TNPSC Thervupettagam

மூங்கில் சொல்லும் பொறியியல் சித்தாந்தங்கள்

October 25 , 2021 1126 days 661 0
  • மூங்கிலின் பயன்பாட்டை நாம் நன்கு அறிவோம். ஆனால்மூங்கில் அள்ளித்தரும் பொறியியல் செய்திகள் அதிகம். கட்டுமானப் பொறியியலின் பல கோட்பாடுகளை மூங்கில் தன்னுள் புதைத்துவைத்துள்ளது. மூங்கிலின் கூறுகளை முன்வைத்து பொறியியல் சித்தாந்தங்கள் அநேகமாக விளக்கப்பட்டதில்லை. அந்தக் கூறுகள் வியப்பளிப்பவை.

வட்ட வடிவம்

  • மூங்கில் மர வகையைச் சார்ந்ததல்ல. புல் வகையைச் சேர்ந்தது. ஆனால், மரங்களைப் போலவே வட்ட வடிவத் தண்டைக் கொண்டது. பொறியியல் பாகங்களின் அமைப்பில் வட்ட வடிவமே உறுதியானது. காற்று மரத்தை அசைத்துக்கொண்டே இருக்கிறது. புயற்காற்றும் சூறைக்காற்றும்கூட மரங்களை எளிதில் முறித்துவிட முடியாது. தொடர் மழையால் நேரும் மண்ணரிப்பால் பிடிமானத்தை இழக்கும் மரங்கள் வேரோடு சாயலாம், ஆனால் முறியும் வாய்ப்புகள் மிகக் குறைவு, காரணம் அவற்றின் வட்ட வடிவம்.
  • காற்று எந்தத் திசையிலிருந்து, எந்தக் கோணத்தில் வீசினாலும் மூங்கிலால் ஒரே விதமாக எதிர்கொள்ள முடியும். சதுரம், செவ்வகம் முதலான வேறு வடிவங்களில் அமைந்திருந்தால் அதன் தாங்குதிறன் சில கோணத்தில் கூடுதலாகவும் சில கோணத்தில் குறைவாகவும் இருந்திருக்கும். கடற்கரைக் கிராமங்களின் அவசரகாலக் காப்பிடங்கள் வட்ட வடிவத்தில் இருப்பது இதனால்தான். மேலும், நிலநடுக்கத்தை வட்ட வடிவக் கட்டிடங்கள் ஆற்றலுடன் எதிர்கொள்ளும்.
  • ஆனால், எப்போதுமே வட்ட வடிவக் கட்டிடங்களைத் தேர்வுசெய்ய முடியாது. வட்டத்துக்கு அடுத்தபடியாக அதிக வலிமை கொண்டது சதுரம். சதுர வடிவிலான நமது தாஜ்மகாலும் எகிப்தியர்களின் பிரமிடுகளும் காலத்தை வென்ற கட்டிடங்கள். மேலும், மற்ற மரங்களைப் போலல்லாமல் மூங்கில்கள் குழாய் வடிவிலானவை. இது மூங்கிலின் வளையும் தன்மையை அதிகரிக்கிறது. குழாய் வடிவ மூங்கிலின் பரப்பளவுக்குச் சமமான ஒரு திடவடிவ மூங்கிலைக் கற்பனை செய்தால் அது மிகவும் பலவீனமாக இருக்கும்.

ஆற்றல்மிக்க நீளம்

  • வட்ட வடிவம் மூங்கிலின் வலிமையை மேம்படுத்தினாலும் அதன் அதீத நீளம் வலிமையைக் குறைத்துவிடும். ஆனால்மூங்கில் கணுக்களைக் கொண்டிருப்பதன் மூலம் இந்தப் பிரச்சினையிலிருந்து தப்பித்துவிடுகிறது. மூங்கிலின் முழு நீளம் அதன் கணுக்களால் துண்டிக்கப்படுகிறது. இரண்டு கணுக்களுக்கு இடைப்பட்ட நீளத்துக்குக் கட்டுமானப் பொறியியலில் ‘ஆற்றல் மிக்க நீளம் என்று பெயர். மூங்கிலில் கணுக்களே இல்லை என்றால், அதனால் செங்குத்தாக வளர முடியாது.
  • ஏனென்றால், மூங்கிலின் ஆற்றல் மிக்க நீளம் அதிகமாகி அதன் விறைப்புத்தன்மை குறைந்து நெகிழ்வுத்தன்மை அதிகமாகும். அதனால் மூங்கில் தன் சொந்த கனத்தைக்கூடத் தாங்க முடியாமல் சாய்ந்துவிடும். ஆற்றல் மிக்க நீளம் குறையக் குறைய வலிமை கூடிக்கொண்டே போகும். கான்கிரீட் தூண்களில் உள்ள நீளவாட்டுக் கம்பிகளின் உறுதித்தன்மை அதன் குறுக்குக் கம்பிகளால் உறுதிசெய்யப்படுகிறது.

