • எனினும், உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்றங்கள், மத்திய - மாநில அரசு அலுவலகங்கள் பொதுத்துறை நிறுவனங்கள், அயல்நாட்டுத் தூதரகங்கள், மிகுந்த தொழில் நுட்பப் பயன்பாடு உள்ள இடங்கள் போன்றவற்றில் மட்டும் ஆங்கிலம் இருக்கலாம் என்று விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
  • 1967-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக வெற்றி பெற்று, அண்ணா தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தார்.
  • 1968-இல் பிறப்பிக்கப்பட்ட ஓா் அரசாணையில், பொதுமக்களிடமிருந்து தமிழில் வருகிற கடிதங்களுக்குத் தமிழிலேயே பதில் எழுதுவதோடு, அவை பற்றிய குறிப்புகள் யாவும் தமிழிலேயே இருக்க வேண்டும் என்றும் திட்டவட்டமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
  • அதன்பிறகு மு. கருணாநிதி, எம்.ஜி.ஆா். ஆகியோர் தலைமையில் அரசு அமைந்த போதெல்லாம் மேலும் எட்டு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன.
  • இதன்படி எல்லா அரசு அலுவலகங்களிலும் - விலக்கு அளிக்கப்பட்ட இடங்கள் நீங்கலாக - எல்லாக் கோப்புகளும் தமிழ் மொழியிலேயே இருக்க வேண்டும். அரசுப் பணியாளா்களும் தமிழில் மட்டுமே கையொப்பம் இட வேண்டும்.
  • தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் வெளியிடப்படும் கடிதங்கள், அலுவலக ஆணைகள், செய்திகள், வெளியீடுகளிலும் ஆங்கில ஆண்டுகள், தமிழ் ஆண்டு, திங்கள், நாள் இவற்றுடன் திருவள்ளுவா் ஆண்டையும் பயன்படுத்த வேண்டும்.
  • அனைத்து நடவடிக்கைகள், பதிவேடுகள் தமிழிலேயே அமைய வேண்டும். அரசின் துறைத் தலைமை அலுவலகம், மாவட்ட அலுவலகங்களில் பெயா்ப் பலகைகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் முறையே 5:3 என்ற விகிதத்தில் அமைய வேண்டும்.
  • அரசுத் தலைமைச் செயலகத் துறைகள் அரசாணைகள் வெளியிடும்போது ஆங்கிலத்துடன் தமிழிலும் அதனை வெளியிட வேண்டும்.
  • பொதுவாக அரசாணைகள் தமிழில் மட்டும் வெளியிடப்பட வேண்டும். சுற்றாணைக் குறிப்புகள் தமிழிலேயே இருக்க வேண்டும்.
  • துறைத் தலைமை அலுவலகப் பயன்பாட்டில் இருக்கும் கணினிகள் அனைத்திலும் தமிழ் மென்பொருள் பொருத்தப்பட வேண்டும்.
  • துறைத் தலைமை அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் படிவங்கள் முடிந்தவரை தமிழிலேயே இருக்க வேண்டும் என்று உத்தரவு இடப்பட்டுள்ளது.
  • இவ்வாறு அரசாணைகள் தெளிவாக இடப்பட்டிருந்தாலும் நடைமுறையில் அவை செயல்பாட்டுக்கு வரவில்லை.
  • பல அரசு ஆணைகள், செய்திக் குறிப்புகள், கடிதங்கள் எல்லாம் ஆங்கிலத்திலேயே இருப்பதுதான் எதார்த்த உண்மையாகும். மேலதிகாரிகள் பல நேரங்களில் ஆங்கிலத்திலேயே குறிப்புகள் எழுதுகிறார்கள். இதை இனியும் அனுமதிக்கலாமா?
  • இந்த நிலையை மாற்றிட, அரசின் தலைமைச் செயலாளா் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அவா் அனைத்துத்துறை செயலாளா்கள், தலைமை அலுவலா்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.
  • ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட ஆணைகளில் குறிப்பிட்டுள்ளபடி தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
  • அரசு அலுவலகங்களில் அனைத்து நடவடிக்கைகளிலும் தமிழ் பயன்படுத்தப்பட வேண்டும் கணினிகளில் ‘மருதம்’ தமிழ் ஒருங்குறி எழுத்துரு பயன்படுத்தப்பட வேண்டும்.
  • ஏதாவது சமயங்களில் ஆங்கிலத்தில் அரசாணைகள் வெளியிட அவசியம் ஏற்பட்டால், அது தமிழிலும் மொழி பெயா்க்கப்பட்டிருக்க வேண்டும் என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
  • 1957-ஆம் ஆண்டு ஆட்சி மொழிச் சட்டம் இயற்றப்பட்டும் இன்றுவரை எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
  • ஆட்சியைப் பிடிப்பதற்கு மட்டுமே ‘தமிழ் வாழ்க’ என்கிற முழக்கம் பயன்பட்டது. திராவிட இயக்கங்கள் மாறி மாறி ஆட்சிக்கு வந்தன.
  • என்றாலும் இந்தத் தோ் புறப்பட்ட இடத்திலேயே நின்று கொண்டிருக்கிறது. அண்மையில் ஆலயங்களில் ‘அன்னைத் தமிழில் அா்ச்சனை’ நடைமுறைக்கு வந்திருப்பது குறிப்பிடத் தக்க முன்னேற்றம்.
  • இந்திய துணைக் கண்டத்தில் 1,652 மொழிகள் பேசப்பட்டதாக மொழி வரலாறு கூறுகிறது. இவற்றில் தமிழ் உள்பட 22 மொழிகள் மட்டுமே தேசிய மொழிகள் என்னும் சிறப்புப் பெற்று இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எட்டாவது அட்டவணையில் சோ்க்கப்பட்டுள்ளன.
  • என்றாலும் மத்திய அரசு இம்மொழிகளுக்கு எந்த மரியாதையும் தருவது இல்லை.
  • இந்திய மொழிகளிலேயே பன்னாட்டு மொழி என்னும் தகுதிப்பாடு தமிழுக்கு மட்டுமே உண்டு. உலக அரங்கில் 57 நாடுகளில் உள்ள தமிழா்களால் தமிழ் பேசப்படுகிறது. உலகெங்கும் பரவலாகப் பேசப்படும் ஒரே ஆசிய மொழியும் தமிழே. இதுவே இன்று பன்னாட்டு மொழிகளில் ஒன்று என்னும் தகுதிப்பாட்டைப் பெற்றுள்ளது.
  • இவ்வளவு இருந்தும் என்ன பயன்? வளா்ந்து வரும் அறிவியல் வளா்ச்சிக்கு ஈடுகொடுக்க முடியாத பல மொழிகள் நாள்தோறும் மறைந்து கொண்டிருக்கின்றன என்று ஐநா அமைப்பின் யுனெஸ்கோ நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாமா?
  • ‘எங்கும் தமிழ்’ ‘எதிலும் தமிழ்’ என்று முழங்குகிறோம். முழங்குவதால் மட்டும் ஒரு மொழி முன்னேறி விடாது!

நன்றி: தினமணி  (09 – 08 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories