- மே மாதம் இரண்டாம் வாரம் மட்டும் ஏறக்குறைய 70,000 சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு வந்திருந்தனர். வழக்கமான போக்குவரத்து நெருக்கடியுடன், கோடைமழை வெள்ளமும் சேர்ந்துகொள்ள வாகனங்கள் நகர முடியாமல், நகரமே திணறியது. எனினும் இந்த ஆண்டின் கோடை விடுமுறையில் பயணிகளின் வருகை குறைந்துள்ளதாகவே சுற்றுலா சார்ந்த தொழில்களில் ஈடுபடும் கொடைக்கானல்வாசிகள் வருந்துகின்றனர். ஊட்டி, கொடைக்கானல் ஆகிய மலைவாழிடங்களுக்குக் கோடையில் சுற்றுலா செல்ல இ-பாஸ் பெறும் புதிய நடைமுறை, திடீர் மழை, காட்டுத்தீ நிகழ்வுகளால் அவ்வப்போது சாலைகள் மூடுதல், பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவு வெளியான நிலையில், கல்லூரிகளில் நடைபெற்று வரும் மாணவர் சேர்க்கை ஆகிய காரணங்களால் பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது. ஆனால், பிரச்சினை அது மட்டுமல்ல!
இடம்பெயர்ந்துவிட்ட உள்ளூர் மக்கள்:
- திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல், மேற்கு மலைத் தொடரில் பழனி மலைக்குன்றின் மீது அமைந்துள்ளது. 7,300 அடி உயரத்தில் உள்ள இந்நகராட்சி, 21.45 ச.கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. நகர மக்கள்தொகை ஏறக்குறைய 45,000 பேர். ஒரு பருவத்தில் இங்கு வந்து செல்லும் பயணிகள் ஒரு லட்சம் பேர். 2017இல் 70 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்தனர். முன்பு 128 கிராமங்களைக் கொண்டிருந்த இந்நகராட்சி, 178 கிராமங்களாக வளர்ச்சி அடைந்துள்ளது. ஒரு நகரம் வளரும்போது, உள்ளூர் மக்களுக்கு இடம் இருக்காது என்கிற கொடுமையான விதி கொடைக்கானலுக்கும் பொருந்தும். உள்ளூர்வாசிகள் பலர் திண்டுக்கல், வத்தலக்குண்டு, போடிநாயக்கனூர் போன்ற அடிவாரப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துவிட்டனர்.
- 2013இல் கொடைக்கானல் வனவிலங்கு சரணாலயம் (wildlife sanctuary) தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது. இது 60,895 ஹெக்டேர் பரப்பளவில் உள்ளது. அரிய வகை உயிரினங்களின் வாழ்விடத்துடன் பின்னிப் பிணைந்துள்ள கொடைக்கானல் போன்ற ஊர்களுக்குச் செல்வோருக்குக் குறைந்தபட்சப் பொறுப்பாவது தேவை. ஆனால், அதையெல்லாம் யாரும் பொருள்படுத்துவதில்லை. வரம்புக்கு மீறிய சுற்றுலாவால் நிகழும் கூட்ட நெரிசல், இயற்கைக்கு எதிரான மனித செயல்பாடுகள், சூழலியல் சீர்கேடு, விலைவாசி ஏற்றம் ஆகியவற்றை இந்நகரமும் பல ஆண்டுகளாக அனுபவித்துவருகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்புவரை, கொடைக்கானலில் ஏப்ரல், மே ஆகியவை மட்டும்தான் சுற்றுலாவுக்கான பருவம். இப்போது ஆண்டு முழுவதுமே சுற்றுலா நிகழும் இடமாக அது மாறிவிட்டது. அதற்கான விலையை உள்ளூர் மக்களும் வன உயிரினங்களும் கொடுக்க வேண்டியிருக்கிறது.
அழிந்துவிட்ட ஆப்பிள் சாகுபடி:
- வேளாண்மையும், கடந்த சில ஆண்டுகளாகச் சமவெளிக்கு இடம்பெயர்ந்துகொண்டிருப்பதாக உள்ளூர்வாசிகள் கவலை தெரிவிக்கின்றனர். கொடைக்கானலில் விளைகிற பிளம்ஸ் பழங்களுக்குத் தனிச்சுவையும் சந்தை மதிப்பும் உண்டு. இப்போது பிளம்ஸ் சாகுபடி குறைந்துவிட்டது. பெர்ரி, பேரிக்காய், கேரட், பீன்ஸ், லீக்ஸ், சல்லாது (ஒரு வகை கோஸ் கீரை) போன்றவை தற்போது சமவெளி ஊர்களில்தான் அதிகம் விளைவிக்கப்படுகின்றன. ஒருகாலத்தில் ஏழு வகையான ஆப்பிள்கள் விளைந்த இந்த இடத்தில், இப்போது ஆப்பிள் மரங்களை அரிதாகவே காண முடிகிறது. மேல் பழநி, நடுப் பழநி, கீழ்ப் பழநி எனக் கொடைக்கானல் மூன்று மண்டலங்களாக வகைப்படுத்தப்படுகிறது. ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தட்பவெப்பநிலையையும் சாகுபடியையும் கொண்டிருந்தன. தனித்தன்மை வாய்ந்த இந்தச் சூழல் பாதிக்கப்பட்டிருக்கிறது.
- காலநிலை மாற்றம் மட்டுமே இதற்குக் காரணமல்ல. நகரமயமாதலும் அதை முழுவீச்சில் தூண்டி விடுகிற கட்டுப்பாடு அற்ற சுற்றுலா நடவடிக்கைகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஏறக்குறைய 3,500 விடுதிகள் கொடைக்கானலில் செயல்படுவதாகக் கூறப்படுகிறது. கான்க்ரீட் கட்டிடங்கள் மட்டுமல்லாமல், A வடிவக் கூரை உடைய குடில், உருண்டை வடிவில் உள்ள ‘கிளாம்பிங்’ (Glamping) கொட்டகை ஆகியவையும் இவற்றில் அடக்கம். கொடைக்கானலுக்கான 1993 முதன்மை வரைவுத் திட்டம், 2019இல் திருத்தப்பட்டது. 237 கட்டுமானங்கள் மூடப்பட்டன. இப்போதும் கட்டுமான விதிமீறல்கள் தொடர்வதாகவே உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.
சூழலியல் சீர்கேடு:
- 2019 தரவுகளின்படி, இந்நகரத்தில் ஒரு நாளில் ஏறக்குறைய 20 டன் குப்பை கொட்டப்படுகிறது. இவற்றில் 70-80 சதவீதம் சுற்றுலா தொடர்புடைய தொழில்களால் உருவாகுபவை. கொடைக்கானலிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள பெருமாள்மலை என்னுமிடத்தில் குப்பைக்கிடங்கு செயல்படுகிறது. இங்கு வீசப்படும் உணவுக்கழிவை மேய்வதற்காகக் காட்டுப்பன்றிகளும் காட்டு மாடுகளும் குரங்குகளும் வருவது அன்றாட நிகழ்வாகிவிட்டது. காட்டு மாடுகள் பிளாஸ்டிக் உறைகளையும் சேர்த்து விழுங்குவதால் உயிரிழப்பு அடிக்கடி நிகழ்கிறது. பாம்புச் சோலை, பாம்பாறு அருவி, புலிச்சோலை போன்ற பகுதிகளில் உள்ள ஓடைகளில் பயணிகள் மது பாட்டில்களை வீசிச்செல்வதும் வன விலங்குகளுக்குத் தீங்கு விளைவிக்கிறது.
- பழனி மலைக் குன்றில் தோன்றும் மஞ்சளாறு, பச்சையாறு, பொருந்தலாறு போன்றவை திண்டுக்கல், தேனி, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பல ஊர்களுக்கு நீராதாரமாக உள்ளன. பயணிகளைக் கவரும் கொடைக்கானல் நட்சத்திர வடிவ ஏரியின் நீர், பழனி அருகே பாலாறு அணை நோக்கிச் செல்லும். இந்த நீரை நம்பி 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சுற்றியுள்ள வீடுகள், விடுதிகளின் சமையல் கழிவு ஏரியில் கலப்பது தொடர்கதையாக உள்ளது. கொடைக்கானலில் ஏற்படும் நீர் மாசுபாடு, அடிவாரத்து மக்களின் அன்றாட வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
கூட்டத்தைப் பகிர்வது:
- ஓர் இடம், அதன் சூழலியல் அமைப்பு பாதிக்கப்படாத வகையில் அங்கு அதிகபட்சமாக எத்தனை பேர் வாழ முடியும் என்பதே அதனுடைய தாங்குதிறன் (carrying capacity). சுற்றுச்சூழல் கூருணர்வு மண்டலங்களான (eco sensitive zone) கொடைக்கானலிலும் ஊட்டியிலும் தாங்குதிறனை அறிவதற்கான ஆய்வுகளை நடத்தும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கான வழிமுறையாக, கோடையில் இங்கு வந்து செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையை அறிந்துகொள்ளவே இ-பாஸ் அளிக்கும் முறை பின்பற்றப்பட்டது. இதில் கிடைக்கும் தரவுகளின் அடிப்படையில், இனிவரும் நாள்களில் சுற்றுலாப் பயணிகளது வருகையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் அரசால் மேற்கொள்ளப்படலாம். திருமலை திருப்பதி கோயிலுக்கு வருவதற்கு இணையவழியில் பதிவுசெய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், ஒரே நாளில் கட்டுக்கடங்காத கூட்டம் திரள்வது தவிர்க்கப்பட்டது. இதுபோன்ற கட்டுப்பாடுகள் ஊட்டி, கொடைக்கானலுக்கும் தேவைப்படுகின்றன.
ஞெகிழிக் குப்பைக்கு அபராதம்:
- நீலகிரி போன்ற பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளால் ஞெகிழிப் பொருள்கள் குவிக்கப்படும் பிரச்சினைக்குத் தீர்வு காண, சென்னை உயர் நீதிமன்றம், சுற்றுலா வாகனங்கள் ஊருக்குள் நுழையும் இடத்திலேயே சோதனை செய்து, அபராதம் விதிக்கும்படி அறிவுறுத்தியது. இதையடுத்து, 2021 பிப்ரவரியில் கொடைக்கானல் நகராட்சி நிர்வாகம், 5 லிட்டருக்கும் குறைவான கொள்ளளவு கொண்ட பெட் பாட்டில்கள் உள்பட 21 வகையான பொருள்களைத் தடை செய்தது. அடுத்த ஐந்து மாதங்களில், ரூ.2,50,000 பயணிகளிடமிருந்து அபராதமாகப் பெறப்பட்டிருந்தது. அறிவுறுத்தல்களுடன், அபராதம் விதிப்பதும் அவசியம் ஆகிறது எனில், அதை நடைமுறைப்படுத்துவதற்கு நகராட்சி தயங்கக் கூடாது.
அற மதிப்பீடுகளுடன் சுற்றுலா:
- கொடைக்கானலுக்கென ஒரு கழிவு நிர்வாகத் திட்டத்தை வடிவமைப்பது தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. போக்குவரத்து நெருக்கடிக்குத் தீர்வு காண்பது அரசின் கடமையாக இருப்பினும், பயணிகளுக்கும் அதில் பங்கு உள்ளது. மது அருந்திவிட்டு வண்டி ஓட்டுவது, பிறருக்கு வழிவிடாமல் பிடிவாதம் காட்டுவது போன்றவற்றைப் பயணிகள் தவிர்க்க வேண்டும். அற மதிப்பீடுகளுடன் கூடிய சுற்றுலா என்கிற கருத்தை ஐ.நா. அமைப்பு முன்வைக்கிறது. அதன்படி, சுற்றுலாத் தலங்களில் வாழும் உள்ளூர் மக்களின் அனுமதியின்றி அவர்களை ஒளிப்படம் எடுப்பதுகூட ஒருவகைச் சுரண்டல்தான். இந்தப் பின்னணியில் நோக்கினால், கொடைக்கானலில் எந்த அளவுக்கு அத்துமீறல்கள் நடக்கின்றன என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். விடுதிகளில் தங்குவதற்கான கட்டணங்கள் அளவுக்கு மீறிச் செல்லும்போது, அரசு உறுதியான நடவடிக்கையில் இறங்க வேண்டும்.
- கொடைக்கானலில் முதன்மையான தொழில் சுற்றுலா என்றாகிவிட்டது. சுவர் இருந்தால்தான் சித்திரம். ‘மலைகளின் இளவரசி’யை மூச்சுத் திணறலிலிருந்து மீட்பது அரசு நிர்வாகம், பயணிகள், உள்ளூர் மக்கள் ஆகிய மூன்று தரப்பினரின் மனப்பூர்வமான பங்கேற்பில்தான் உள்ளது.
நன்றி: இந்து தமிழ் திசை (20 – 06 – 2024)