ஒரே அங்கமாகச் செயல்படுதல்

  • மூங்கிலின் கணுக்களுக்குள் தட்டு போன்ற அமைப்பு குழாயை அடைத்துக்கொண்டிருக்கிறது. மூங்கிலின் நீண்ட தண்டு எண்ணற்ற மெல்லிய இழைகளால் ஆனது. மூங்கில் வளையும்போது எல்லா இழைகளும் எப்போதும் ஒன்றாக இணைந்து ஒன்றாக இருந்தால்தான் அவற்றின் முழு செயல்திறன் பயன்பாட்டுக்கு வரும். அதற்கு ஏதுவாக இழைகள் ஒருவிதப் பசையால் ஒட்டப்பட்டுள்ளன.
  • ஆனால், அந்தப் பசை குறிப்பிட்ட அளவுதான் திறம்பட இயங்கும். அந்தத் திறனை மேம்படுத்தும் விதமாகத் தட்டு போன்ற கணு செயல்படுகிறது. மூங்கில் எவ்வளவு வளைந்தாலும் இழைகள் பிரிந்தாலும் கணுப் பகுதி சேதமடையாது. கான்கிரீட் தூண்களில் உள்ள குறுக்குக் கம்பிகளின் முனை கொக்கி போன்று நன்கு வளைத்துக் கட்டப்பட வேண்டும் என்ற வழிகாட்டுதலின் நோக்கம் நீளவாட்டுக் கம்பிகள் கான்கிரீட்டுடன் இணைந்து ஒரே அங்கமாக இறுதிவரை செயல்பட வேண்டும் என்பதால்தான்.

அடிப்பகுதி

  • மூங்கில் பக்கவாட்டில் அசையும்போது அதை எதிர்கொள்ள அதன் அடிப் பகுதிக்கு அதிக வளைவுத் தன்மை இருக்க வேண்டும். அதற்கு ஏதுவாக மூங்கிலின் கணுக்கள் அடிப் பகுதியில் நெருக்கமாக அமைந்துள்ளன. நிலநடுக்கத்துக்கு உள்ளாகும் கட்டிடங்களின் கான்கிரீட் தூண்களில் ஒவ்வொரு மாடியின் மேலும் கீழும் குறுக்குக் கம்பிகளை நெருக்கமாகக் கட்ட வேண்டும் என்பது விதி. மூங்கில் இந்த வடிவமைப்பை இயற்கையிலேயே பெற்றிருக்கிறது.

பலமான மூங்கில் உறை

  • மூங்கில் இழைகளின் இழுவிசை கிட்டத்தட்ட இரும்புக் கம்பிகளுக்கு இணையானது. அப்படிப்பட்ட இழைகளுக்கு வளிமண்டலத்தில் மிக எளிதில் உயிரியல் சிதைவு ஏற்பட்டுவிடும். அப்படிப்பட்ட சிதைவு ஏற்படாமல் அதன் நுண்ணிய மேல்தோல் காக்கிறது. அது மணற்சத்தால் செறிவூட்டப்பட்டுள்ளது. அதனால்மூங்கில் வளிமண்டலத் தாக்குதலிலிருந்தும் உராய்வுகளிலிருந்தும் பாதுகாக்கப்படுகிறது. மிதமான அமிலங்களின் தாக்குதலைக்கூட மூங்கிலின் மெல்லிய தோல் நன்கு எதிர்கொள்ளும்.
  • இந்த மூங்கில் உறையோடு நாம் கான்கிரீட் உறையை ஒப்பிடலாம். கான்கிரீட்டில் புதைக்கப்படுகின்ற இரும்புக் கம்பிகள் துருப்பிடிக்க, அமிலங்கள் தேவையில்லை, ஈரப்பதம் கலந்த காற்றே போதுமானது. கான்கிரீட்டை வார்க்கும்போது அதிலுள்ள நீரின் ஒரு பகுதி வார்ப்படப் பெட்டிகளால் ஈர்க்கப்பட்டு ஒட்டிக்கொள்ளும்.
  • இது நீரின் அடிப்படைக் குணம். இதனால் வெளிப்புற கான்கிரீட்டில் நீரின் அளவு அதிகமாகி அதன் அடர்த்தியும் வலிமையும் குறைந்துவிடும். உட்புறத்தில் எதிர்மாறாக இருக்கும். ஆனால், வெளிப்புறத்தில்தான் கான்கிரீட் ஈரப்பசையுள்ள காற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. வெளிப்புறத்தில் அடர்த்தி குறைவாக இருப்பது, ஈரக்காற்று உட்புக வழிவகுக்கும், அது கம்பிகளைத் துருப்பிடிக்கச் செய்துவிடும். இது கான்கிரீட்டின் இயல்பான பலவீனம். ஆனால், மூங்கிலில் உட்புறத்தைவிட வெளிப்புறம் பலமானதாக அமைந்திருக்கிறது.

வளைந்து கொடுக்கும் தன்மை

  • வானளாவிய கட்டிடங்களைக் கட்டும்போது அவை பலமான காற்றின் தாக்கத்தை எதிர்கொள்ள குறிப்பிட்ட அளவுக்கு நெகிழ்வுத் தன்மையுடன் இருக்க வேண்டும். ஆனால், நிலநடுக்கம் ஏற்படும்போது கட்டிடங்கள் தேவையான அளவுக்கு விறைப்புத்தன்மையுடன் இருக்க வேண்டும். ஆக, இந்த இரண்டு தன்மைகளும் அந்தந்தக் கட்டிடங்களுக்குத் தேவையான அளவில் அமைந்தால்தான் அவை இருவிதமான தாக்குதல்களையும் இலகுவாக எதிர்கொள்ள முடியும். இந்தப் பொறியியல் தத்துவத்தை நெடிதுயர்ந்து நிலைத்து நிற்கும் மூங்கிலின் கட்டமைப்பு நமக்குக் கற்றுக்கொடுக்கிறது.

பசுமைக் கட்டிடங்கள்

  • பசுமைக் கட்டிடத்தின் அடிப்படைக் கோட்பாடு என்னவென்றால், அந்தக் கட்டிடத்தை உருவாக்கும் மூலப்பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிப்படையக் கூடாது அல்லது பாதிப்பு மிகக் குறைவாக இருக்க வேண்டும். அந்தக் கட்டிடம் பயன்பாட்டில் இருக்கும்போது, இயற்கையின் தாக்கத்தையும் சுற்றுப்புறச் சூழலின் தாக்கத்தையும் திறம்பட எதிர்கொண்டு நீடித்திருக்க வேண்டும். இறுதியாக, அந்தக் கட்டிடத்தை இடிக்கும்போது அந்த இடிபொருட்களால் எவ்வித பாதிப்பும் ஏற்படக் கூடாது.
  • இந்த அனைத்துப் பண்புகளும் ஒன்றாக இணையப்பெற்றது மூங்கில். மூங்கில் பூமியில் மிகக் குறைந்த நிலத்தை ஆக்கிரமித்துக்கொண்டு வளர்கிறது. அது வளர அதிக ஊட்டமோ மிகையான தண்ணீரோ தேவையில்லை. வேகமாக வளரும் ஒரு தாவரம் மூங்கில். நாம் ஒவ்வொருவரும் நாளொன்றுக்குச் சுமார் 550 லிட்டர் ஆக்ஸிஜனைச் சுவாசிக்கிறோம்.
  • ஒவ்வொரு மூங்கிலும் அதற்கு அதிகமாகவே தினந்தோறும் உற்பத்தி செய்கிறது. மூங்கில் மூன்றே வருடத்தில் முதிர்ச்சி அடைந்து பயன்பாட்டுக்கு ஏற்ற தன்மையைப் பெற்றுவிடும். மூங்கில் பல்வேறு விதங்களில் மக்களுக்குப் பயன்படுவது நாம் அனைவரும் அறிந்ததே.
  • நாம் உருவாக்கும் கட்டமைப்புகளில் இப்படிப்பட்ட கோட்பாடுகள் எந்த அளவுக்குப் பின்பற்றப்படுகின்றனவோ அந்த அளவுக்கு அந்தக் கட்டமைப்புகளின் வாழ்நாள் நீடிக்கும்; சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும். மூங்கில் தன்னகத்தே கொண்டுள்ள பொறியியல் சித்தாந்தங்கள் பல. அவற்றைப் புரிந்துகொள்வது இயற்கையை நமக்கு நெருக்கமாக்கும்.

நன்றி: தி இந்து (25 – 10 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories